ஒரே ஒரு ஊரிலே

மாலை வெயில். வானம் மஞ்சள் பூசியிருந்தது. மேகங்கள் நிதானமாகப் போய்க் கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசியது.

அந்தக் கொட்டிலிலிருந்து ரியூசன் முடிந்து, எல்லோரும் வெளியே வந்தனர். அவரவர் குடும்பத்தின் பொருளாதார நிலமைகளுக்கேற்ப வர்ணங்களிலும், தராதரங்களிலும் வேறுபட்ட உடைகளுடன் இளைஞர், இளைஞிகள் கலகலத்து வந்தனர்.

சைக்கிளில் சிலர் முண்டியடித்துக் கொண்டோடினர்.

தோழர், தோழிகளுடன் சிலர் குழுக்களாகப் போனார்கள்.

எல்லோரும் வெளியேறினாலும் இரண்டு பேர் மட்டும் அதே இடத்தில் மரத்தின் கீழ் காத்திருந்தனர்.

யோன் – காஞ்சனா எனப்பட்ட அவர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தினால், ஒன்றிரண்டு வயது வித்தியாசமுள்ள வாலிபனும், வாலிபியும்.

கொஞ்சம் கூடத் தெரிய வேண்டுமானால் நீண்ட நாளாக காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் கதைக்கும் யாவற்றையும் எழுதக்கூடாது. வெட்கமாக இருக்கும் .

‘வீட்ட எப்பவும் எனக்கு பேச்சு விழுகுது. உனக்கு கீழ தங்கச்சியள் இருக்கேக்க உதெல்லாம் தேவைதானா எண்டு கேக்கினம் ‘

‘அதுவும் நியாயம் தானே? ‘

‘சீ , உங்களுக்கு எப்பவும் பகிடிதான்’

‘பின்ன என்ன செய்யிறது ? இந்த வயசில கலியானம் செய்யேலுமோ?’

‘வயசு பாத்;துதான் லவ் பண்ணினனீங்களே? ‘

‘கோபப்படாதையும் காஞ்சனா. எங்கட வீட்டையும் விசயம் தெரியும். அவையளா ஏதேன் கதைக்கினமோ எண்டு பாக்கத்தான் இவ்வளவு நாளும் பேசாமல் இருந்தனான். இனி நானே கதைச்சுப் பாக்கிறன்’

‘சொல்லாதையுங்கோ. செய்து காட்டுங்கோ’

‘அவசரப்படக் கூடாது. நேரமிருக்கு. இந்த சட்டை எப்ப தைச்சது?’

இனி எல்லாம் கேட்கக்கூடாது.

 


 

‘விசராக இருக்கு மச்சான். பொலிடோல் குடிக்கலாம் போல இருக்கு’

‘ஏண்டா பொறன். எவ்வளவு நாளைக்கு பேய்க்காட்டுவான் எண்டு பாப்பம்’

வாசிகசாலையின் வெளிப்பக்கம் மரக் குற்றியொன்றிலிருந்து மூர்த்தியும், முருகனும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

முருகன் குவைத் போவதற்காக கடன் வாங்கி ஏஜென்சி ஆள் ஒருவனிடம் பணத்தைக் கட்டியிருந்தான். ஏழு மாதங்களாகியும் அவனுக்கு எந்த ஒழுங்கும் செய்யப்படவில்லை. பல முறைகள் அவனிடம் போய் ஏமாற்றத்துடன் வந்து கொண்டிருந்தான்.

‘காசு கடன் தந்தவை எல்லாம் நெருக்கியினம். என்ன செய்யிறது எண்டு தெரியேல’

‘கனக்க யோசியாதை மச்சான். எல்லாம் வடிவா நடக்கும். பிந்துறதும் நல்லதுக்குதானோ தெரியாது. இண்டையான் பேப்பர் பாத்தனியே? ‘

‘இன்னும் இல்லை. என்ன புதினம்?’

‘வவுனியாவில ஆமி வீடு வீடா போய் ஆக்களை சுட்டிருக்கிறாங்கள். பொம்பிளையளையும் நாசமாக்கிப் போட்டாங்களாம்’

‘நாங்களெல்லாம் பொறுப்பிருக்கெண்டு சொல்லிக் கொண்டு பின்னுக்கு நிக்கு மட்டும் இப்படி அநியாயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்’

‘உண்மைதான். இப்பவும் பார். சனம் நகை, நட்டை வித்தோ, சேமிச்ச காசை எடுத்தோ ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் எண்டு போகினம். கொஞ்சம் கூடக் காசு இருக்கிறவன், பெரிய முதலாளியெல்லாம் இந்தியா போய் சுகமா சந்தோசமாக இருக்கிறாங்கள்’

‘உவ்வளவும் ஏன்? இப்பவும் தங்களுக்கொண்டும் நடக்கேல எண்ட துணிவில வீடியோ படம் காட்டுகினம். கலியாணம் குடிபூரல் எல்லாம் வீடியோவில எடுக்கிறதுக்காய் சினிமா படங்கள் மாதிரி நல்லா காசை செலவழிச்சு கொண்டாடுகினம்’

‘இப்படிச் சனங்கள் எல்லாம் பிரச்சனைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளப் பாக்கேக்க எப்படி நல்ல முடிவு வரும்? என்னையே பார். இவ்வளவு கதைக்கிறன். ஆனா நானும் நாட்டுக்கா ஒண்டும் செய்ய முயற்சி எடுக்கேல. எப்ப குவைத் போவேன் எண்டதுதான் என்ரை முழு யோசனையும்’

‘நீயாவது பறவாயில்லை. கஸ்டப்பட்டு உழைக்கத்தான் குவைத்துக்குப் போறாய். மற்றதுகள் எல்லாம் யூறோப் நாடுகளில போய் இருந்து கொண்டு தண்ணி அடிக்கிறதும், படம் பாக்கிறதுமாய் தங்களுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிக் கொண்டிருக்கினம்’

மூர்த்தி முருகனுக்கு சமாதானம் சொன்னாலும் உண்மையில் தாங்களும் குற்றவாளிகள்தான் என்றே நினைத்தான்.

 


 

உடுப்பில்லாததைப் பற்றிக் கவலைப்டாமல் அந்த குழந்தை மண்ணில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

குழந்தை தன்னை பார்க்குமே என்று வெட்கப்படாமல் நாய் ஒன்று சற்று தள்ளி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது.

குடிசையின் உள்ளே வள்ளிநாயகி மரக்கறி வெட்டிக் கொண்டிருந்தாள்.

நாகலிங்கம் கோடரியை ஒரு மூலையில் வைத்துவிட்டு வாளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு வெளியே போனான். முகம், கை, கால்களைக் கழுவிய பின் மீண்டும் உள்ளே வந்தான்.

‘காசிப்பிள்ளை வீட்டை போனனியே?’ வள்ளிநாயகி வெட்டிக் கொண்டே கேட்டாள்.

‘ஓமோம்’ அலுப்போடு சுவருடன் சாய்ந்து கீழே குந்தினான் நாகலிங்கம்.

‘என்ன சொல்லுகினம்?’

‘கட்டாயம் எழும்பத்தான் வேணுமாம். கலியாணம் இன்னும் மூண்டு கிழமைக்க நடக்குமாம். அதுக்குள்ள போயிடட்டாம்’

 

நாகலிங்கத்தின் குடிசை காசிப்பிள்ளையரின் காணியிலேயே இருந்தது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக, பற்றைக் காடாக இருந்த காணியில் சுத்தம் செய்து வளப்படுத்தி, குடிசையும் போட்டு, சிறிய தோட்டமும் வைத்து நீண்ட நாட்களாக குடியிருந்தார்கள் நாகலிங்கம் குடும்பத்தினர்.

விறகு வெட்டியும், கூலி வேலை செய்தும் நாகலிங்கம் குடும்பத்தின் பசியைப் போக்க முனைந்து கொண்டிருந்தான்.

நாட்டு நிலமைகள் காரணமாக அவன் உழைப்பும் குறைந்து கொண்டிருந்தது.

இந்த நிலமையில்தான் காசிப்பிள்ளை தம் மகளின் திருமணத்துக்கு அந்தக் காணித் துண்டை சீதனமாக எழுதிவிட்டதாகவும், நாகலிங்கம் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

நாகலிங்கத்துக்கு வேறு போக்கிடம் எதுவுமில்லை. எங்கேயாவது போய் குடிசை போட்டிருக்கலாம் என்றாலும் பாதுகாப்பான இடமாகவும், தெரிந்தவர்களின் இடமாகவும் எதுவுமில்லை.

நாகலிங்கம் எதுவும் யோசிக்கவே விரும்பவில்லை.

 


 

தனபால் சைக்கிளை சுவருடன் சாத்திவிட்டு உள்ளே போனார்.

‘ஏனப்பா, இவ்வளவு நேரம்? ஆ. . . இதென்ன கையில கட்டு ?’ மகன் சதீஷ் படபடத்தான்.

‘என்னப்பா? என்ன நடந்தது ?’ சேலையில் கையைத் துடைத்துக் கொண்டு வந்த மீனாட்சியும் கேட்டாள்.

‘ஒண்டுமில்லை . தபால் குடுத்துக் கொண்டு வரேக்க பலாலி றோட்டால ஆமிக்கரன் சுட்டுக் கொண்டு போனான். எல்லாரும் பதறியோடயிக்க நான் சைக்கிளோடை வேலியுக்க விழுந்திட்டன். முள்ளுக் கம்பி சாடையாக கீறிப்போட்டுது. அதுதான் ஆஸ்பத்திரிக்கு போய் கட்டுப் போட்டுக் கொண்டு வாறன்’

சோர்வுடன் கதிரையில் அமர்ந்தார் தனபால்.

‘பொல்லாத வேலை. உசிரைக் குடுத்து செய்ய வேணுமாக்கும். அவனவன் எல்லாம் பயந்து வீட்டுக்க பதுங்கி இருக்கிறாங்கள். இருவருக்கு மட்டும் கடமை உணர்ச்சி போல ‘

மீனாட்சி முணுமுணுத்துக் கொண்டே சுடச்சுட கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.

‘கடமை உணர்ச்சி இல்லை. வயித்துப பசிக்குத்தான் போறேன்’

‘அப்படி என்ன அவசியம்? மாணிக்கம் இண்டைக்கு வந்தவன். ஏன்ராப்பா கன நாளா மீன் கொண்டு வரேல எண்டு கேட்டன். உங்களுக்கென்னம்மா, மீன் இல்லையெண்டு கவலைப்படுவியள். கடலுக்குப் போறவனோ உசிரில்லாமல் கரைக்கு வாறன்.. முந்தியெல்லாம் தொழிலுக்குப் போகேக்க காத்துக்கும், மழைக்கும்

தான் பயப்பிட்டோம்.. இப்ப துவக்கு பிடிச்சிருக்கிற மனிசரிட்ட இருந்து தப்பிறதே பெரிய காரியம். கடலுக்கு போய் காசு உழைக்காட்டியும் பறவாயில்லை. குழந்தை, குட்டியளோட இருக்கிறதைக் கொண்டு சாப்பிடுவோம் எண்டு சொல்லுறான்’

மீனாட்சி மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

‘எல்லாராலும் அப்படி இருக்கேலுமே? நாங்க வேணுமெண்டா சாப்பிடாம பிள்ளையளைப் பட்டினி போட மனம் வருமே? காசில்லாமல் படிக்கேலுமே?’

மீனாட்சியால் பதில் சொல்ல முடியவில்லை.

‘மீனாட்சி, துணிச்சலாய் சின்னப் பெடியள் எல்லாம் துவக்கெடுத்துக் கொண்டு போய் சண்டை பிடிச்சு சாகிறாங்கள். என்னால அப்படி எல்லாம் செய்யேலாது. அதுக்காக ஒண்டுமே செய்யாமல் எனக்காக மட்டும் வாழுறது சரியா? எத்தினை பேர் வெளியூரில, வெளிநாட்டில இருந்து கொண்டு தங்கடை உறவுகளுக்கு

என்ன நடந்துதோ எண்டு யோசித்துக் கொண்டிருப்பினம். வீட்டில இருந்து கடிதத்தை காணாமல் சாப்பிடாமல் இருக்கிற சனங்களும் இருக்குதுகள். இந்த நிலையில நான் பாக்கிற இந்த உத்தியோகம் என்னால் செய்ய முடிஞ்ச சிறு உதவிதான’

தனபாலின் முகத்தில் பெருமிதம் இருந்தது.

மீனாட்சி இதன்பின் எதுவும் கதைக்கவில்லை.

 

2.
காஞ்சனாவின் தந்தை சிவபாதம் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தார்.

சற்றுத் தள்ளி தாயார் நிலத்தில் காலை மடித்து உட்கார்ந்திருந்தாள்.

காஞ்சனாவின் அண்ணா, தம்பி, தங்கைகள் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காஞ்சனா அறையினுள்ளே தனியாக கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.

‘பெரிய கெட்டித்தனம் மாதிரி லவ் பண்ணிப்போட்டா’ சிவபாதம் கொஞ்சம் பலமாகவே கதைத்தார்.

யாரும் இடையில் கதைக்கவில்லை.

‘லவ் பண்ணயிக்க ஒண்டையும் யோசியாதையுங்கோ. இப்ப அவங்கள் நகையை கொண்டா, வீட்டைக் கொண்டா எண்டு நிக்கிறாங்கள். வீட்ட எழுதிப்போட்டு நாங்கள் றோட்டிலயே நிக்கிறது?’

குறுக்கே யாரும் கதைக்கவில்லை.

‘படிக்கிற வயசில அவைக்கொரு கலியானம். உவையை படிக்க அனுப்பினதோ மாப்பிள்ளை பாக்க அனுப்பினதோ?’

‘. . . .. … .. . . ‘

‘ஊர் முழுக்க விசயம் தெரியும். அவனோட நிண்டு சுத்தினது, அலம்பினது எல்லாம். அவனை விட்டால் இனி ஆர் கட்டப் போறாங்கள்? தனக்கு கீழ இருக்கிறதுகளையாவது யோசிச்சால் இப்படி நடந்திருப்பாளே?’

‘ ……………… .. . .’

‘கண்டறியாத காதல் ஒண்டு. ஆக்களையோ, காசையோ காதலிக்கினம்? முதல் நீதான் வேணும் எண்ணுவினம். பிறகு வீடு, நகை நட்டில்லாட்டி நீ வேண்டாம் எண்ணுவினம். சுய புத்தி இருந்தாதானே?’

‘………………………… ‘

‘மூத்தவன் உழைக்கிறதிலேயே மூண்டு நேரமும் சாப்பிடுறதுக்கு கஸ்டமாய் இருக்கு. அவனும் ஒரு பாவி. துவக்குச் சத்தம் கேட்டா என்ன கேக்காட்டி என்ன ஒழுங்கா வேலைக்குப் போய்வாறன்’

சிவபாதம் தனி ஆவர்த்தனம் வாசிக்க, மற்றவர்கள் கேட்டு மனக்குள் அனுபவிக்க, காஞ்சனா மட்டும் அழுது கொண்டிருந்தாள்.

 


 

‘என்ன நோட்டிஸ் ஒட்டுறாங்கள்?’

மூர்த்தி கடைச்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் நோட்டீசைக் காட்டிக் கேட்டான்.

முருகன் அந்த கடை வழியாகத் தான் வந்திருந்தான்.

‘கோயில் திருவிழாவாம்’ முருகன் சொன்னான்.

‘ஓமோம், நிச்சயம் தேவைதான். எங்கட பிரச்சனைகளுக்காண்டி சுவாமிதானே பேச்சு வார்த்தை நடாத்துகிறார்’

‘போடா, கடவுளைப் பற்றி இப்படி விமர்சிக்காதை’

‘உண்மைதான். ஏனெண்டா அகதியளுக்கு கஞ்சி ஊத்திறதே அவர்தானே? அவரவர் சாப்பிடவோ, ஏன் உயிரோட இருக்கவே வழி இல்லை. இந்த நேரத்தில கோயிலோ திருவிழாவோ அவசியமா?’

‘எல்லாருக்கும் ஏதோ ஒண்டில் நம்பிக்கை இருக்கத்தான் வேணும். உன்ரை அப்பா, அம்மாவில உனக்கு நம்பிக்கை. உனக்குள்ள நம்பிக்கை போலத்தான் மற்றவைக்கும் கடவுளில நம்பிக்கை. உனக்கு நம்பிக்கை இல்லாட்டி அதோட விட்டிடு. ஆனா நக்கல் அடிக்காதை. இப்பவும் பார். கோயிலிலதான் அகதியள்

இருக்கினமாம்’

‘கோவிக்காதை மச்சான். சாப்பாட்டுக் கஸ்டத்தில சனங்கள் இருக்கேக்க சுவாமிக்கு அபிசேகம் செய்யிறதும், ஆடம்பரமாய் விழாக்கள் வைக்கிறதும் எனக்குப் பிடிக்கேல’

‘உண்மைதான். சனம் இதை உணரேல. கண்மூடித்தனமான பக்தியைவிட பெயரெடுக்கிறதுதான் இவையின்ர நோக்கம். இப்பவும். காணி வேண்டுறவையும், வீடு கட்டுறவையும் இருக்கத்தான் செய்யினம். அவைக்கு நிலமையளை விளக்குறதே கஸ்டம். தங்களுக்கொண்டும் நடக்காது. தப்பியிடுவோம் எண்டு

நினைக்கினம்’

‘ரமேசின்ரை தங்கச்சி காஞ்சனாவைக் கட்டுறது எண்டா வீட்டை எழுதித் தரவேணுமெண்டு ஒற்றைக் காலில நிக்கிறானாம்’

‘இண்டைக்கோ, நாளைக்கோ ஆமிக்காரன்ரை கண்ணில இந்த ஊர் பட்டால் எல்லாம் சரி. அவனுக்கு வீடு வேணுமாமோ?’

‘இன்னொரு விசயம் கேள்விப்பட்டனியே? காசிப்பிள்ளையர் நாகலிங்கத்தை எழும்பச் சொல்லியிருக்கிறாராம். அவன் எங்கையெண்டு போவான்?’

‘எத்தினை தலைமுறை போனாலும் இவங்களைப் போல ஆக்களின்ரை குணம் மாறாது. தங்களை மாத்தவும் விரும்பிறயில்லை. நெருப்பெரியேக்க நீரோ மன்னன் பிடில் வாசிச்ச மாதிரி நாளுக்கு நாள் சனம் அழிஞ்சாலும் காசாசை, நாட்டாண்மை, சீதனம் , சாதி இதுகளுக்கு அழிவேயில்லை. இதுகளுக்கெல்லாம் எப்ப

சாவு மணி அடிக்கப்படுகுதோ அப்பதான் எங்களுக்கெல்லாம் உண்மையான விடுதலை’

‘பேனையை மட்டும் வைச்சுக் கொண்டு எல்லாத்தையும் பேப்பரில நிரப்பி விளம்பரமாக எழுதிப் போடுவினம். இதில வேலையில்லை மச்சான். எல்லாரும் தான் தான் உணர்ந்து திருந்த வேணும். மாற வேணும்’

‘இதுகளைக் கதைக்கப் போனால் எங்களுக்குத்தான் விசர்; பட்டம் கிடைக்கும். நீ முதல் உன்னைத் திருத்து. பிறகு எங்களைப் பற்றி யோசிப்போம் எண்ணுவங்கள்’

‘கதைச்சுக் கொண்டு நிண்டதிலேயே நேரம் போட்டுது. நான் கடைக்குப் போக வேணும். வரட்டே’

முருகன் விடை பெற்றுப் போனான்.

மூர்த்தி கொஞ்ச நேரம் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 


 

தண்ணீரை வயிறு முட்டக் குடித்துவிட்டு நாகலிங்கம் குடிசையின் வெளியே வந்து குந்தில் அமர்ந்தான்.

கொஞ்ச நேரத்தில் வள்ளிநாயகியும் வந்து பக்கத்தில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் இருவரும் கதைக்கவில்லை.

வானத்தில் மேகக்கூட்டம் அதிகமில்லை. கொஞ்சப் பறவைகள் ஒரே திசையாகப் பறந்து போயின.

‘பிள்ளைக்கேதேன் குடுத்தனியே?’ நாகலிங்கம் மௌனத்தைக் கலைத்தான்.

‘என்னத்தைக் குடுக்கிறது. பாணைத்தான் தேத்தண்ணியில நனைச்சுக் குடுத்தனான்’

நீ சாப்பிட்டியா என்று நாகலிங்கம் வள்ளிநாயகியைக் கேட்கவில்லை. அவனுக்குத் தெரியும் சாப்பிட அங்கு எதுவுமில்லை என்று.

‘ஒருதனும் வேலைக்கு கூப்பிடுறானில்லை. அவங்களையும் குற்றம் சொல்லேலாது. இப்பத்தை நிலமையில கூலி தாற மாதிரி ஆரும் இல்லை. எல்லாம் எங்கட தலைவிதி’

வள்ளிநாயகி எதுவும் பேசாமல் குச்சி ஒன்றை கையில் எடுத்து மண்ணில் கீறிக் கொண்டிருந்தாள்.

‘காசிப்பிள்ளை ஒவ்வொரு நாளும் கரைச்சல் படுத்துகிறார். எல்லாருமா மருந்து குடிச்சு சாகலாம் எண்டால் அதுக்கு கூட வழியில்லை’

நாகலிங்கத்தின் குரல் கரகரத்தது.

வள்ளி நாயகி இப்போதும் தலை குனிந்து கீறிக் கொண்டிருந்தாள். மண் தரையில் கண்ணீர் துளி ஒன்று விழுந்தது.

 


 

தனபால் வீட்டில் எல்லோரும் பரபரப்பாயிருந்தார்கள்.

மீனாட்சி அழுது கொண்டிருந்தாள்.

‘ஐயோ, என்ன நடந்துதோ? இந்த வேலை வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னனான். மனுசன் கேக்கேலயே’

‘சீ, கத்தாதை அம்மா. அப்பாவை என்ன ஆமிக்காரன் பிடிச்சுக் கொண்டு போட்டானே? அவர் இன்னும் வரேல. அவ்வளவு தானே? உதுக்கேன் ஒப்பாரி வைக்கிறாய்? அண்ணை தேடிக் கொண்டு போனவர்தானே’ மகள் தாயை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

வழக்கமாக பகல் மூன்று மணிக்கெல்லாம் வந்து விடும் தனபால் அன்று ஆறு மணியாகியும் வரவே இல்லை.

நேரம் போய் கொண்டிருந்தது.

எல்லோரும் பயப்படத் தொடங்கினார்கள்.

அயலவர்களும் கூடத் தொடங்கினார்கள்.

இரவு ஒன்பது மணியளவில், அந்த வீட்டின் உழைப்பாளி, அன்று பகல் இராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தனபாலின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

3.
ஒரு மாலைப் பொழுது.

நான்கு மணியிருக்கலாம்.

ஊரவர் தத்தமது வழமையான கடமைகளில் இருந்தனர்.

கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இராணுவம் அந்த ஊரைச் சுற்றி வளைத்தது.

வீடுகள் கொழுத்தப் பட்டன.

பச்சிளம் குழந்தைமுதல் படு கிழம் வரை உயிர்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டன.

உடமைகள் சூறையாடப்பட்டன.

பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர்.

கொஞ்ச நேரத்திலேயே கொழுந்து விட்டடெரியும் நெருப்பில், தீனமான அழுகை ஓலங்களுடன் அந்த ஊரில் அவரவருக்கிருந்த பிரச்சனைக்கு சுமுகமான முடிவு காணப்பட்டுக் கொண்டிருந்தது.

 

——————–

பார்த்திபன்

1986

 

2 thoughts on “ஒரே ஒரு ஊரிலே”

Leave a Reply to Nathan Cancel reply