வினோத், மஞ்சுளா அன்ரியிட்டப் போய் கசற் வாங்கிக்கொண்டு வா” என்று சொன்ன சாவித்திரி குமுதம் வாசித்துக் கொண்டிருந்தாள்.
”எனக்குத் தெரியாது. நீங்க போய் வாங்குங்கோ” பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வீட்டு வேலையில் கவனமாயிருந்த வினோத் தனதலுவலில் மூழ்கினான்.
”உங்க என்ன போட்டுக் கிளறிக்கொண்டிருக்கிறாய்? கசற்ற வாங்கித் தந்திட்டு பிறகு என்னண்டாலும் செய்”
”நான் மாட்டன். வீட்டு வேல செய்து முடிக்காட்டி நாளைக்கு ரீச்சர் பேசுவா”
”பெரிய எஞ்சினியர் படிப்புத்தானே படிக்கிறாய். நாள் முழுக்க விளையாடு. நான் ஏதேன் அலுவல் சொன்னாத்தான் உனக்குப் படிப்பு ஞாபகம் வருகுது” சாவித்திரி எரிச்சலோடு குமுதத்தை மூடினாள்.
நாள் முழுக்கத் தான் விளையாடவில்லையென்று வினோத்துக்குத் தெரியும். அதனால் பதில் சொல்லாது எதையோ அழித்து எழுதினான்.
”பார் காது கேக்காத மாதிரி இருக்கிறதை. இப்ப நீ கசற் வேண்டியராட்டி என்னட்டை ஒரு அலுவலுக்கும் வரப்படாது” குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுக்காவிட்டால் கசற் கைமாறிவிடும் என்ற பயத்தில் சாவித்திரிக்கு சின்னதாகக் கோபம் வந்தது.
கடைசி எச்சரிக்கை வினோத்தைப் பயமுறுத்தவே செய்தது. ‘இந்த அம்மாவோட பெரிய கரைச்சல். படிக்க விடாம சும்மா கலைச்சுக் கொண்டிருக்கிறா. படம் பாக்கிறது அவா. கசற் வேண்டியரப் பஞ்சி’ வினோத் தனக்குள் கோபித்துக் கொண்டே கதவைத் திறந்து படிகளில ஏறினான். அதே கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்தான் மஞ்சுளாவின் இருப்பிடம்.
”நல்ல ஸ்ரோரியான படம்” என்றபடி மஞ்சுளா அன்ரி கசற்றைத் தர, வினோத் படியிறங்கினான்.
”அச்சாப்பிள்ளை. சரி நீ போய்ப் படி” சாவித்திரி மனமாரப் பாராட்டிவிட்டு கசற்றை வாங்கி வீடியோவில் சுழல வைத்தாள்.
தனது மேசைக்கு வந்த வினோத் இடையில் தடைப்பட்ட படிப்பை மறுபடி தொடர்ந்தான்.
அவனுக்குப் படிப்பில் மிகவும் ஆர்வம். அவனுடைய வகுப்பில் அவன்தான் ஒரே ஒரு வெளிநாட்டு மாணவன். ஆசிரியர்கள் அவனுடைய திறமையைப் பகிரங்கமாக மெச்சியிருக்கிறார்கள். வினோத்துக்கு அது பிடிக்கும். சக மாணவர்கள் கூட அவ்வப்போது வியப்பதுண்டு.
”அண்ணை தாங்கண்ணே.”
”தரமாட்டேன் போடா” டிசும்.
”அண்ணை அவன் கேக்கிறானில்ல. குடுத்திடுங்க.”
”இவன் யார்றா புதுசா”
”நான் உங்க மச்சி. அவனுட்ட குடுத்திடுங்க.”
”மச்சி சொல்றாறில்ல. குடுத்திடுவோம்.”
டிசும். டிசும். டிசும்.
ஆ.. அம்மா… ஐயோ…..
வினோத்தால படிக்க முடியவில்லை. ‘ ‘அம்மா சத்தத்தைக் குறையுங்கோ.” என்றான். சத்தம் குறையவில்லை.
”கதவைச் சாத்திப் போட்டுப் படி” சாவித்திரி படத்தில் முழுமையாக லயித்திருந்தாள்.
”மூடினாலும் கேக்குது.”
”அப்ப படத்தைப் பாத்திட்டுப் பிறகு படி”
வினோத்துக்கு ஆத்திரம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் செற்றியொன்றில் சாய்ந்து உட்கார்ந்து படத்தைப் பார்த்தான். நகைச்சுவைக் காட்சிகள் அவனுக்குப் பிடித்தவை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ரசித்துப் பார்த்தான்.
படம் முடிந்ததும் அவனே கசற்றைக் கொண்டு போய் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தபோது ரி.வி.யில் சாகசக்காட்சிகள் நிறைந்த தொடர்படம் ஆரம்பமாகியிருந்தது. வினோத் மறுபடி அங்கேயே உட்கார்ந்துவிட்டான். வீட்டு வேலை பற்றி அவனுக்கு மறந்துவிட்டது. சாவித்திரியும் ஞாபகப்படுத்தவில்லை.
மறுநாள் பாடசாலையில் ஆசிரியை அவனைக் கடிந்து கொண்டபோது வினோத்துக்கு அவமானமாக இருந்தது. ஆத்திரம் முழுவதும் அம்மா மேல் திரும்பியது. ‘உப்பிடி படிக்க விடாம படம் போட்டுக் குழப்பறதெண்டா பிறகேன் என்னைப்பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவான்’
வினோத்துக்கு இந்த நாடே பிடிக்கவில்லை. இங்கிருப்பவர்களை விட பல வகைகளில் தாங்கள் வித்தியாசம் என்பதை அவன் அறிந்திருந்தான். இந்த வித்தியாசங்கள் அவனுக்கொரு தாழ்வாகவே இருந்தது. எப்போதோ பார்த்துப் பழகிய கறுப்பு முகங்களும், உருண்டு விளையாடி புழுதி மண்ணும், குத்தி உப்பு போட்டுத் தின்ற பச்சை மாங்காயும் மங்கலான ஞாபகங்களாக இருந்தன. அவையா அல்லது இப்போதிருக்கும் நிலைதான் நிஜமா என்றறியும் எந்த சாத்தியமும் அவனுக்கில்லை.
இலங்கையில் பிறந்து, வழமையான சிறுவர் பிராயத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவன் அந்த சந்தோசங்களிலிருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்நிய தேசத்துக்கு இழுத்து வரப்பட்டிருக்கிறான். மற்றவர்களைப் பொறுத்தவரை விசயம் இவ்வளவுதான்.
ஆனால் வினோத்தோ இழந்தவைகள் ஏராளம். மொழி, உற்ற நண்பர்கள், உறவினர்கள், சுதந்திரம் என்று நீளமான பட்டியலையே அவன் இழந்திருந்தான். பலாத்தாரமாக அந்நிய இடத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறான். இதற்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவனுக்குள்ள கட்டாயம்.
வினோத்துக்கு எதுவுமே பிடிக்கவில்லை. வீட்டில் அவனோடு விளையாட யாருமேயில்லை. தனியாக அவன் விளையாடுவதற்குக் கூட வீட்டில் எந்தப் பிரதேசமும் அவனுக்கு இல்லை.
”உனக்கெத்தின தரம்சொல்லுறது? தடக்குப்பட்டு விழுற மாதிரி சாமான்களை எல்லா இடமும் பரப்பி வையாதையெண்டு”
”காப்பெற்றை பழுதாக்காதை. வர வர உன்ரை குளப்படி கூடிக்கொண்டு வருகுது”
”மாடு சுவரில என்ன ஒட்டி வச்சிருக்கிறாய்?”
பேச்சும், ஏச்சும் அவன் எதைச் செய்தாலும் தண்டனை அல்லது கண்டனம். சின்ன சதுர அடிக்குள் இருந்து ரீ.வி. பார்த்துக் கொண்டும் ‘சிலோன் சமையலை’ சுவாசித்துக் கொண்டும் மட்டும் தானாம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் ‘நல்ல பிள்ளை’.
வீட்டில்தான் இப்படியென்றால் பாடசாலையில் கூட வினோத்தால் சந்தோசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய கறுப்பு நிறத்தால் அவன் தானாகவே கொஞ்சம் ஒதுங்கினான். சேர்ந்த ஆரம்பத்தில் பெரிய ஆச்சரியங்களுடன் அவனோடு பழகிய சக மாணவர்கள் பின்னர் அவனில் அதிக அக்கறை காட்டவில்லை. தாங்களே கதைத்துச் சிரித்தார்கள். தாங்களே விளையாடினார்கள்.
எப்போதாவது பிள்ளைகள் உள்ள தமிழ்க்குடும்பம் விருந்தாளிகளாக தங்கள் வீட்டுக்கு வரும் போதுதான் வினோத்துக்கு ஓரளவு சந்தோசம் ஏற்படும். அந்தப் பிள்ளைகளுடன் தமிழில் கதைத்து கொஞ்சமாக விளையாடி.. அந்தச் சந்தோசம் சுமார் ஒரு வாரம் வரை அவனுடைய சேமிப்பில் இருக்கும். பிறகு பழையபடி..
பாடசாலை முடிந்து வெளியே வந்தபோது தோமசும், மார்க்கோசும் என்னவோ வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வினோத் அவர்களை நெருங்கிச் சிநேகமாக சிரித்தான்.
”எங்களோடு விளையாட வருகிறாயா?”
”அதற்கென்ன”
மூவரும் பாடசாலைக்கு அருகிலிருந்த புல்வெளிக்குப் போனார்கள். அங்கே வேறு சிலர் ஏற்கனவே மணலுக்குள் அளைய, பந்தும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். வினோத், தோமஸ், மார்க்கோஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
பிற்பகல் குளிர். கருமேகங்கள் மழையை எப்போது பெய்வதெனத் தீர்மானிக்கவில்லை. பட்சிகளை ஆகாயத்தில் காணோம்.
பந்தை எடுக்க ஓடிவந்த வினோத் தவிர்க்க முடியாமல் மார்க்கோஸின் காலை மிதித்து விட்டான். யாரும் எதிர்பார்க்காத விதமாக மார்க்கோஸ் வினோத்தை அடித்து விட்டான்.
”கறுப்பன்”
வினோத்துக்கு அடியுடன் அவன் பின்னர் சொன்னதும் சேர்ந்து வலித்தது. கண்கள் திரையிட கன்னத்தைத் தடவியபடி புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டான்.
யாரும் அவனுக்கு ஆதரவாகக் கதைக்கவுமில்லை. நடந்ததை விசாரிக்கவுமில்லை. கொஞ்ச நேரம் மௌனமாக நின்று விட்டு மறுபடி தங்கள் விளையாட்டுகளைத் தொடர்ந்தார்கள்..
”உன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போ”
பின்னால் மார்க்கோஸ் கத்துவது வினோத்துக்குக் கேட்டது. கண்ணீர்த் துளியொன்று வலிக்கும் கன்னத்தைத் தடவி விழுந்தது.
”எந்த நாடு?”
”நான் எங்க போக வேணும்?”
”நான் ஏன் இங்க இருக்க வேணும்?”
”என்னோட படிக்கிற எல்லாரும் வெள்ளையாயிருக்க நான்மட்டும் ஏன் கறுப்பாயிருக்க வேணும்?”
‘நான் கதைக்கிற பாசை மட்டும் ஏன் வேறயாயிருக்க வேணும்?”
‘ஏன் என்னோட ஒருத்தரும் வடிவாப் பழகினமில்லை?”
‘ஏன் மார்க்கோஸ் அடிச்சவன்?’
எந்த ஒரு கேள்விக்கும் வினோத்தால் விடை தெரிந்துகொள்ள முடியவில்லை. தன்னை எல்லோரும் விரட்டுவது போலவும், கேலி செய்வது போலவுமான உணர்வு அவனை வருத்தியது.
அவனுக்கொன்றுமில்லை. எல்லாவற்றையும் யாரோ தீர்மானிக்கின்றார்கள். யாரோ செய்கிறார்கள்.
வினோத்துக்கு அழுகை மாறி ஆத்திரம் வந்தது. ‘எல்லாரும் என்னில விளையாடினம்’
வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையை கழட்டி வீசினான். சப்பாத்தை மட்டும் கழற்றிவிட்டு அப்படியே செற்றியில் விழுந்து படுத்தான்.
”எனக்கு அடிச்சுப் போட்டாங்கள்” என்றான் வினோத்.
”ஆர் அடிச்சது?”
”மார்க்கோஸ்.”
”நீயேன் அவங்களோட சேட்டை விடுறாய். உன்ரைபாட்டில இருந்தா அவங்களேன் உனக்கு அடிக்கிறாங்கள்” சாவித்திரி விகடனின் அடுத்த பக்கத்தை புரட்டினாள்.
”நாங்கள் எங்கட நாட்டுக்குப் போவம்”
”வாயை மூடிக்கொண்டு முகம், கை, கால்ஈ கழுவிப்போட்டுப் போய்ச் சாப்பிடு”
வினோத் எதுவும் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இருந்தான். யாரும் அவனை லட்சியம் செய்யவில்லை. அவனில் அக்கறை காட்டவில்லை. அவனைப் புரிந்து கொள்ளவுமில்லை. சுலபமாகப் புறக்கணித்து விட்டார்கள்.
வினோத்துக்கு மார்க்கோஸ் சொன்னது மறக்கவில்லை. ”கறுப்பனே உனது நாட்டுக்குப் போ”
பகல் வேலை முடிந்து சந்திரன் வீட்டுக்கு வந்தான். மாலை ஐந்து மணிக்கே இனி அவனது வேலை தொடரும்.
”…………….ஸ்ரட்டில இமிக்கிறேசன் குடுக்கிறாங்களாம்” என்று சாவித்திரி ஆரம்பித்தாள்.
”சனம் சும்மா கதைக்கும். நானும் எத்தினை இடத்தை விசாரிச்கனான்” சந்திரன் தொலைக்காட்சிக்கு உயிர் கொடுத்தான்.
” மஞ்சுளா தான் சொன்னவா. அவையின்ரை சொந்தக்காறப்பெடியன் ஒண்டுக்கு கிடைச்சிட்டுதாம்”
”நாளைக்கு லோயரிட்ட போய் கேட்டுப்பாப்பம்”
”ட்ரை பண்ணினா கட்டாயம் கிடைக்கும். உங்க வேலை செய்யாதவைக்கெல்லாம் கிடைச்சிருக்கு”
”சரி பாப்பம். உதென்ன கசற்”
”நல்ல படம். நான் அப்போத பாத்திட்டன். எண்டாலும் இன்னொருக்காப் பாக்கலாம்”
சந்திரன்தான் பார்ப்பதற்காக கசற்றைச் செருகி ஓட விட்டான். ரசித்தவற்றை மறுபடி ரசிப்பதற்காக சாவித்திரி அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
வினோத் களைத்துத் தூங்கிப் போயிருந்தான். கனவில் மார்க்கோஸ் வந்து ”கறுப்பனே உனது நாட்டுக்குப் போ” என்று காலால் உதைத்தான்.
அடுத்தநாள் பாடசாலைக்குப் போகையில் அப்பாவின் பிளேற் ஒன்று எடுத்து மறக்காமல் புத்தகப் பையில் வைத்துக்கொண்டான் வினோத்.
———————
பார்த்திபன்
1989