ராதா பெரிசானபின்

‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் தசரதர். அவள் என்ன கேட்பாளோ என்று ஆவலாயிருந்தார்.

கைகேயி தலையைப் பரப்பிக்கொண்டு முகத்தில் கொஞ்ச வஞ்சத்துடன் அவர் முன்னால் வந்தாள். ‘கேட்டபின் மறுக்கமாட்டீர்களே?’ என்று சந்தேகப்பட்டாள்.

‘இல்லைத் தயங்காமல் கேள். இந்த தசரதன் சொன்ன வாக்கு மீற மாட்டான்’ தசரதர் இன்னும் ஆவலானார்.

‘ராமன் பதினான்கு வருடங்களுக்கு காட்டில் இருக்கவேண்டும்’ என்றாள் கைகேயி நிதானமாக.

தசரதர் திடுக்கிட்டார். முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. கைகளைப் பிசைந்தார். நாடியைத்
தடவினார். கொஞ்சம் நடந்து கைகேயியின் பக்கம் வந்தார். ‘நீ விளையாட்டாகத்தானே அப்படிச் சொன்னாய்? பரவாயில்லை. இப்போது என்ன வரம்வேண்டும் என்று கேள்’ என்ற குரலில் தடுமாற்றம் இருந்தது.

கைகேயி சிரிக்கவில்லை. முகம் அதே கடுமையைப் பாதுகாத்திருந்தது. ‘வரம் தருவதாக நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள். நான் கேட்கும் வரம் இதுதான். நீங்கள் வாக்கை மீறினால் இந்த நாடே உங்களை எள்ளி நகையாடும் மன்னவா’

தசரதர் அவளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தார். பிடிவாதம் அடையாளம் காட்டியது. கண்களில் கொடுரம் மின்னியது.

‘கைகேயி உனக்கு இந்த நாடு வேண்டுமா. தயங்காமல் கேள். எனது உயிர் வேண்டுமா? எடுத்துக் கொள். தயவுசெய்து….’

‘ராமன் பதின்நான்கு வருடங்கள் காட்டில் இருக்கவேண்டும்’

தசரதர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். சரிந்து விழப்போய், பிறகு நிமிர்ந்து ‘சரியே ரீச்சர்?’ என்று சற்றுத் தள்ளிக் கொப்பிவைத்து பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியைப் பார்த்துக் கேட்டார்.

‘எல்லாம் நல்லாயிருக்கு. மேக்கப்பும் போட இன்னும் திறமாய் இருக்கும். இண்டைக்கு உங்கட இதோட காணும். நாளைக்கு எல்லாரையும் சேர்த்து ஒருமிக்கப் பாக்கிறது. வீட்டிலபோய் நல்லாப் பாடமாக்குங்கோ’ என்று ஆசிரியை அவர்களுடைய ஒத்திகையை முடித்துவிட்டு ராமரையும் சீதையையும் பயிற்சிக்கு அழைக்க, தசரதரும், கைகேயியும் ராதா, சுகுணாவாக அந்த வகுப்பறையைவிட்டு வந்தார்கள்.

‘உமக்கு முழுக்கப் பாடமே?’ சுகுணா கேட்டாள்.

‘வடிவாயெண்டில்லை. இந்தக் கிழமையும் பாடமாக்கினாத்தான் தடக்குப்படாம கதைக்கலாம்’ என்றாள் ராதா.

‘இந்த முறை விழாவில எங்கட ட்ராமாதான் கலக்குக் கலக்கப்போகுது’

இருவரும் தமது வகுப்புக்கு வந்தபோது மதியபோசன இடைவேளைக்காக மணியடித்தது.

படித்துக் களைத்துப்போன மாணவர்கள் வயிற்றைக் கவனிக்க அவசரமானார்கள். பாடசாசைக்கு அருகாமையில் வீடுள்ளவர்கள் சாப்பிட்டுத் திரும்பிவருவதற்காகப் பறக்க, ஏனையோர் கை கழுவுவதற்காக தண்ணீர்க் குழாய்களின் முன் வரிசை அமைத்தார்கள்.

‘இண்டைக்கு என்ன பழகினனியள்?’ என்று சக மாணவிகள் ராதாவையும் சுகுணாவையும் விசாரித்தார்கள்.

வரிசையில் நகர்ந்துகொண்டே சுகுணாவும், ராதாவும் ஒத்திகையை விபரித்தார்கள். நாடகம் நல்லாயிருக்கு என்ற எண்ணம் அப்போதே பலரின் மனதில் நிச்சயமாகியது. நடிக்கும் வாய்ப்பை ஏதோ காரணத்தால் இழந்திருந்த பலர் தங்களுக்குள் பொருமிக்கொண்டார்கள்.

‘பிரசங்கம் வைக்காமல் கெதியா கழுவிக்கொண்டு போங்கோ’ என்று பின்னால் நின்ற மாணவன் ஒருவன் அவசரப்பட்டான்.

‘இது கேள்ஸின்ரை பைப். நீங்க போய்ஸ்ஸின்ரை பைப்பில போய் கழுவுங்கோ’ என்று மாணவி ஒருத்தி எரிச்சலடைந்தாள்.

‘இங்க பாருங்கோடா. பைப்பிலயும் ஆம்பிளைப் பைப், பொம்பிளைப் பைப்பெண்டிருக்காம்’ ஒருவன் பெரிதாகச் சொல்ல, எல்லோரும் சிரித்துக்கொண்டார்கள்.

‘மனேஸ் தெரியாதவன்கள்’ ராதா முணுமுணுத்துக்கொண்டு கைகளைக் கழுவிக்கொண்டபின், வகுப்பறைக்கு வந்து சாப்பாட்டுக் பொதியைப் பிரித்தாள். இடியப்பமும், முட்டைப்பொரியலும்.

வகுப்பில் அரைவாசிப் பேருக்கு மேல் வெளியே போயிருந்ததால் மற்றவர்கள் தங்களது வசதிப்படி சிதறியிருந்து சாப்பிட்டார்கள். மாணவர்கள் தங்களுக்குள் விசேட பாசையில் கதைத்துச் சிரிக்க, மாணவிகள் மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

இருபது நிமிடங்களுக்குள் பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு முடித்து தமது மிகுதி நேரத்தைக் கழிக்க விளையாட்டு மைதானத்துக்கும், நூல் நிலையத்துக்கும் , தெருவுக்கும் போனார்கள். சிலர் நடைபாதையை தங்களது சம்பாசனைக்குப் பாவித்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்களின் விளையாட்டு மைதானத்துக்குப்போன மாணவிகளுடன் ராதாவும் போய் எட்டுக்கோடு விளையாடுபவர்களை ரசித்தாள்.

கொஞ்சநேரத்தின் பின்தான் ராதா அந்த மாற்றத்தை உணர்ந்தாள். அடிவயிற்றில் பலமாக வலித்தது. கொஞ்சம் கீழே ஏதோ வித்தியாசமாகவும் உணர்ந்தாள். நேரமாக வலி அதிகரித்தது. மலசலகூடத்துக்குப் போகவேண்டும் போலிருந்தது. வேகமாகப் போனாள்.

கதவை விரைந்து சாத்திவிட்டு உடைகளை கழற்றினாள். சிகப்பாக இரத்தம். ராதா பயந்துபோனாள். அலறவேண்டும் போலிருந்தது. வியர்வைச் சுரப்பிகள் திடீரென உயிர்பெற்று இயங்கத்தொடங்கின. நெற்றியில் முத்துக்கள் உண்டாகின. `அம்மா’ என்று மெல்லமாக முனகினாள்.

இரத்தம் தொடர்ந்து வந்ததும் ‘ஐயோ எனக்கு என்ன வருத்தம்? ரத்தமாய் வருகுது?’ என்று நினைத்து பயத்தில் சுவரைப் பிடித்துக்கொண்டாள். பயம் அதிகரித்தது. உடம்பு தளர்ந்துகொண்டிருந்தது.

வெளியே யாரோ மாணவிகள் வரும் சத்தம் கேட்டது. ராதா பல்லைக் கடித்து முனகலை அமுக்கிக்கொண்டாள். பக்கத்துக்கூடங்களைப் பாவித்தவர்கள் வெளியேறும் சத்தம் கேட்டது. ராதா அப்படியே நின்றாள்.

இடைவேளை முடிவதற்கான மணியடித்தபோது இரத்தப்போக்கும் நின்றது. ராதா ஒருமாதிரி தன்னைத் தயரார்படுத்திக்கொண்டாள். சில வினாடிகள் தாமதித்து வெளியே வந்தாள். வகுப்புக்குப் போவமா. தற்செயலா பிறகும் ரத்தம் வந்தா? என்ன வருத்தமெண்டே தெரியேல்ல. பேசாமல் வீட்டபோனால் அம்மாவோட டொக்ரரிட்ட போகலாம் என்று முடிவுசெய்த ராதா வகுப்புக்குப் போகாமல் பாடசாலைக்கு வெளியே வந்தாள்.

பஸ் சரியான நேரத்துக்கு வந்தது. அவசரமாக ஏறி நடத்துனரிடம் ரிக்கட் எடுத்துக்கொண்டு இருக்கையொன்றில் அமர்ந்தாள். நடத்துனர் ஒருமாதிரியாக அவளைப் பார்த்த மாதிரி இருந்தது. சந்தேகத்துடன் சட்டையைப் பார்த்தாள்.

வெண்ணிற உடையில் சில இரத்தத் திட்டுக்கள் இருந்தன. அவளின் முகம் சிவப்பாகியது. அழுகை வந்தது.

தரிப்பில் இறங்கி ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தாள். கிணற்றடியில் சலவைப் பணியில் ஈடுபட்டிருந்த நாகமம்மா மகள் வந்த வேகத்தைப் பார்த்து பயந்துபோய் வீட்டுக்குள் ஓடிவந்தாள்.

‘ராதா எங்க நிக்கிறாய்’ என்று கேட்டாள். படுக்கையறையிலிருந்து அழுகுரல் கேட்டது. அங்கே போனாள்.

ராதா போட்டிருந்த வெள்ளை உடுப்புடன் அப்படியே கட்டிலில் படுத்து அழுதுகொண்டிருந்தாள்.

‘என்னம்மா நடந்தது? ஏன் அழுகிறாய்?’ நாகம்மா பயந்துபோய் மகளை நெருங்கிக்கேட்டாள். ராதா அழுதபடியே நடந்ததைச் சொன்னாள். முதலில் திகைத்த நாகம்மாவின் முகம் சில வினாடிகளில் மாறுதலடைந்தது. சந்தோசம் பரவியது. கண்கள் அகல விரிந்தது. வாயில் புன்னகை உட்கார்ந்தது.

‘உதுக்கேன் அழுகிறாய்?’ என்று சொல்லி நிதானமாகத் திரும்பியவள் சுவாமிப் படங்களைப் பார்த்ததும் பதறினாள். ‘இங்கேயே வந்து படுத்திருக்கிறாய். எழும்பெழும்பு’ என்று ராதாவை தொந்தரவுபடுத்தி எழுப்பி அறையை விட்டு வெளியே கூட்டி வந்தாள்.

ராதா திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தாள். சாதாரண தலையிடியென்றாலே அப்பாவை விரட்டி வைத்தியரைக் கூப்பிடும் அம்மா ரத்தம் வந்ததென்று சொல்லியும் பதறாமல் இருந்ததோடு படுக்கவிடாமல் விரட்டுவதைப்பார்த்து அவளுக்குக் குழப்பம் வந்தது. அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டுதோவென்று கவலையாகவிருந்தது.

படிப்பு மேசை, அலுமாரிகள் இருக்கும் அறைக்கு ராதாவைக் கூட்டிவந்துவிட்ட நாகம்மா
மறுபடி படுக்கையறைக்குப்போய் பாயும் தலையணையும் எடுத்துவந்தாள்.

ராதாவுக்குத் தன்னுடைய வலியே மறந்துவிட்டது. அம்மாவின் புதிரான நடவடிக்கைகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

படபடவென தளபாடங்களை ஒதுக்கி ஓரமாக வைத்த நாகம்மா வெற்றிடத்தை பெருமளவு விஸ்தரித்து அதில் பாயை விரித்து தலையணையைப் போட்டாள். ‘இதில வந்திரு ராதா.’ என்று ராதாவை பாயில் அமர்த்தினாள். மாற்றுடை எடுத்து வந்து பாடசாலை உடுப்பிலிருந்து ராதாவை மாற்றினாள்.

ராதாவுக்கு வியப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. அம்மாவில் தெரிந்த பூரிப்பு அவளைக் குழப்பிக்கொண்டிருந்தது.

‘ராதா உப்பிடியே இரு. அக்காவைப் போய் கூட்டியாறன்’ என்று சொல்லிவிட்டு நாகம்மா வெளியே போனாள்.

அம்மா வெளியே போனபின் தனிமைப்பட்ட ராதாவுக்கு மறுபடி பயம்வந்தது. ‘ஏன் ரத்தம் வந்து? என்ன வருத்தம்? ஏன் அம்மா அக்கறைப்படுத்திறா இல்லை?’ என்று பல கேள்விகள் பிறந்தன.

சினேகிதி வீட்டுக்குப்போயிருந்த நித்தியாவுடன் நாகம்மா வீட்டுக்குத் திரும்பியபோது ராதா களைத்துப்போய் பாயில் படுத்திருந்தாள்.

‘நித்தியா நீ தங்கச்சியோட கதைச்சுக்கொண்டிரு. நான் அவளுக்கேதேன் சாப்பாடு செய்யிறன்.’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குப் போனாள்.

நித்தியா ராதாவின் அருகில் பாயில் அமர்ந்தாள். தங்கையின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய நிலையில் தானிருந்ததை எண்ணிப்பார்த்தபோது ராதாவின் பயம் அவளிற்குப் புரிந்தது.

‘ராதா’ என்றாள்.

ராதா தலையை மட்டும் உயர்த்தி அக்காவைப் பார்த்தாள். அவளாவது தனக்கு உதவமாட்டாளா என்று ஏங்கினாள்.

 

‘உனக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமே?’

ராதா தெரியாதெண்டு தலையாட்டினாள். அக்காவும் நிதானமாக இருந்தது அவளுக்குக் கவலையளித்தது.

நித்தியா ராதாவின் தலையை ஆதரவுடன் தடவினாள். ‘கொஞ்ச வருசத்துக்கு முந்தி இந்த வீட்டிலை பெரிசா ஒரு கொண்டாட்டம் நடந்தது தெரியுமே?’ என்று கேட்டாள்.

ராதா கொஞ்சம் யோசித்துவிட்டு ‘தெரியேல்லை. என்ன நடந்தது’ என்று திருப்பிக்கேட்டாள்.

‘என்ன மறந்து போச்சே. எங்கட சொந்தக்காரர் எல்லாரும் வீட்ட நிறைஞ்சிருந்தினம். வீடு முழுக்க சோடிச்சிருந்தது. பந்தல் எல்லாம் போட்டிருந்தது. என்னைச் சோடிச்சு மணவறை மாதிரி ஒண்டில இருத்தி வைச்சினம். நாங்கள் எல்லாரும் சேந்து படம் எடுத்தம்’ என்று நித்தியா சொல்லிக் கொண்எருக்கும்போது ராதா குறுக்கிட்டாள்..

‘தெரியும். உன்ரை சாமத்தியச் சடங்கு நடந்தது’

‘சரியாச் சொல்லிப்போட்டாய். அதைப்போல இன்னுமொண்டு உனக்காண்டி நடக்கப்போகுது. நீயும் என்னைப்போல சாமத்தியப்பட்டிட்டாய்.’ என்றாள் நித்தியா நிதானமாக.

ராதா சடாரெனப் பாயைவிட்டு நிமிர்ந்தாள். ‘நான் சாமத்தியப் பட்டிட்டேனா? அதுதான் ரத்தம் வந்ததோ? அதுதான் அம்மாவும் சந்தோசமா ஓடித்திரியிறாவோ’ ராதா சிலிர்த்துக்கொண்டாள். அக்கா சொன்னதை அவளால் உடனடியாக ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.

சில வருடங்களுக்கு முன் அக்கா இதேபோல கொஞ்ச நாட்கள் தனியறையில் இருந்ததும், அவளுக்கென்று அம்மா விசேடமான சாப்பாடுகள் செய்து கொடுத்ததும், வீட்டுக்கு அடிக்கடி ஆட்கள் வந்ததும், ஒருநாள் பெரிய கொண்டாட்டம் நடந்ததும் அவளுக்கு மங்கலாய் ஞாபகம் வந்தன.

‘நான் சாமத்தியப்பட்டிட்டேனா? அப்பிடியெண்டா இனிமேல் நான் பெரிய மனிசியே? அக்காவைப்போல சீலையே கட்டவேணும்?’ ராதாவுக்குக் கூச்சம் வந்தது.

‘உன்ரை பயம் போட்டுதுதானே? எட்டாம் ஒன்பதாம் வகுப்புப் படிக்கேக்க அநேகமா எல்லாப் பொம்பிளையளும் சாதாரணமா சாமத்தியப்பட்டிடுவினம். இது ஒரு இயற்கையான நிகழ்ச்சி. இப்பிடியில்லாட்டித்தான் ஏதேன் வருத்தமோ எண்டு பயப்பிடவேணும். இதெப்படி நடக்கிறதெண்டு அடுத்தவருசம் நீ விஞ்ஞானத்தில படிப்பாய். இப்ப நீ பொம்மை வைச்சு விளையாடுற சின்னப்பிள்ளை இல்லை. எங்களைப்போல பெரிய ஆள்’ நித்தியா சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள்.

ராதாவுக்குப் பயம் போய் இனம்புரியாத வெட்கம் வந்தது. இது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானது என்று அக்கா சொன்னதும் அவள் மறுபடி தைரியமானாள்.

அப்போதூன் ராதாவுக்கு சினேகிதி மாலாவின் ஞாபகம் வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவளுடைய பூப்புனித நீராட்டு விழாவுக்கு அக்காவுடன் போனதை நினைவுபடுத்திக்கொண்டாள்.
ஆகவே இது பெரிய விசயமில்லைப் போல் இப்போது பட்டது.

‘அப்ப என்னையும் உன்னைப்போல சோடிச்சு சப்பறத்தில இருத்துவினமே?. நானும் ஆக்களுக்கு முன்னால இருக்கவேணுமே?’ என்று வெட்கத்தோட அக்காவைக் கேட்டாள்.

‘வேற என்ன, நல்லா விட்டினம். அம்மாவைப் பார். இப்பவே விழுந்தடிச்சுக்கொண்டு நிக்கிறா. இனித்தானே எல்லாமே ஆரம்பமாகப்போகுது. நாளை நாளையிண்டைக்கு விழாவுக்கு நாள் குறிச்சிடுவினம்..’ நித்தியா சொல்லும்போது முகத்தில் சிந்தனைகள் படிந்தன.

பின்னேரம் சுகுணா ராதா விட்டுவந்த கொப்பி, புத்தகங்களை திருப்பிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு விசயத்தையும் அறிந்துகொணடு சென்றாள்.

நவரத்தினம் வேலையிலிருந்து வந்ததும் நாகம்மா முதல் வேலையாக மகள் பெரிதான செய்தியைத் தெரிவித்தாள். ராதாவை வந்து பார்த்து அப்பா ‘வடிவாச் சாப்பிடு’ என்று சொல்லிவிட்டு எங்கேயோ புறப்பட்டுப் போனார். நாகம்மாவும் அதே ஊரிலிருக்கும் உறவினர்களுக்கு செய்தி தெரிவிக்கப் போனாள்.

ராதா சாப்பிடுவதும், தனியே இருந்து புத்தகங்களை வாசிப்பதுமாக இருந்தாள்.

மறுநாள் நவரத்தினம் தனது தங்கையுடன் திரும்பிவந்தார். ராதாவைக் கிணற்றடிக்குக் கூட்டிப்போனார்கள். மாமி குளிரக் குளிர அவளுடைய தலையில் தண்ணீர் ஊற்றினாள். ராதா நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பகல் சாப்பாடாக அம்மா உளுத்தம் களி கிண்டி தனிப் பாத்திரத்தில் ராதாவுக்குக் கொடுத்தாள்.

ஒரு வாரத்தின் பின் மாணவிகள் மூலம் ராதாவைப் பற்றிக் கேள்விப்பட்ட நாடகத்துக்குப் பொறுப்பான ஆசிரியை ராதா வீட்டிற்கு வந்தாள். சம்பிரதாயமாக அவளுடன் கதைத்துவிட்டு அறைக்கு வெளியே வந்து நாகம்மாவுடன் கதைத்தாள்.

‘அடுத்த கிழமை பள்ளிக்கூடத்தில கலைவிழா. ராதாவும் ஒரு நாடகத்தில நடிக்கிறா. எல்லாம் பழகியாச்சு. நாடகம் நடக்கிற அண்டைக்கு மட்டும் வந்தாப் போதும். நீங்கள் விடுவீங்கள்தானே’

‘என்ன ரீச்சர் நீங்களே இப்பிடிக் கேக்கிறியள். முப்பத்தொரு நாள்வரைக்கும் பிள்ளை எழும்பப்படாதெண்டு தெரியும்தானே? நாங்கள் பள்ளிக்கூடத்துக்கே பிள்ளையளை விடாம மறிச்சு வைச்சிருக்கிறம். நீங்கள் நாடகத்துக்கு விடச்சொல்லுறியள். பிள்ளை அடுத்தவருசம் போடுற நாடகத்தில நடிப்பாள்’ என நாகம்மா வெடுக்கென பதிலளித்தாள்.

இவர்களுடைய சம்பாசனையை அறைக்குள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த ராதாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘நாடகத்தில நடிக்கிறது நான், மறுமொழி சொல்லுறது அவவே. பாவம் ரீச்சர். எவ்வளவு கஷ்ரப்பட்டு நாடகம் பழக்கினவா. தசரதர் இல்லாம நாடகம் எப்பிடி நடக்கும்? ஒரு கிழமைக்குள்ள இன்னொரு தசரதரை பழக்கிறதெண்டா முடிஞ்ச அலுவலே? இவ ஒண்டும் விளங்காம பிள்ளை வரமாட்டா எண்டு சொல்லிப்போட்டா’

ஆசிரியை வீட்டிலிருந்து போனதும் ராதா தாயுடன் எரிந்து விழுந்தாள். ‘என்னைக் கேக்காம நீங்கள் என்னெண்டு ரீச்சருக்கு மறுமொழி சொல்லியனுப்புவியள்? நானில்லாமல் நாடகம் என்னெண்டு வைக்கிறது?’ என்று கோபப்பட்டாள்.

‘விசர்க்கதை கதைக்காதை. நீ என்ன செய்ய வேணுமெண்டு எங்களுக்குத் தெரியும். நாடகம் எப்பவும் நடிக்கலாம். இப்ப பேசாம வீட்டில இரு. நாடகம் நடிக்கிறாவாம் நாடகம்’ என்று நாகம்மாவும் கோபமாகப் பேசிவிட்டுப்போனாள்.

ராதாவுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. ‘ எனக்கென்ன செய்யவேணுமெண்டு அவவுக்குத் தெரியுமாம்.. அப்ப எனக்கெண்டு நான் ஒண்டுமே செய்யேலாதே.’

வெளியே போயிருந்த அக்கா வந்ததும் ராதா நடந்த விசயத்தைச் சொன்னாள்.

‘இனிமேல் இப்பிடித்தான் நடக்கும். ஆரும் உன்னை ஒண்டும் கேக்கமாட்டினம். உன்னைக் கேக்காமத்தான் எல்லாம் நடக்கும். மற்றவையின்ரை விருப்பப்படிதான் நாங்கள் நடக்கவேணும்.’ என்று நித்தியா வெறுப்பாகச் சொன்னாள். நாடகத்தில் பங்குபற்ற முடியாத வருத்தத்துடன் இருக்கும் தங்கையைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

‘ இது அநியாயமாயெல்லோ இருக்கு. எனக்கு எத்தனை விருப்பமாயிருக்கும். விருப்பமில்லாமல் இருக்கும். அதுகளைப்பற்றிக் கேக்காம எல்லாரும் தங்கட விருப்பப்படி எல்லாம் செய்ய வேணுமெண்டா அதென்ன படு அநியாயாமமெல்லோ.’ ராதா உணர்ச்சிவசப்பட்டாள்.

‘இவள் சாதாரணமானவளல்ல. இவளுக்குள் கேள்விகள் ஆரம்பமாயிருக்கு. இவளுக்குச் சிந்திக்கும் திறன் இருக்கு. இவள் மற்றப் பெண்களைப் போல அல்ல’ நித்தியாவுக்குத் தங்கையை நினைக்கும்போது பெருமையாக இருந்தது. இவளைப் பாவித்து தனது மனக் குமுறல்களுக்கும் முடிவு காணவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டாள்.

‘இதுதான் நாட்டு நடப்பு. இதுதான் எங்கட சமுதாயம். பொம்பிளையளுக்குக் கிடைச்சிருக்கிற சுதந்திரம் இவ்வளவுதான். இப்ப நீ அனுபவிக்கிறதுதான் ஆரம்பம். இன்னும் போகப்போக நீ இழக்கப்போற சுதந்திரம் எக்கச்சக்கம். எங்கட வீட்டையே எடுத்துப் பார். அம்மாவின்ரை பேச்சை அப்பா கேட்கமாட்டார். எங்கடை பேச்சை அம்மா கேட்க மாட்டா. இப்பிடி பொம்பிளையளுக்கு ஆம்பிளையள் உரிமை குடுக்கிற இல்லை. பொம்பிளையளாலையும் இல்லை. அம்மா நாள் குறிச்சுப்போட்டா. இன்னும் ஒரு கிழமையில வீட்டை சோடிக்கத் தொடங்கியிடுவினம். ஆக்களுக்குச் சொல்லத் தொடங்கியிடுவினம். எனக்குச் செய்ததைப்போல உனக்கும் சாமத்தியச் சடங்கு வடிவாய்ச் செய்யிறது விருப்பம்தானே?’ நித்தியா கேட்டுவிட்டு தங்கையின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

‘உனக்கு விசரே? எனக்கு விருப்பமில்லை.’ ராதா உடனே பதிலளித்தாள். முகத்தில் வெறுப்பு படர்ந்தது.

நித்தியா உற்சாகமடைந்தாள். ‘ ஏன் விருப்பமில்லை. வெக்கமாயிருக்கே?’ என்று தங்கையைத் தூண்டினாள்.

‘வெக்கமும்தான். ஆனா அதுக்காண்டி மட்டும் இல்லை. ஊரிலை இருக்கிற சனம் முழுக்க வந்து ஆளை விழுங்கிறமாதிரிப் பாத்துக்கொண்டிருக்குங்கள். அதுகளுக்கு முன்னால நான் சாமத்தியப்பட்டிட்டேன் உங்களுக்குத் தெரியுமே எண்டு விளம்பரம் செய்யிறதுமாதிரி நான் சோடிச்சுச்கொண்டு இருக்கவேணும். அதுகள் தங்கட கதை கதைச்சுக்கொண்டிருக்குங்கள். இது விசர்வேலையெல்லே’ ராதாவின் வார்த்தைகள் வேகமாக வந்தன.

நித்தியா உண்மையில் ஆச்சரியப்பட்டுப்போனாள். தனது தங்கை இப்படி என்று அவள் கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை. பரீட்சார்த்தமாகத்தான் ஆராய விரும்பினாள். அது வெற்றியளிக்கும் என்று தெரிந்தபோது அவளுக்குள் உறுதி பிறந்தது.

‘இதுக்காண்டி மட்டுமோ? அல்லாட்டி வேற காரணங்களும் இருக்கோ?’ என்று கேட்டாள்.

சில வினாடிகள் மௌனமாயிருந்த ராதா ‘மாலா சாமத்தியச் சடங்கு முடிஞ்சு பள்ளிக்கூடம் வரேக்க பெடியள் அவாவை பகிடி பண்ணி ஊத்தைக் கதையெல்லாம் கதைச்சவன்கள்’ என்று சுவரைப் பார்த்தபடி சொன்னாள். ‘உப்பிடித்தானே நானும் வெளிக்கிட்டு ஆக்களுக்குமுன்னால இருக்கேக்க அவங்கள்ள் மனசுக்குள்ள நினைப்பாங்கள்.’

‘நினைக்குங்கள் என்ன? அப்பிடித்தான். இதுகள் எங்கட அப்பா அம்மாவுக்கு விளங்காது. அவைக்கு மற்றவை செய்யிறது மாதிரி பெரிய கொண்டாட்டம் கொண்டாடாட்டி தங்கட அந்தஸ்து, கௌரவம் குறைஞ்சுபோகுமெண்ட கவலை. மற்றவையின்ரை பேத்டே, கலியாணவீடு, சாமத்தியச்சடங்குக்கு லெவலா குடுத்ததை திரும்ப வறுக வேணுமெண்ட நோக்கம். அதுதான் இவைக்குத் தேவை. சாமத்தியச்சடங்குக்கு வாறவை போட்டிருக்கிற நகையளைப்பற்றிக் கதைச்சா என்ன, சீலையளைப்பற்றி விசாரிச்சா என்ன, இல்லாட்டி மனசாலை எங்களோடை படுத்தா என்ன. இவையளுக்கு கவலை இல்லை. தங்கட நோக்கங்கள் நிறைவேறினாச் சரி’ நித்தியா தனது குமுறலைக் கொட்டினாள்.

ராதா அக்காவைப் பார்த்தாள். இப்பிடி வித்தியாசமான வார்த்தைகளை, நீளமான வசனங்களை கேட்பது அவளுக்கு புதுமையாக இருந்தது. அதோடு அக்கா சொல்வதிலிருந்த உண்மையும் புரிந்தது. அவளுக்கு இப்போது பதின்னான்கு வயதாகிவிட்டது.

‘சிம்பிளாச் சொல்லுறதெண்டா எங்கட பெட்டை கலியாணத்துக்கு ரெடி எண்டு அட்வரிஸ்மென்ற் பண்ணுறத்துக்காண்டித்தான் அப்பா, அம்மாக்கள் இந்தக் கொண்டாட்டங்களை வைக்கிறவை. இப்பிடித் தங்களை கேவலமாய் விளம்பரப்படுத்தியினமெண்டு சாமத்தியப்பட்ட பொம்பிளையளும் நினைச்சுப் பாக்கிறது இல்லை. அவை பேசாம இருக்கிறபடியாத்தான் மற்றவை அவையளில தங்கட அதிகாரத்தைப் பாவிக்கினம்’ என்று நித்தியா சொல்லிக்கொண்டிருக்கும்போது ராதா குறுக்கிட்டாள்.

‘நான் எனக்குக் கொண்டாட்டம் நடாத்த விடமாட்டன்.’

‘நீ உப்பிடிச் சொன்னா சரியே? அப்பாவும் அம்மாவும் எப்பிடியாவது கொண்டாட்டம் வைச்சே தீருவினம். நீ மாட்டனெண்டாலும் நடக்கும். அடிச்சு வெளிக்கிடுத்துவினம்’ என்றாள் நித்தியா நிதானமாக.

‘நான் மாட்டன். அழுவன். ஆக்களுக்கு முன்னால நிண்டு அழுவன் எண்டு வடிவா விளங்கப்படுத்துவன். கட்டாயம் குழப்புவன். நீ உவ்வளவு என்னோட கதைக்கிறாய். எனக்குது விருப்பமில்லையெண்டு எனக்காண்டி அவையோடை கதையன்’ என்று அக்காவைப் பரிதாபமாகக் கெஞ்சினாள்.

‘உன்ரை மனசிலை என்ன யோசிக்கிறாய் எண்டு பாக்கத்தான் உப்பிடிக் கதைச்சனான். பயப்பிடாதை. உனக்காண்டி நான் கதைப்பன். உன்ரை வயதிலை நான் இருக்கேக்க எனக்கு ஆரும் உதவியில்லை. உப்பிடியெல்லாம் விளங்கப்படுத்தேல்லை. எனக்கும் பிரசன்ற் வரும், கன ஆக்கள் வருவினம் எண்ட சந்தோசம் மட்டும்தான் இருந்தது. இப்ப உனக்கு நான் இருக்கிறன். அப்பாவோடையும் நான் கதைக்கிறன். கடைசி மட்டும் அவை சம்மதிக்கயில்லையோ பிறகு ரண்டுபேருமாய் எல்லாத்தையும் குழப்புவம்’ என்று நித்தியா உறுதியளித்ததும் ராதா சந்தோசமானாள்.

‘இதுமட்டும்தான் எங்கட பிரச்சினை இல்லை. வீட்டுக்குள்ளையும், வெளியிலையும் எங்களை அடக்கிற, முட்டாளாக்கிற கன பிரச்சினையளை நாங்க சந்திக்க வேண்டிவரும். அதுக்கு இது ஆரம்பமா இருக்கட்டும்’ என நித்தியா சொன்னதை ராதா ஏற்றுக்கொண்டாள்.

இருவரும் நம்பிக்கையாக இருந்தார்கள்.

 

———————

பார்த்திபன்

1989

ஓவியம்: மணிவண்ணன்

Leave a comment