சிசிதா

தற்கால உலகில் பெண்கள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றமையினைக் காண முடிகின்றது. பெண்களை குறித்து அதிக கவனத்தை செலுத்தும் துறைகளுள் மிக முக்கியமான இடத்தை பெறுவது இலக்கியங்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து புலம்பெயர் இலக்கியங்களில் குறிப்பாக புனைகதைகள் பெண்கள் தொடர்பான விடயங்களில் அதிகூடுதல் கவனத்தை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் புலம்பெயர் எழுத்தாளரான பார்த்திபனின் நாவல்களும் சிறுகதைகளும் மற்றும் தொடர்கதைகளும் முதன்மை பெறுகின்றன.

“பார்த்திபனின் புனைகதைகளில் பெண்கள் – ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ஆய்வானது புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஆரம்ப எழுத்தாளரான பார்த்திபனின் புனைகதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றில் வரும் பெண்கள் பற்றிய ஆய்வாக இடம்பெறுகின்றது.

ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் 1984 ஆம் ஆண்டு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவரே பார்த்திபன். இவ்வாறு ஜேர்மனி சென்று 80களின் தீவிர எழுத்தாளராக இவர் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல நாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துள்ளார். மற்றும் முற்றுப் பெறாத தொடர்கதைகளும் இவரது படைப்புக்களாக உள்ளன. இவற்றின் ஊடாகப் புலம்பெயர் நாட்டு அவலங்கள், சொந்த நாட்டு போர்ச்சூழல், பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் என பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். பார்த்திபன் பொதுவாக தன்னுடைய புனைகதைகளில் அதிகமாகவே பெண்கள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தி உள்ளார் என்பது அவதானிக்கத்தக்கது. எனவே, பார்த்திபனின் புனைகதைகளில் பெண்களின் நிலை பற்றி பேசப்படுவது அவசியமானதாகும்.

பார்த்திபனின் படைப்பாக்கங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஆய்வில் பார்த்திபனின் நாவல் மற்றும் சிறுகதைகளில் பெண்களின் இருப்பு எத்தகையது என்ற நோக்கில் ஆராயப்படுகின்றது.

1980 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிரமடைந்த இனப்போர் சூழ்நிலையினால் மேற்கு ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களுள், புலம்பெயர் எழுத்தாளர் பார்த்திபனும் ஒருவராவார். ஜேர்மனியில் இருந்து கொண்டு பல இலக்கிய ஆக்கங்களைப் படைத்து, புலம்பெயர் சூழலில் எழுதத் தொடங்கிய ஆரம்பகால எழுத்தாளர் வகுப்பினுள் ஒருவர் என்ற வகையில் புலம்பெயர் இலக்கியங்களின் தோற்றத்திலும் அதன் வளர்ச்சிப் பாதையிலும் முக்கியத்துவம் பெறுகின்றார். இவருடைய எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இவ் ஆய்வில் சிறுகதைகளும் நாவல்களும் தொடர்கதையும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவருடைய எழுத்துக்கள் பல அம்சங்களை தாங்கிய வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெண்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதை அவருடைய படைப்புக்களின் ஊடாகவே அறிய முடிகின்றது. இதன் காரணமாக “பார்த்திபனின் புனைகதைகளில் பெண்கள் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் பார்த்திபனின் மேற்கூறிய புனைவுகளில் வரும் பெண் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பெண்களின் இருப்புகள், அவர்களின் வகிபங்குகள், பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பன பற்றி ஆராயப்பட்டுள்ளன.

சிறுகதைகளில் வரும் பெண்கள் பற்றி ஆய்வாக நான்காவது அத்தியாயம் காணப்படுகின்றது. இங்கு பார்த்திபனின் சிறுகதைகளில் எதனை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் எடுத்தாளப்பட்டுள்ளனர் என்பதையும் எந்தெந்த நாட்டு பெண்கள் அவற்றில் இடம்பெறுகின்றனர் என்ற அடிப்படையிலும் இந்த அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது. அதாவது நான்கு பகுதிகளாக பாகுபடுத்தப்பட்டு சிறுகதைகளில் வரும் பெண்கள் பற்றிய ஆய்வு இடம்பெற்றுள்ளது. கற்பு பற்றிய கண்ணோட்டம், சீதனமும் குடும்ப வன்முறைகளும், போலிச் சம்பிரதாய அடக்குமுறைகள் மற்றும் புலம்பெயர் சூழலில் ஈழப் பெண்களும் வெளிநாட்டுப் பெண்களும் என்ற அடிப்படையில் இவ்வத்தியாயம் பார்க்கப்பட்டுள்ளது.

இவர் தன் புனைகதைகளில் பேசிய அநேகமான பெண்கள் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைந்தவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இவ்வாறு பார்த்திபன் வெளிப்படுத்திய பெண்களை நோக்கும்போது, பெண்கள் இருவகையில் சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதை அறியமுடிகின்றது. ஒன்று, உடல் சார்ந்த பாலியல் சுரண்டல்களின் ஊடாக பாதிக்கப்படுதல். இரண்டாவது, பெண்களை மையப்படுத்திய சமூக மற்றும் சமய நடைமுறைகளினால் உளரீதியாக பாதிக்கப்படுதல் ஆகும். நாம் அன்றாடம் ஒரு பெண் என்ற ரீதியில் குடும்பம், சமூகம் என்ற பரந்து பட்ட நிலைகளில் அனுபவிக்கும் பல பிரச்சினைகளை பார்த்திபனின் புனைகதைகளில் காண முடியும.

தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் குணம் கொண்ட பெண்களை மட்டுமின்றி, பார்த்திபன் தனது புனைகதைகளில் ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளுக்குள் வாழ்ந்து தங்கள் இயலாமையினால் தோற்றுப்போகும் பெண்களையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘குற்றமில்லாத கொலைகள்’ எனும் சிறுகதையில் வரும் பார்வதி, மனோகரி, சங்கரி போன்ற மூன்று பெண்களும் ‘அம்மா பாவம்’ என்ற சிறுகதையில் வரும் அம்மா பாத்திரமும் ‘வந்தவள் வராமல் வந்தால்’ என்ற சிறுகதையில் வருகின்ற மைதிலியும் பார்த்திபனின் புனைகதைகளில் ஆணாதிக்கத்தினால் தங்கள் சுயத்தையும் உயிரையும் இழக்கின்ற பெண்களாக வெளிக்காட்டப்பட்டுள்ளனர்.

பார்த்திபன் தன்னுடைய படைப்புக்களில் பெண்களை சித்திரிக்கின்ற வேளையில் பெண்கள் சார்ந்த சில மன உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘மனைவி இறக்குமதி’ என்ற சிறுகதையில் முக்கியப்படுத்தி கூறியது யாதெனில், யுத்த காலத்தில் புலம்பெயர் சூழலில் இருந்து கொண்டு சமூக நடைமுறையான சீதனத்தை பெற்று பெண்ணை திருமணம் செய்கின்ற முறையையே அதிக முக்கியப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். யதார்த்தரீதியில் பெண்களுக்கு தமது பெற்றோர் தம்மை ஒரு பொருட்டாக மதிக்காமல் முகம் தெரியாத நபரிடம் அந்நிய தேசத்திற்கு அனுப்பி வைப்பதனால் ஏற்படுகின்ற மன உணர்வுகளை சித்திரிக்கத் தவறியுள்ளார். அதாவது அந்தப் பெண்களுக்குத் தங்களைப் பொருளாக வாங்கும் ஆண்கள் மீதான வெறுப்பினை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பெற்றோர்கள் மீதான வெறுப்பினைக் காட்டுவதாக இவரது கதைகளில் எவ்விதமான வெளிப்பாடுகளும் இல்லை. அப்பெண்களின் குடும்பரீதியான குமுறல்களையே வெளிப்படுத்துகின்றார். அந்நிய தேசத்தில் சீதன நடைமுறையினால் பெண் தத்தளிப்பதற்கு, சீதனத்தை விரும்பும் ஆண்களுடன் அவர்கள் கேட்கும் சீதனத்தை கொடுத்து தங்கள் சுமை குறைந்து விட்டதாக எண்ணி அடுத்த சுமையை குறைப்பதற்கு தயாராகின்ற பெற்றோர்களும் காரணம் என்பதனால் இச் சிறுகதையில் அது தொடர்பாகவும் வெளிப்படுத்தி இருக்கலாம்.

பார்த்திபன் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற நாவலில் வருகின்ற அனைத்துப் பெண்களையும் சாதியத்தைத் தாங்கி அதனை வழிப்படுத்தும் பெண்களாகவே படைத்துள்ளார். இவ்வாறு பெண்களை சாதிக் கட்டமைப்பினை ஏற்று அதன் வழி நடக்கும் தன்மையில் படைத்து, ஆண்களை அவற்றை ஒதுக்கி சமூகத்தில் மாற்றத்தை வேண்டி நிற்பவர்களாக படைத்துள்ளமைக்கு பார்த்திபன் ஓர் ஆண் என்பதையும் காரணமாகக் கூறலாம்.

“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”

இவ்வாறு பாரதி, குழந்தைகள் சாதியத்தை மறுத்துஇ சமூகத்தையும் தன்னையும் உயர்த்த வேண்டும் என விரும்புவதைப் போல பார்த்திபனும் தன்னுடைய வித்தியாசப்படும் வித்தியாசங்கள் என்ற தனது நாவலில் ஆண்களுக்கு நிகராக யாதாயினும் ஒரு பெண் பாத்திரத்தை சாதியத்தை ஏற்க மறுக்கும், சமூகத்தை வழிநடத்தும், சாதியத்தை அடியொழிக்கும் தன்மையை தனக்குப் பிறகு தொடரும் பெண்களுக்கும் கடத்தும் பெண் பாத்திரமாக வடிவமைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். இவருடைய படைப்புக்களில் சாதியம் தொடர்பான பிற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட பெண்களையே காணமுடிகின்றது.

(கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் தமிழ் கற்கைகள் துறையின் தமிழ் சிறப்புக் கற்கை நெறியின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு இவ் ஆய்வேடு சமர்ப்பிக்கப்படுகின்றது.)

** ஆய்வில் இருந்து சில பகுதிகள் மட்டும்.

1 thought on “சிசிதா”

Leave a Reply to SPYFOOL Cancel reply