”ஹலோ”
”……”
”ஹலோ”
இரைச்சல், உள்ளாலை கசமுச. தொடர்ந்து …..
”ஹலோ”
”நான் ஜேமனியிலிருந்து செல்வம் கதைக்கிறன். மைதிலியோட கதைக்கலாமோ?”
”நான் இஞ்ச மார்க்கண்டு கதைக்கிறன். என்ன மாதிரி? காசலுவலுகள் முடிஞ்சுதோ?”
”அண்ணை ….என்னால முடிஞ்சளவுக்கு மாறியிருக்கிறன். விடிய பக்ஸிலை அனுப்பிவிடுறன்”
”முடிஞ்சளவுக்கெண்டா ….முழுக்க இல்லையோ?”
”அண்ணை…… ஏற்கனவே பன்ரண்டு தான் பேசி முடிச்சது. பிறகு சிங்கப்பூரில நிண்டு கொண்டு ரண்டனுப்பச் சொன்னியள். அனுப்பினனான். இப்ப மொஸ்கோவில நிண்டு கொண்டு திருப்பியும் ரண்டு கேக்கிறியள். நான் எங்கையண்ணை போறது?”
”எனக்கு விளக்கங்கள் வேண்டாம். நான் தொண்டு செய்யிறனானில்ல. ஏஜன்ஸி வேலை செய்யிறன். காசைத் தந்தா வாற வெள்ளி வெளிக்கிடுற குறுப்போட உம்மடை தங்கச்சியை அனுப்பிவிடலாம். இல்லையெண்டா அவவை இஞ்ச விட்டிட்டு நாங்கள் வெளிக்கிட்டிடுவம். என்ன மாதிரி?”
பொங்கிய ஆத்திரத்தை பற்களுக்கு இறக்கி… கடித்தான் செல்வம். காட்ட முடியவில்லை. அவன் பணயக்கைதியாய் வைச்சிருக்கிறான். ஒண்டுமே செய்யேலாது …
”அண்ணையானை கோவியாதையுங்கோ. ஒண்டஞ்சு மாறிப் போட்டன். எப்படியும் மிச்சத்தை சாமத்துக்கிடையில மாறி விடிய பக்ஸ் பண்ணுறன். தங்கச்சியையும் கெதியிலை அனுப்பி விடுங்கோ”
”நாளைக்கிரவுக்கிடையிலை எனக்குக் காசு கிடைக்க வேணும்”.
”ஓமண்ணை… கட்டாயம் கிடைக்கும். தங்கச்சியோட ஒருக்காக் கதைக்கலாமே?”
” ….. ”
”அண்ணை ….”
”மைதிலி ”
மொஸ்கோவில் மைதிலி அழ, இங்கே செல்வத்துக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கதைக்கக் கஸ்டமாயிருந்தது. போனில் காசு மட்டும் படு வேகமாய்க் குறைந்து கொண்டேயிருந்தது. கெதியில கூவப் போகிறது.
”மைதிலி ….அழாமை கதை”
”அண்ணை ….” விம்மல் தான்.
”என்ன மைதிலி ..? ஏதேன் பிரச்சினையே? என்னண்டு சொல்லன்.. சாப்பாடு தாறாங்களில்லையே?”
”சாப்பாடில்லாட்டிலும் பரவாயில்லையண்ணை. ஆனா…… இஞ்ச நிக்கிற பெடியள் சேட்டை விடுறாங்களண்ணை. அரியண்டப்படுத்துறாங்கள்…. காசு தரலாம் வா…. வெளியில நியூஸ் போகாதெண்டு…” மேலே தொடரமுடியாமல் விம்மி வெடித்தாள் மைதிலி.
செல்வம் மீண்டும் ஆத்திரமானான். ”எளிய நாயள் பொம்பிளைச் சகோதரங்களோட பிறக்காத நாயள். அவங்கள கண்ட துண்டமாக…………’ போனில் காசு மட்டம் மிகமிகக் குறைந்திருந்தது.
”நான் சிலோனுக்குத் திரும்பிப் போப் போறன். இந்த நரகத்துக்குள்ள இருக்கேலாதண்ணை” அழுதாள்.
”மைதிலி பயப்பிடாதை. வாற வெள்ளி உன்னை அனுப்புறதா ஏஜென்சிக்காரன் இப்பதான் சொன்னவன். பிறகு என்னோடைதான் இருக்கப் போறாய். உங்க வேற பொம்பிளையள் இருக்கினம் தானே?”
”ஒரு அக்காதான் நிக்கிறா. அவவையும் நாளைக்கிரவு அனுப்பிப் போடுவாங்கள். பிறகு நான் தனியத்தான். எனக்குப் பயமாயிருக்கண்ணை….’
”ஒண்டும் யோசியாதை. நல்லவங்களும் இல்லாமலே போகப் போறாங்கள்”
”ஏதேன் நடந்தா நான் செத்து…..’ தொடர்பு அறுந்துவிட்டது. காலியாய் போன ரெலிக்காட் வெளியே விழுந்தது. செல்வத்திடம் வேறு காட்டோ, சில்லறையோ இல்லை.
கண்ணில் படிந்த ஈரத்தைத் துடைத்துக்கொண்டு பூத் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இதமான ஈரக்காற்று உடல் சூட்டுடன் மோதியது. கிழிசலான கறுப்புத் துணிக்குள்ளிருந்து வெளிச்சம் பாய்வது போல நட்சத்திரங்கள். மிகமிக நீண்ட இடைவெளி விட்டுக் கீழே தெரு விளக்குகள் மஞ்சள் பூசின. லைற்றைப் போட்டு வந்த கார்கள் சிவப்புக் காட்டி மறைந்தன. மற்றப்படி சுத்தமாய் இருள்.
ரெஸ்ரோரண்டின் பின் கதவைத் திறந்து கொண்டு செல்வம் உள்ளே நுழைகையில் இவனையே எதிர்பார்த்து முதலாளி..
”வெளியில் எப்படி நல்ல காலநிலையோ?”
”அவசரமாக மொஸ்கோவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டியிருந்ததால்..”
”நான் உனக்குச் சம்பளம் தருவது இங்கே பிற்ஸா போடுவதற்கு”
”என்னுடைய தங்கை மொஸ்கோவில் நிற்கிறாள். அவளுடன்….”
”வாயை மூடு. நாளை உன் தம்பி வந்து பாகிஸ்தானில் நிப்பான். அவர்களுடன் கதைப்பதுதான் முக்கியம் என்றால் செய்த வேலைக்கு சம்பளம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போ. இப்போது கூப்பிட்டாலும் இங்கு வந்து வேலை செய்ய நூறு தமிழர்கள் காத்திருக்கிறார்கள்”
செல்வம் மறுபடி ஆத்திரமானான். ஏஜென்சிக்காரன் காசைத் தின்னுறான். இவன் ஆளையே தின்னுறான் ” இந்தா நீயும் உன்ர வேலையும். இத்தினை வருசம் இதுக்கையே கிடந்து அவியிறதைக் கொஞ்சங்கூடி யோச்சுப் பாக்காம நாய் மாதிரி குலைக்கிறாய். உன்னட்டை ஒரு மனுசன் வேலை செய்வானே.. பேசாம ரோட்டில இருந்து பிச்சையெடுக்கலாம். நீயும் உன்ர வேலையும்….” இத்தனையும் வந்து தொண்டையுடன் நின்று விட்டன. ‘இவனோடை கொழுவிப்போட்டு டெலிபோன் பில் என்னெண்டு கட்டிறது? வீட்டு வாடகை..? கரண்ட்..?
”மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் வேலை நேரத்தில் இப்படி வெளியே போகமாட்டேன். இதுதான் கடைசித்தடவை” கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு திடீர் வேகமாக மாவை உருட்டி, தட்டையாக்கி, தட்டில் போட்டு, ரொமாற்றன் சோஸ ஊற்றி, கேஸ தூவி..
முதலாளி அவ்வளவு கெதியில் விடுறதாயில்லை. இத்தாலியிலும் டொச்சிலும் முடிந்தளவு கேவலமாய் திட்டி தான் முதலாளி எண்டதை இன்னொரு முறை நிரூபித்து விட்டுத்தான் போனான். செல்வத்துக்கு கண்களில் நீர் முட்டியது.
”நான் அப்பவும் சொன்னான். செவ் வந்தாக் கத்துவானெண்டு. நீயும் நல்ல நேரம் பாத்துத்தான் போனடிக்கப் போயிருக்கிறாய்” என்றான் சலாட் போட்டுக்கொண்டிருந்த மணி.
”நானென்ன செய்ய…? தங்கச்சியோடை கதைக்க ஏஜென்சிக்காரன் இப்பதான் நேரம் தந்தவன். அவள் அங்க பயந்துகொண்டிருக்கிறாள். நான் போனும் பண்ணாட்டி..?”
”டேய் டேய் …. இப்ப ஏன்ராப்பா அழுறாய். செவ் இனி வந்தாக் கொண்டால் திருப்பிக் குலைக்கப் பேறரான். வேலையைக் கவனி”
செல்வம் எல்லாத்துக்குமாய்ச் சத்தமில்லாமல் அழுதான். பிற்ஸாவுக்கு உப்புக் கண்டபடி கூடியது.
”எப்பவாம் தங்கச்சியை அனுப்புறது..?” கேட்டபடி மணி செய்த நூடில்ஸைச் சோதித்து முன்னுக்கு அனுப்பினான்.
”வாற வெள்ளியாம்.”
”சரி கண்ணைத் துடை”
இருவரும் வேலையுடன் ஒன்றித்தார்கள். அடுத்த நாள் விடுமுறையாதலால் நிறைய டொச்சுக்காரர் நேரம் தப்பியும் சாப்பிட வந்துகொண்டேயிருந்தார்கள். பிற்ஸாக்களும், நூடில்ஸ்களும் இடைவெளியில்லாமல் பறந்து கொண்டிருந்தன. சலாமி, சிக்கன், ஆட்டிசொக்கன், பப்பிறிக்கா… அயிட்டங்கள் மாற, மாகிரற்றா, கல்ஸோனா, பிரட்டா… என்று பிற்ஸாவுக்கு பெயர்கள் மாற.. செல்வம் குசினியில் ஒரே மாவைத்தான் உருட்டித் தட்டையாக்கி …..
ஒரு மணியளவில் தான் வேலை முடிந்தது. செல்வமும் உடுப்பு மாற்றி வெளியில் வந்தபோது ஆரவாரம் கொஞ்சமாக அடங்கியிருந்தது. இளசுகள் பால்மாறிக் கட்டிக் கொண்டு டிஸ்கோவுக்குப் போக…. குடும்பப்பிரச்சினைகள் தெரியாத இளம் சமுதாயம்.
”என்னடாப்பா கடுமையா யோசிக்கிறாய்?” கேட்டபடி மணி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
”இல்லையடாப்பா.. உவ்வளவு தொகையா காசு மாறியாச்சு. எப்படித் திருப்பியடைக்கப் போறனோ?”
”உனக்கெண்டாப்பா.. தங்கச்சி வாறதுக்கு முந்தியே சண்ணுக்குப் பேசி முடிச்சிட்டாய். உன்ரை சிநேகிதன் உன்னட்டை சீதனமே கேக்கப் போறான்? பக்றியிலை வேலை செய்யிற இமிக்கிரேசன் மாப்பிளை. கலியாண வீட்டையும் தன்ரை செலவிலைதான் எப்படியும் நடத்துவான். பிறகென்ன?..” புகை வளையங்களாகி மேலேறி மறைந்தது.
”எல்லாம் சரியடாப்பா. மாறின காசை நான்தான் கட்ட வேணும். ஏஜென்சிக்காரன் இன்னும் என்னை விடுறமாதிரித் தெரியேல. ம்.. ” பெருமூச்செறிந்தான்.
வீடு சேர்ந்ததும் முதல் நாளையான் சோறையும், கறியையும், ஆளாளுக்குப் பிரட்டி அடித்து விட்டு படுக்கைக்குப் போகையில், விடியத் தொடங்கிவிட்டது.
இரண்டு நாள் கழிந்து செல்வத்துக்குப் போன் வந்தது.
”உம்மட தங்கச்சிதானே மொஸ்கோவில நிண்டவா?”
”ஓமண்ணன்.”
”ஆளை யூகோவுக்குக் கொண்டந்திட்டம். நாளைக்கிரவு எப்பிடியும் ஆளை ஜேமனிக்குக் கொண்டந்திடுவம். அதுக்கிடையில் நான் தாற அட்ரசுக்கும் போய் ஐந்நூறு டொலர் குடுத்து விடும்”
”அண்ணை… நான் எல்லாக் காசும் கட்டியிட்டன். ரண்டு நாள் முந்திக்கூடி ரண்டாயிரம் மாறி பக்ஸில மொஸ்கோவுக்கு அனுப்பினனான்”
”அது மார்க்கண்டுக்கு யூக்கோவுக்கு கொண்டு வாறதுக்கு மட்டுந்தான். இஞ்சையிலிருந்து ஜேர்மனிக்கு நான்தான் ஆக்களை அனுப்புறனான்.”
”அண்ணை… எல்லாத்துக்கும் சேத்துத்தானே மொத்தமாய்க் கட்டினது. இப்ப ஒவ்வொரு நாட்டிலயும் வந்து நிண்டு கொண்டு …
”எனக்கும்மோட கதைச்சு மினக்கிட நேரமில்லை. நான் கன இடங்களுக்குப் போன் அடிக்க வேணும். என்ன மாதிரி.. …? காசு கொண்டு போய்க் குடுக்கிறீரோ? இல்லாட்டி….”
”கொண்டேக் குடுக்கிறணண்ணை.. நான் ஒருக்காத் தங்கச்சியோடை கதைக்கலாமே?”
”இதில கதைக்கேலாது. ஆள் வேறை றூமிலை நிக்குது. நீர் வேணுமெண்டா ஒரு பதினொரு மணி போல நான் தாற நம்பருக்கு அடியும்.”
செல்வம் நம்பரைக் குறித்துக் கொண்டான். தலை சுற்றியது. ஏஜென்சிக்காரன் எல்லாரையும் நிக்க வைச்சுச் சுட வேணும். ராஸ்கலுகள். ரத்தம் வாற மாதிரி காசு கறக்கிறாங்கள். இப்ப உடன் காசுக்கெங்கே போறது? போனில் கை வைத்தான்.
”அண்ணான் நான் செல்வம் கதைக்கிறன். அவசரமா கொஞ்சக்காசு மாறலாமே?
”அட சைஸ, ஒரு அஞ்சுநிமிசம் முந்தி அடிக்காதேயன். இப்பதான் சிவானாதி வந்து இருந்ததை வேண்டிக்கொண்டு போரான்”
அடுத்த முயற்சி.
”நான் செல்வம் கதைக்கிறன்”
”என்ன விசயம.”
”கொஞ்சக்காசு அவசரமாய்த் தேவைப்படுது. அதுதான்..”
”அவர் இப்ப வீட்டை இல்லை. அவுட்டசிற்றிக்குப் போட்டார். ரண்டு நாள் கழிச்சு அடிச்சுப் பாருமன்”
”நாளைக்கு காசு தேவை. அதுதான்..”
”அவர்தான் வர வேணும்”
தன் முயற்சியில் சற்று மனம் தளராத செல்வம் மீண்டும்…
”செல்வம் கதைக்கிறன்”
”எப்பிடியடாப்பா. சொல்லு. என்ன ஆளையே இஞ்சாலப் பக்கம் காணேலை. இண்டைக்கு வாவன்.”
”தங்கச்சியின்ரை அலுவலாய் ஓடித்திரியிறன். ஒரு அவசர உதவியடாப்பா. காசு கொஞ்சம் அவசரமா தேவை.”
”உந்தப் பகிடிதான் வேண்டாமெண்டிறது. வேண்டின காசைத் திருப்பித் தாற மாதிரித் தெரியேலை. அதுக்கிடையிலை”
”என்னடாப்பா நான் எங்கையேன் ஓடப் போறேனே? எல்லாத்தையும சேர்த்து ஒண்டாய்த் தாரன். இப்ப ஒரு அவசரத் தேவை..”
”என்னட்டை ஒரு பெனிக்கும் இல்லை. காரொண்டு எடுத்ததாலை காசு எக்கச் சக்கமாய் முடிஞ்சு போச்சு”
முயற்சி திருவினையாக்கவில்லை. எல்லாருமே கையை விரிச்சாச்சு. எல்லாரிட்டையும் ஏற்கனவே மாறியாச்சு. இனி ஆரிட்டை கையேந்தலாம். இரந்துண்டு வாழ்வோரே வாழ்வார்.
பதினொரு மணி வந்தது. மைதிலி. யூகோசெலவியா. போன். கிரீங். ஹலோ.
”நான் ஜேமனியில இருந்து செல்வம் கதைக்கிறன். மைதிலியோட கதைக்கலாமே?”
தடபுடச்சத்தங்கள்.
”மைதிலி”
சொல்லி வைத்தாற் போல் அழத்தொடங்கினாள்.
”என்ன நீ எப்ப பாத்தாலும் அழுது கொண்டு. இஞ்சை டெலிபோன் பில் ஏறுது ” ஏசுவதாக நினைத்துக் கொண்டாலும் செல்வத்தின் தொனி அப்படியில்லை.
”அண்ணை என்னைக் கெதியாய் கூட்டிக் கொண்டு போ” யூகோசெலவியா எங்கே? ஜேமனி எங்கே?
”மைதிலி.. …இன்…” டெலிபோன் கட். தொடர்ந்து முயற்சித்தான். இரைச்சல் தான் வந்தது. சண்டை நடக்கும் நாடு. அரை மணித்தியாலமாவது லைன் கிடைக்கப் போராடியாக வேண்டும். பிந்தினால் செவ்வன் கத்துவான்.
மைதிலியை எந்தப் பிரதேசத்தில் வைத்திருக்கிறாங்கள்? சேர்பியா? பொசினியா? குரோசியா? எங்கை குண்டு வெடிக்குமோ? சீ… அழிவை யோசிக்கக்கூடாது. நல்லதே நடக்கும்.
வேலைக்குப் போய் மாக்குழைத்து உருட்டிப் பிரட்டி.. . வீட்டுக்கு வந்த போதும் யோசனைதான். காசுக்கெங்க போறது? எல்லாற்றை காலையும் பிடிச்சாச்சு. கடைசியாய் உள்ள வழி செவ்விடம் அட்வான்ஸாய் சம்பளத்தைக் கேட்பது தான். அவன் எமகாதகன். அஞ்சு பெனிக்குக்காண்டி அஞ்சு நிமிசமாவது ஏசுவான். எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். பொறுப்பார் பொறுக்குவார். படுக்கும் போது தான் விடிந்தது.
இரண்டாம் பாகம்
பனசொனிக்கில் ”குளிச்சாக் குத்தாலம் கும்பிட்டாப் பரமசிவம்” வந்து கொண்டிருந்தது. மேசையில் மரியக்கோன், கோலா, ஆஸ்;ட்ரே.. .. சிப்ஸ் மேசையெங்கும் சிந்தியிருந்தது. போதாதுக்கு சிகரெட் புகை. ஆளாளுக்கு எல்லா இடத்திலும் இருந்தார்கள்.
வெளியே கோடை கால வெயில். விற்றமின் டி படுகின்ற பெண்களின் இடங்களை ஜன்னலுக்கருகிலிருந்து சன் கண்காணித்துக் கொண்டிருந்தான். கையில் சுத்த சைவமாய் கோலா.
”நான் கட்டன் றைற்ராச் சொல்லிப் போட்டன். ஸமர் முடியமட்டும் கவுண்டரிலை நிக்க மாட்டெண்டு” என்றான் ராஜேந்தர்.
”ஏன்ராப்பா வேலை கூடவே?”
”வேலை என்னத்தை. அப்பிடி இப்பிடி உடுப்போடை டொச்சுப் பெட்டையள் முகத்துக்குக் கிட்ட வந்து நிண்டா , பில் எங்கை அடிக்கிறது. சாப்பாட்டையும் குடுத்து, காசையும் குடுத்து விட்டா கடைசியா கையாலதான் போட்டுக் கட்ட வேணும்.”
”இந்த இடத்தில நாங்கள் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேணும்”
”இப்பிடி உடுப்புகளைப் போடுற அறிவைத் தந்ததுக்கோ?”
”அஞ்சாறு மாதத்துக்கு மட்டும் சமரைத் தந்ததுக்கு. உனக்குச் சொன்னா என்ன மச்சான். வெளியால போனா கற்போடை திரும்பி வருவேனோ எண்டு ஐமிச்சமாய் கிடக்கு”
”இஞ்சையென்ன பெரிய ஸமர்? மொஸ்கோவில நிக்க வேணும்” என்றபடி ராஜேந்தர், ஞானசிவத்தின் சம்பாசணையில் குறுக்கிட்டான் கண்ணா.
”சரி. தொடங்கியிட்டான் மொஸ்கோப் புராணம் பாட” என்றான் ராஜேந்தர்.
”ஆளை விடு. நாலு விசயத்தைக் கேப்பம். பொதறிவு வளரும்”
கண்ணா ஒரு மிடர் விட்டு ஏவறையைச் சந்தித்துக் கொண்டு தொடங்கினான். மொஸ்கோவில் ஏஜென்சி கிருபையால் ஒன்றரை வருடங்கள் தங்கி ஜேமனி வந்து இரண்டு கிழமைக்கு மேலாகிறது.
”அதை எப்பிடிச் சொல்லுறது. ஒரு சிகரெட் பெட்டியைக் காட்டியே ஒரு மொஸ்கோப் பெட்டையைக் கொண்டு போகலாம். அங்க அதுகள் காசுக்கும் சாப்பாட்டுக்கும் சரியாக் கஸ்ரப்படுதுகள். அதைச் சரியாய்ப் பாவிக்கிறது எங்கடை சிறிலங்கன் தான். எங்கட சிலோன் ரூபாவை விட அவங்கட றூபில் பெறுமதி குறைவு தெரியுமே? நாங்கள் ஐஸ்கிரீம் வேண்டிக் குடிச்சாலே அதுகள் ஆவெண்டு பாத்துக் கொண்டு நிக்குங்கள். எல்லாம் கொப்பச்சேவ், ஜெல்சினின்ரை புண்ணியம்”
”பொறு, பொறு சிகரெட் பெட்டியோட பெட்டை பிடிக்கலாமெண்டுறியோ?”
”என்ரை விசாவுக்கு மொஸ்கோ போகலாமோ?’ விசாரித்தான் ஞானம்.
”சகலத்தையும் அனுபவிச்சுப் போட்டுத்தான் வெளிக்கிட்டனான். மொஸ்கோ பெட்டையளை விடுங்கோடாப்பா. இஞ்சால வாறதுக்கெண்டு வந்து நிக்கிற எங்கடை பெட்டையள்….. சாய்…”
”டேய் நிப்பாட்டாமல் சொல்லு” என்று எல்லோரும் ஆர்வமாயிருந்தார்கள்.
”கலியாணம் பேசி வந்த கன பெட்டையள் அங்கயே பெடியளைப் பிடிச்சு செற்றிலாயிட்டுதுகள். சிலதுகள் வடிவாய் என்ஜோய் பண்ணிப்போட்டு இஞ்சை வந்து வேறை ஆரையோ கலியாணம் கட்டியிருக்குதுகள்”
சண் சடாரென்று திரும்பினான். மூளையில் பட்சி கூவியது. ”எல்லாப் பெட்டையளும் அப்பிடியில்லை” என்றான்.
”ஆ… சும்மா போ. நானே எத்தினை பேருக்கு ஓ…..” கண்ணா தொடர்ந்து சுவாரசியமாக விபரிக்க, மற்றவர்கள் ஏக்கமாய் கேட்டுக் கொண்டிருக்க, சண் தனக்குள் சில கணக்குகள் போட்டுப் பார்த்து, தீர்மானித்துக் கொண்டான். தொடரந்து மூன்று நாட்களாய் அதையே யோசித்து, உறுதி செய்து கொண்டு, செல்வத்திற்குப் போன் பண்ணினான்.
”என்னடாப்பா… ரண்டு நாளாய் உன்னைப் போனிலையே பிடிக்கேலாமப் போச்சு? எங்கை போய் துலைஞ்சனி? மைதிலியை நேற்றுப் போய் கூட்டியந்திட்டன். வாவன் வீட்டை”
”பிறகு ஆறதலா வாறன். இப்ப ஒரு முக்கியமான விசயம் உன்னோடை கதைக்க வேணும்”
”வீட்டை வந்து கதையேன்ராப்பா”
”இல்லை. போனிலை கதைக்கிறதுதான் ஈஸி”
”மாப்பிளைக்கு வெக்கம் வந்திட்டுது போலை”
”எனக்கிப்ப கலியாணம் செய்யிற பிளான் இல்லை”
”என்ன இருந்தாப்போலை? சரி… பிரச்சினை இல்லை. அதுவரைக்கும் மைதில பாசையைப் படிக்கட்டுமன்”
”நான் மைதிலியைக் கலியாணம் செய்யிறதா இல்லை”
”டேய்… பகிடி விடாதை”
”சீரியஸாத்தான் சொல்லுறன்’
”ஏனெண்டு சொல்லன்? இஞ்சை சனம் முழுத்துக்கும் தெரியும், மைதிலியை உனக்குப் பேசியாச்செண்டு. இப்ப போய்…..”
”விளக்கமாய் கதைக்கேலாது. சிலோனிலயிருந்து டிரெக்ரா இஞ்சை வாற பெட்டையைத் தான் கலியாணம் செய்வன். மற்றது நானும் நீயும் எப்பவும் போல பிரெண்ட்ஸ்தான். இதாலை…..”
செல்வம் போனை வைத்துவிட்டான். அதிர்ச்சி, ஆத்திரம், கோப வெப்பம் உடலில் பரவியது. பன்னாடைப் பரதேசி….
”என்னண்ணை….? ஏதேன் பிரச்சினையே..? ” மைதிலி அண்ணனை நெருங்கி வந்தாள்.
எப்பிடி இவளுக்குச் சொல்லுறது? ஒரு அண்ணையே தங்கச்சியிட்டை…..
”என்ணண்டு சொல்லேன்”
எப்பிடியோ, எப்பவோ சொல்லியேயாக வேணும். அதாலை இப்பவே சொல்லிப் போடலாம். அவள் கனவு காணக் கூடாது. இப்பவே….
சொன்னான்.
மூன்றாவது பாகம்
ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
”உதுக்கேன் யோசிக்கிறாய் அண்ணை. அவன் இல்லையெண்டாப் போல எனக்கு கலியாணமே இல்லையே. உன்ரை சிநேகிதர் தன்ரை முடிவை இப்பவே சொன்னது நல்லதாய் போச்சு. உப்பிடியெல்லாம் ஐமிச்சப்படுறவன் நாளைக்கு கலியாணம் கட்டினாப் பிறகு, தற்சேலா நான் வெளியிலை போய் பஸ்ஸில பிந்தி வந்தாலும் ஆரோடையேன் படுத்திட்டு வாறன் எண்டுதான் நினைப்பான். உவங்களைப் போல ஆம்பிளையளை…. தூ” என்று மைதிலி துப்பியது சமூகத்தின் மேல் விழுந்தது என்று கதையை முடித்தேன்.
கனகாலத்துக்குப் பிறகு எழுதின கதை. புலம்பெயர் இலக்கியத்தில் எப்பிடியும் சேர்ப்பாங்கள்.
”மைதிலி துப்பியது சமூகத்தின் மேல் விழுந்தது என்ற வரிகள் மூலம் கதாசிரியர் சமூகத்தை நன்றாகச் சாடியுள்ளார்” என்று எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒரு வாசகர் அப்பாவித்தனமாகக் கடிதம் போடுவார்.
”பிரச்சினைக்கு தீர்வு சொல்லாமல் தப்புபவன் எழுத்தாளனல்ல” என்று யாராவது முற்போக்கு கோபித்தால் ”வாசகர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறேன்” என்று வாசகர்கள் மேல் பாரத்தை இறக்கிவிடலாம்.
என்ன தலைப்பு வைக்கலாம்?
சிம்பிளாய் இருக்கக் கூடாது. கவர்ச்சியாயும் இருக்க வேணும். ம்….. மொஸ்கோவில் கிழிந்த பெண்மை..? கற்பு கலியாணம்?? மொஸ்கோவால் வந்தவள்?? வராதவள்?? வந்தவள் வராமல் வந்தாள்?? என்று யோசிக்கையில் போன் அடித்தது.
”ஹலோ… நான் மணி கதைக்கிறன்”
”என்ன இந்த நேரத்தில…?”
”உனக்கு விசயம் தெரியாதே? செல்வத்தின்ரை தங்கச்சி மைதிலி நித்திரைக் குளிசை போட்டிட்டாள். ஆள் இப்ப ஆஸ்பத்திரியிலை. படு சீரியஸ். இப்போதைக்கு ஒண்டும் சொல்லேலாதெண்டு டொக்ரர் சொல்லிப் போட்டார்”
”ஏன்..? என்ன நடந்தது…?”
”சண் அவளை முடிக்க மாட்டனெண்டு சொன்னது தெரியும்தானே? அதோடை மைதிலி சரியாய் உடைஞ்சு போனாள். பிறகு செல்வம் கன சம்பந்தங்கள் பேசினவன். ஆனா கடைசி நேரத்திலை சண் ஏன் செய்ய மாட்டனெண்டவன் எண்ட கதை கேள்விப்பட்டு, கிண்டிக், கிளறி…. எல்லாச் சம்பந்தங்களும் முறிஞ்சு…. கடைசியாய் இண்டைக்கும் வந்த ஒரு பகுதி மாட்டனெண்டு சொல்ல பெடிச்சி குளிசையைப் போட்டிட்டுது”
”விசர்ப் பெட்டை” என்று சொல்லிவிட்டு, வேறு புதினங்களையும் அலசிவிட்டு போனை வைத்தேன்.
மைதிலி ஆஸ்பத்திரியில் குற்றுயிராய் படுத்திருக்கும் காட்சி ஒரு தரம் கண்ணில் மின்னியது. சாய்… அதைத் துடைத்தெறிந்துவிட்டு கதைக்கு வந்தேன். கதையிலை வாற பேருகளை மாத்த வேணும். மைதிலியை ஜானகியா… செல்வத்தை சந்திரனா….. மணியை….
கதையை எங்கை அனுப்பலாம்? வீரகேசரிக்குத்தான் வாசகர் கூட. ஆனா சரிநிகருக்கும் ஒரு கிரௌட் இருக்குது.
என்ன புனை பெயரிலை எழுதலாம்?
பீம்சிங்குக்கு பாவன்னா வரிசைப் படங்கள் எல்லாம் வெற்றி.
பாண்டியன்? பாக்கியநாதன்?? பார்த்திபன்???
——————–
பார்த்திபன்
1995
ஓவியம்: மணிவண்ணன்