ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலை இப்போதில்லை. அதுபாட்டுக்குப் புல்லாகிப் பூடாய், புழுவாகிப் பாணியில் எரிச்சலாகி, சலிப்பாய், விரக்தியாய் முடிந்தது.
இது வழமைதான். வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதைதான்.
‘பாவம் அதுகள். நான் உதவாம ஆர் உதவுறது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது’ என்று கவலைப்படும் அவனுக்குப் பெயர் பாலகிருஸ்ணன். பாலு என்று வீட்டிலும், இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள்.
அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்து விடும். தலைமுடி இதற்குப் பொய்ச்சாட்சி சொன்னது. உடம்பு றெசிலிங் பார்க்கக் கூடப் பொருத்தமற்றிருந்தது. தொட்டு நெற்றியில் வட்டமாக வைத்துக் கொள்ளக்கூடியளவிற்குக் கறுப்பு. இந்த ஒரு காரணத்திற்காகவே பலமுறை அப்பாவையும், அம்மாவையும் அசிங்கமாய்த் திட்டியிருக்கிறான். ‘இப்ப ஒருத்தியும் பாக்கிறாளவையில்லை’
‘இண்டைக்குகெல்லே வரச்சொன்னவங்கள். நேரத்தோட போவன். முதல் நாளே சுணங்கிப் போனியெண்டா கிழிச்ச மாதிரித்தான்’
அறை நண்பன் சிவகுமார் கோப்பியை உறிஞ்சிக்கொண்டு அறிவுறுத்தினான். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மேல், கீழ் கட்டில்களில் படுத்துறங்கும் சிநேகிதர்கள். இன்று சிவகுமாருக்கு விடுமுறை!
‘வாறன் போட்டு’ படித்து முடித்த ஏரோகிறாமை எட்டாக மடித்து டெனிம் பின்பொக்கற்றில் வைத்துக் கொண்டு பாலு புறப்பட்டான்.
கதவுவரை போனவன் திரும்பி வந்து ”கோப்பி குடிச்சு முடிஞ்சு புத்தகங்களைத் தூக்கிப் போடாத. ஒருநாள் நிக்கிறனி. வடிவாய் சமைச்சு வை. பிறகு புத்தகங்களைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு படு’ ‘என்று சிவகுமாருக்குச் சொல்லிவிட்டுப்போனான்.
சமூக உதவி அலுவலகம் தந்திருந்த தகர அலுமாரியில் பாதிக்கு மேல் புத்தகங்களால் நிரப்பி வைத்திருந்தான் சிவகுமார். எல்லாமே மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பகமும், நியூசெஞ்சுரியுந்தான்.
ஒருநாள் தப்பித் தவறி ஒன்றைத் தூக்கிப் பார்த்த பாலு இயக்கவியல், வரலாற்று, பொருள், கருத்து முதல்வாதங்கள் என்று போவதைப் பார்த்து தலையைப் பிய்த்துவிட்டு வைத்துவிட்டான். சிவகுமார் வெகு சாவகாசமாக அந்தப் புத்தகங்களுக்குள் இறங்கிப் போவதைப பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
‘சொல்லிப்போட்டன். கெதியில் மொட்டையாய் நிக்கப் போறாய். பிறகு இப்ப இருக்கிற மாதிரியே பிரம்மச்சாரியாய் இருக்கப் போறாய்’
இப்போது பஸ்ஸில் போகும்போது அவையும் ஞாபகத்துக்கு வந்தன. கூடவே இன்று போகும் காரியமாவது சரிவரவேண்டும் என்ற கவலையும் பிறந்தது. வீட்டிலிருந்து வரும் கடிதங்களை எத்தனை நாட்களுக்குத்தான் எட்டாக மடித்து வைத்துக்கொண்டிருப்பது. அவர்கள் பாவம். அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் உயரத்தின்படி நிக்க வைப்பதுபோல் வீட்டிலிருப்பவர்கள் வரிசைக்கிரமமாக வந்து போனார்கள்.
அப்பா அஸ்பெஸ்ரஸ் கொம்பனி ஒன்றில் கேற்றில் அமைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் மண்ணிறக் காற்சட்டை, சேட் போட்டு வேலை பார்த்தார். இப்படியான தொழில்காரர்களைப் போல சம்பளத்துடன் கடனும வாங்கியே சீவியம். சீட்டு, கைமாத்து என்று நாலு பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார்.
முன்னூற்றி அறுபத்திநாலு நாட்களுக்கு அஸ்மா, டயாபிற்றிஸ் என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த அம்மா ஆறு வருடங்களுக்கு முன்பு அவற்றின் ஒத்துழைப்புடன் இறந்து போனாள்.
குடும்பச் சுமை சமன் பெண்கள் என்ற வாய்ப்பாட்டின்படி வீட்டுப் பொறுப்புக்கள் ஒட்டுமொத்தமாக அக்காவின் தலையில் வந்து குவிந்தன. சினிமாப்படங்களில் அல்லது சோகநாவல்களில் வரும் விதவைத்தாய், மூத்த சகோதரிகள் மாதிரி இருபத்திநான்கு மணித்தியாலமும் தையல் மெசினுடனோ, பத்து பாத்திரங்கள் தேய்ப்பதாகவோ அவள் இல்லாமல், தான் படித்தவற்றைக் கொண்டு அண்டை, அயல் வீட்டுப் பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுத்தாள். அதிலும் சொந்தக்காரப் பிள்ளையளுக்கு இலவசம் வேறு. இல்லையென்றால் கண்டறியாத உறவு முறிந்துவிடுமாம்!
அண்ணன் எண்பத்தி மூன்று கலவர இயக்க சீசனில் துண்டொன்றும் எழுதி வைக்காமலே போய்விட்டான். போவதற்கு முன் வரை அவன் தகுதி சண்டியன். பிறகும் அதிக மாற்றமில்லையென்று கேள்வி.
இயக்கத்திற்குள்ளேயே உள்விரோதத்தில் முன்னால் போகவிட்டு, பின்னால் நின்று சுட்டு, பிணத்திற்கு லெப்ரினென்ற் பட்டம் கொடுத்து அஞ்சலித்தல், பதவிப் போட்டிக்காக வேறு இயக்கங்களால் தட்டப்படல் என்று எல்லாவற்றிலும் ஒரு மாதிரியாகத் தப்பி, விலகி இப்போது கொழும்பில் ஒரு மூலையில் ஒளிந்திருந்தான்.
தம்பியும், தங்தையும் திங்களிலிருந்து வெள்ளிவரை பள்ளி போய், ஏனைய நாட்களில் வெடிக்காவிட்டால், விளையாடினார்கள்.
இத்தனை பேருக்கும் அப்பாவினதும், அக்காவினதும் உழைப்பு போதுமானதாக இல்லை. எல்லையைக் கணிசமானளவு தாண்டிப் போய்விட்டதால் கடன் கொடுப்பவர்களுக்கும் அவநம்பிக்கை வந்து விட்டது.
”இப்பதான் குடுத்தனான்”
”நீ கொஞ்சம் முந்திக் கேட்டிருக்காதையன்”
”நாங்களே இப்ப கடன்” என்றெல்லாம் மறைமுகமாகவும், சில வேளைகளில் நேரடியாகவும் நிராகரித்தார்கள்.
சாப்பாடு உள்ளிட்ட வழமையான வாழ்க்கைச் செலவுகள் ஒரு பக்கம். அக்காவின் தலையில் வெள்ளிகள். அதனால் மகனே… என்ற அப்பாவின் நியாயமான கவலை இன்னொரு பக்கம். தவிர்க்க இயலாமல் இலங்கைக் கடிதங்கள் யாவும் பணம் தேவை என்றன.
‘விருப்பந்தான் காசனுப்ப வேணுமென்டு. எனக்கு மட்டும் பாசமில்லையே? நிலைமையள் விளங்காதே? எனக்கு விளங்கி என்ன? ஜேமன் அரசாங்கம் எல்லோ எல்லாத்தையும் கையுக்க வைச்சிருக்கு’
நீ அரசியல் தஞ்சம் கோரிய பம்மாத்து அகதி. எப்படியோ இங்கு வந்து விட்டாய். உன்னை இங்கு கொல்லப் போவதில்லை. வெடிக்காது. ஒரு மூலையில் இருந்து விட்டு நாங்கள் பிடித்து அனுப்பும் போது நாட்டுக்குப் போய்ச்சேர் என்றது ஜேமன் அரசு. இதற்குப் பெயர் அரசியல் தஞ்சமாம்.
இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமை இருக்குது. அரசுகள் மூண்டாம் உலக நாடுகளைச் சுறண்டிச் சம்பாதிச்சு தங்களை வளத்துக்கொண்டிருக்குதுகள். தாங்கள் சுறண்டினதையே எங்களுக்குப் பிச்சையாய் போடுறதுக்காண்டி வேலை செய்ய விடாமல் ஒண்டுக்கும் ஏலாதவர்களாய் எங்களை ஆக்கிக் கொண்டிருக்குதுகள்” என்று சிவகுமார் நீளமாய் விளக்கமளித்திருந்தான்.
வந்த இரண்டாம் வருடமே சீனா றெஸ்ரோறண்டில் அவன் களவாக வேலை செய்யத் தொடங்கிவிட்டான். அங்கும் தான் சுறண்டப்படுவதை சொல்ல அவன் மறக்கவில்லை.
நியாயமாக வேலை செய்யச் சாத்தியமே இல்லாததால் பாலுவும் கறுப்பு வேலைக்கே அலைந்தான். எல்லா றெஸ்ரோறண்டுகளிலும் பன்றிப் பண்ணைகளிலும் ஏற்கெனவே தமிழர்கள் இருந்தார்கள்.
கடைசியாக கறாஜ் ஒன்றில் வேலை கிடைத்தது. குளிரில் விறைத்தும், வெக்கையில் வேர்த்தும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான்.
அப்போதுதான் கனடா சீசன் ஆரம்பமாகியிருந்தது. தமிழர்கள் கப்பலில் கனடா போனதைப் பற்றி பெரும்பாலும் எல்லா நாடுகளும் அறிவித்தன.
வீட்டு நிலமையைக் கணக்கிலெடுத்த பின் பாலுவையும் கனடா ஆசை தொற்றிக்கொண்டது. இப்பிடிக் கஸ்ரப்பட்டு எள்ளுப்போல சேக்கிறதைத விட கனடாக்குப் போனா வீட்டுக் கஸ்ரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து எல்லாரையும் அங்க கூப்பிட்டிடலாம்.
சேத்து வைச்ச காசு முழுவதையும் ஏஜென்சிக்கு கொடுத்து ஆறு மாசத்துக்கும் மேலாக ஓடித்திரிந்து, கையில் கிடைத்த பாஸ்போட்டுக்கு ஏற்ப மாறுவேடம் பூண்டு , பிளைற்றில் கால் பதிப்பதற்கு முன் குறுக்கால் போனவர்கள் அவனைப் பிடித்துவிட்டார்கள். அதற்கான குற்றக் கட்டணத்தை அவன் இன்னும் கட்டிக்கொண்டிருந்தான்.
பழைய வேலையும் போய்விட்டது. மனம் நொந்து கன காலம் திரிந்த பின் இத்தாலிக்காரனின் பிற்ஸாக் கடையில் அகப்பட்டான். பன்னிரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நல்ல வெப்பநிலையில் வைத்து வாட்டிக்கொண்டு, மணித்தியாலம் இரண்டு மாக் ஐம்பது பெனிக்படி சம்பளம் என்று கொடுத்தார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலை. வீட்டுக் கடிதங்கள் அவனைப் போறணைக்கு முன் நிறுத்தியே வைத்தன.
இரண்டு வருடங்கள் பேசாமல் கழிந்தன. பிறகு மறுபடியும் கனடா ஆசை. வேறு பலர் வெற்றிகரமாகப் போய் இறங்கியதால் இன்னும் தீவிரமாகியது.
”டேய் போகாதை. போனமுறை போய் பிடிபட்ட பைன் காசு இன்னும் கட்டி முடியேல”
”கனடா போய்ச் சேர்ந்தா பைனும், மண்ணாங்கட்டியும்”
”போய்ச் சேர்ந்தா எல்லோ?”
”உப்பிடி யோசிச்சாஒரு அலுவலும் பாக்கேலாது”
”பிடிபட்டியோ பைன் காசு இரண்டு மடங்காகும். செய்த வேலை போகும். வீட்டுக்கு இப்ப அனுப்பிற காசும் அனுப்பேலாம கைமாத்தில திரிவாய்”
”போய்ச் சேந்தா வீட்டுக் கடனுகள் அடைக்கலாம். அக்கான்ர கலியாணத்தை முடிச்சிடலாம். எல்லாரையும் கூப்பிட்டு ஒண்டாயிருக்கலாம்”
இப்பிடி பிற்ஸாக் கடையில நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனச்சாட்சியும், அவனும் பேசிக் கொண்டார்கள். சலாட் போடுபவன் அடிக்கடி பாலுவை வித்தியாசமாகப் பார்த்தான்.
கடைசியில் கனடா ஆசையின் எதிர்ப்பு வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் சிவகுமார் இலேசில் விடுவதாயில்லை.
”உன்னைப்போல நடுத்தர வர்க்கத்தின்ர குணாம்சமே உதுதான். ஒண்டிலயும் தன்னை நிலையா நிறுத்திக் கொள்ளாது. தனக்கு , மேல இருக்கிறதைப் பாத்து அதைப் போல தானும் ஆக அவாவோட அலைஞ்சு கொண்டேயிருக்கும்”
‘தொடங்கியிட்டாய் நீ பிரசங்கம் பண்ண. எங்கட வீட்டில கஸ்டம் இல்லாட்டி நான் ஏன் கனடா கினடாவெண்டு காசைச் செலவழிச்சுக் கொண்டலையிறன். வீட்ட இருக்கிற நாலு சீவனும் சாப்பிட வேணும். ஒளிச்சிருக்கிறது உயிர் தப்பவேணும். அக்காவுக்கு கலியாணம் செய்து வைக்க வேணுமெண்டுதானே இந்தப் பாடெல்லாம்”
”உதுதான்….. உதைத்தான் சொல்லுறன் மத்தியதரவர்க்க குணாம்சம் என்டு. உன்னைவிட உன்ரை குடும்பத்தைதவிட கஸ்ரப்படுறதுகள் நாட்டில இல்லையே? அதுகளுக்கு என்ன சொல்லப்போகிறாய்?”
”எனக்கே ஒரு வழியைக் காணேல. இதுக்க மற்றவைக்கு தீர்வு சொல்லண்டால் நானெங்க போறது?”
”தப்பப் பாக்காதை. நீயே யோசிச்சுப்பார். வெளிநாட்டுக்கு உன்னை அனுப்புற அளவுக்கு, அல்லாட்டி அதுக்கு மாறிற அளவுக்கு உங்கட வீட்டால முடிஞ்சுது. இதுக்கு வசதியில்லாத சனங்கள் நாட்டிலதான் இருக்கு. அதுகள் என்னெண்டு சீவிக்கிறது?”
”எனக்குத் தெரிஞ்ச முக்காவாசிப்பேரும் வெளிநாடுகளிலதானிருக்கினம்.”
”அந்த முக்கால்வாசிப் பேர் ஆர்? தொண்ணூற்றொம்பது வீதமும் யாழ்ப்பாணம் தான். அங்கயிருந்து சனம் இஞ்ச வர.. இஞ்சயிருந்து காசுஅங்க போக… அதில அங்கயிருந்து சனம் இஞ்ச வர.. ஆக யாழ்ப்பாணத்துக்குள்ளயே ஒரு றொட்டேசன். உண்மையாய் நீயே சொல்லு. எங்கட நாட்டிலை ஆக யாழ்ப்பாணத்தில் மட்டுமே பிரச்சினை? அங்க மட்டுமே சனம் இருக்குது?”
பாலு பதில் சொல்லவில்லை.
”மற்றப் பகுதியளிலயும் சனம் சீவிக்குதுதானே? ஆக நீ இதுகள் ஒண்டையும் கணக்கில எடுக்காம உன்ரை குடும்பம் எண்டுதான் பாக்கிறாய்:”
”நான் என்ன வானத்தில இருந்து குதிச்சு குண்டி மண்ணைத் தட்டிப்போட்டு வந்தனானே? நானும் மற்றவையைப்போல சாதாரணமான ஆள்தான்”
”அப்படி இவ்வளவு நாளும் நாங்கள் நினைச்சது காணும். இனியெண்டாலும் மற்றச் சனங்ளைப் பற்றியும் யோசிப்பம். அதுதான் உண்மையான வாழ்க்கையாயிருக்கும்”
”நான் போறன். தொடந்து கதைச்சால் இப்பவே போராட போட்டு வா எண்டு என்னை பிளைற் ஏத்தி அனுப்பிப் போட்டுத்தான் நீ மற்ற வேலை பாப்பாய் போல இருக்கு”
அப்போது அப்படிப் பதில் சொன்னாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிவகுமார் சொன்னதிலிருந்த உண்மை உறைத்தது.
‘எங்க பார்த்தாலும் யாழ்ப்பாணந்தான். மற்ற இடங்களில இருக்கிறது சனங்களில்லையே? அதுகளை ஆர் கவனிக்கிறது? என்று யோசிக்க ஆரம்பித்தாலும் வீட்டுக் கடிதங்கள் ஞாபகத்துக்கு வர எல்லாம் கரைந்து போயின.
அண்ணாவுக்கு உயிராபத்து காப்பாத்து, அக்காவுக்கு வயசு கூடக் கூட தொகையும் கூடுது என்ற அப்பாவின் கடிதங்கள் வேறு யோசனைகளை விட்டிருந்த இடத்தில் மறுபடி கனடாவுக்குத் தளம் அமைத்தன.
பாலு இரண்டாம் முறை முயற்சித்தபோது வேறுநாட்டுப் புத்தகத்தைத் திருப்பித் தேடவில்லை. கனடாவில் பாஸ்போட் கிடைத்த ஒருவனே வந்து கூட்டிச் செல்வதாக ஏற்பாடு.
வந்தவனுக்கு ஜேமன் சாமான்களை அன்பளித்து, போத்தல் பருக்கி, பிற்ஸா போட்டு உழைத்த காசுடன் கொஞ்சக் கடனும் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
இம் முறை ஜேமனி எயாப்போட்டுக்குள்ளால் தப்பியாயிற்று. ஆனாலும் ரான்சிஸ்ற் இடமான சோமாலியாவில் மோப்பம் பார்த்துப் பிடித்து அவனைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
குற்றக் கட்டணம் இரட்டிப்பாகியது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் ”உனக்கேன் சரிவராத வேலை” என்று நக்கலடித்தனர். சிவகுமார் ஏதோ புத்தகத்திலிருந்து ஏதோ வரிகளை வாசித்துக் காட்டிப் புத்திமதி சொன்னான்.
மறுபடியும் மனம் நொந்து விரக்தியடைந்து பியர் குடிக்கப் பழகினான். அப்பாவின் கடிதங்கள் வந்த போது அவருக்கும் இதே பிறாண்ட் பியரை வாங்கி அனுப்பலாமா என்று யோசித்தான்.
கனடா முயற்சியினால் பிற்ஸா வேலையும் போய் விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எந்த வேலையும் இல்லை. அவனும் முயற்சிக்காமலில்லை.
நேற்று தற்செயறாக ஒரு றெஸ்ரோறன்டில் வேலை இருப்பதாகவும், முதலாளி இல்லாததால் இன்று மறுபடியும் வரும்படியும் சொல்லியிருந்தார்கள்.
அங்குதான் பலத்த நம்பிக்கையோடு பாலு இப்போது போய்க்கொண்டிருந்தான். பஸ் ஏறுவதற்கு முன் வாசித்த அப்பாவின் கடிதம் மனதில் மறுபதிப்புச் செய்தது.
”….அக்காவுக்குச் சம்மந்தம் ஒன்று சரிவந்துள்ளது. பணம்தான் கூடக்கேட்கிறார்கள். இதையும் தவறவிட்டால் இனி நம்புவதற்கில்லை. மூன்று மாதம் காத்திருப்பதாகத் தவணை தந்திருக்கிறார்கள். நிலைமை படுமோசம். அவன் இருந்த இயக்கம், அதற்கெதிரான இயக்கங்கள், அரசாங்கம் என்று எல்லோரும் அவனைக் கொல்லத் தேடுகின்றார்கள். அவன் தங்கியிருக்கும் சிங்கள நன்பனின் வீடும் வெகுவிரைவில் பாதுகாப்பில்லாமல் போய்விடுமாம். அவனை எப்படியாவது நீதான் கூப்பிட்டுக் காப்பாற்ற…”
இந்தச் சம்பந்தமாவது அக்காவுக்குச் சரிவர காசனுப்பத்தான் வேணும். அண்ணனைக் கூப்பிடவும் காசனுப்பத்தான் வேணும். இவ்வளவுக்கும் காசுக்கு நான் எங்க போறது? இந்த வேலையும் சரிவராட்டி…?
யோசனைகளுடன் பஸ்ஸை விட்டிறங்கி றெஸ்ரொறன்டுக்குப் போனான். இந்த நேரத்துக்கு அதிக கூட்டமில்லை.
முதலாளியைச் சந்தித்தபோது எதிர்பார்ப்பு சரிந்து கொட்டுண்டது. ஒரு மணித்தியாலத்திற்கு முதல் தானாம் யாரோ போலந்துக்காரன் வேலையில் சேர்ந்து கொண்டானாம். அவ்வளவுக்கு வேலைப் போட்டி. அகதிகளை கறுப்பிலேயே வைத்து உறிஞ்சி முதலாளிகள் வீங்கிக் கொண்டிருந்தார்கள்.
றெஸ்ரொறன்டை விட்டு வெளியே வந்ததும் இயலாமை , ஆத்திரம், துக்கம் எல்லாம் வெடித்து வந்தது. பெட்டிக்கடைக்குப் போய் பியர் வாங்கிவிட்டுக்கொண்டான். எதுவும் தணிவதாய் இல்லை.
”இனிமேலக்கும் இஞ்சயிருக்கேலாது. ஜேமனியில இனி எந்தச் சாத்தியத்துக்கும் இடமில்லை. இருந்தால் இப்பிடியே பியர் அடிச்சுக்கொண்டிருக்க வேண்டியதுதான் எல்லாத்தையும் மறந்து போட்டு. அங்க அதுகள் கஸ்ரப்பட்டுகொண்டே கனவு காணுங்கள்.
என்ன செய்யலாம்….?
திருப்பியும் கனடாதான். இதுதான் கடைசி முயற்சி. சரிவரேலயோ பேசாம நாட்டுக்குப் போய் அதுகளோட இருந்து ஒண்டாய் கஸ்ரப்படலாம்.
முடிவுக்கு வந்து விட்டான். இம்முறை செய்யும் முயற்சியை ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்துக் கொள்வதென்று தீர்மானித்துக் கொண்டான். ‘தெரிஞ்சால் நக்கலடிக்குங்கள், ஏசுங்கள். பேசாம வெளிக்கிட்டு அங்க போய் சேர்ந்திட்டமெண்டால் கடிதம் போட்டு அறிவிக்கலாம்’
மிகவம் இரகசியமாகவும், தீவிரமாகவும் முயற்சியில் இறங்கினான். இம்முறை மற்றவர்களை நம்பாமல் தானே நேரடியாகத் தலையிட்டான்.
அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமார் பாலுவைப் போலவே. தலைமயிர் கூடச் சுருட்டத் தேவையில்லை. சென்றமுறையின் பாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக்கூடியதாயிருந்தது.
பிரயாணத்திற்கான காசையும் தூர இருக்கும் உறவினரிடம் மாறினான். ”பயப்பிடத் தேவையில்லை. இந்தமுறை எப்பிடியும் சரிவரும்.
ரிக்கற்பதிவு செய்தாயிற்று… எல்லா அலுவல்களும் பார்த்து முடித்து வைத்தாயிற்று.
”தெரிஞ்ச பெடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன்.. சிலவேளை அங்கயிருந்து சுவிசுக்குப் போனாலும் போவன். போனா போன் பண்ணிறன்” என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான்.
”மத்தியதர வர்க்கம் இப்….” என்று ஆரம்பித்த சிவகுமாரிடம் ‘நீவேலைசெய்து கொண்டு எதுகும் கதைக்கலாம். என்ர நிலமையில இருந்தாத்தான் உனக்குப் புரியும். புத்தகங்களுக்கு அங்காலயும் உலகம் இருக்கு” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூர இடத்திலிருக்கும் தன் நண்பனின் இடத்துக்கு வந்தான்.
அவனுக்கும் உண்மையைச் சொல்லாமல் கெட்டித்தனமா மறைத்து, பறக்க வேண்டிய நாள் வர பிராங்பேட் எயாப்போட்டிற்கு வந்தான். தனக்கான பாஸ்போட்டுக்குரியவன் பெயரை கிறிஸ்டோபர் பிலிக்ஸ் என்று மனப்பாடம் செய்து கொண்டான்.
இரண்டு முறை அனுபவங்களினால் இப்போது வியர்க்க, படபடக்க, நடுங்கவில்லை. எல்லாம் கிளியர் ஆகி விமானத்தின் இருக்கையில் அமர்ந்தபோது வாழ்க்கையில் முதற்தடவையாக தனது கறுப்பு நிறத்திற்காக அப்பா, அம்மாவுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தான்.
விமானம் பறக்கையில் சிந்தனையும் விரிந்தது. திடீரென சிவகுமார் தோன்றினான்.
”நாங்கள் ஓடிக்கொண்டேயிருக்கலாம். அதுக்கு எல்லையே இல்லை. ஓடிக்கொண்டேயிருந்தா என்னத்தைச் செய்து முடிக்கிறது? நீ உன்ர குடும்பத்தைக் கூப்பிட்டு அவையின்ரை கஸ்ரத்தைத் தீர்க்கலாம். ஆனா அதால நாட்டில இருக்கிற பிரச்சினை தீராது. நாட்டில பிரச்சினை இருக்கிறவரைக்கும் உன்னப்போல ஆயிரம், பத்தாயிரம் பேர் ஓடிக்கொண்டேயிருப்பினம். இந்த ஓட்டத்துக்கு ஏலாத சனங்கள் அவலப்பட்டும் செத்துக்கொண்டுமிருக்கும்”
உண்மைதான். என்ர குடும்பத்துக்கு விடிவு வாறதால எல்லாக் குடுப்பத்துக்கும் விடிவு வந்திடாது. ஆனா எல்லாச் சனங்களின்ரை கஸ்டத்துக்கும் பொதுவாய் கிடைக்கிற விடிவு தீர்வெண்டா அதுக்க எங்கிட குடும்பமும் அடங்குதுதானே?
அப்ப என்னதான் செய்யிறது?
இஞ்சயிருந்து புத்தகங்களை வாசிச்சுக்கொண்டு அதில இருக்கிறதையெல்லாம் இப்படித்தான் செய்ய வேணும் எண்டு முரண்டு பிடிச்சு மற்றவையோட அந்நியப்பட்டு கடைசியாப் புத்தகமும், வேலையுமாய் சிவகுமார் மாதிரி தனிய இருக்கிறதோ?
நாட்டுக்குத் திரும்பிப் போனாலும் தட்டுற பெருமை எங்களுக்குத் தான் வரவேணுமெண்டு எல்லாற்றை துவக்கும் அடிபடுது.
அப்ப என்ன செய்யலாம்?
மேற்கொண்டு யோசிக்க விடாமல் உழைத்துக் களைத்து தளர்ந்துபோன அப்பா, ஒளவையாராகிக்கொண்டிருக்கும் அக்கா, துவக்குகளுக்குப் பயந்துகொண்டிருக்கும் அண்ணா, எதிர்காலக் கற்பனைகளின் ஆரம்பங்களுடன் தம்பியும் தங்கையும்…
முதல் யோசனைகள் கலைந்து போயின. கனடாவுக்குப் போய் சேர்ந்த பின்னான நடவடிக்கைகள் பற்றி எண்ணினான்.
விமானம், இலண்டன் விமான நிலையத்தில் தரித்து, சிறிதாக இளைப்பாறி மீண்டும் பறந்த பல நிமிடங்களின் பின் வானத்தில் வெடித்துச் சிதறி சிதையல்கள் லொக்கபே என்ற இடத்தில் வீழ்ந்தன.
அனைத்து நாடுகளும் அவசரமாகச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டன. அமெரிக்க யுத்தக் கப்பல் ஈரானின் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபோது வெறும் செய்தி சொன்ன இந்நாடுகள் இப்போது இது ஈரானின் சதியென்று ஊகத்தில் ஏகமாய்த் திட்டின.
விமான நிலையப் பொறுப்பாளர்கள், விமானப் பொறுப்பாளர்கள், அமெரிக்க அதிகாரிகள் எல்லோரும் பிரயாணம் செய்தோரின் விபரங்களை கொம்பியூற்றர்களின் உதவியுடன் அக்கறையாகத் திரட்டி உறவினர்களுக்கு மரணச் செய்திகளை அறிவித்தனர்.
இரவு முழுவதும் போதைவஸ்தும், கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து, இன்னும் எழும்பாமல் இருக்கும் கிறிஸ்டோபர் பிலிக்சைத் திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா லொக்கபே விமானநிலையத்தில் கிறிஸ்டோபர் பீலிக்ஸ் இறந்து விட்ட செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதாக வந்த தந்தியை வாங்கி வைத்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப…..
பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக்கொள்ள….
இலங்கையில் ஒரு மூலையில் உழைத்துக் களைத்துத் தளர்ந்து போன அப்பாவும், ஒளவையாராகிக்கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப் பயப்படும் அண்ணாவும், எதிர்காலக் கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பியும், தங்கையும் பாலுவின் கடிதம், பணத்திற்காகக் காத்திருந்தார்கள்.
காத்திருப்பார்கள்.
———————
பார்த்திபன்
1994
ஓவியம்: மணிவண்ணன்