பிராங்பேர்ட விமான நிலையத்தின் கார் நிறுத்துமிடம்.
சிறீ கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பதின்மூன்றைம்பது காட்டியது.
பதின்னான்கிற்கு விமானம் வந்துவிடும். மின் ஏணி இன்னமும் பதினோராவது தளத்திலேயே தாமதித்தது. ‘மேலே என்ன குடும்பம் நடத்தியினமே? ‘ என்று சினந்தான்.
கீழ்நோக்கி வந் மின் ஏணி அந்தத் தளத்திலே தங்காமல் கீழே விரைந்தது. காத்திருந்து ஏமாந்த கொலண்ட் தம்பதிகள் டச்சில் திட்டியபடி படிகளை பாவிக்க ஆரம்பித்தார்கள்.
நேரம் விரைவாக ஓடுவதைப் பார்த்து சிறீ பதறினான். ‘சைச பிளைற் வரப்போகுது’. கீழிருந்து மின் ஏணி மறுபடி மேலே வந்தது. உள்ளேயிருந்தவர்கள் வெளியே சிதற, சிறி பாய்ந்து போய் இரண்டாம் எண்ணை அழுத்தினான். மின் ஏணி விரைவாக கீழிறங்கியது. வாசற் கதவைத் திறந்து விரைவாக வெளியே வந்தான்.
விமான நிலையம் நீஈஈஈஈஈஈஈளமாக, சுத்தமாக இருந்தது. எல்லா இடத்திலும் ஆட்கள் ஆரவாரமாக நிரம்பியிருந்தார்கள். சிலர் வண்டிகளைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
சிறீ ஓட்டமும் நடையுமாகப் போய் நகரும் படிகளில் ஏறி மேலே வந்து ‘பி’ ஐந்தின் கதவுக்கு வந்தான். கதவிற்கு முன்னால் திரும்பி வருபவர்களுக்காக பலர் உற்சாகமாய் காத்திருந்தார்கள்.
தகவல் பெட்டியில் விபரங்கள் மாறிக் கொண்டிருந்தன. எயர்லங்கா பதினாறு மணிக்குத்தான் வருவதாக இருந்தது.
‘ஏயர்லங்கா எப்பவும் லேற் தான்’ எனச் சிறீ சலித்துக் கொண்டான். இன்னும் இரண்டு மணித்தியாலங்களை எப்படி போக்குவது என்று யோசித்தான்.
பல நாட்டவர்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். தொலைந்து போனவர்களைத் தகவல் நிலையத்திற்கு வரும்படி கீச்சுக் குரலில் அறிவித்தார்கள். அம்ஸட்ராவிலிருந்து பறந்த உறவினர்களுக்காகப் பூட்டிய கதவின் முன்னால் சிலர் பூங்கொத்துக்களைக் கையிலெடுத்துக் கொண்டார்கள்.
சிறீ புதினம் பார்த்தபடி நடந்தான். எகிப்திய எயர்லைனின் முன்னர் நிரை உண்டாகியிருந்தது. அழகான மின்சார விளக்குகள் பகலை அலட்சியம் செய்து தொங்கியபடி ஒளிர்ந்தன. நகரும் படிகளில் ஏறிமேல் தளத்திற்கு வந்தான். பொலிஸ்காரர்கள் இருவர்கள் கடினமான ஆயுதங்களுடன் விலத்திப் போனார்கள். கையில் வைத்திருந்த வயர்லெஸ் கருவி தனியே கதைத்தது.
ஓரிடத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட தடுப்பினூடாக விமானங்களின் இராட்சத உருவங்கள் தெரிந்தன. வெளியே உள்ள மேல் தளத்தில் பார்வையாளர்கள் நிற்பதும் தெரிந்தது. சிறீ தானும் மேலே போய் பார்க்க விரும்பினான். வரிசையில் நின்று பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின் பிரவேசச் சீட்டு வாங்கிக்கெண்டு வெளியே வந்தான்.
பல விமானங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, இரண்டு பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தன. முப்பது செக்கனுக்கொரு விமானம் இறங்க, ஒன்று பறந்தது. பிரதான ஓடுபாதைக்கு அப்பால் இராணுவ விமானங்கள் அட்டகாசமாக இயங்கிக் கொண்டிருந்தன.
விமானங்கள் பதிவாக வந்து சில்லுக்கால்களை நீட்டித் தரையை மோதி நீண்டதூரம் ஓடி வேகத்தை இழந்து….. நிதானமாகச் சிறியின் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் வேறு கவனத்தில் இருந்தது.
‘போட்டோவிலை இருந்த மாதிரியே வடிவா இருப்பாளோ?’
‘அல்லாட்டி இன்னம் வடிவா இருப்பாளோ?’
‘எவ்வளவு இழுபறிக்குப் பிறகு சரி வந்திருக்கு’
சிறீ எனப்படும் சிறிகரன் தங்கியிருப்பது வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் விடுதி. முழுவதும் தமிழ் தான். புளுக்கூடுபோல் ஒரு அறைக்கு நான்கு பேரெனத் திணிக்கப்பட்டிருந்தார்கள். வழமையான குடி, கும்மாளம் என்று பலரிடம் இணைவு இருந்தது. சிறீ மேற்கு ஜேர்மனிக்கு வந்து ஏழு வருடங்களாயிருந்தன. அவனது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ‘காட்’ கிடைத்திருந்தது. அதனால் பக்றி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான். இப்போது இமிக்கிறேசன் எதிர்பார்த்து இருக்கிறான். அவனால் தனி ரூம் எடுத்து இருக்க முடியுமென்றாலும், நண்பர்களோடு இருக்கப் பிரியப்பட்டதாலேயே அந்த விடுதியில் தொடர்ந்தும் இருந்தான்.
தன்னுடைய நண்பர்களில் பலர் திருமணம் செய்து, அதனால் தனி அந்தஸ்தைப் பெற்று வசதியாக இருப்பதைப் பார்த்தபோதுதான் சிறீக்குத் திருமண ஆசை வந்தது. தலைமயிர் வேறு ஏராளமாக உதிர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.
உழைச்சு என்னத்தைக் கண்டது? வயசும் எக்கச் சக்கமாய்ப் போயிட்டுது. இப்ப தவற விட்டா பிறகு கலியாணம் கட்டினமாதிரித்தான். எத்தனை நாளைக்குத்தான் புளுபிலிமைப் பார்த்துக் கொண்டிருக்கிறது? என்று ஆதங்கப்பட்டு தனது பெற்றோருக்குச் சாடைமாடையாக விசயத்தைத் தெரிவித்திருந்தான்.
இவனது ஒப்புதலுக்காகவே காத்திருந்தவர்கள் போல் அவர்களும் சாதகம், குறிப்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். மாப்பிள்ளைக்ககு ‘காட், பக்றிவேலை, இமிக்கிறேசன் கிடைக்கலாம்’ என்றவுடன் கிராக்கி கூடியிருந்தது. பலர் விலைக் குறைப்பை எதிர்பார்த்தனர்.
சிறீயின் பெற்றோருக்கு அதிக அலைச்சல் இருக்கவில்லை. பெண்களை வைத்திருந்தவர்கள் பலர் வீடு தேடியே வந்திருந்தனர். சலுகைகள் கிடைக்காதா என பலர் விசாரித்தனர்.
சிறீக்கும் இந்த விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன. அவன் தன்னுடைய பங்கிற்கு காட்டுக்காக இவ்வளவு, வேலைக்கு இவ்வளவு என தனியாகக் கணக்குப் போட்டு வரப்போகும் மாமனாரிடம் வாங்கும்படி வீட்டுக்கு அனுப்பியிருந்தான். ஏற்கனவே ரொக்கமாகவும், ஊரில் காணி வீடுகளுடன் திருமணம் செய்திருந்த நண்பர்களுக்கு தான் சளைத்தவனில்லை என்பதைக் காட்ட வேண்டும் என்பது சிறீயின் விருப்பம்.
அதனால் உறுமீன் வருமளவும் அவன் ஜேர்மனியிலும், பெற்றோர்கள் இலங்கையிலுமாக தங்கள் கால்களில் தவமிருந்தார்கள்.
இறுதியாக சுகந்தியின் பெற்றோர்கள் இவர்களின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் உடன்பட்டு, திருமண ஒப்பந்தத்தை ஏற்று, மகளைக் கையளிக்கச் சம்மதித்திருந்தார்கள். மணமகள் ஜேர்மனிக்குப் போகும் செலவும், பொறுப்பும் பெண் வீட்டாரையே சாரும் என்பதைக் கூட சுகந்தியின் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்தக் கடைசி விசயத்தில்தான் சிறீ பாதிக்கப்பட்டான். அவன் இவை அனைத்துக்கும் ஒப்புதல் அளித்திருந்தாலும், ஏஜென்சிக்குக் காசு கட்டி விட்டதாகவும், அவன் இந்த மாதம் அனுப்புவான், அடுத்த மாதம் அனுப்புவான் என்று மாமனாகப் போகிறவர் சொல்லிக்கெண்டிருந்தாரே ஒழிய சுகந்தி மேற்கு ஜேர்மனிக்கு வரக்காணோம்.
மாமா கொழும்புக்கு வந்து போகும் போதெல்லாம் சுகந்தியை எப்போது அனுப்புவீர்கள் என்று கேட்பதற்காக போன் பண்ணிய தொகையில் அவன் இன்னுமொரு கார் வாங்கியிருக்கலாம். நண்பர்கள் கூட அவனைப் பகிடி பண்ணத் தொடங்கி விட்டார்கள்.
”இவனுக்கு மனிசி வாறதுக்கிடையிலை நாங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுவம்”
”இந்த முறை இஞ்ச சினோ விழாதபடியால்தான் மனிசி வர விரும்பேலேப் போலை’
”உண்மையாய்தான் மனுசி வருகுதோ? அல்லாட்டி ஒருதரும் பொம்பிள்ளை தராம நீ எங்களைப் பேக்காட்டிறியோ”
”ஏன் சிறீக்கென்ன குறைவு? கமலகாசனுக்கும் மயிர் கொட்டுண்டு முகத்தில் பருவும் இருந்தா சிறீயைப் போலத்தான் இருப்பான்”
கிட்டத்தட்ட பதினொரு மாதங்களாகக் காத்திருந்து சிறீ பொறுமையிழந்தானே தவிர, தான் பயணத்திற்கான காசு தருவதாகவோ, ஏஜண்டை ஏற்பாடு செய்து தருவதாகவோ, சீதனம் தரவேண்டாம் என்றோ மாமாவுக்கோ சொல்லவில்லை. அப்படி சொல்ல அவனது நான் இடம் கொடுக்கவில்லை.
இந்த சம்பந்தம் சம்பந்தமான பைல்களை மூடிவிட்டு வேறு புதிய திட்டத்தை ஆரம்பிக்கலாமா என்று அவன் ஆலோசித்தபோதுதான் சுகந்தி பிரயாணம் செய்யும் திகதி அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
சுகந்தியின் அழகைப் போட்டோவில பார்த்ததிலை இருந்து சிறீக்கு அவளை இழக்க மனமில்லை. அதனால் மறுபடி அவளை வரவேற்கத் தயாரானான்.
கல்யாணம் செய்தபின் குடியிருப்பதற்காக எல்லா வசதியும் அடங்கிய வீடு பார்த்தான். பழைய வீடியோ டெக்கை விற்று, ரிமோட் கொன்றோலுடன், புதிய டெக்கும், ஸ்டீரியோ ரிவியும் வாங்கினான். வோசிங் மிசினும், அவணும் பிறகு வாங்கலாம் என ஒத்தி வைத்தான்.
”நீங்கதான்ராப்பா நிண்டு எல்லாம் வடிவாச் செய்து தர வேணும்” என்று நண்பர்களிடம் கூறி வைத்தான்.
”உனக்கு செய்யாட்டி பிறகாருக்கு?”
”செவ்வோட கதைச்சு றெஸ்ரோரண்டிலேயே கலியாண வீடு அறேஞ்ச் பண்ணித் தாறேன்”
”டெக்கிறேசன் என்ர பொறுப்பு”
”நான் தண்ணி”
”அது தெரிஞ்ச விசயம் தானே…” என்றெல்லாம் நண்பர்கள் உற்சாகமாக ஊக்கமளித்தார்கள். வீடியோ படப்பிடிப்புக்குக் கூட பேமசான ஆளை சிபாரிசு செய்திருந்தார்கள்.
எல்லா தடல்புடல்களும் ஆரம்பித்து, ஒரு மாதத்தின் பின் இன்று சுகந்தியைக் கூட்டிச் செல்ல சிறீ விமான நிலையத்திற்கு வந்திருந்தான்.
லுவ்ற்தன்சா ஒன்று மத்திய கிழக்கை நோக்கிப் பறக்க, மற்ற பக்கத்தில் பிஐஏ தரையிறங்கியது. எல்லோரும் மேலே நின்று ஏறி இறங்கும் விமானங்களை நடந்து நடந்து வேடிக்கை பார்த்தார்கள். சிறீ எயர்லங்கா தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டேயிருந்தான்.
விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருந்தது. தீயணைப்புப் படையினரின் வாகனங்கள் தயாராக இருந்தன. பொலிஸ் வாகனம் இடையிடையே ரோந்து சென்றது. அலிற்றாலியாவில் துப்பரவாளர்கள் பணியை முடித்துக் கொண்டு இறங்க, பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஐந்து மணிக்கு ஏயர்லங்கா ஓடுபாதையில் இறங்கியது. சிறீ திடீர் சந்தோசத்துடன் விழுந்தடித்துக் கொண்டு பழைய பி ஐந்து கதவுக்கு முன்னால் வந்து இளைத்தான். அங்கு ஏற்கனவே சில ஜேர்மனியர்கள் காத்திருந்தனர்.
இருபது நிமிட தாமதத்தின் பின் எயர்லங்கா பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். இலங்கையில் செத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அக்கறை கொள்ளாது, விற்றமின் டி யைத் தாராளமாகச் சேகரித்து, அதனால் கொஞ்சமாக நிறம் மாறியிருந்தவர்கள், அடுத்த வாரம் வேலை தொடங்கும் ஆயாசத்தல் சூட்கேசுகளுடன் வெளியே வந்தார்கள். ஆட்கள் வரவர அவர்களுக்கானவர்கள் தாவி அணைத்து சந்தோசப்பட்டார்கள்.
சிறீ சுகந்திக்காக காத்திருந்தான்.
கறுப்புத் தலையெதுவும் இலகுவில் வெளியே வரவில்லை. சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் பொலிஸ்காரர் முன்னே வர, பின்னால் கலக்கத்துடனும், காலநிலைக்கு ஒவ்வாத உடைகளுடனும் பாரமான பைகளுடனும் தமிழர்கள் வெளிப்பட்டார்கள். அவர்களில் சுகந்தியுமிருந்தாள்.
நாறியிட்டுது. இனிக் காம்பில கொண்டே விட்டாப் பிறகு தான் கூட்டிக் கொண்டு போகலாம். சிறீ சலித்துக் கொண்டான்.
அவர்கள் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கார் தரித்த இடத்திற்கு வந்து உயிர்ப்பித்து மேலேயிருந்து வளைந்து வளைந்து இறங்கும் பாதைக்கு வந்து ஓட்டோபானை பிடித்தான்.
இனி மூன்று நாளைக்குப் பிறகுதான் சுகந்தியைப் பார்க்கலாம் என்பதில் எரிச்சல் வந்தது. சுகந்தியுடன் போகும்போது போடுவதற்காக தெரிவு செய்திருந்த கசற்றுகளில் ஒன்றைப் போட, ‘ராத்திரி நேரத்துப் பூசையில்’ பாடல் வந்தது.
தனியாகத் திரும்பி வந்த சிறீயை நண்பர்கள் கேலி செய்தார்கள். இவனுடைய மனைவியைத் தன்னுடைய கண்ணால் காணும் வரை தான் நம்பப்போவதில்லையென ஒருவன் உறுதியாகத் தெரிவித்தான்.
சிறீ அடுத்த மூன்று நாட்களையும் கஸ்ரமாகவே கழித்தான். இரண்டு நாள் ஸ்கொட்ச்விஸ்கி குடித்தான். மூன்றாம் நாள் சுவல்பேக் காம்பிற்குப் புறப்பட்டபோத, ரவியும் வந்து ஒட்டிக்கொண்டான்.
கார் சமிக்ஞை விளக்குகளற்ற நீளப் பாதையில் சுதந்திரமாக விரைந்தது. நூற்றிநாற்பதுக்குக் குறைவாக இரண்டு அந்நிய லொறிகளே ஊர்ந்தன. வாகனங்கள் யாவும் வேகத்தைத் துரத்திக் கொண்டிருந்தன.
”மனுசியை நேற்றுப் பாக்கேலயே?” ரவி ரேப் ரெக்கோடரில் இளையராஜாவின் அதிர்வுகளுக்கேற்ப ஈக்குளிபைசரை சரி செய்து கொண்டு கேட்டான்.
”நேற்றுப் பார்த்தனான்” என்ற சிறீ பக்கத்தில் வந்துகொண்டிருந்த வொக்ஸ்வாகனை விலத்தினான்.
”எப்படி ஆள்? பே வடிவோ?”
”அந்தமாதிரி”
சிறீயின் கார் இன்னும் பலவற்றை விலத்திக்கொண்டிருந்தது. பாதைக் குறிப்புக்கள் வேகமாக ஓடி வந்து மறைந்து கொண்டிருந்தன.
”கலியாண வீடு என்ன மாதிரி? பெரிசாச் செய்யிறதோ?”
”பின்ன என்னத்துக்கு உழைச்சது? ஒரு கலக்குக் கலக்கிக் காட்ட வேணும்”
சுவல்பேக் அகதிகள் விடுதியைச் சுலபமாகக் கண்டுபிடித்து, காரைத் தரித்து, இறங்கிப் போனான்.
அதிகாரிகள் உரிய கேள்விகளைக் கேட்டு விசாரித்த பின், சுகந்தியைப் பார்க்க சிறீயை அனுமதித்தார்கள். ரவி வேறு பக்கமாகப்போய் புதிதாக வந்தவர்களிடம் எந்த இயக்கம்? என்ன மாதிரி? என்று விசாரித்தான்.
சுகந்திக்கு ஏற்கனவே சிறீயின் புகைப்படம் கிடைத்திருந்ததால் அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
”உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும். வாங்கோ அதில இருந்து கதைப்பம்” என்று சுகந்தி மூலையிலிருந்த ஆசனங்களைக் காட்டினாள்.
தான் எதிர்பார்த்ததிற்கு மாறாக, சுகந்தி வெட்கப்படாமல் நேராகப் பார்த்துக் கதைத்ததில் சிறீ பிரமிப்படைந்தான். இருவரும் போய் ஆசனங்களில் அமர்ந்தார்கள்.
”பிரயாணங்கள் சுகமாய் இருந்ததே?” என்று சிறீ சம்பிரதாயமாக ஆரம்பித்தான்.
”பிரச்சினை இருக்கேல”
”எயார்ப்போட்டிலயே உம்மை எடுக்க ட்ரை பண்ணினனான். ஏலாமப்போச்சு. இண்டைக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்”
”எங்க?”
அவள் கேள்வியில் சிறீ ஆச்சரியமானான். ”என்ரை ரூமுக்குத்தான்”
”ஏன் அங்க?”
சிறீயின் ஆச்சரியம் இன்னும் விரிந்தது. சுகந்தியென்று நினைத்து வேறு பெண்ணுடன் கதைக்கிறோமோ என்று குழம்பினான். ”அப்ப எங்க போகப் போறீர்?” என்று கேட்டான்.
”நான் ஏன் உங்கட ரூமுக்கு வரவேணும். அரசியல் தஞ்சம் கேட்டிருக்கிறன். எனக்கு எங்கயாவது இவை இடம் ஒழுங்கு செய்வினும் தானே?” சுகந்தி நிதானமாகச் சொன்னாள்.
சிறீக்கு அவள் சொல்வது புரியவில்லை. தலைச்சுற்றல் ஆரம்பமாவது போலிருந்தது. இவள் விளங்காமல் கதைக்கிறாளோ? விசமத்திற்கு கதைக்கிறாளோ?
”நீர் என்ன சொல்றீர் எண்டு எனக்கு விளங்கேல” என்றான்.
”இதிலை விளங்கிறதுக்கு என்ன இருக்கு? நான் உங்களிட்ட வரேல. அரசியல் தஞ்சம் கோரித்தான் ஜேர்மனிக்கு வந்திருக்கிறன். பிறகேன் உங்களின்ர ரூமுக்கு வரவேணும்” சுகந்தி சொல்லிக் கொண்டிருக்க சிறீக்குப் பத்திக் கொண்டு வந்தது.
”என்ன விளையாடுறீர்? கலியாணம் பேசி, எல்லா அலுவலும் முடிஞ்சாப்பிறகு என்னிட்ட வரல, அதுவும் அசூல் அடிக்கத்தான் வந்தனான் என்டா என்ன அர்த்தம்?”
”கலியாணப் பேச்சு நடந்தது உண்மைதான். ஆனா எல்லா அலுவலும் முடியேல. பேச்சுகள் நடந்தால் கட்டாயம் கலியாணம் செய்ய வேணுமெடில்லைத்தானே?’ நாட்டிலை எவ்வளவு பிரச்சினையள் நடக்குது. அதுகளில ஒண்டையும் சந்திக்காமல், அதை எதைப் பற்றியும் கவலைப்படாம, அமைதியா இருக்கிறியள். ஜேமன் பாஸ்போட் இருக்குது. அதால இரண்டு லட்சம் ரொக்கமா தா, வீடும் வேணும். ஜேர்மனிக்கு வாற செலவும் அதுவும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாங்கதான் செலவழிக்க வேணும் எண்டு ஈவிரக்கமில்லாம சொன்ன உங்களைக் கலியாணம் செய்யிற அளவிற்கு எனக்கு மூளை பழுதில்லை” சுகந்தி ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தாள்.
சிறீ நிலைகுலைந்து போனான். அவன் எந்த விதத்திலும் எதிர்பார்க்காதபடி பாரிய தாக்குதல் இது. எந்தப் பதிலும் சொல்ல முடியாத கூரிய வசனங்கள்.
”ஒரு பொருளை இறக்குமதி செய்தா, அதுக்குரிய கட்டணத்தையும், கொண்டு வாற கூலியையும் பொருளைப் பெறப் போகிறவனே கட்ட வேணும். ஆனா நீங்க என்னை ஒரு பொருளாகக் கூட மதிக்கேலை. உங்களைக் கலியாணம் செய்யிறதுக்கும், ஜேர்மனிக்கு வாறதுக்கும் நாங்கதான் செலவழிக்க வேணும் என்டு சொன்னியள். இவ்வளவு காசு செலவழிச்சு உங்களைக் கலியாணம் கட்டினால் அப்படியென்ன சுகம் கிடைக்கப்போகுது? எங்களைக் காசு செலவழிக்கப் பண்ணியே நீங்கள் சுகம் தேடவேணும்? இந்த நாட்டிலையே அதுக்கெண்டு வசதியள் இருக்காமே. பொம்மையள் கூட இருக்கெண்டு கேள்விப்பட்டன். அந்த வழியளைப் பாக்காம ஏன் மனிசரை ஆக்கினைப்படுத்திறீங்க” சுகந்தியின் ஆக்ரோசமான விளக்கங்கள் சிறீயைத் துண்டுதுண்டாக உடைத்துக்கொண்டிருந்தன. சுற்றிலும் பார்த்தான்.
பக்கத்தில் ஈரான் தாயொருத்தி முகத்தையும் முக்காடால் மூடி விட்டு மடியில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்தாள். வேறு யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை.
”எங்கட வீட்டையெல்லாம் ஆமிக்காரங்கள் நாசமாக்கிப் போட்டாங்கள். வீட்டுக்கு உழைச்சுக் கொண்டிருந்த அண்ணனையும் இயக்கச் சண்டையிலை சுட்டுக் கொண்டு போட்டாங்கள். எனக்குக் கீழை நாலு தங்கச்சியள் இருக்கினம். அப்பா சுகமில்லாம கட்டிலோட கிடக்கிறார். அம்மா அடுப்போட எரிஞ்சு கொண்டிருக்கிறா. நாடு முழுக்கச் சனங்கள் இந்த விதமாகச் சீவிச்சுக் கொண்டிருக்குதுகள். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் றோட்டில நிக்குதுகள். பெடியனை வைச்திருக்கிற தாய் தகப்பன்கள் ஒவ்வொரு நிமிசமும் பயந்து சாகுதுகள். ஆமிக்காரன்களுக்கு எப்பப்ப காமம் வருமோவெண்டு பொம்பிளையள் எல்லாம் திகிலடிச்சுப் போயிருக்குதுகள். இதையொண்டையும் யோசிக்காம, வெளிநாட்டில் வசதியா இருக்கிற உங்களுக்கு கலியாணம் செய்ய ஊர் பொம்பிளையள் தேவை. அதுவும் வீடுவளவு, நகை நட்டு, லட்சலட்சமாய் காசு, பிளையிற்றுக்குக் காசு எல்லாத்தோடையும். உண்மையா நீங்கள் என்னதான் நினைச்சுக் கொண்டிருக்கிறியள். நாட்டில ஆம்பிளையள் இல்லாததால பொம்பிளையள் றோட்டு றோட்டா அலைஞ்சு கொண்டிருக்கினம், அவையளை சுகமா பேய்க்காட்டலாம் எண்ட திமிரிலதானே இப்படிச் செய்யிறியள். சீ.. சீ.. பொம்பிளையள் மோட்டுத்தனமா உங்கடை கால்ல வந்து விழுறபடியாத்தானே விளையாடுறியள். நீங்களெல்லாம் ஊருக்கு வந்து அங்க இருக்கிற சனத்தையும் நாசமாக்காம இஞ்ச இருக்கிறது நல்லது போலத்தான் தெரியுது” சுகந்திக்கு உணர்ச்சி வசத்தால் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
சிறீ தலையைக் குனிந்து கொண்டான். சுகந்தி இல்லாம தனியாகத் திரும்பிப் போனால் கிடைக்கப் போகும் அவமானம், கேலிகளை நினைத்துக் குமைந்தான். என்ன கதைப்பது என்று தெரியாமல் ”என்னைக் கலியாணம் செய்ய ஏலாதெண்டா ஏனிஞ்ச வந்தனீர்?” பரிதாபமாகக்கேட்டான்.
”அதுதான் முதலே சொல்லிப் போட்டனே அரசியல் தஞ்சமெண்டு. நான் வீட்ட இருந்தா என்னால தங்கச்சியளின்ர வாழ்க்கையும் தடைபட்டுப்போம். அதாலை லைனைக் கிளியர் பண்ணிப்போட்டு வந்திருக்கிறன். உண்மையிலை இஞ்ச வராம இப்படியான பிரச்சினைகளுக்கெதிராய் அங்க இருந்துதான் போராடுறதுதான சரி. ஆனா இப்ப இருக்கிற குழப்பமான நிலையிலை எதையும் செய்யேலாமல் போச்சு. அதோட உங்கட முகத்தில கரி பூசுகிறதுக்காயும் தான் தற்காலிகமாக இங்க வந்திருக்கிறன். ஆனா உங்களைப்போல ஜேமனி எனக்கு நிரந்திரமில்லை. கெதியில போயிடுவன். ஊரில வீடுவளவு, இன்னும் உங்களுக்கு எழுதேல. சீதனக்காசும், நகையும் நான் கையோடை கொண்டு போறதெண்டு சொன்னதால அதுகும் குடுக்கேல. உண்மையா இருந்தால்தானே குடுக்கிறதுக்கு. அதால எங்களுக்குப் பெரிசா நாட்டம் வரேல’. எனக்குக் களைப்பாய் இருக்குது. இனி கதைக்கத் தேவையில்லையெண்டு நினைக்கறன். இனி நீங்க என்னைச் சந்திக்கிறதும் அவசியமில்லை. முடிஞ்சா மனுசனாகப் பாருங்கோ. அப்ப பாப்பம்” என்று சொல்லிவிட்டு சுகந்தி அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் எழுந்து போய் விட்டாள்.
”என்னடா இங்கேயே குடும்பம் நடத்த தொடங்கி விட்டியோ? மனுசியைக் கூட்டிக்கொண்டு ரூமுக்கு வாவன்’ என்றபடி ரவி வந்தபோது சிறீ சிறீயாக இல்லை.
———————
பார்த்திபன்
1988
ஓவியம்: மணிவண்ணன்