கூதல் காற்று பரந்த மனப்பான்மையுடன் இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து குடிசைக்குள் பரவியது. ஞானப்பிரகாசம் வீறிட்டுக் கத்திக்கொண்டிருந்தான். பெயரின் அளவிற்குச் சம்பந்தமில்லாமல் அவன் உடம்பு சிறியதாக இருந்தது. இரண்டு வயதென்றால் அப்படித்தானிருக்கும். தன்னைச் சுற்றிப் போடப்பட்டிருந்த துணிக் குவியலைத் தாறுமாறாக்கியபடி அவன் அழுது கொண்டிருந்தான்.
அவனுடைய தேவை எதுவென்று தெரிந்தும் தெரிந்து கொள்ளாதவள் போல கன்னியம்மா அவனருகில் பேசாமல் படுத்திருந்தாள். கண்கள் கூரையின் இடைவெளிகளிளுடாக மேலே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
சூசை சாக்கால் போர்த்திக்கொண்டு குடிசை வாசலில் மணலில் குந்தியிருந்தான். தலை மட்டுமே போர்வைக்குள்ளிருந்து சுதந்திரம் வாங்கியது.
சூரியன் கடலில் சுத்தமாகத் தலை முழுகியதால் கருமேகங்கள் உல்லாசமாக வான வீதியில் அலையத் தொடங்கியது. எனினும்
சிவப்பு முழுவதுமாக அழிக்கப்படவில்லை.
சில பறவைகள் கூட்டு ஞாபகம் வந்ததினால் வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தன.
கூச்சலிட்டுக் கொண்டு வந்த அலைகள் கரையை அண்மித்ததும் காணமல் போய்விட்டன. அவ்வப்போது காய்ந்த ஓலைகள், மரக்கட்டைகளென்று அன்பளிப்புகளைப் பத்திரமாகக் கரையில் கொண்டு வந்து ஒப்படைத்துக் கொண்டிருந்தன.
சூசை இருந்த இடத்திலிருந்தே தலையைத் திருப்பிக் குடிசைக்குள் பார்த்தான். ஆரம்பித்திருந்த இருளிலும் ஞானப்பிரகாசம் தெரிந்தான். நீண்ட நேர அழுகையால் களைத்துப்போய் தற்காலிகமாக அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் எந்நேரத்திலும் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிந்தது.
அடுப்பங்கரையில் பூனை கூடப படுத்திருக்கவில்லை. இங்கிருப்பதால் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லையென்று நிச்சயமாகத் தெரிந்து அந்தப் பூனை வேறிடத்துக்குப் போயிருக்க வேண்டும். அந்தப் பூனை தனியனென்றபடியால் இந்த இரண்டு முடிவுகளிலும் ஒன்றைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் சூசை அப்படிச் செய்ய முடியாது.
அவன் தனியனல்ல. கன்னியம்மாவும், ஞானப்பிரகாசமும் அவனை எதிர்பார்த்தும், அவனுக்காகவும் இருக்கிறார்கள். இப்போதும் கூட.
சூசை கடலைலே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘ஏலேலோ’
‘ஏல ஏலோ’
‘ஏலேலோ’
‘உண்ட மனுசி இன்னைக்கு என்ன செஞ்சு குடுத்தா?’
‘அறுக்குளா மீன் கொளம்பும், புட்டுமாக்கும். நீயும் துன்னுபாரன்.’
‘ஒனக்கு மட்டும் எப்புடி இவ்ளவு மீனு கெடைக்குது?’
‘நானு கடலம்மாட மூத்த புள்ளயாக்கும்.’
‘கடல் கொழம்பிக் கிடக்கு. காத்து வேற பலம்மா இருக்குப்பா. நீ போவப்போறியா?’
‘இப்ப நா போனா என்ட மீனுக்கு எவ்ளவு வெல வரும் தெரியுமா?’
கற்பனையில் தெரிந்த காட்கிகளை சூசையின் கண்ணீர் தடை செய்தது.
‘கடலுக்குப் போயி எவ்ளவு காலமிருக்கும்? கேள்வி வேதனையைத்தான் உற்பத்தி செய்தது. கண்கள் தாமாக வள்ளத்தை நோக்கின.
மோட்டார் இல்லாமல் வெறும் பலகையாக அந்த வள்ளம் மணல் மேட்டில் உறங்கிக்கொண்டிருந்தது. அலைகள் அதைத் தொட முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தன. வள்ளத்தில் வலைகள் தாறுமாறாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
ஞானப்பிரகாசம் மறுபடி கத்த ஆரம்பித்திருந்தான். அப்படிச் சத்தம் போடுவதற்காகவே அவன் சக்தியை சேமித்து வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது அதைப் பாவித்துக் கொண்டிருந்தான்.
சூசை இருந்த நிலை மாறாமல் தலையை மட்டும் சுழற்றிப் பார்த்தான்.
அக்கம் பக்கத்தில் முன்பிருந்ததைவிட குடிசைகளின் அடர்த்தி குறைந்திருந்தது. பலர் தங்களுடைய வள்ளத்தில் இந்தியாவுக்குப் போய் விட்டதாக பல சம்மாட்டிமார் அடிக்கடி வந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் எல்லாவற்றையும் போட்டுவிட்டு எங்கேயோ இடம் பெயர்ந்து விட்டார்கள். அவர்கள் எப்போதாவது திரும்பி வரலாம் என்று நம்பிக்கையில் குடிசைகள் இன்னும் காத்திருந்தன.
சூசை அடி வயிற்றை அமுக்கிக்கொண்டான். குடற் சுவர்கள் ஒன்றுடனொன்று உராய்ந்து எரிந்து கொண்டன. அவை நீண்ட காலமாகவே ஏமாற்றப்பட்டு வருகின்றன. ஞானப்பிரகாசத்தின் வயதில் தானுமிருந்தால் சூசை நிச்சயமாகப் பசியால் வாய் விட்டு அழுதிருப்பான்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சூசையின் வள்ளத்தில் பூட்டியிருந்த இயந்திரங்களை இராணுவம் மூலமாக அரசு பறித்துக்கொண்டு விட்டது. இயந்திரங்கள் பூட்டப்பட்டிருந்த வள்ளம் இருக்கயிலேயே சூசையும், கன்னியம்மாவும் அதே குடிசையில்தான் இருந்தார்கள். வள்ளத்தில் பூட்டியிருந்த இயந்திரங்களின் உதவியால் சாப்பிட ஆகாரம் கிடைத்ததே தவிர மாளிகை கட்டி, கால் மேல் கால் போட அவர்களால் முடியவுமில்லை, அது பற்றி அவர்கள் நினைக்கச் சந்தர்ப்பமும் ஏற்படவும் இல்லை.
மோட்டார்களை இழந்த பின் ஆழக்கடலில் நீண்ட தூரம் சென்று வலைபோட சூசையால் முடியவில்லை. கிடைத்த மீன்களின் அளவு குறைய அவர்களுடைய ஆகாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் கன்னியம்மா உண்டாகியிருந்தாள்.
என்னதான் இலவச மருத்துவமனை என்று பெயர் இருந்தாலும் செலவு இல்லாமலா போய் விடும். காசில்லாதவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து போகும் செலவைத் தருவதாகவோ, நோயாளிகளுக்கு குறித்துக் கொடுக்கப்படும் விற்றமின்களும், ஏனைய சத்துக்களும் இலவசமாக வழங்கப்படுமென்றோ எந்தத் தர்மாஸ்பத்திரியிலும் குறிக்கப்படவில்லை.
ஆகவே சூசை கடன் பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பணத்தை விட அவனுக்கு மனைவியும், பிள்ளையுமே முக்கியம். எனவே கடனில் பூச்சியங்கள் கூடி வருவதைப்பற்றி அவன் அக்கறைப் படவில்லை.
ஆஸ்பத்திரிக்கும், குடிசைக்குமாக அலைந்ததில் சூசையால் பல நாட்கள் கடலுக்குள் இறங்க முடியவில்லை. வருமானம் தவிர்க்க முடியாமல் தவிர்க்கப்பட கடனில் இன்னும் கொஞசம் பாரமேறியது.
சூசை தனது சக்திக்கேற்ப வழங்கிய ‘ஊட்டச் சத்துகளால்’ எலும்புடன் தோல் ஒட்டிக் கொள்ளாமல் தப்பிக் கொண்ட கன்னியம்மா புதிய வரவான ஞானப்பிரகாசத்துடன் மறுபடி குடிசைக்கு வந்த பின்தான் சூசைக்குத் தான் வாங்கியிருந்த கடனின் பெறுமதி தெரிய வந்தது.
அதற்காக அவன் மலைத்துப் போகவில்லை. மோட்டார்களை வேண்டுமானால் அரசாங்கம் பறித்துக் கொள்ளலாம். கடலை அப்படிச் செய்ய முடியுமா என்ற நம்பிக்கையில் கன்னியம்மாவுக்குக் கூடத் தெரியாமல் கடலில் நெடுந்தொலைவு போய் வலை போட்டான்.
இராணுவக் கப்பல்களின் கண்களில் பட்டு ‘பயங்கரவாதி’ ஆகாமல் தப்ப எடுத்த அபாயமான முயற்சிகளும், நாட்டில் நடைபெறும் படுகொலைகளைப் பற்றி அக்கறைப்படாத கால நிலைகளின் ஆபத்துகளும் சூசையின் மன உறுதியைத் தகர்த்துவிடவில்லை.
தன்னை நம்பி கரையில் இரண்டு ஜீவன்கள் இருக்கின்றன என்ற ஆத்ம துடிப்பு அவனைக் கடலில் நிற்க வைத்தது.
உடம்பு காய்ந்து, கண்கள் சிவந்து அதிகாலையில் கரையைத் தொடும் போது முதலில் அவனைச் சந்திப்பவர் கடன் கொடுத்தவர்கள்தான. சூசையில் அக்கறை உள்ளவரைப்போல அவன் கொண்டு வரும் மீன்களைத் தாமே ஏலம் போட்டு, நல்ல விலைக்கு விற்று ஒரு சொற்பத்தை சூசையிடம் எறிந்து விட்டுப்போவார்கள்.
தனது இரவு நேர உயிராபத்தான உழைப்பைத் தரையில் சுகமாகத் துயிலும் ஒருவன் தன் முன்னாலேயே பறித்துக் கொண்டு போவதை சூசை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருப்பான். இந்த அநியாயத்தை மற்றவர்களும் கேட்க முடியாது. கடலுக்குப் போகும் பலர் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் முதுகெலும்பை வளைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள்.
கையில் காசைப் பார்த்ததும் சூசைக்கு ஞானப்பிரகாசத்தின் நினைவுதான் வரும். அந்தச் சின்னக் கண்களில் தெரியும் பசி அவன் நெஞ்சை உராயம் போது அவனுக்கு மற்றவையெல்லாம் மறந்து போய்விடும்.
‘புள்ள பொறந்தாப் பொறகு நீ என்னைய மறந்துட்ட போலக் கெடக்கு’ என்று கன்னியம்மா செல்லமாகக் கோபித்துக் கொள்வாள். உண்மையாக அவர்களிருவரும் சேர்ந்து தங்களையே மறந்திருந்தார்கள்.
அப்படிப் பெரிதாக எதை மறந்து விட்டார்கள்?
அவர்கள் பிள்ளைக்குக் குல்லாயும், சொக்காயும் வாங்கிக் கொடுக்கவுமில்லை, உருட்டி விளையாடக் காரும், விமானமும் வாங்கிக் கொடுக்கவுமில்லை. அதற்கெல்லாம் அவர்களால் முடியாது. தங்களது உடைகள், உணவில் தியாகம் செய்து ஞானப்பிரகாசத்தின் உடம்பைக் கவனித்துக் கொண்டார்கள். அடிக்கடி வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டார்கள்.
ஞானப்பிரகாசத்தின் வளர்ச்சியுடன் கடனும் வளர முயற்சிப்பதை சூசை தெரிந்து கொண்டான். இந்தப் புதை குழியிலிருந்து மீள்வதற்குச் சாத்தியமில்லை என்பதையும் தெரிந்து கொண்டான். எனவே அதுபற்றி கவலைப்படாது இயன்றவரை கன்னியம்மாவுடனும், ஞானப்பிரகாசத்துடனும் சந்தோசமாக இருக்க முயன்றான்.
இந்தச் சந்தோசம் கூடக் கொஞ்ச நாட்களுக்குத் தான்.
ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது பற்றியோ, அந்நிய நாட்டு இராணுவம் எவ்வளவு தொகை வந்திருக்கிறது என்பது பற்றியோ சூசைக்கு அதிகம் தெரியவில்லை. அது பற்றிக் தெரிய வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அந்தச் சுற்றாடலில் இல்லை.
பார்வையாளராக இல்லாமல் பங்காளராக மாறுங்கள் என்றெல்லாம் எல்லோரும் மையை வீணாக்கி நோட்டீசுகளை தயாரித்து, சுவர்களையும்,மதில்களையும் பலமாக்கினார்களேயொழிய கடலைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சூசை போன்றவர்களுக்கு யார் இவற்றையெல்லாம் புரிய வைக்கிறார்கள். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக்கும் அக்கறை யாருக்கிருக்கிறது?
சூசைக்குக் கடலைப் பற்றி மட்டும தெரிந்தது போல அவர்களுக்கும் ஆயதங்களைப் பற்றி மட்டுமே தெரியும் போலிருந்தது.
சண்டை நடக்கிறது. இதில் கொல்லப்படுபவர்கள் கொல்லப்படட்டும். அவ்வப்போது ‘அப்பாவி மீனவன் கொலை.’ ‘அப்பாவி விவசாயி கொலை என்று கறுப்பு மையில் அஞ்சலி தெரிவித்தால் போதும் என்றுதானே பலர் நினைக்கிறார்கள்.
ஏதோ மாற்றங்கள் நடக்கின்றன என்றளவில் மட்டுமே சூசைக்குத் தெரியவந்தது. சிலவேளைகளில் பறிபோன தனது மோட்டார்கள் திரும்பக் கிடைக்கலாம் என்ற நப்பாசை அவனுக்கிருந்தது.
தமக்குக் கிடைத்ததைக் கொண்டே சூசையும், கன்னியம்மாவும் ஞானப்பிரகாசத்தை வளர்த்து வந்தார்கள். ஞானப்பிரகாசமும் கடலை நம்பாது படித்து, வேறு உத்தியோகம் பார்த்து தங்களை இருத்திச் சாப்பாடு போடுவதாக இருவரும் அடிக்கடி கனவுகள் கண்டார்கள். ஆந்த நம்பிக்கையே அவர்களுக்கு உற்சாகமூட்டி இயக்கிக் கொண்டிருந்தது.
திடீரென்றுதான் அந்த அறிவித்தல் கிடைத்தது.
கடல் தடை செய்யப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தடையை மீறி கடலுக்குள் பிரவேசிப்பவர்கள் சுடப்படுவார்கள் என்றும் காக்கிச் சட்டை போட்டு,துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் நோட்டிசு போட்டு, ஒலிபெருக்கியிலும் சொன்னார்கள்.
சூசை இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மனிதர்கள் உதவி செய்யாவிட்டாலும் கடல் இருக்கவே இருக்கிறது. அதை யார் கொண்டு போய்விடப் போகிறார்களென்ற ஆறுதல் சூசைக்கு இவ்வளவு நாளும் இருந்தது. இந்தப் புதிய அறிவித்தலால் அதுவும் மறைந்து போனது.
தரையில் ஊரடங்குச் சட்டம் போட்டு கண்ணில் கண்டவர்களை சுட்டுத் தள்ளுவதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் கடலுக்குப் போனால் சுடுவோம் என்பதை அவன் இப்போதுதான் கேள்விப்படுகிறான்.
கடல் கூட வேறு யாரோவின் சொந்தமா?
கடலில் நின்றால் மரண தண்டனையா?
சூசை இடிந்து போய்விட்டான். தனது கனவுகள் நொருங்குவதை அவன் பரிதாபமாக உணர்ந்தான்.
‘நீ ஒண்டுக்கும் யோசியாத. எங்கட ஞானப்பிரகாசம் வளந்து எங்களப் பாத்துக்குவான்.’ என்று கன்னியம்மா அவனைத் தேற்றினாள்
‘அதுக்கு உசிரோட இருக்கணுமே’ சூசை தனது கண்ணீரை மனைவியிடம் மறைத்துக் கொண்டான்.
கடலையே நம்பியிருந்த அந்தச் சுற்றாடலிலுள்ள மனிதர்கள் குடிசைக்களுக்குள் முடங்கினார்கள். கண்ணுக்கு முன்னால் பரந்தளவில் மீன பொக்கிசங்களை ஒளித்து வைத்திருக்கும் கடல் இருந்தும் அபாயம் அவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
வள்ளங்கள் கொஞசமும் பொருந்தாமல் மணலில் நின்று உலர்ந்து கொண்டிருந்தன. நாயும், வேறு சில உயிரினங்களும் வள்ளங்களை தமது வசிப்பிடமாகவும், கழிப்பிடமாகவும் பாவித்துக் கொண்டிருந்தன. வள்ளங்களிலும், வலைகளிலும் சிறுவர்கள் விளையாடினார்கள்.
நாட்டில் எத்தனையோ உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் எதுவுமே நடவாதது போல் அரசியல்வாதிகளும், மந்திரிகளும் திறப்பு விழாக்கள் நடாத்தி, சுற்றுப் பயணங்கள் செய்வது போல், விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதி தலைமைக் கொடியை வீரமாக நாட்ட முனைவது போல், கடலை இழந்து, வருமானத்தை இழந்து, வாடிப்போய் நிற்கும் அந்த ஜீவன்களுக்கு கடனை நினைவூட்ட கடன் கொடுத்தவர்கள் மறக்கவில்லை.
சூசை வீடு தேடியும் கடன்காரர் அதிசயமாக வந்தார். சத்தம் போட்டார். அவன் கடனை அடைக்காவிட்டால் தானும் , தனது குடும்பமும் பட்டினியால் செத்துவிடுவோம் என்பது போல மோதிரக் கையை வீசி ஆவேசப்பட்டார். தனது கோபத்தால் வந்த வியர்வையை சங்கிலியை ஒதுக்கித் துடைத்துக் கொண்டார்.
சூசை என்ன செய்வான்?
கண் முன்னால் தெரியும் காரணத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் அவர் கண்மூடித்தனமாக ஆத்திரமடையும் போது சூசையால் தத்துவம் பேவ முடியுமா? குனிந்த தலையை எல்லாவற்றிற்கும் ஆட்டிக்கொண்டு இருந்தான்.
கடன் கொடுத்தவரால் அடிக்கடிதான் வர முடியும். பசி அப்படியல்லவே? அது எப்போதும் வந்தது.
அக்கம் பக்கங்கள் கூட்டாகச் சேர்ந்து கரையில் ஒதுங்குபவற்றையும், கரைக்கு அண்மையில் கடலில் அகப்படுபவற்றையும் பங்கு போட்டு சாப்பிட்டாலும் எத்தனை நாளைக்கு?
இனி எதுவும் சரிவராது என்று நம்பிக்கையிழந்து பல குடும்பங்கள் சொந்தமான, சொந்தமில்லாத வள்ளங்களில் இரவோடிரவாக இந்தியாவுக்குத் தப்பினார்கள். அப்படிப் போன சிலரின் பிணங்களை அலைகள் நாட்டுப் பற்றுடன் இலங்கைக் கரைகளில் கொண்டு வந்து ஒப்படைத்தன.
சிலர் அகதி முகாம், வேறு பிரதேசங்கள் என்று நடந்து போய் விட்டார்கள்.
சூசைக்கும், இன்னும் ஒரு சிலருக்கும் மட்டும் ஏதோ ஒரு நம்பிக்கை. அது தவிர அவர்களுக்கு கடல் மட்டுமே தெரியும். வேறு எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில் வேறிடங்களுக்கு குடிபெயர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும்? எதுவுமே தெரியாத அவர்களை புதிய இடங்களில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
தடைச் சட்டம் போட்டு பல மாதங்களின் பின்தான் அவர்கள் அரசின் கண்களில் பட்டார்கள். நிவாரணம் என்று பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டு அளவு முறையில் உணவுப் பொருட்களை அவர்களுக்குப் போட்டார்கள்.
உழைத்துத் தேய்ந்து, இப்போது பலவந்தமாக முடக்கப்பட்டு, குடிசைகளில் வாடிச் சுருண்டு போயிருக்கும் அவர்களின் பசியின் அளவை குளிரூட்டப்பட்ட சாத்திய அறைக்குள், சுழல் நாற்காலியில் கசங்காத உடையுடன் இருப்பவர்களால் தீர்மானிக்க முடியுமா? தங்களுடைய பத்திரங்களை நிரப்புவதற்காக தமக்குப்பட்ட அளவுகளில் அந்த உழைப்பாளிகளின் பாத்திரங்களில் பிச்சை போட்டார்கள்.
அப்போதும் கூட சூசையும், கன்னியம்மாளும் ஞானப்பிரகாசத்தைத்தான் நன்கு கவனித்துக் கொண்டார்கள். தமக்குக் கிடைக்கும் பொருட்களை மாற்றி ஞானப் பிரகாசத்திற்குத் தேவையானதை வாங்கிக் கொண்டார்கள். தங்களுடைய வயிற்றை அசட்டை செய்தார்கள்.
இவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் செய்தி கடன் கொடுத்தவருக்கும் தெரிந்து விட்டது. விரைந்து வந்து விட்டார். நிவாரணப் பொருட்களில் கொஞ்சத்தை தனக்குத் தந்தால் அதற்கேற்ற பெறுமதியை கடனில் கழித்துக் கொள்வதாக அவர் தனது சலுகையை அறிவித்தார்.
‘நீ நாசமாய் போக’ என்று கூட அவர்களால் திட்ட முடியவில்லை. ஞானப்பிரகாசத்துக்குப் பத்திரப்படுத்திக் கொண்டு எஞ்சியதைக் கொடுத்துக் கடனைக் கழித்துக் கொண்டுவந்தார்கள்.
எத்தனை நாளைக்குத்தான் பசியைத் தாங்கிகொள்ள முடியும்?
பசி தன்னால் முடிந்தவரை அவர்களை எச்சரிக்கை செய்து பார்த்தது. கோபித்துப் பார்த்தது. அடம் பிடித்தது. அவர்கள் எதற்கும் மசியாமல் போகவே அராஜகத்தை ஆரம்பித்து விட்டது.
காலில் கட்டெறும்பு கடித்து வலி உண்டாக்க, சூசை முன்கதைச் சுருக்கத்திலிருந்து மீண்டான். உள்ளேயிருந்து ஞானபிரகாசம் அழுதான்.
இருள் முழுவதுமாக வந்து விட்டிருந்தது. நிலவின் ஒளி மங்கலாக மணலில் விழுந்தது. கடல் பேரிரைச்சலுடன் அலைகளை உற்பத்தியாக்கிக்கொண்டிருந்தது.
பக்கத்தில் யாரோ வர சூசை தலையைத் திருப்பினான். கன்னியம்மாதான்.
என்ன என்பது போல சூசை பார்த்தான்.
‘புள்ள இன்னைக்கு சரியா அழுவறான்’ கன்னியம்மா அவனுக்குப் பக்கத்தில் குந்தியபடி மெல்லமாகச் சொன்னாள்.
சூசை மௌனமாக இருந்தான்.
‘அவனுக்கு சரியான பசி போல’
சூசை அவளைக் கூர்ந்து பார்த்தான். பசியால் பஞ்சடைந்த அந்தக் கண்களில் தாய்மை தெரிந்தது. உதடுகள் உலர்ந்து போயிருந்தன. உடம்பு சுருங்கியிருந்ததால் தாடைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. ஏனைய அங்கங்களை கிழிந்த சேலை மூடியிருந்தது.
சூசை கடலைப் பார்த்தான். வெள்ளை அலைகள் மட்டும் அவ்வப்போது ஓடிவந்து மறைவது நன்றாகத் தெரிந்தது. நன்றாகக் காய்ந்து போயிருந்த செடியொன்று காற்றால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
‘அவுங்க எனி எப்ப சாப்பாடு கொண்டு வருவாங்க?’ சூசை கேட்டது நிவாரணப் பொருட்களை.
‘என்னும் ரெண்டு நா இருக்கு’ கன்னியம்மை மெல்லமாகப் பதிலளித்தாள்.
அதுவரைக்கும் என்ன செய்வது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. பரந்த கடல் கண் முன்னால் இருக்கையில் விழுந்து சாகலாமா என்று கூட இருவரும் தனித்தனியாகச் சிந்தித்தார்கள். ஆனால் ஞானப்பிரகாசம் நினைவுக்கு வந்ததும் தமது சிந்தனையைக் கலைத்துக் கொண்டார்கள்.
ஞானப்பிரகாசம் இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறான். அவன் இங்கு பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவன் சந்திக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காகவா கன்னியம்மா அவனைப் பத்து மாதம் தனது இரத்தத்தில் பாதுகாத்தாள்?
இல்லை. ஞானப்பிரகாசம் வளர வேண்டும். அவனுக்காக அவர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் பசி?
பசிக்கு உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய சக்தியில்லையே. பசிக்குப் பசிக்க மட்டும் தான் தெரியும்.
ஞானப்பிரகாசம் மறுபடி உள்ளேயிருந்து அழுதான். இம்முறை சத்தத்தின் வீரியம் குறைந்திருந்ததை அவர்கள் அவதானித்தார்கள்.
‘நீ போய் புள்ள பக்கத்தில இரு.’ என்று சூசை மனைவியை உள்ளே அனுப்பினான்.
காற்று பலமாக வீசியது. நிலவை மேகங்கள் மறைத்து, மறைத்து விளையாடின. அக்கம் பக்கங்களிலிருந்த குடிசைகளுக்குள்ளிருந்தும் அவ்வப்போது முனகல்கள் கேட்டன.
சூசையின் கண்கள் மணலில் தரித்து நின்ற வள்ளத்தையம், கடலையையும் மாறிமாறிப் பார்த்தான.
திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவனாக எழுந்து பக்கத்துக் குடிசைக்குப் போனான்.
‘மாரிமுத்து’
‘ஆரு?’
‘நா…. சூசை’
மாரிமுத்து சிறிதுதாமதத்தின் பின் வெளியே வந்தான். சூசையைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
‘என்ன சூசை புள்ளக்கி சொகமில்லியா?’
‘அதில்ல. வள்ளத்தை தள்ளணும். வாறியா?
மாரிமுத்து திடுக்கிட்டு சூசையைப் பார்த்தான். ‘ஒனக்குப் பைத்தியமா? அவங்க சுட்டுப் போடுவாங்க’
‘இல்ல மாரிமுத்து. இன்னைக்கு கடல்லயோ? ஆகாசத்திலயோ எந்த நடமாட்டத்தையும் காணல..நா போய்ப் பாக்கிறன்.’
‘சொன்னாக் கேளுப்பா. நாம ஏன் இப்புடி பிச்சை சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கிட்டுருக்கம். அவுங்க நம்ம சுட்டுட்டா நம்ம குடும்பத்தை ஆருப்பா பாத்துப்பா?’
‘நீ சொல்றதும் ஞாயந்தான். ஆனா இந்த ஞாயமெல்லாம் புள்ளக்கி சாப்பாடு போடாதே! நீ வந்து வள்ளத்தை தள்ளி விடுறாயா?’
‘கன்னியம்மா ஒன்ன கடலக்குப் போவச் சொல்லிடுச்சா?’
‘அவளுக்குத் தெரியாமத்தான் நா போகப் போறன். வள்ளத்தைத் தள்ளி விடுறாயா?’
மாரிமுத்து சூசையைப் பார்த்தான். கடலைப் பார்த்தான். சூசையின் குடிசையைப் பார்த்தான். மறுபடி சூசையைப் பார்த்தான். அவனது தீர்மானத்தைமாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டான்.
‘மாரிமுத்து வள்ளத்தைத் தள்ளி விடுறாயா?’ என்று கெஞ்சினான்.
மாரிமுத்து குடிசைக்குள் போய் தன்னுடைய தம்பியையும் கூட்டி வந்தான். மூவருமாக வள்ளத்துக்கு வந்தார்கள். அவசரமாக ஏற்றப்பட்டிருந்ததால் வள்ளம் கடலுக்கு அண்மையாகவே நின்றது.
மூவரும் ஏலேலோ இல்லாமல் தம் பிடித்துத் தள்ளினார்கள். உடம்பில் வலுவில்லாததால் வள்ளம் சிரமமாகவே நகர்ந்தது.
மூவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக கடலுக்குள் நகர்த்திக்கொண்டு போனார்கள். கடலைத் தொட்டதும் வள்ளம் சுலபமாக நகர்ந்து கொண்டது. கரையுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.
கடலில் இறங்கி கொஞ்சத் தூரம் வள்ளத்துடன் நடந்தபின் சூசை வள்ளத்தில் ஏறிக் கொண்டான். கரையில் நின்ற மாரிமுத்துவுக்கும், அவன் தம்பிக்கும் கை காட்டி விட்டுத் துடுப்புப் போட்டான்.
கடலில் வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு கன்னியம்மாவும், ஏனைய குடிசைவாசிகளும் சோம்பலிலிருந்து நிதானமாக விடுபட்டு வெளியே வந்தபோது சூசை சுத்தமாக இருட்டில் மறைந்து போயிருந்தான்.
கன்னியம்மா விசயத்தைத் தெரிந்து கொண்டு விக்கித்துப் போய்விட்டாள். ஆவளால் ஓவென்று கத்தக்கூட முடியவில்லை. மாரிமுத்து மூலம் விசயத்தைத் தெரிந்து கொண்டவர்கள் கலக்கத்துடன் கடலைப் பார்த்தார்கள்.
சூசைக்குத் துடுப்புப் போடும் போது கைகள் நடுங்கின. எத்தனை கால இடைவெளிக்குப்பின் அவன் கைகள் துடுப்பைத் தொடுகின்றன. கடல் நீர் வள்ளத்தில் தெறித்து அவன் உடம்பில் பட்டபோது முதலில் குளிர்ந்தது. பின்னர் உற்சாகம் வந்தது.
சூசை வாயில் ஏதோ முணுமுணுத்தபடி ஒரு இலக்கைக் குறிவைத்துப் போய்க்கொண்டிருந்தான். கண்கள் விரைவில் இருட்டில் தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டன.
கடல் வழக்கம்போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. தனது மகனை நீண்ட நாட்களின் பின் சந்தித்த சந்தேமாசமாயிருக்கலாம். நிலவின் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்த மீன்கள் அவனையும் பார்த்தன.
சூசை துடுப்பை வைத்துவிட்டு வலையை வீசினான். கூடவே எதிர்பார்ப்புகளும் விரிந்தன.
நிலவு நகர நகர சூசையின் படகில் மீன்களும் சேர்ந்தன. அடுத்த வலை வீச்சின் போதுதான் சூசை அந்தச் சத்தத்தை அவதானித்தான்.
ஆகாயத்திலிருந்து சத்தம் வந்தது. பழக்கமான சத்தம். கூடவே ஒளி வட்டமொன்று அவ்வப்போது கடலில் விழுந்து கொண்டிருந்தது.
சூசையின் உற்சாகம் திடீரென மறைந்தது. பரபரப்பானான். வலையை அவசரமாகச் சுருட்டினான். கரையை நோக்கி வேகமாகத் துடுப்புப் போட ஆரம்பித்தான்.
சத்தம் மிக அருகில் நெருங்கியதுடன் ஒளி வட்டமும் படகின் அருகில் வந்தது. சூசை கரையை மட்டும் இலக்காகக் கொண்டு துடுப்புப் போட்டுக்கொண்டிருந்தான்.
கரையில் கன்னியம்மா உட்பட குடிசைவாசிகள் அனைவரும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் மனத்திலும் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பு. ஒரே மாதிரியான பயம். கவலை.
ஐந்து மணித்தியாலங்களின் பின் பத்திரிகை அலுவலகங்களில் ‘……..தப்ப முயன்ற பயங்கரவாதி ஒருவர் கடலில் வைத்துப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்….’ என்ற கடைசிச் செய்தியை அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தார்கள்.
————————
பார்த்திபன்
1988