காதல்

மறுபடியும் கண்கள் வலப்பக்கம் திரும்புவதை ஜீவனால் தவிர்க்க முடியவில்லை. விட்டுவிட்டான்.

அவள் மறுபடியும் தெரிந்தாள். ஜீவனின் கண்கள் தன்னில் ரோந்து செய்வதை அறியாமல் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அப்போதும் அவள் அழகாகவே இருந்தாள்.

ஜீவனின் கண் நரம்புகள் அவசரமாக மூளைக்கு சிக்னல் கொடுக்க அதுவும் அவசரமாக விழித்து கடமையைக் கவனித்தது.

‘அதென்னெண்டு டொச் பெட்டையளுக்கு இப்பிடி செழுமையான கன்னங்கள்? கட்டையா வெட்டினாப் பிறகும் தலைமுடி அழகாக இருப்பதன் மர்மம் என்ன? உதடுகள் ஏன் சிவந்து இருக்க வேணும்? அந்தக் கழுத்தும் பிறகு….. „ஏ’ த்தனமாக ஜீவன் ரசிப்பதற்கு முன் வகுப்பு முடிந்து விட்டது..

அவன் சோர்வாக எழுந்தான். இனி அவளைப் பார்க்க வேண்டுமானால் நான்கு தினங்கள அவன் பொறுத்தேயாக வேண்டும். பெருமூச்சொன்று சுதந்திரமாய் அவனிலிருந்து நீங்கியது. கொப்பிகள், புத்தகங்களை பையினுள் நிரப்பி; தோளில் மாட்டினான்.

மாணவர்கள் அவசரமாக வகுப்பறையை விட்டு கலைந்திருந்தனர். அவர்களுக்கு எவ்வளவோ அலுவல்கள். ஆண்பால்கள் பெண்பால்கள் சந்திக்க வேண்டும். கடைகளுக்குப் போய் கடைசியாக வந்த கிழிந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். ஐஸ் கிறீம் சூப்பிக்கொண்டு றோட்டில நிற்க வேண்டும். சத்தமாகச் சிரிக்க வேண்டும்.

ஜீவன் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் உட்பட ஏனைய சனங்கள் பாதையில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அநேகமான கார்கள் பிளைபிறையில் இயங்கிக் கொண்டிருந்தன. குழந்தையென்று தள்ளுவண்டியில் பொம்மையைப் படுக்க வைத்துச் சிரத்தையாகத் தள்ளிக் கொண்டு போக பின்னால் அப்பாவும், அம்மாவும் ஒருவரையொருவர் அணைத்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.

ஜீவன் பஸ்தரிப்பில் நின்றான். மனம் முழுக்க அவள் நிறைந்திருந்தாள். அவன் அந்தக் கொம்பியூட்டர் வகுப்பில் சேர்ந்த ஆரம்ப நாளே அவள் அவனைச் சலனப்படுத்தி விட்டாள். செயற்கை அழகுகளால் பூச்சுப் போடாத அவள் அழகு உண்மையிலேயே அவனைக் கவர்ந்துவிட்டது. அவளைப் பார்ப்பதும் பாடங்களைக் கவனிப்பதுமாக அவன் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாளே தனது அவஸ்தைக்குக் காரணம் காதல் கிருமிகள்தானென அவன் தீர்மானித்து விட்டான். ஒரு வாரத்திலேயே அவனுக்கு ஏராளமான கனவுகள் வர ஆரம்பித்து விட்டன-

பஸ் வர ஜீவன் ஏறிக்கொண்டான்.

வகுப்பில் மாணவர்களின் பெயரைக் கூப்பிட்டு ஆசிரியர் வரவைப் பதியும்போதுதான் ஜீவனால் அவளின் பெயர் ஸில்வியா என அறிந்து கொள்ள முடிந்தது. அதைத் தவிர அவளைப் பற்றிய வேறெந்த விபரங்களையும் அவனால் சேகரித்துக் கொள்ள முடியவில்லை. வகுப்பு ஆரம்பமாவதற்கு முன் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் ‘ஹலோ’ வை அவளும் அவனுக்குச் சொன்னாள். அதைத் தவிர வேறெந்த வித்தியாசமான நடவடிக்கைகளையும் அவனால் அவளில் கண்டுபிடிக்க முடியவில்லை. வகுப்பில் பாட நேரத்தில் அவளைப் படம் பிடிப்பதோடு அவனது காதல் ஒவ்வொரு முறையும் காற்புள்ளி வைத்துக்கொண்டிருந்தது.

என்றாலும் ஜீவன் மனம் தளரவில்லை. அவனுடைய நம்பிக்கைக்குக் காரணமிருந்தது. அவனுடைய நண்பர்களிலேயே அவன்தான் டொச்சை நன்றாகவும் சரளாமாகவும் பேசக் கூடியவன். அந்தத் தகுதியிற் தான் கொம்பியூட்டர் படிக்க ஆரம்பித்திருந்தான். இந்த டொச் திறமை தனது காதலுக்குக் கை கொடுக்கும் என்று அவன் நம்பினான். காத்திருந்தான்.

அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் டொச்காரர்கள் தங்களுடைய காதலை வெளிப்படுத்த என்ன மெதேட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே அவன் தன்னுடைய காதலை ஸில்வியாவுக்குத் தெரியப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஒரு ‘ஹலோ’ வைத் தவிர அதிகமாக வேறெதுவும் கதைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமே இதுவரை வரவில்லை.

ஜீவனுக்கோ இந்நிலை மிகவும் சிரமமாக இருந்தது. காதல் பற்றிய அவனது கற்பனை முற்றிலும் வேறு விதமாகவே இருந்தது. ஏராளமான தமிழ்ப்படங்களைப் பார்த்ததின் விளைவாக காதலியுடன் பூங்காக்களில் ஓடிப்பிடித்து விளையாடுவதும் றெஸ்ரோறண்டுகளில் சிரித்துச் சிரித்துச் சாப்பிடுவதும் ஆளையாள் கட்டிப்பிடிப்பதும் என்று அவன் கனவுகள்.

இவை எதுவுமே நடைமுறையில் இதுவரை சாத்தியப்படாததால் தனது கற்பனைகளை கனவுகளிலேயே அவனால் அனுபவிக்க முடிந்தது.

ஒருநாள் அரை மணித்தியாலம் முன்னதாகவே ஜீவன் வகுப்புக்கு வந்து விட்டான். ஆச்சரியமாக ஸில்வியா விறாந்தை ஜன்னலில் தனித்து நின்றாள்.

வகுப்பறை பூட்டியிருந்தது. பாடங்கள் ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகத்தான் கதவு திறக்கும். ஏனெனில் உள்ளே கொம்பியூட்டர் உட்பட பெறுமதியான பொருட்கள் இருந்தன.

ஜீவன் வழக்கம் போல ‘ஹலோ’ வைச் சொல்லிவிட்டு ஸில்வியாக்கு எதிர்ப்புறமாக நின்று கொண்டான். அவளும் „ஹலோ’ வைத் திருப்பிக் கொடுத்துவிட்டு கையிலிருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

‘அரிய சந்தர்ப்பம் நழுவ விட்டுவிடாதே’ என்று மூளை இயங்கி ஆலோசனை வழங்க இதயம் அவனுக்கு உற்சாகமளிக்கும் முகமாக வேகமாக இயங்கி இரத்தத்தை குபுக்கிக் கொண்டிருந்தது. ஜீவன் என்ன செய்யலாம் என்று குழம்பிக்கொண்டிருந்தான்.

எந்த நேரத்திலும் மற்ற மாணவர்கள் வந்து விடலாம். இதைப் போல இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஜீவன் இரண்டாவது விரல் நகத்தைக் கடித்துத் துப்பிவிட்டு மூன்றாவது விரலை வாய்க்குள் கொண்டு போனபோது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.

‘நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?’ ஸில்வியா முதன் முதலாக ஜீவனை விசாரித்தாள் (தமிழில் அல்ல)

ஜீவனுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை திடீரெனக் குளிர்ந்தது. வார்த்தைகள் கூட ஆச்சரியப்பட்டு சிரமமாகவே வந்தன.

‘சிறிலங்கா’

‘இங்கு அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறீர்களா?” என்ற ஸில்வியாவின் கேள்வியில் அவள் விசயம் தெரிந்தவள் என்பதை ஜீவன் புரிந்து கொண்டான்.

‘ஆம்’

‘இங்கு வந்து எத்தனை வருடங்களாகின்றன?’

‘நான்கு வருடங்கள்’

‘நன்றாக டொச் கதைக்கின்றீர்கள்’

ஜீவன் வெட்கமாகச் சிரித்துவிட்டு அவள் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தான். மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் என்று தலைப்பிடப்பட்டு கறுப்பாக ஒரு பெண் தலையில் குடத்துடன் நின்றாள்.

‘கண்ட கண்ட புத்தகங்களையெல்லாம் இவளேன் படிக்கிறாள்’ என்று ஜீவன் கவலைப்பட்டான். இலங்கையிலுள்ள அசிங்கங்கள் எல்லாம் அவளுக்குத் தெரியவந்து விடுமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.

‘இந்த நாடு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?’ ஸில்வியா கேள்விகளைத் தொடர்ந்தாள்.

‘நன்றாக’

‘எப்படித்தான் கவர்ந்திருந்தாலும் உங்களுடைய சொந்த நாட்டில் பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களுடன் இருப்பதைப் போன்ற மனநிறைவு இங்கே இருக்கும் போது உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். அப்படித்தானே?’

‘அப்படியில்லை’ என்று உண்மையைச் சொல்ல நினைத்தாலும் ‘ஆம் , நீங்கள் சொல்வது சரி’ என்றான். இந்த உரையாடலை எப்படி ‘காதல் லைனுக்கு’ கொண்டு வருவது எனறு ஜீவன் யோசிக்கும் போது ஏனைய மாணவர்கள் வரத் தொடங்கினர்.

வகுப்பறை திறக்கப்பட்டு பாடம் ஆரம்பமாகியது. ஜீவன் அன்று உற்சாகமாயிருந்தான். முதல் படியில் கால் வைத்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டான். அடுத்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.

பரீட்சார்த்த முயற்சியாக அடுத்த வாரமும் அரை மணித்தியாலம் முன்னதாகவே ஜீவன் வந்தான். அன்றும் ஸில்வியா தனியாகவே புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பஸ் வசதியின்மையால் அவள் ஒவ்வொரு முறையும் நேரத்துடனேயே வருவதாக ஜீவன் கணித்துக் கொண்டான்.

வழக்கமான ‘ஹலோ’ பரிமாறலின் பின் ‘ஏன் இன்று சீக்கிரமாகவே வந்து விட்டீர்கள்?’ என்று ஸில்வியா ஆரம்பத்தாள்.

‘உங்களுக்குப் போலவே எனக்கும் பஸ் வசதியில்லை’ காதலுக்கும் பொய்களுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை நினைத்து ஜீவன் வியந்து கொண்டான்.

‘நீங்கள் என்னென்ன வழிகளில் பொழுதைக் கழிக்கறீர்கள்?’ ஸில்வயா உண்மையான ஆர்வத்துடன் விசாரித்தாள்.

‘எங்களுக்கெங்கே நேரமிருக்கிறது? அதிகாலை பத்து பதினொரு மணிக்கு நானும், நண்பர்களும் எழும்புவோம். மதியச் சமையலை ஆரம்பித்தால் முடிவதற்குள் பிற்பகல் இரண்டு மணியாகிவிடும். சாப்பிட்ட பின் வீடியோவில் படம் பார்ப்போம். படம் முடிந்து சிறு இடைவேளையின் பின் இரவு சமையல் ஆரம்பிக்கும். அதை முடித்து ஆற வைத்து விட்டுப் போத்தல்களை எடுக்க ஆரம்பித்து விடுவோம். பிறகு சாப்பிட்டுவிட்டு மறுநாளும் அதிகாலை எழும்ப வேண்டுமென்பதற்காக ஒரு மணி, ஒன்றரை மணிக்குள் படுத்துவிடுவோம்’

ஜீவன் சொல்லி முடித்ததும் ஸில்வியா கலகலவென சிரிப்பைச் சிந்தினாள். ஜீவன் அவற்றைப் பொறுக்கி மனதுக்குள் போட்டுக்கொண்டான்.

சிறிது நேரத்தின் பின் ‘உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே சோகம் தான்” என்றாள் முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு. அவளுக்குள் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியதில் அடுத்த வெற்றி என்று ஜீவன் நினைத்துக கொண்டான்.

ஏனைய மாணவர்கள் வரத் தொடங்க அவர்களுடைய உரையாடல் முடிவடைந்தது.

அதன் பின் ஒவ்வொரு முறையும் ஜீவன் அரை மணித்தியாலம் முன்னதாகவே வர, அவர்களின் உரையாடல்கள் தொடர்ந்தன. சில வாரங்களில் ‘ஸீ’ மறைந்து ‘து’ அமுலுக்கு வந்து விட்டது. எனினும் ஸில்வியா அவனுடைய நாட்டைப்பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் மட்டுமே விசாரித்தாளேயொழிய அவனில் வேறெந்த விசேட அக்கறையும் காட்டவில்லை.

ஜீவன் தன்னுடைய தூய்மையான காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். கொம்பியூட்டர் ஐந்து மாதங்களை கடந்திருந்தது.

பஸ்ஸில் போகும் போதும், அறையில் இருக்கும் இருக்கும் போதும் ஜீவன் தன்னுடைய காதலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான். இந்த ஐந்து மாதங்களிலும் ஸில்வியா அவனை முழுமையக ஆக்கிரமித்திருந்தாள். தனது காதல் காய்ச்சலாகவே மாறிவிடுமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.

இந்தத் தவிப்புக்குத் தீர்வு காணும் முகமாக பரம்பரை பரம்பரையாக தமிழ்க் காதலர்கள் கடைப்பிடித்து வரும் கடிதம் விடு தூது முறையை ஜீவன் தெரிவு செய்தான். தெரிவு செய்த அன்றே டொச் இலக்கணத்தில் ஆழமாக இறங்கி தன்னுடைய காதலை வெள்ளைக் கடுதாசியில் மைப் படுத்தினான். பத்துக் கடிதங்களைக் கிழித்தெறிந்த பின் பதினொன்று திருப்தியைத் தந்தது.

கடிதம் தயார். இனி அதனை எப்படி ஸில்வியாவிடம் சேர்ப்பது?

அதற்குக் கூடத்தான் பண்டைய காதலர்கள் வழிகாட்டியிருக்கிறார்களே. ஸில்வியா வைத்திருக்கும புத்தகங்களில் ஒன்றைப் படித்து விட்டுத் தருவதாக வாங்குவது, அதற்குள் கடிதத்தை வைப்பது, பிறகு புத்தகத்தைத் திருப்பிக்கொடுப்பது என ஜீவன் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டான்.

‘அந்தப் புத்தகத்தைத் தருகிறாயா? படித்து விட்டுத் தருகிறேன்” ஜீவன் தைரியப்படுத்திக் கொண்டு கேட்டான்.

‘நிச்சயமாக. மிக நல்ல புத்தகம். படித்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்’ ஸில்வியா புத்தகத்தைக் கொடுத்தாள். மண்டேலாவைப் பற்றிய புத்தகம். இதை யார் படிப்பது என்று நினைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

அடுத்த வாரம்.

கடிதம் ஒளித்திருந்த புத்தகத்தை கொஞ்சமாக வியர்த்திருந்த ஜீவன் ஸில்வியாவிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் புத்தகத்தைப பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டாள். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தபடி ஜீவன் தாராளமாகப் பொய் சொன்னான். அன்றைய பாட நேரத்தில் கால நிலைக்கு சம்பந்தமில்லாமல் ஜீவன் வியர்த்திருந்தான்.

கொடுத்த கடிதத்திற்கான விடை தெரியும் நாள்.

முதல் நாளிரவே ஜீவனால் நன்றாகத் தூங்க முடியவில்லை. ஸில்வியா வெட்கப்படுவது போலவும், பிறகு அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் இருவரும் ஒருவர் மீது……. போலவும் கெட்ட கனவுகள் வந்து உபத்திரவப்படுத்தியிருந்தன.

படபடக்கும் நெஞ்சுடன் வந்தவன் ஸில்வியாவைக் காணாமல் திடுக்கிட்டான். ‘சுகமில்லையோ?’

வகுப்பறை திறக்கப்பட்டு மாணவர்கள் உள்ளே நுழையும்போது ஸில்வியா வந்தாள். வந்தவள் ஜீவனைக் கவனிக்கவே இல்லை.

ஜீவன் குழப்பமாக உட்கார்ந்திருந்தான். தேர்தல் முடிவகளுக்காக காத்திருக்கும் அரசியல்வாதிகளைப் போலவே அவனது நிலையும் இருந்தது. அவனால் பாடத்தில் ஈடுபடமுடியவில்லை. கொப்பியைத் திறந்து கண்டபடி பேனாவால் கிறுக்கினான்.

பாடங்கள் முடிந்து எல்லோரும் வெளியேறும் போது ஸில்வியா மாணவன் ஒருவனுடன் உராய்ந்தபடி கதைத்துக் கொண்டு போவதை ஜீவன் அவதானித்தான். கனத்த நெஞ்சுடன் அவர்கள் பின்னால் நடந்தான்.

ஸில்வியா அந்த மாணவனின் தலையைக் கலைத்தாள். கன்னத்தில் கிள்ளினாள். வாயில் கொஞ்சினாள். அவன் விடைபெறும்போது அவள் பின்பக்கத்தில் தட்டிவிட்டுப் போனான்.

ஜீவனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. என்னுடைய ஸில்வியாவை இன்னொருவன் தொடுவதா? அவனை நான் விடுவதா? அக்கக்கா என்று பாய அவன் என்ன சினிமாவா? தனக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அந்த வெப்பத்தில் உடல் வியர்த்தது.

மாணவர்கள் எல்லோரும் போய் முடிந்ததும் ஸில்வியா எதுவும் நடவாதது போல் அவனை நோக்கி வந்தாள்.

‘ராட்சஸி. விருப்பமில்லையெண்டு நேர சொல்லியிருக்கலாம் தானே. இப்பிடிச் செய்து காட்ட வேணுமே. வெள்ளைக்காறற்ரை குணத்தைக் காட்டிப் போட்டாள்’ என்று ஜீவன் பொருமிக் கொண்டிருந்தான்.

அவனை நெருங்கிய ஸில்வியா „ஹலோ’ என்றாள். ஜீவன் பேசாமல் நின்றான்.

‘இப்போது நான் நடந்து கொண்டதைப் பார்த்து நீ என்ன நினைத்தாய்?’ ஸில்வியா ஆச்சரியமான கேள்வியொன்றைக் கேட்டாள்.

ஜீவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ‘இவளேன் இப்பிடிக் கேட்கிறாள்? என்ரை காதல் ஆழமானதுதானோ எண்டு சோதிச்சுப் பாக்கிறாவோ? விசர்ப்பெட்டை. நான் என்ன சின்னப் பெடியனே?’ என்று தனக்குள் சிரித்துக்கொண்ட ஜீவன் ‘உன்னை அவன் தொட்டபோது எனக்கு ஆத்திரமாக இருந்தது. அவனுடன் சண்டை பிடிக்கவேண்டும் போலிருந்தது. நீ அவனுடன் அப்படிப் பழகியதற்காக உன்னைக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது’ என்றான். அவள் மேல் உள்ள காதலையும், அக்கறையையும் இதைவிட வேறெப்படியும் தெரிவித்திருக்க முடியாதெனத் தானே பெருமைப்பட்டுக் கொண்டான்.

‘உண்மையைக் கூறியதற்காக உனக்கு நன்றிகள். உன்னுடைய சமூகத்திலிருந்து நீ கொஞ்சமும் வேறுபட்டவனல்ல என்பதை பகிரங்கமாகவே தெரிவித்து விட்டாய்’ என்று ஸில்வியா சொல்ல, ஜீவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

‘உங்கள் ஆண்கள் பற்றியும், சமூக நடைமுறைகள், வழக்கங்கள் பற்றியும் நான் மிக தெரிந்து வைத்திருக்கிறேன். வாழ்க்கைத் துணையென்று சொல்லித் திருமணம் செய்த கொள்ளும் பெண்களை விலங்குகளை வைத்து வேலை வாங்குவது போல அடிமையாக வைத்து நன்றாக ஊழியம் செய்ய வைக்கிறீர்கள். உனக்கும், உன் போன்ற ஆண்களுக்கும் இருக்கும் சுதந்திரங்களில் ஒரு பகுதியைக்கூட திருமணம் செய்வதற்கு முன்போ, பின்போ பெண்களுக்கு நீங்கள் கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். ஒரு பெண் ஒரு ஆணுடன் சகஜமாகப் பழகுவதைக் கூட ஏற்றுக் கொள்ளாத அழுக்கு மனம்தான் உனக்கு இருக்கிறது. நான் உன்னைக் காதலிப்பதாக ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அதற்குள்ளேயே என்னைக் கட்டுப்படுத்தவும், உரிமை கொண்டாடவும், சந்தேகப்படவும் முனைந்து விட்டாய். உன்னைப் போன்றவர்களைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்நாள் முழுவம் சேவகம் செய்யும் அடிமையாக கூண்டில் அடைபட நான் என்ன முட்டாளா? உனக்கு என்மேல் இருப்பது காதலல்ல. இச்சை. உனக்கு இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒன்று இந்த நாட்டின் குடியுரிமை. இரண்டாவது என்னுடைய வெள்ளை உடம்பு. உன்னுடைய முதலாவது தேவைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. இரண்டாவதற்கு வேண்டுமானால் சில முகவரிகள் தருகிறேன். அங்கு போ. உன்னோடு வெறும் நண்பியாகப் பழகவே எனக்கு இப்போது அருவருப்பாக இருக்கிறது. உனது நாட்டுக்குத் திரும்பிப் போகும் போதாவது உனது அழுக்கு மனதை சலவைசெய்து கொண்டு போ’

நிறுத்தாமல் பேசி முடித்துவிட்டு ஸில்வியா போய் விட்டாள்.

ஜீவன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

 

—————-

பார்த்திபன்

1988

Leave a comment