ஷேளி

எனக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் ஒரு நூலை வாசித்து அது தொடர்பான கருத்தை ஒரு நிகழ்வில் பகிர்வது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு அனுபவத்தை தரும். ஆற்றலை வளர்க்கும் என்பதால் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் மனதுக்குள் ஒரு சிறு பயம். அப் பயத்துடன் உங்கள் ஆதரவுடன் எனது கருத்துகளை முன்வைக்கின்றேன். பிழைகள் இருப்பின் முடிவில் சுட்டிக் காட்டி ஊக்குவியுங்கள்.

எனக்குத் தரப்பட்ட தலைப்பு பார்த்திபனின் கதையில் பெண்களின் இருப்பும் பெண்ணியப் பார்வையும்.

பெண்களைப் பற்றிய கதைகள் இத் தொகுப்பில் குறைவாக இருந்தாலும் இருக்கின்ற கதைகள் மிகவும் முக்கியமானவை. இத் தொகுப்பில் எல்லாமாக …33 கதைகள் இருக்கின்றன. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையமாக் கொண்டவை…9 கதைகள். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சில கதைகள் மிகவும் யதார்த்தமாகவும் ஆணித்தரமாகவும் பேசுகின்றன. சில கதைகள் கொஞ்சம் பிரச்சாரத்தனமாக இருந்தாலும் அவை சொல்ல வரும் விடயங்களால் அவற்றைப் புறக்கணிக்க முடியாது.

குறிப்பிட்ட கதைகளில் என்னை மிகவும் பாதித்த கதை கெட்டன வாழும். ஒரு ஏழை உக்கிரோனிய சிறுமி அவர்களின் குடும்ப வறுமையைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டு காசுக்காக ஜெர்மனியில் மாபியா கும்பலால் பாலியல் தொழிலாளியாக விற்கப்படுகின்றாள். அங்கு அவள் மிகவும் குருரமான சித்திரவதைகளை அனுபவிக்கின்றாள். இதனால் அங்கிருந்து தப்பித்து ஓடி ஒரு ஆணிடம் அடைக்கலம் பெறுகின்றார். அந்த ஆணும் அவளின் ;நிர்க்கதியைப் பார்த்து பரிதாபப் பட்டாலும் போதைப் பொருள் கடத்தும் அவரின் ஒரே ஒரு பொலிஸ் நண்பரின் அறிவுரைப்படி பெண்ணை வீட்டை விட்டு அனுப்புகின்றார். இதனால் அப் பெண்ணுக்கு பரிதாபமான முடிவு ஏற்படுகின்றது.

அந்த ஆண் கடந்த காலத்தில் பல இன்னல்களை அனுபவித்திருக்கின்றார். பொலிஸ் சித்திரவதை, பசிக் கொடுமை எனப் பல அனுபவித்து தற்கொலை வரைக்கும் போயிருகின்றார். அப்படியிருந்தும் இச் சிறுமியைப் பாதுகாக்க முயலவில்லை. அந்தளவிற்கு அவரது வாழ்வு முக்கியத்துவமாகின்றது. இப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றோம் என்று எமது மனசாட்சியை உறுத்தும் கதை.

இப் பிரச்சனையை வேறு வடிவில் பேசும் கதை தூள். அம்மாவின் காதலனின் பாலியல் ;துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிப்பதாக வெளியேறும் 17 வயது இளம் பெண்ணின் கதை. சந்தர்ப்பவசத்தால் போதைப் பொருளுக்கு அடிமையாகிறார். இப் பெண்ணின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி பணம் தருவதாக ஏமாற்றி ஆண்கள் அவரை வன்புணர்வு செய்கின்றார்கள். சட்டங்களும் காவல் துறையும் இப் பெண்களைப் பாதுகாப்பதில்லை. மாறாக அவர்களை துஸ்பிரயோகம் செய்கின்ற ஆண்களுக்கு ஆதரவாக இருக்கின்றது.

வந்தவள் வராமல் வந்தால் மற்றும் மனைவி இறக்குமதி என்ற இரு கதைகளும் இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் பேசும் கதைகள்.

இதில் வந்தவள் வராமல் வந்தால் என்ற கதை தமிழ் சமூகத்தின் பொதுவான (டிபிகல்) ஆண்களின் சிந்தனையை வெளிப்படுத்தும் கதை. தாங்கள் எப்படியும் இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு எல்லாத் தடைகளையும் போட்டு அவர்கள் புனிதாமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். சந்தர்ப்பவசத்தால் பெண்களை மீறி நடைபெறும் சம்பவங்களை ஆண்கள் குருரமாக கற்பனை செய்கின்றனர் இக் கற்பனையினால் பெண்களின் புனிதம் கெட்டுப் போகும் என நினைத்துப் பெண்களைப் புறக்கணிக்கின்றனர். இந்தப் போக்கினால் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்தாலும் கூட ;ஆண்களுக்குப் பாதிப்புமில்லை. கவலையுமில்லை. அவர்கள் தங்களின் வாழ்வை இன்னுமொரு பெண்ணுடன் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சந்தோசமாக அமைத்துக் கொள்வார்கள் என்பது வலியுடனும் யதார்த்தமாகவும் எழுதப்பட்டுள்ளது.

மாறாக மனைவி இறக்குமதி ஒரு இலட்சிய (ஜடியல்) கதை. அப்படி நடைமுறையில் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. 30 வருடங்களுக்கு முதலே எழுதின விசயம் இப்பொழுதுகூட சாத்தியமில்லை என்பதுதான் துர்ப்பாக்கியம். ஏனென்றால் இப்பவும் புலம் பெயர்ந்த நாட்டிலையே பிறந்து வளர்ந்து கல்வி கற்றும் நன்றாக உழைக்கும் பெண்களே சீதனம் கொடுத்துதான் கலியாணம் கட்ட வேண்டி நிலையில் இருக்கும் பொழுது இலங்கையில் இருந்து வரும் பெண் இப்படி எல்லாம் கதைக்க முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. ஆயிரத்தில் ஒரு பெண் இப்படி இருந்திருக்கலாம். இருப்பினும் வந்தால் வராமல் வந்தால் என்ற கதை இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அதில் ஒரு உயிர் இருந்தது. ஆனால் இக் கதையின் முடிவு மகிழ்ச்சியைத் தந்தாலும் வலிந்து உருவாக்கப்பட்ட செயற்கைத் தனமாக இருந்தது.

அம்மா பாவம் கதையில் துணைவரை இழந்த ஒரு பெண் சமூகத்தால் எதிர்நோக்கும் புறக்கணிப்புகளையும் பிரச்சனைகளையும் குழந்தையின் பார்வையில் முன்வைக்கின்றது. ஒரு குழந்தைக்கு கூட இவை எல்லாம் விளங்குறபோது வளர்ந்தவர்களான நாங்கள் ஏன் பெண்களை விதைவையானவுடன் பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை கஸ்டப்படுத்துகின்றோம் என்பதைக் கேள்விக்குள்ளாக்கும் கதை. இந்தக் கதையில் வருவதுபோல் அல்லாமல் பெண்கள் இப்பொழுது வெளியில் விசேசங்களுக்கும் போனாலும். நல்ல உடுப்புகள், நகைகள் போட்டாலும் நமது சமூகம் அவர்களை இன்னும் அமங்களமாகத்தான் பார்க்கின்றது. அதனால்தான் அவர்கள் சடங்குகளில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். குழந்தையின் பார்வையில் கேட்கப்படும் பின்வரும் கேள்வி முக்கியமானது. அம்மா இல்லாத அப்பாமார் இப்படி இருக்கிறதை நான் ஒரு இடத்திலும் காணவில்லையே?

ராதா பெரிசான பின் அவசியமான கதை. அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் மிகவும் ஆடம்பரமாக ஹெலிக்கப்டரில் எல்லாம் பெண்ணை அழைத்து வந்து சாமத்தியவீடு செய்யும் இக் காலங்களில் இது கதைக்கப்பட வேண்டியதுதான். ஆனால் கதை சொன்ன விதம் யதார்த்தமில்லாமல் பிரச்சாரமாக உள்ளது. ராதா பெரிதானதை உணர்ந்ததை விபரித்த விதம் சினிமாத்தனமாக இருந்தது. ராதாவுக்கு அக்கா இருக்கிறா. சக நண்பிகள் சாமத்தியப்பட்டிருக்கினம். அப்படி இருந்தும் ராதா இரத்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைவதும் பயப்பிடுவதும் செயற்கைத்தனமாக இருந்தது. இக் கதையில் வரும் அம்மாபோல எங்கட அம்மா அப்பா இதைப் பற்றி ஒன்றுமே சொல்லித் தராமல் இருந்தாலும் அரசல் புரசலாக நாம் சிலதை அறிந்திருப்போம். எங்களுக்குப் பாலியல் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதற்கு இக் கதை ஒரு சாட்சியாக இருக்கிறது. இப்பவும் எமது அம்மா அப்பாக்கள் இதைப் பற்றி எல்லாம் தம் பிள்ளைகளுடன் கதைப்பினம் என்பது கேள்விகுறியே. இந்தக் கதையில் இருந்த இன்னுமோரு உறுத்தலான விடயம் ராதாவும் அவரது அக்காவும் ஏன் சாமத்திய சடங்கு நடத்தக்கூடாது என்ற உரையாடல். இவை நாடகத்தனமாக இருந்ததுடன் கதையுடன் ஒட்டவில்லை. ஆசிரியரின் எதிர்பார்ப்புகளாவும் விருப்பங்களும் வலிந்து திணிக்கப்பட்டதாக இருந்தது.

காதல் என்ற கதையில் ஒரு தமிழ் ஆண் டச்சுப் பெண் மீது காதல் கொள்கிறார். அவர் தனது காதல் துய்மையானது என நம்புகின்றார். டச்சுப் பெண் உலக அறிவுள்ள பெண். நிறைய புத்தகங்களை வாசிப்பவர். தன்னை விரும்பும் தமிழ் ஆண் தன் மீது உண்மையாகவே அன்பாக இருக்கின்றாரா அல்லது (பற்று) பொசசிவாக இருக்கின்றாரா என அவர் பரிசோதித்துப் பார்க்கின்றார். வழமையான நமது பெரும்பான்மையான தமிழ் ஆண்களைப் போல் இந்த ஆணனின் நடத்தையும் இருந்ததால் டச்சுப் பெண் “நீங்கள் பெண்களை மதிக்க மாட்டீர்கள். அடிமையாகத்தான் பார்க்கின்றீர்கள்” எனக் கூறி விடை பெறுகின்றார். இக் கதை தமிழ் ஆண்களின் மனநிலையை கூறியிருந்தாலும் அது உண்மையாக இருந்தாலும் தமிழ் ஆண்கள் மட்டுமா இப்படி? பொதுவாக. எல்லா ஆண்களின் மனநிலையும் இப்படித்தானே. ஆகவே தமிழ் ஆண்களை மட்டும் குற்றம் சாட்டுவதில் கேள்வியுள்ளது.

ஐம்பது ரூபாய் பெண் கதை இத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் சுவாரசியமாக சொல்லப்பட்ட ஒன்று. ஆர்வமாகவும் வாசித்த கதை. கதை சொல்லியை கடைசிவரை ஆண் என்றே நினைத்தேன். கடைசியில்தான் அவர் பெண் என்பதை அறிய முடிந்தது ஆச்சரியமாகவும் அழகாகவும் இருந்தது. ஆரம்ப காலங்களில் புலம் பெயர்ந்தவர்கள் சக தமிழரை காணவும் கதைக்கவும் ஏங்குவதை மிக அழகாக சொல்லியிருக்கின்றார். அதேநேரம் வேறு நாட்டு இன குழந்தைகளை தத்து எடுப்பதால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்கப்பால் திருமணத்தின் பின் பெண்களின் தேடல்களும் ஆர்வங்களும் மட்டுப்படுத்தப்பட்டு ஆண்களின் விருப்பங்களுக்கும் தீர்மானங்களுமே அவர்களை நிர்மானிக்கின்றது என இறுதியாக கதை சொல்லி கூறுவது எமது பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை.

ஒரு அம்மாவும் அரசியலும் நம் சமூகத்தைப் பற்றி அறியக்கூடிய முக்கியமான கதை. சாதாரண தாய் ஒருவர் கண்ணோட்டத்தில் தமக்கு நேரும் பிரச்சனைகளையும் மற்றவர்களுக்கு நேரும் பிரச்சனைகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் நிலையைக் கூறும் கதை. எப்பொழுதும் எங்களுக்கு நடக்கும் பிரச்சனையைப் பெரிதாகவும் மற்றவர்களுக்கு நடக்கும் பிரச்சனைக்கு அரசியல் சாயம் பூசி மலினப்படுத்துவதும் நடைபெறும். பொது மக்கள் எல்லாவற்றையும் நியாப்படுத்தி உயிர்களின் முக்கியத்துவதை குறைக்கின்றோம்.

ஒரே ஒரு ஊரிலே பெரிதாக கதை மாதிரி இருக்கவில்லை. நான்கு குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தது. இரண்டு பெண் பாத்திரங்களிலும் வரும் பெண்ணின் காதல் 1986ம் ஆண்டில் மட்டுமல்ல அதற்கு முன்பும் அப்படித்தான். நாற்பது வருடங்களிற்குப் பின்பும் இப்பொழுதும் அப்படித்தான். இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாட்டிலும் அப்படித்தான் இருக்கின்றது.

பாதியில் முடிந்த கதை பசி. இக் கதைகள் எல்லாம் மிகவும் எழை மக்களின் வாழ்க்கைய பேசுகின்றது. தமது வாழ்வையும் குடும்பத்தையும் முன்னேற்ற கஸ்டப்படுகின்றார்கள். இதனுடாக குடும்பத்திற்கு ஒரு விடிவை ஏற்படுத்து முனைகின்றார்கள். ஆனால் யுத்தம் அவர்களின் கனவை நிர்முலமாக்குகின்றது. பசி என்ற கதையில ;ஒரு ஏழைக் கடல் தொழிலாளியின் அவலத்தை பேசுகின்றது. சூசையும் அவர் மனைவி கனியம்மாவும் அவர்களின் மகனுக்காக தங்களின் கஸ்டங்களை எல்லாம் பொருத்துக் கொள்கின்றார்கள். யுத்தம் மட்டுமல்ல பணக்கார வர்க்கமும் ஏழைகளின் கஸ்டத்தை மதிப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் நிவாரணத்தைக் கூட தமது கடனை அடைப்பதற்காக கடன் கொடுத்தவர்கள் தட்டிப் பறிக்கின்றார்கள். கடைசியாக எல்லா வழியும் அடைபட்டு தடைச்சட்டத்தை மீறி கடலுக்குப் போய் பலியாகின்றார்.

நாளை. பரவாயில்லாத கதை. கனடா இலன்டன் போன்ற நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த மாணவர்களின் வாழ்க்கை கஸ்;டமானதுதான். அந்தக் காலத்தில். இப்ப கனபேர் இருக்கலாம். படிக்க விருப்பமான ஒரு குழந்தை வீட்டு சூழலாலும் பாடசாலையில் எதிர்நோக்கும் இனவாதத்தாலும் வன்முறையை நாடிச் செல்கின்றான். கல்வியில் அக்கறையான ஒரு சிறுவனின் வாழ்வு எப்படி வன்முறையை நோக்கிச் செல்கின்றது என்பதை சொல்லும் கதை இது. இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதியிருந்தால் சிறந்த கதையாக இருந்திருக்கும். பிரச்சனையை பேசுகின்றது ஆனால் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. தமிழ் சமூகத்தில் பிள்ளை ஆர்வமாகப் படிக்கின்ற போது அம்மா அப்பா அக்கறையில்லாமல் இருப்பது ஆச்சரியமானது.

தெரியவராதது புலம் பெயர் நாடுகளில் வந்து அகதிகாளாக இருக்கும் மனிதர்களின் அவல நிலையைப் பற்றி விபரிக்கும் கதை. அகதிகளாக இருப்பவர்களின் வேலை இல்லாப் பிரச்சனையிலும் இலங்கையில் அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக எந்த வேலையையும் எவ்வளவு நேரமும் செய்ய வேண்டிய நிலை. அதிலிருந்து மீள்வதற்கான அவர்களின் முயற்சியும் அதனால் ஏற்படும் அவலங்களையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

பனியில் எரியும் இரவுகள் இதுவும் தெரியவராது போன்ற ஒரு கதைதான். இருப்பினும் புலம் பெயர்ந்தவர்களின் கஸ்டங்களை தேவைகளை உணராமல் ஊரிலுள்ள உறவுகள் தமது தேவைகள் கஸ்டங்களை மட்டும்; முதன்மைப்படுத்தி பணம் கேட்டு நிர்ப்பந்திக்கும் சம்பவங்களைக் கொண்டது. இதுவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது.

இழவுக்கும் தொழிலுக்கும் வ. செ. மக்களின் துன்பத்தையும் துர்ப்பாக்கிய நிலையையும் அதிகாரத்திலுள்ளவர்களாக காவலத்துறை மற்றும் ஏஜென்சியும் எப்படி தம் நலத்திற்காகப் பயன்படுத்துகின்றார்கள். இவர்களுக்கு இனம் மதம் ஒன்றும் இல்லை. பணம் மட்டுமே குறிகோள். மனிதர்களின் அவலநிலையப் பயன்படுத்து பணம் உழைப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மரணிப்பதைக்கூட கவலைப்படாதவர்கள்.

இத் தொகுப்பிலிருக்கும் எல்லா கதைகளும் மிகவும் சீரியசாக ஆனவை. மூக்குள்ளவரை என்ற ஒன்றைத் தவிர . இவ்வளவு ஒரு சீரியசான எழுத்தாளரால் இப்படியான ஒரு கதை எழுதியது ஆச்சரியமாக இருந்தபோதும் வாசிக்க நன்றாக இருந்தது.. முக்கியமான கதை. இதேபோல இறுதிக் கதையும் எமது போராட்டத்தை குறியீட்டு முறையில் சொல்லியதில் கவனிக்கப்பட வேண்டிய கதை. மற்றும்படி இத் தொகுப்பிலிருக்கும் எல்லாக் கதைகளும் ஏதோ ஒரு வகையில் விளிம்புநிலை மக்களின் அவலங்களைக் கூறுவதால் புறக்கணிக்கமுடியாது.

 

09.06.2018, கனடாவில் நிகழ்ந்த பகுபதத்தின் உரையாடல் வெளியில் வாசிக்கப்பட்டது.

youtube.com/watch?v=ScWGR0iFaiI

Leave a comment