பாதியில் முடிந்த கதை

அதிகாலை.

குளிர் காற்று உடலைத் தழுவிப் போனது. இரண்டொரு பறவைகள் அவசரமாக எங்கோ பறந்து போயின. சேவல் ஒன்று தனித்து கூறியது.

நான் கிணற்றடியில் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். பற்பொடி கையிலிருந்து இடம் மாறி பற்களோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி துப்பி அந்தச் சண்டையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தேன்.

என் கவனம் முழுவதும் பல் துலக்குவதில் லயிக்கவில்லை. ஏதேதோ நினைவுகள் நிழலாடின.

சுவூதிக்குப் போவதற்காக ஏஜென்சி ஒருவனிடம் பணம் கட்டியிருந்தேன். பல மாத கால தாமதத்தின் பின் இன்று மாலை விமானப் பிரயாணச் சீட்டு, மற்றும் தேவையான பத்திரங்களை தருவதாகச் சொல்லியிருந்தான்.

பிரயாணம் செய்ய வேண்டிய திகதி அடுத்த வாரம் வருகிறது.

இனி எனது குடும்பத்தின் கஷ்டங்கள் தீர்ந்து விடும். மண் குடிசை வீடாக மாறி விடும். தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். தம்பி, தங்கைகள் தொடர்ந்து படித்து முன்னேறுவார்கள்.

“என்ன யோசினை? இப்பவே சவூதிக்குப் போயிட்டியா?”

வனிதாவின் குரல் கேட்டு என் நினைவுகளைக் கலைத்துக் கொண்டேன்.

வனிதா என் தங்கை. மூத்தவள் அக்கா. உயர்தர வகுப்புவரை படித்துவிட்டு அம்மாவோடு சமையலுக்கும் உதவியாக இருந்தாள்.

இரண்டாவது நான் சென்ற வருட முடிவில் உயர்தரப் பரீட்சை எடுத்திருந்தேன். பரீட்சை முடிவுகள் வரவில்லை. கட்டாயம் சித்தியடைவேன் என்ற தெரிந்தும் வீட்டின் பொருளாதார வசதிகளை மனதில் கொண்டு தொடர்ந்து படிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.

இப்போது சவூதிக்குப் போய் வேலை செய்யவும் தயாராகிவிட்டேன்.

எனக்கு அடுத்தவன் சிவா. பத்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

அடுத்தவள் வனிதா எட்டாம் வகுப்பிலும், அவளின் தங்கை ஆறாம் வகுப்பிலுமாக படித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னன்னா, கேட்ட கேள்விக்கு மறுமொழியை கானேல?” வனிதா குடத்தைக் கொண்டு வந்து திட்டியில் வைத்தாள்.

தண்ணீரை அள்ளி குடத்திற்குள் ஊற்றினேன். குடம் நிரம்பியதும் அதை எடுத்துக் கொண்டு அவள் போய் விட்டாள்.

எங்கள் வீட்டைப் பற்றிக் கொஞ்சம் விபரிக்க வேண்டும்.

அது முழமையானதொரு வீடும் அல்ல. வீட்டின் முழுத்திட்டத்திலும் பாதியிலும் குறைவாகவே வீடு கட்டப்பட்டிருந்தது.

ஒரு கூடமும் அறையும்தான் சீமெந்தினால் கட்டப்பட்டிருந்தன. பக்கப் பகுதிகளுக்கு மண்ணினால் சுவர்களை அமைத்து கூரை வேயப்பட்டு ஒரு வழியாக வீடு அமைக்கப்பட்டிருந்தது.

ஐயாவின் மரணமும் இந்த நிலமைக்கு ஒரு காரணம். மேசன் வேலை செய்து வந்த அவர் இழப்பினால் பெருமளவு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது உண்மை தான்.

வேலை செய்யும் காலத்தில் அவர் பிடித்த சீட்டு பிற் காலத்தில் எங்களுக்கு உதவியது.

வீட்டு வளவில் நின்று பழ மரங்களும் தங்கள் பங்குக்கு உதவின. அம்மாவும் சில வேளைகளில் வீட்டு வேலைகளுக்குப் போய் வருவாள்.

நினைவுகள் நெஞ்சில் நிழலாட முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு எல்லோரும் பொதுவான அறைக்குள் சென்றேன்.

ஆச்சரியமாக கடைசித் தங்கை மீனா கையில் துவாயுடன் நின்றாள். இப்போதே என்மேல் கரிசனை வர ஆரம்பித்து விட்டது. சிரித்துக் கொண்டே துவாயை வாங்கிக் கொண்டேன்.

“அண்ணை, இந்தாங்கோ கோப்பி” வனிதா பேணியை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டேன்.

என் பயணம் எல்லோரிடமும்தான் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை விட மற்றவர்கள் அதிகமாக கற்பனை செய்கிறார்கள். எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள்.

கோப்பியைக் குடித்த பின் வனிதாவிடம் பேணியைக் கொடுத்து விட்டு கூடத்துக்கு வந்து முன் வாசற் படிகளில் அமர்ந்தேன்.

சனிக்கிழமையாதலால் பாடசாலை போகும் மாணவர்களை பாதையில் காணவில்லை.

சைக்கிள்கள்தான் கூடுதலாக ஓடித் திரிந்தன.

இணர்டு, மூன்று சிறுவர்கள் கத்திக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஓடினர்.

வெயில் கூடக் கூட வெப்பநிலையும் மாற்றமடைந்து கொண்டிருந்தது.

வேலியிலிருந்த ஓனானைப் பார்த்து நாய் கோபப் பட்டுக் கொண்டிருந்தது.

வேலியிலேயே எங்கள் வசதிகள் தெரிந்தது. கிடுகுகள் அரித்தும், விழுநதும் வேலிகளுக்குரிய மரபை மீறியிருந்தன.

பாடசாலை வாழ்கையை நினைத்துப் பார்க்கின்றேன்.

ஓ. மிகவும் இனிமையான நாட்கள். அறிவு வளர்ச்சியுடன் நல்ல தோழர்களையும் தேடிக் கொண்டேன். பாடசாலை பிறிதான ஒரு உலகமே. கேலிகள், கிண்டல்கள் செய்வதும் நாங்களே. ஓருவருக் கொருவர் துணையாக இருந்து கொள்வதும் நாங்களே.

முதல் நாள் சண்டை பிடித்துக் கொண்டால் அடுத்த நாளே ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு வருவோம்.

பாட்டுகள் பாடுவோம். தனி நடிப்பு செய்வோம். விளையாட்டு கலைவிழா என்றால் போதும். களைகட்டச் செய்து விடுவோம்.

பாடசாலை நடைமுறையிலே எனக்குப் பிடித்த அம்சம் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற உடுப்புகள் அணிந்து வர பணிக்கப்பட்டிருப்பது தான். வெளித் தோற்றத்தில் வித்தியாசங்கள் இல்லாமல் எல்லோரும் இணைத்து வைக்கப்படுகிறார்கள்.

எனக்கு இன்னுமொரு ஆசையும் இருந்தது. சினிமா நடிகரைப் போல் இல்லாமல் ஆசிரியர்களும் தூய்மையான வெண்ணிற ஆடையில் பாடசாலைக்கு வரவேண்டும் என்பதுதான்.

“அண்ணை, சாப்பிட வரட்டாம்” மீனா வந்து சொன்னாள்.

எழும்பிப் போய் குசினி வாசலில் வைக்கப்பட்டிருந்த செம்புத் தண்ணீரில் கைகளைக் கழுவிக் கொண்டேன்.

இனி முன்பு மாதிரி தலை நிமிர்ந்து நடக்க முடியாது. அம்மாவின் இராட்சியத்துக்குள் போவதென்றால் யாரென்றாலும் தலை குனிந்துதான் உட் பிரவேசிக்க வேண்டும்.

தரை சாணியால் மெழுகப்பட்டு மிகவும் சுத்தமாக இருந்தது.

பக்திப் படங்களில் கடவுளர்கள் புகையிலிருந்து பிரசன்னமாவது போல் அம்மாவும் புகை மூட்டத்திறகுள்ளால் தரிசனம் தந்தாள்.

அம்மாவைப் புதிதாக பார்ப்பவன்போலப் பார்க்கின்றேன்.

உழைப்பாலும், வயது முதிர்வாலும், அடுப்பு வெக்கையாலும் அவள் உடல் கறுத்து சுருக்கங்கள் விழுந்து தளர்ந்திருந்தது. ஆனால் அவள் மனம் தளர்ச்சியடையவில்லை என்பது அவள் செய்யும் வேலைகளில் தெரிந்திருந்தது.

யாரும் உதவி செய்யா விட்டாலும் எல்லா வேலைகளையும் தன் தலையில் போட்டுக் கொண்டு மாளுவாள்.

வீடு, வளவெல்லாம் சுத்தப்படுத்துவாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அயல் வீடுகளுக்குப் போய் வேலைகள் செய்து கொடுப்பாள்.

இயந்திரங்களுக்கு கூட ஒய்வு கொடுக்க வேண்டும். இல்லையேல் சூடேறி ஆயுட் காலத்தை முடித்துக் கொண்டு விடும்.

ஆனால் அம்மாவுக்கு கிடைக்கும் ஓய்வை முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களிலும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

வெளியுலகில் தற்போது என்னதான் நடக்கிறது? சினிமாவில் யார்யார் புதிதாக வந்திருக்கிறார்கள் ? உடைகளில் கடைசியாக வந்த நாகரிகம் என்ன? இவை எல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

பிள்ளைகள், வீடு, சமையலறை என்று தனக்கென ஒரு உலகத்தை அமைத்து அதிலேயே நிரந்தரமாக குடியமர்ந்து விட்டாள்.

அம்மாவின் கஷ்டத்தை இனியும் நீடிக்க விடக் கூடாது. சவூதிக்குப் போய் உழைத்து முதல் எடுக்கும் சம்பளத்தில் நவீன சமையல் உபகரணங்கள் வாங்கி அனுப்பிவிட வேண்டும்.

கூடிய சீக்கிரமே வீட்டை முழுமையாக்கி மின்சார இணைப்பும் கொடுத்தால் வேலைகளை மின்சார சாதனங்கள் மூலம் இலகுவாக்கி, நேரத்தை குறைத்து அம்மாவிற்கு ஓய்வு கொடுக்கலாம்.

“என்ன மோனை. தட்டில எல்லாம் அப்படியே இருக்கு. நல்லாச் சாப்பிடன் போற இடத்தில யார் கவணிக்கப் போகினம்”

அம்மாவின் குரல் தளதளக்கிறது. கண்கள் ஈரமாவதும் தெரிந்தது.

நிச்சயம் அது புகையினால் வரவில்லை என்பதும் தெரிந்தது.

பாசம் – மனிதனை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது. ஓருவருக்கொருவர் நெருக்கமான இணைப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டபின் கைவசமிருந்த உடைகளை துவைக்கின்றேன்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டுவதில் எங்கள் வீட்டில் எல்லோருமே வல்லவர்கள்.

தோய்த்த உடைகளை கொடியில் போடுகையில் பக்கத்து வேலிக்கப்பாலிருந்து யாரோ பெண்கள் கதைப்பது கேட்டது.

“ஏன் நீர் கலியாண வீட்டை வரேல?”

“கொடி அடகு வைச்சது. எடுக்கேல. வெறும் கழுத்தோட வந்து நிண்டா சனம் ஏதேன் கதைக்கும். அதுதான். . .. ”

தாலிக் கொடி பேச்சு வந்ததும் எனக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

அக்காவுக்கென்று அம்மா வைத்திருந்த தாலிக் கொடியை விற்றுத்தான் சவூதிக்குப் போவதற்கான பணத்தைக் கட்டியிருந்தேன்.

நான் எவ்வளவோ சொல்லியும் அம்மா கேட்கவில்லை.

“புரிசன்ரை நினைவு நெஞ்சில இருந்தாப் போதும். அதை மற்றவைக்கு விளம்பரப்படுத்த வேணுமெண்ட அவசியம் இல்லை. நான் கிழண்டிப் போனன். எனக்கு பாதுகாப்பு ஒண்டும் அவசியமிலலை. நீ போய் உழைத்த இன்னும் கூடின பவுணில சகோதரங்களுக்கு செய்து போட மாட்டியே”

அம்மாவின் அழுத்தம் திருத்தமான கதையில் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.

விற்கும் போதும் மனம் கலங்கினாலும் என்னை நானே தேற்றிக் கொண்டேன். எங்களுக்கும் நல்ல காலம் வரத்தான் போகிறது.

உடுப்புத் தோய்க்கும் படலம் முடிந்ததும் என்னை நானே தேற்றிக் கொண்டு வெளியில் புறப்படுகிறேன்.

தெருவில் நடந்து போகையில் ஊரில் மாற்றங்கள் தெளிவாக தெரிகின்றன.

இளைஞர்கள் அதிகம் பேரை காணமுடியவில்லை. அநேகம் பேர் விடுதலைப் போராட்டத்திற்கு தம்மை அர்பணித்து விட்டார்கள்.

இன்னும் சிலர் மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்கள்.

இரண்டுக்குமே போக முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.

வாசிக சாலைக்குள் நுழைகின்றேன்.

நேற்றைய பத்திரிகைகள்தான் இருந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல்களும், இராணுவத்தினரது அட்டகாசங்களும் மாறிமாறி முழு இடத்தையும் நிரப்பியிருந்தன.

கதைகளில், கவிதைகளில் கூட இன்றைய சூழ்நிலையின் தாக்கம் தெரிந்தது.

மேலுக்குப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்து விட்டு வாசிகசாலையிலிருந்து கொண்டே பாதையைப் பார்க்கின்றேன்.

எனக்கு ஐயாவின் ஞாபகம் வந்தது.

கட்டுமஸ்தான உடம்பு, அயராத உழைப்பும் அவரின் சிறப்புகள். அதிகாலையே புறப்பட்டு வேலைக்குப் போனால் இரவு ஏழு மணி தாண்டித்தான் வருவார்.

காலையில் சாப்பாடு இல்லை. மத்தியானம் பெரும்பாலும் பாணும் வாழைப் பழமும் தான். இரவில் மட்டும் வீட்டில் எங்கள் எல்லோருடனும் சாப்பிடுவார்கள்.

வேலையிலிருந்து வரும்போது கள்ளுக் குடித்திருப்பார்

அவருடைய உழைப்பையும் களைப்பையும் புரிந்து கொண்ட நாங்கள் எதுவும் சொல்வதில்லை. அவரும் அநாகரிகமாக நடந்து கொள்வதில்லை. சனி, ஞாயிறுகளில் மட்டும் அவருடன் பழகும் சந்தர்பங்கள் எங்களுக்கு கிடைக்கும்.

ஒரு சனிக்கிழமை இறைச்சி வாங்கவென்று சந்தைக்குச் சென்றவர் விமானப் படையினாரால் கொலை செய்யப்பட்டு பிணமாக வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்.

அந்த நஷ்டத்தின் பின் தான் கஷ்டங்களைப் பற்றி அதிகமாக எம்மால் உணர முடிந்தது.

நெடுநேரம் ஒரே இடத்திலும் இருக்கப் பிடிக்காமல் வாசிகசாலையிலிருந்து தெருவுக்கு வருகின்றேன்.

அங்கே என்னுடன் படித்த நண்பனைக் காண்கிறேன்.

“என்ன, சவூதிக்குப் போகப் போகிறீராம்?”

“ஓம், ஓம்”

எப்ப பயணம்?”

“வாற வெள்ளி, கொழும்பில் இருந்து சவூதிக்கு சுகமா போயிடலாம். இங்க இருந்து கொழும்புக்குப் போறதுதான் பிரச்சினை”

“மெய் தான். றெயினும் ஒழுங்கில்லை. ஓடினாலும் பத்திரமா போடுவோம் எண்டு நிச்சயமில்லை”

“அதுதான் யோசினையாயிருக்கு”

“ஒண்டும் யோசியாதையும். காலம் நல்லதாயிருந்தால் எல்லாம் நல்லபடியாய் நடக்கும். சரி நான் வரட்டே?”

“ம்”

அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்கின்றேன்.

இதற்குள் அம்மா சமையலை முடித்திருந்தாள்.

எனக்காக எல்லாரும் காத்திருந்தனர்.

சாப்பிட்டு முடித்தபின் வாசல் படியில் வந்து உட்காருகின்றேன்.

வெயில் கூடியிருந்தது. கதிரவன் மேற்காக கொஞ்சம் நகர்ந்திருந்தான். முகில் கூட்டங்கள் எங்கேயோ வேகமாகப் போய்க் கொண்டிருந்தன.

நேரமும் போய் கொண்டிருந்தது.

பிற்பகல் மூன்று மணியளவில் தம்பி சிவம் வந்து சேர்ந்தான்.

யானைக்கு முன்னே மணியோசை வருவது போல் சைக்கிள் சத்தம் பலமாக கேட்டது.

அது ஐயா பாவித்த சைக்கிள். அவர் காலத்துக்கு முந்திய உற்பத்தி

சிவமும், நானும் பாடசாலையில் போய் வருவதும் இதில்தான். வாழைக்குலை, மரக்கறிகளை சந்தைக்கு கொண்டு போவதும் இரண்டு கால் கழுதையில் தான்.

சிவம் என்னைப் பார்த்து சிரித்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அவன் போட்டிருந்த மேற்சட்டை வியர்வையில் ஈரமாகியிருந்தது.

பாவம். அவனுக்கும் என்னைப் போலவே வரையறுக்கப்பட்ட உடைகள்தான். பாடசாலைக்குப் போடும் வெள்ளை உடைகளை கூட வெளியிடத்துக்கும் பாவிக்க வேண்டியவர்களாயிருந்தோம்.

இனித்தான் நான் உழைக்கப் போகின்றேனே. தம்பிக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பதும், உடுப்புகள் வாங்கிக் கொடுப்பதும் பெரியதொரு வேலையா?

வெயிலின் வெண்மை தனிந்ததும் உடுப்புகளை மாற்றிக் கொண்டு பிரயாணச் சீட்டு, தேவையான பத்திரங்களை வாங்குவதற்காக ஏஜென்சிக்கு வீட்டுக்குச் செல்ல தயாரானேன்.

“கவனமாய் போட்டு வா அண்ணை. றோட்டில ஆமிக்காரன்கள். கண்டபடி திரியுறாங்கள்”

தம்பி கவலைப்பட்டது எனக்குப் புதிதாகப் படவில்லை. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டேன்.

காற்றுத் திசையாதலால் வேகமாக ஓட முடிந்தது.

ஏஜென்சிக்காரன் வீடு யாழ் நகரில் இருந்தது.

நேராகவே ஏஜென்சிக்காரன் வீட்டுக்குப் போய் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு அவசியமானவற்றைக் கதைத்துவிட்டு, நன்றி சொல்லி விட்டு வெளியே வந்து சைக்கிளை மிதித்தேன்.

பாதையில் ஐன நடமாட்டமே இல்லை. அசாதாரன அமைதியாக இருந்தது. தமிழ் பகுதிகளில் அடிக்கடி இப்படி நிகழ்வதால் நான் அதிகம் யோசிக்கவில்லை.

வேகமாக சைக்கிளை ஓடுகின்றேன்.

வளைவால் திரும்பி சந்தையை நெருங்குகையில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கவச வாகனங்களும், துப்பாக்கிகளுடன் ஆங்காங்கே நின்ற இராணுவத்தினரும் கண்ணில் பட்டது.

திடுக்கிட்டு சைக்கிளை நிறுத்துவதற்கு முன் இராணுவத்தினன் ஓருவன் முந்திக் கொண்டு விட்டான்.

நெஞ்சு, வயிறு என்று குண்டுகள் பாய கத்திக் கொண்டே சைக்கிளுடன் கீழே விழுகின்றேன்.

குருதி கொப்பிளிக்கும் இடங்களை கைகளால் அழுத்திப் பிடிக்கின்றேன்.

அம்மா, வலி தாங்க முடியவில்லையே. யாருமே இல்லையா? யாருக்குமே என்னைத் தெரியவில்லையா? யாருமே என்னைக் காப்பாற்ற மாட்டார்களா?

இராணுவமும், கவச வாகனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மங்குகின்றன.

ஐயோ, நான் சாகப் போகின்றேனா? இந்தக் குண்டுகள் என்னோடு என் குடும்பத்தையே சாகடிக்கப் போகிறதா? அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள், வீடு, தாலிக் கொடி, கடன், பாசம் . . . . இதெல்லாம் துப்பாக்கிக்கு எப்படித் தெரியப் போகிறது. நான் சாகக் கூடாது. என் குடும்பத்துக்காக வா . . . ழ. . .வே . .. . ண் . . .டு .. …ம் .. .. எ. … ன்…. .னை. . ..கா .. .. ப். . . . .. .

 

——————–

பார்த்திபன்

1987

ஓவியம்: மணிவண்ணன்

Leave a comment