சிவம்

“கதைக்காமல் ஆக்கப்பட்டவர்களுக்கு”

இதற்குள் உள்ளீடு, காலம், எழுத்தாளரின் சிந்தனைப்போக்கு, நீதி கோரல், நினைவுகொள்ளல் என்று வாசிப்பிற்கான வாசகனின் நுழைவாயிலில் நின்று பொறுப்போடு உள்ளனுப்பிவைக்கும் கனதியானவையெல்லாம் அடங்கிவிடுகின்றன.

நமது நாட்டின் போர்ச்சூழலால் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வந்து விழுந்தவர்களும், தூக்கி வீசப்பட்டவர்களும் முன்பறிந்தேயிராத வெளிநாட்டுச் சூழலில் தனித்து நின்றே எதிர்கொண்ட வேதனையான பல இடர்களையும், நம்மவர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட பேச்சசுச் சுதந்திரத்தின்மீதான பலவடிவங்களிலான அடக்குமுறைகளையும் சமகாலத்தில் நாட்டில் வாழ்விடரின் வலியையும் சமூகக்கோபங்களையும் காலக்கண்ணாடியின்முன் நிறுத்துவதற்கான முயற்சியின் அங்கலாய்ப்புகளே பார்த்திபனின் “கதை”.

இந்த கதையின் பொருத்தப்பாடான பலம் என்று குறிப்பிடவேண்டியது எவராலும் விளங்கிக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு அகதி வாழ்க்கையில் பல இடங்களிலிருந்து வந்தவர் ஒன்றாக வாழும் நிலையில் வட்டார வழக்குகளிற்கும் வாழ்விடமில்லாத எழுத்துநடையாகும்.
நீண்ட நிலையான வாழ்சூழலில் வாழ்ந்து அந்த மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வை எழுதுவது மண்ணில் மரம் வளர்ப்பது போன்றது. அகதிவாழ்வில் சுழன்றுகொண்டு அதற்குள் நேரும் தாக்கங்களை எழுதுவது புடுங்கி எறியப்பட்ட மரக்கன்றை சாடியில் வளர்க்க முயல்வது போன்றதாக மட்டுமே அமையமுடியும்.

இதுவே ஒப்பனையற்ற இயல்பான எழுத்தாக அமைந்திருக்கும் பலமுமாகும்.

இனிவரும் பார்த்திபனின் படைப்புகள் மண்ணில் மரம் வளர்ப்பதுபோன்ற உணர்வைப் பதிவுசெய்ய கால இடைவெளி அனுமதிக்கக்கூடும்.

இலங்கையில் போர்ச்சூழலின் துயர வாழ்வை தகவல்களின் அடிப்படையிலும் தமிழ் சமூக கீழ்த்தனங்களுடனான தனது முரண்களை அனுபவத்தின் துணையோடும் கதையாடிச் செல்லும் எழுத்தாளர் அறிவுரையாளராக சறுக்கிச் செல்கிறாரோ என்ற கேள்வியை சமூக அக்கறையுடன் அவலத்திற்குள்ளானவர்களின் அருகிருந்து அவர்களிலொருவராகவே துணிவுடன் கருத்தாடுவதினூடாக அமிழ்த்திச் செல்கிறார் என்ற எண்ணம் வாசிப்போடு கூடவே வருகிறது என்று சொல்வதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரே ஒரு ஊரிலே (1986)
ஒரு போர்சூழலில் உயிர் பறிப்புகள் பாலியல் வன்முறைகள் காதல் கோவில் திருவிழா சீதனம் வெளிநாட்டுப் பயணங்கள் முகவர்கள் இத்தியாதிகள் எல்லாம் எப்படி உயிர்ப்போடு வாழ்ந்துகொண்டிருந்தன என்பதை காலத்தில் எழுதிவைத்திருக்கும் ஒரு கதை. அவ்வளவுதான்

பாதியில் முடிந்த கதை (1987)
உயிர்காவுபோகும் எந்தச் சூழலிலும் முகவர் கூட்டம், வட்டிக் கூட்டம் தங்கள் இருப்பை பேணிக்கொண்டேயிருந்தன.

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான போக்குவரத்து நிலைமையை “கொழும்பிலிருந்து சவுதிக்குப் போயிடலாம் இங்கிருந்து கொழும்பிற்கு போவதுதான் பிரச்சினை” என்ற வசனம் தெளிவாக சொல்கிறது.

காதல் (1988)
அகதியாக வந்த இளைஞனின் மனநிலையில் தமிழ்முறைக் காதலை சொல்வதென்ற முயற்சியில் இறங்கி தமிழ் சமூக பெண்அடிமைத்தனத்தை பிரச்சார நெடியில் நீண்டு முழக்கி முடிகிறது. அவ்வளவுதான்.

பசி 1988)
“சூரியன் கடலில் சுத்தமாகத் தலைமுழுகியதால் மேகங்கள் உல்லாசமாக வான வீதியில் அலையத்தொடங்கின.

எனினும் சிவப்புமுழுவதுமாக அழிக்கப்படவில்லை.”

இந்த ஆழமான வரிகளினூடாக வாசிக்கத்தூண்டும் “பசி” வாசகனுக்கு நிறையப் பரிமாறுகிறது. கன்னியம்மா, சூசை, ஞானப்பிரகாசம் போன்ற பெயர்களும் “கடலுக்கு போயி எவ்வளவு காலமிருக்கும்?” குல்லாயும், சொக்காயும் என்ற மொழிநடையும் பிரிவுகளற்ற கூட்டுவாழ்வு போர்ச்சூழலிலும் சாத்தியமானது சாத்தியப்படவேண்டுமென்ற நம்பிக்கையை பதிவுசெய்வதோடு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை மதிப்பீடு தெரியாமலே புறக்கணிக்கப்படும் கடல் வளங்களும், கரையும், மக்களும், வாழ்வும் எதிர்கொண்ட வாழ்வாதாரச் சிதைவுகளை மனங்கொள்ளும்படியாக சிந்தனையை நனைத்துச்செல்கிறது.

யுத்தம் அப்பாவி மக்களை காவுகொள்ளும் வலிமிகுந்த வாழ்வையும், பத்திரிகைகள் செய்யும் பிணக்கொலைகளையும் கதை கேள்வி கேட்கிறது.

மனது கனக்கும்படியாக வார்த்தைகள் கனதியுற்றுள்ளன.அகதிவாழ்வை சுமக்கும் ஒருவர் தனது தாய் மண்ணில் கடைசியாய் மிதித்த கால் தடத்திலிருந்த சுடுபுழுதியின் அழுகுரலை அழுத்தமாக பதிவுசெய்வதென்பது இக்கதையில் முழுமையாக சாத்தியமாகியுள்ளது.

மனைவி இறக்குமதி (1988)
“புளுக்கூடுபோல் ஒரு அறைக்கு நாலுபேரெனத் திணிக்கப்பட்டிருந்தார்கள்.”

அகதிவாழ்வில் ஒன்றாக நின்று கதைக்கமாட்டாதவனெல்லாம் ஒரு அறையில் கிழங்கு அடுக்கியதுபோல் துயிலக்கட்டாயப்படுத்தப்பட்டதையே அறியாமல் ஏற்றுக்கொள்ளலுக்குள் விழுந்து தூங்கியதும், தனித்தனி வாழ்வு விடிந்தபோது பழைய கதவைத் தட்டியதும் யதார்த்தமாக இருந்ததை இக்கதை நினைவூட்டுகிறது.நமது சமூகத்தின் பிணிகளில் ஒன்றாகவும், பல பெண்களையும் சிலஆண்களையும் முதிர் மணநிலைக்கு உட்படுத்தும் சீதனம், ஆண் ஆதிக்க மனநிலை, கேள்விகேட்கும் துணிந்து முடிவெடுக்கும் பெண்கள் சமூகத்தில் உருவாகவேண்டுமென்ற எழுத்தாளரின் ஆர்வப்பாடு என்பன எழுத்தை வலுவூட்டுகின்றன. தமிழ் சமூகம் இன்றுவரை இக்கதைக்கு பொருத்தமானவாறுதான் வாழ்கிறது என்ற யதார்த்தம் படைப்பாளியை ஆழமாக அடையாளப்படுத்துகிறது.

நாளை (1989)
இது அகதி வாழ்வின் குரூரமுகத்தின் குறுக்குவெட்டு.

தெரிவுகளின் அடிப்படையில் இனவாதத்தை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொண்டு வாழ்வதாக தங்களைத் தாங்களே ஏமாற்றுவது அறியாமல் வாழுகின்ற பெற்றோர்கள் பள்ளி செல்லும் பிள்ளை வளர்ப்பில் செய்கின்ற தவறுகளையும், சிறுவன் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு, உற்சாகப்படுத்தாமை, வழிகாட்டிகளாக பெற்றோர் இல்லாமை, இனவாதச் சீண்டல்கள் என்பவற்றை கதை சுருக்கமாக அழகான இயல்பான வார்த்தையோட்டங்களால் சிந்திக்கத் தூண்டுகிறது.

யுத்தம் தரும் அகதி வாழ்வில் கருவுறும் குழந்தைகள் தொப்பிள்கொடி இல்லாமலே வாழுகின்றன. சொந்த இருப்பின் அடிநுனி அறியாதவர்களாய், சூழலுக்குள் இருப்பைத் தோற்றுவிக்கமுடியாதவர்களாய், கேள்விகளின் பிராண்டல்களில் காயப்பட்டவர்களாய் அரவணைப்பும் வழிகாட்டலும் இல்லாதபோது வழிமாறிப்போய்விட முனைபவர்களாய், குழந்தைகள் வளர்வது நாளை வன்முறைக்குத்தான் வழிகோலும் என்ற அகதி வலியை. ஆழமாகப் புரிய வைத்திருப்பது பாராடப்படவேணடியதாகும்.

ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும் (1989)
எனக்குப்பல புரிதல்களையும், கேள்விகளையும், மேதாவித்தனமாக கதைத்துக்கொண்டே இன்னும் இருக்கும் “இசக்”காரர்கள்மீதான கோபத்தை கொதிநிலையிலேயே வைத்திருக்கும் அவதியையும், பார்த்திபன் எனது நண்பன் என்று சொல்வதில் பெருமையும் தந்த விமர்சனப்பார்வை கொண்ட கதையாகும்.

“முதலில் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உதயன் மறுபடி மாவன்னனாக் கானாவால் பார்த்தான்”

மாணவரில ஆமியைக் கைவைக்கவேண்டாமென்றுகோரிக்கை விட்டிருந்தினம்.

இதையே மக்களில ஆமி கைவைக்கக்கூடதெண்டா எவ்வளவு பெரிய அர்த்முள்ளதாயிருக்கும்?” என்ற கேள்விக்குள் மக்களுக்குள் மாணவர்களும் அடங்கியவர்கள்தான் என்ற சிந்தனையை தேடித் தெரிந்துகொள்ளவைக்கும் மொழிநடையிலும்

“நாயன்மாற்றை குருபூசைக்கு கோயிலில நித்திரைகொண்டு பிரசங்கம் கேட்மாதிரி இருக்குது”

என்ற வரிகளினூடாக காதிற்குள் கட்டெறும்பு விடும் சிந்தனைவாதிகளின் மீதான விமர்சனத்திலும், அகதிகளாக வாழும் இருவேறுபட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு யதார்த்தங்களுக்குள் பயணிப்பதை சில கலாய்ப்புகளினூடாக மனதை விரியவைத்து புரிதலைக் கொட்டிவிடுவதிலும் எழுத்தாளரின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

குர்திஸ்தானியரான இல்கான் பாத்திரத்தின்ஊடாக தமிழ் ஒட்டுண்ணி மரபணுப் பண்பை துல்லியமாக சொல்லியிருப்பது நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று.

தொழிற்சாலைகளில் தூசி, பெயின்ற் என்பன அதிகமாக உடல்நலத்தைப் பாதிக்கும் வேலைகள்தான் அகதியர்களின் தெரிவாக அமையும். இந்த தகவல் இங்கும் பதியப்பட்டிருக்கிறது.

“கதைக்கலாம்”

இந்த வார்த்தைக்குள்ளும் ஆயிரம் கதைகள் உண்டு.

இன்னும் தொடர்கிறது.

நமது சமூகத்தை முன்னேறாமல் தடுப்பதிலும் பின்னோக்கி இழுப்பதிலும் கதைக்காரர்கள் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் ஆயுததாரிகளைவிட அபாயமானவர்கள்.

அம்பது டொலர் பெண்ணே (1991)
சரியான தலைப்புத்தானா? சரியான படமா?

இரண்டும் ஏற்புடையதாக இல்லை.

பாரத்திபனின் அகதிவாழ்வுக்குள் சிக்கிக்கொள்ளாத சமூக அவலங்கள் குறைவுதான். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஏங்குவதைவிட பெற்றோர் யாரென்று அறியாமலே எல்லாவற்றுக்கும் ஏங்குவதும் எல்லாம் தெரிந்தபின் தமது பெற்றோரை தேடி அறிந்து இணைந்துகொள்ள 30 40 வருடங்களுக்குப்பின் இன்று இலங்கைக்கு வந்து மரபணுப்பரிசோதனைமூலம் உறுதிப்படுத்த முனைவதும் கொடுமையான விடயம்தான்.பெரும்பான்மை மக்களுக்குள் 50 டொடருக்கு பெற்ற குழந்தையை விற்குமளவுக்கு ஏழ்மை இருந்தது இருக்கிறது என்பதையும் நாம் கேள்விகளுக்கூடாக புரிந்துகொள்ள முயலலாம்.

தெரிய வராதது (1994)
அகதிவாழ்வு நிரந்தர வாழ்வு என்ற ஆசைக்குள் பறக்கவும் மிதக்கவும் தொடங்கிய காலப்பகுதியில் குடும்பச்சுமையின் பிதுக்கத்தால் கனடா நோக்கிய பயணத்தின்போது அடையாளமும், பதிவுத்தகவல்களும், காணமல்போன வாழ்வும், கனவும், உயிரும் அகதிவாழ்வின் ஒரு பக்கமும் பதியப்பட்டிருக்கிறது.”புத்தகங்களுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது” என்று ஏற்று அதற்குள் வாழ்ந்துகொண்டு புத்தகங்களை, அவற்றில் வாசித்தவற்றை சனங்களின் வாழ்வுமொழியில் புரியும்படியாக பேசக் கற்றுக்கொள்ளாத அல்லது அதன் அவசியத்தை உணராத புத்தகப் பூச்சிகளின்மீதான விமர்சனம் பதியப்பட்டிருக்கிறது.

இயக்கத்தாலும் அரசாங்கத்தாலும் ஒருவர் தேடப்படுவதனூடாக மக்கள் ஒருபக்கமாக இழப்புகளை எதிர்கொண்டார்கள் என்பதும் இயக்கத்திலிருந்தவருக்கு “சிங்கள நண்பனின் வீடும் விரைவில்பாதுகாப்பில்லாமல் போய்விடும்” என்பதனூடாக புரிதலுள்ள சகோதர இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் பார்த்திபனின் இனப்பிரச்சினை பற்றிய தெளிவையும் இவற்றை முற்றாக மறுக்கிற பிரிவினரின் தெளிவுவறுமையை துணிவுடன் விமர்சிக்கும் எழுத்தையும் காலம் தன்னில் பதிவுசெய்துகொண்டுள்ளது.

ஒரு அம்மாவும் அரசியலும்! (1994)
“அம்மா நீ இதில தலையிடாத.இது அரசியல். உனக்குத் தேவையில்லாத விசயம். சொன்னாலும் விளங்காது.”

இயக்க மோதல்களையும், பழிவாங்கல்களையும் ,அம்மாக்களை வலிசுமக்கவும் அழுதுபுலம்பவும் மட்டுமான ஒரு அரசியலையும், கருத்துவறுமையினால் ஆளுமைகளை அழித்தொழித்த அவலங்களையும் நியாயமான கேள்விகளினூடாக கதை பதியப்பட்டிருக்கிறது.

“எங்களுக்கு விளங்கிறமாதிரி ஏதேனும் நடக்குதே?அல்லாட்டி ஆரேன் எங்களிட் அபிப்பிராயம் கேக்கினமோ?
குண்டுபோடேக்க ஓடித் தப்புறதுதான் எங்கட வேலை”

ஒரு தாயின் இந்தக்குரலுக்குள் ஒட்டுமொத்த போராட்ட வடிவமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

பனியில் எரியும் இரவுகள் (1994)
இதுவும் ஒரு அகதிவாழ்வின் இருண்ட திரைமறைவு வாழ்க்கைதான்.

எதிர்பாரப்புகளோடும், வேலைப்பழுவின் பாரங்களோடும் உணர்வுகளுக்கு மதிப்புப்பெறாத மனப்புடுங்கல்களுடனும் பனியில் எரியும் இரவுகளாகத்தான் இளைஞர்கள் கருகிப்போனார்கள்.

உண்மை அம்மணமாக இருட்டில் நனைவதற்கு எழுத்து அளவோடு நிர்வாணப்பட்டிருக்கிறது.

எல்லாக் கதைகளினூடாகவும் சொந்த நாட்டிலும் வந்த நாட்டடிலும் சமகாலப்பகுதியில் நடக்கும் அவலங்கள் தார்மீகப்பொறுப்போடு பதிவுசெய்யப்பட்டிருப்பது காலத்தின் தேவையாக அமைகிறது. எழுத்தாளனின் கதைகள் இலக்கியமா? இல்லையா?
புகலிட இலக்கியமா? தொகுப்பா? தொட்டாச்சிணுங்கியா ? என்ற கேள்விகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பால் எல்லோரையும்போல புகலிட அவலங்களுடனும், தாயக நினைவுப் புதைவுகளுடனும் திசையறியாத வாழ்வை சுமந்தபடி பாரத்திபன் சமூக அவலங்களையும், விமர்சனங்களையும் பொறுப்புடன் எழுத்துக்குள் கொட்டிவெத்திருப்பது அடுத்த தலைமுறைகள் அவலங்களற்று வாழ துணைநிற்கும்.

வந்தவள் வராமல் வந்தால் (1995)
வெளிநாட்டு முகவர்களின் ஆட்களை நாடுகடத்தும் பாதைகள், அவர்களின்காட்டுமிராண்டித்தனமான பேச்சு, பெண்கள் எதிர்நோக்கிய வார்த்தைகளுக்குள் அடங்காத மனநிலைப் பாதிப்புகள், ஆண்களின் வக்கிரத்தனமான எண்ணங்கள், பேச்சுக்கள், நடத்தைகள் என்பன எழுத்துக்குள் பயணப்பட்டு பதியப்பட்டிருக்கின்றன.

கொல்வதற்கு ஆயுதங்கள்தான் தேவையென்றில்லை. கடுங்சொற்களால் கொல்லும் கலை நமது சமூகத்தில் புரையோடிப்போன ஒன்று என்பதும் அதற்கு எந்த சூழ்நிலையும் விதிவிலக்கல்ல என்பதும் வாசகன் காணக்கூடிய உண்மைகளாக தெரிகின்றன.

ஒரு பிரஜை. ஒரு நாடு (1995)
போரின் அவலம், போர் விமானம், குண்டு, பதுங்குகுழி, தாய்மை, சிறுவனின் பயம் எல்லாம் எல்லாவற்றையும் ஆழமாகத் தோண்ட வைத்தன. “பயப்பிடாமல் இருக்கவே முடியாதா?” சிறுவனின் பயம் கலந்த பசியின் தாக்கத்தினால் “அவன் குரலே அவனுக்கு கேட்கவில்லை” என்ற எழுத்து வாசகனின் மனதுக்குள் யத்தம் நடத்துபவையாக உள்ளன.

போர்ச்சூழலில் இருந்தும் சமூக அக்கறையிலிருந்தும் அந்நியப்பட்ட ஒரு எழுத்துலகம் தோற்றப்பாடான சமகாலத்தில் பாரத்திபனின் இப்படியான அவலங்களின் பதிவுகள் இத்தொகுப்பை கனதிப்படுத்துகின்றன.

தூள் (1995)
பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் எல்லா சமூகங்களிலும் இருப்பதையும் வளர்ச்சியடைந்த சமூகமாக கருதப்படும் சமூகத்திலும் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் முக்கியமான மறைநிலைக் காரணங்களையும், ஆண்களின் வக்கிரங்களையும், பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள் பெறுமதியற்ற உயிர்களாவே கருதப்பட்டு புறக்கணிக்கப்படும் அவலங்களையும், இவற்றையெல்லாம் பென்சும் பி.எம்.வேக்களும் கடந்துபோவதையும் பதிவுசெய்யும் எழுத்து எல்லா முனைகளிலிருந்தும், கோணங்களிலிருந்தும் சமூகத்தை எட்டிப்பார்க்கிறது. நம்மவர்களில் பலர் அருவருப்போடு கடந்துபோகும் அவலங்களை பாரத்திபன் நின்று நிதானித்து ஆணிவேர்வரை உள்ளூறி எழுதுவது அவரை தனித்துவப்படுத்தி அடையாளப்படுத்துகிறது.

அம்மா பாவம் (1996)
“அம்மா ஏன் வெள்ளைச் சீலையும் பூப்போடாத சட்டையும் போடவேணும்?”

கதவே இல்லாத நிலைகளைத் தாண்ட முடியாமல் அடைக்கப்பட்ட கைதிகளாய் வாழும் பெண்களின் துயரை இறுக்கமாக, சுருக்கமாக சொல்லிச்செல்கிறது கதை.

இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ. (1997)
வடுக்களும், வலிகளும் நிறைந்த யுத்தகாலப்பகுதியை ஆள் கடத்தும் முகவர்கள் ஆக்கிரமிப்புச் செய்த காலப்பகுதி.

“எங்கட ஆக்கள் கூட்டியந்ததில எத்தின சனம் யுகோ காட்டுக்குள்ள காணாமல் போயிருக்கு?போலந்து ஆத்துக்க தாண்டிருக்கு?ஓஸ்ரியா சினோவுக்குள்ள புதைஞ்சிருக்கு?”

நம்மவர்களாலேயே காணாப்பிணங்களாக ஆக்கப்பட்ட ஆத்மாக்கள் எழுத்துக்களில் நினைவேந்தல் கொள்ளப்பட்டுள்ன. அகதியாக வந்து முகவர்களாக உருமாறிய குரூரர்கள் தங்களால் ஏற்பட்ட மரணச்செய்தியைக்கூட தெரியப்படுத்த மறுக்கிற முகம் அடையாளம்காட்டப்பட்டுள்ளது.

நாம் மரணத்துள் வாழ்ந்த காலப்பகுதிகளிலும் இன்றும் யுத்தம் பல நாட்டினரை மரணத்தில் மிதக்கவிட்டபடியே அலைகிறது. இந்த கதைசொல்லித்தகமை அகதியாக வாழ்ந்து, இவற்றை அறிந்து, சமூகக்கோபமுற்று தன் மனச்சுமையை கொட்டிவைக்க உணர்வுகளால் வற்புறுத்தப்படும் ஒருவருக்கே அமையும்..

மேற்கின் ஒரு பக்கம் (1998)
“உங்கள் எல்லோரையும் தனிக்கட்டிடத்தில் தங்க விட்டிருப்பதற்கும் ஜேர்மனியருடன் கலந்து விடுவதற்கும் வேறுபாடுகளை நீ காணமாட்டாயா?”

இது பார்த்திபன் மிஹெல் என்ற பாத்திரத்தினூடாக முன்வைக்கும் கேள்வி.

கேள்வி கேட்காமல் இசைவானவற்றோடு சமரசப்பட்டு மேற்குலகினரின் தங்களின் பாதுகாப்பிற்கான சலுகைகளை நமது உரிமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இந்தக் கேள்வி நையப்புடைக்கிறது.

தீவு மனிதன் (1998)
சிறு வயதில் ஏங்கிய எல்லாவற்றையும் ஏதோ ஒரு வயதில் மொத்தமாய் பெற்றுக்கொண்டு பின்னர் சிறு கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தொலைத்துவிடும் வாழ்சூழலுக்குட்பட்ட ஒரு எழுத்தாளனின் கதை.

வலியை விமர்சனம், சுயவிமர்சனம் என்பவற்றிற்கூடாக நெஞ்சைப் பிசைகிற யதார்த்தமான மொழிநடையில் இறக்கிவைத்திருக்கிறார்.

இந்தக் கதையை எழுதியபின் பார்த்திபன் பாரமற்ற மனதுடன் வேறு சமூக அவலங்களை அவதானிக்க எழுத முடிந்திருக்கும்.

“சொற்களுக்கெல்லாம் உயிர் இருக்கவேண்டுமென்றில்லை” என்ற வரி எல்லோரையும் கேள்விக்குட்படுத்துகிறது.

என்னை கடுமையாகப் பாதித்த நியாயமான விமர்சனம் இதுவாகும்.

மூக்குள்ளவரை (2007)
இது ஒரு கருத்துச் சுதந்திரப்பறிப்பிற்கெதிரான நையாண்டிமேளம்.

மண் இல்லாமல் வளர்க்கப்பட்ட சமகால இலக்கிப்பரப்பும் மேளச்சத்தத்தில் நசிந்துபோனது.

சீரியசா சொல்லியிருந்தால் இந்தளவு பாதிப்போடு மூளையில் சுட்டிருக்குமென்று சொல்லமுடியாது.

நல்ல மொழிநடைத் தெரிவு.

“கக்கா போகேல்லையெண்டு தந்த குளிசைப் பெட்டியில மூத்திரம் போறதிலை பிரச்சினை வரும் எண்டு எழுதியிருக்கு”

“பிறபொருள் எதிரியை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவரவேணும்.”

பட்டவர்த்தனமாக நடந்த கருத்துச் சுதந்திர மறுப்பை எல்லேரும் வாசிக்கக்கூடிய சுவாரசியமான, ஆழமான மொழிநடையில் கருத்துச் சுதந்திரத்தை வேண்டிநிற்கும் நம் எல்லோர்சார்பிலும் பார்த்திபன் விமர்சித்து காலத்திற்குள் நின்றுகொண்டார். வெளியிலேயே நிற்கும் நாம் இந்தப்பதிவை புரிதலோடு வாசிப்பது பார்த்திபனிக் எழுத்திற்கு மரியாதையாக அமையும்.

உண்மைச் சம்பவங்களைக்கூட 2007ம் ஆண்டிலும் இப்படித்தானா எழுதமுடிகிறது? என்ற கேள்வி நம்மை விமர்சிக்கட்டும்.

நெருடலையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் தந்த ஒரு வார்த்தைப்பிரயோகம் தவிர்க்கப்பட்டிருந்தால் முழுமை என்ற திசையைப் பார்த்திருக்கலாம்.

சமூக குரூரர்களின் மீதான கோபத்தைப் பதிவுசெய்ய, அவர்களின் பேச்சுநடையைப் பதிவுசெய்ய பெண்ணின் உடலுறுப்பை, நமது பிறப்புவாசலை குறிக்கும் சொல்லை பயன்படுத்தவேண்டிய நிலையில் தமிழ் வறுமையிலில்லை.

கல்தோன்றி (2012)
தோன்றிய காலத்திலேயே இருந்துகொண்டவர்கள் பற்றிய விமர்சனப் பார்வை.

இது ஒரு “உள்குத்து” வடிவம்.

“அவர்கள் இனிப்போகவேண்டிய பாதை பள்ளத்தாக்கொன்றை ஊடறுத்துச்செல்கின்ற ஒடுக்கமான பாதை.அந்தப்பாதையை பிரமாண்டமான கல் ஒன்று அடைத்திருந்தது.”

“தங்கள் குறிப்புகளில் அந்தப் பாறாங்கல் பற்றி எதுவுமில்லாததால் குறிப்புகள் வைத்திருந்தவர்கள் குழம்பிப்போனார்கள்.”

புலன் பெயர்ந்தவர்களின்மீதான தார்மீக் கோபம்.

 

பாரத்திபனின் “கதை” கதையல்ல.

யுத்தம் சப்பித்துப்பிய வலிகளையும், தமிழ் சமூகம் இன்னும் அடைகாக்கும் இழிகுணங்களையும், அகதிவாழ்வின் துயரங்களையும், அகதியாக வாழ்ந்த நாட்டு மக்களின் புரிதலுக்கான தொடக்கப் புள்ளியையும் சமூக அக்கறையோடு பதிந்துள்ள வரலாற்றுப்பதிவு.

 

09.06.2018, கனடாவில் நிகழ்ந்த பகுபதத்தின் உரையாடல் வெளியில் வாசிக்கப்பட்டது.

youtube.com/watch?v=9WudBPvG7fU

Leave a comment