தோச்சு, மினுக்கி வைச்சிருந்த சட்டையாப் பார்த்து அம்மா எடுத்துத் தந்தா. நான் ஆசையோட வாங்கிப் போட்டன். கால்மேசுகளைப் போட்டாப் பிறகு சுகமாக சப்பாத்துக்களுக்குள்ள காலுகளை விட்டிட்டன். ஆனா முடிச்சுப் போட கஸ்ரமாய் இருந்தது. நான் சரியாகக் கஸ்ரப்படுகிறதைப் பாத்திட்டு அம்மா சிரிச்சுக்கொண்டே முடிச்சுப் போட்டுவிட்டா.
கதிரையில இருந்து இறங்கி நிண்டன்.
அம்மா தள்ளி நிண்டு என்னை அழகு பார்த்தா. அவ எப்பவும் அப்படித்தான்.
அம்மாவுக்கு என்னில நல்ல விருப்பம். எனக்கும் அம்மாவில சரியான விருப்பம்.
கண்ணாடி மேசைக்கு ஓடினன். தலை இழுக்கிறதுக்கு மட்டும் எனக்கு ஒருத்தற்ற உதவியும் தேவையில்லை. நானும் ஆரிட்டையும் உதவி கேக்கிறதில்லை.
வயசு போனவைக்கு வடிவா இழுக்கத்தெரியாது. அவையை இழுக்கவிட்டா நடு உச்சி பிறிச்சும் இழுத்து விடுவினம். கண்ணாடியில என்னைப் பாக்கேக்க ஆரோமாதிரி இருக்கும். சிரிப்புத்தான் வரும். அதாலதான் நானே தலை இழுக்கப் பழகியிட்டன். எப்படிக் கஸ்ரப்பட்டாலும் ஒரு சுருள் கூட வராது. கடைசியா நானே கையால முன்பக்க மயிரை வளைச்சுவிடுவன்.
தலையிலை எண்ணை வைக்கிறதும் எனக்குப் பிடிக்காத விஷயம்.
அம்மம்மாதான் இந்த விசயத்தில என்ர எதிரி. எண்ணைப் போத்தலோட அம்மம்மாவைக் கண்டாலே நான் ஓடித் தப்பியிடுவன். அம்மம்மா நல்ல மொத்தம். அவ என்னைத் துரத்திறதைப் பாக்க சிரிப்பாயிருக்கும். கனநாள் அம்மம்மாவும் நானும் ஓடிப்பிடிச்சு விளையாடியிருக்கிறம்.
சில நேரம் அம்மம்மாவிட்டை சிக்குப்பட்டிடுவன். தலைநிறைய எண்ணையை ஊத்திப்போடுவா. எனக்குக் கோபம் வந்திதெண்டால் அவ போட்டிருக்கிற உடுப்பிலேயே தலையைத் துடைச்சுப்போடுவன்.
எண்ணை வைக்கிறதில ஒண்டுமில்லை. பிறகு முகத்தில வழியேக்கதான் எரிச்சல்வரும்.
‘வெளிக்கிட்டிட்டியே?’ என்று அம்மம்மா கேட்கிறா. அவவுக்கு எப்பவும் அவசரம்தான்.
அவவுக்கென்ன பொம்பிளை. கெதியா வெளிக்கிட்டிடுவா. நான் சின்னப்பெடியன். கனநேரம் செல்லும் எண்டு அவவுக்குத் தெரியாதே?
‘வெளிக்கிட்டுக்கொண்டுதான் இருக்கிறன்’ எண்டு சத்தம் போட்டன்.
கண்ணாடியில ரண்டுமூண்டு தரம் பாத்துக்கொண்டன். வடிவாய்த்தான் இருக்கிறன்.
‘பஸ் வரப்போகுது. கெதியா வா.’ அம்மம்மா ரண்டாம்முறையா சொல்லுறா.
நானும் அவாவும் கலியாண வீடு ஒண்டுக்குப்குப் போறோம். அம்மா வரமாட்டா. அம்மம்மாவும் நானும்தான் எங்கபோறதெண்டாலும் போவம்.
‘அம்மா போட்டுவாறன்’
அம்மாவிட்ட சொல்லிப்போட்டு வெளியில போறன். படலை மட்டும் போய் திரும்பிப்பாக்கிறன்.
அம்மா கதவடியில நிண்டுகொண்டு கையை அசைக்கிறா. எனக்கு அம்மாவைப் பாக்க பாவமாக இருக்கு.
ஏன் அம்மா இப்பிடி இருக்கிறா எண்டு எனக்குத் தெரியாது. ஏனெண்டா நான் சின்னப்பெடியன்.
ஆனால் அம்மா பாவம் எண்டு மட்டும் தெரியும்.
பஸ் ஸ்ராண்டுக்கு வந்திட்டம். முதலே வந்த கனபேர் பஸ்ஸைப் பாத்துக்கொண்டு நிண்டு கொண்டிருக்கினம். போட்டிருந்த உடுப்புகள், ஸ்ரைலில இருந்தே அவையளும் கலியாண வீட்டுக்குத்தான் வருகினம் எண்டு கண்டுபிடிச்சிட்டன்.
ஊரில இருக்கிற எல்லாரும் கலியாண வீட்டுக்கு வருகினம். அம்மா மட்டும் வீட்டில தனியா இருக்கிறா.
என்ரை வயசுப்பெடியள் ஒருத்தரையும் காணேல்லை. இல்லாட்டி அவங்களோடை கதைக்கலாம்.
வழக்கமாக வாறமாதிரி பஸ் பிந்தி வந்திது. எல்லாரும் ஏறியினம்.
நான் யன்னல்ப்பக்கம் தேடிப்பிடிச்சு இருந்திட்டன். பஸ் ஓடிக்கொண்டிருக்கேக்க வெளியில பாக்கிறது எனக்கு நல்ல விருப்பம்.
பஸ் ஓடத் தொடங்கியிட்டுது. நான் வெளியில பாத்துக்கொண்டிருக்கிறன். மரங்கள், வீடுகள் எல்லாம் பின்பக்கமாய் ஓடுறதைப் பாக்க முஸ்பாத்தியா இருந்துது. எனக்கு சட்டெண்டு அம்மாவின்ர முகம் தெரியுது.
ஏன் அம்மா இப்பிடி இருக்கிறா? அம்மா வீட்டைவிட்டு வெளியில வந்தா உலக அதிசயங்களிலே ஒண்டு கூடியிடும் எண்டு நான் நினைச்சுக்கொள்ளுவன். எப்பவும் வீட்டுக்குள்ளதான் அவ இருப்பா. சமைப்பா. சட்டை தைப்பா. புத்தகம் வாசிப்பா. உடுப்புகள் தோய்ப்பா. எனக்கு சாப்பாடு தருவா. பூக்கண்டுகளுக்குத் தண்ணி விடுவா. ஆனா வெளியிலை போறதில்லை. ஏன் பயமோ?
நான் எவ்வளவு சின்னப்பெடியன்? நானே தனிய பள்ளிக்கூடம் போட்டுவாறன். கடைக்குப் போய் பத்துச் சதத்துக்கு இனிப்பு வாங்கிவாறன். அம்மா பெரிய ஆள். ஏன் பயப்படவேணும்.
இதில ஏதோ விசயமிருக்கவேணும். அது என்னெண்டுதான் எனக்கு அறிய ஆசை. ஆரும் எனக்கு சொல்லுறதே இல்லை. இப்பிடி விஷயங்களை என்னோடை ஆரும் கதைக்கிறதும் இல்லை.
நான் சின்னப்பெடியனாம். எத்தனை நாளைக்குத்தான் பாட்டி வடை சுட்ட கதையும் முயலும், ஆமையும் ஓட்டப் போட்டி வைச்ச கதையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒரே கதையள் திருப்பித் திருப்பக் கேட்டா அலுக்கும் எண்டு பெரியாக்களுக்குத் தெரியாதோ?
ஒரு வேளை பெரியாக்கள் எண்டா பெரிய கதையளும், சின்னாக்கள் எண்டா சின்னக் கதையளும்தான் கேக்க வேணுமோ?
கண்டறியாத பெரியாக்கள். அம்மா எத்தனை நாளா வீட்டுக்குள்ள அடைபட்டுக்கொண்டு இருக்கிறா. கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறா. அவவுக்கு இன்னும் ஒருத்தரும் வழி சொல்லேல்ல. பிறகென்ன பெரியாக்கள்?
பெரியாக்கள் எண்டு யாருமில்லை. எல்லாரும் சின்னாக்கள்தான். விசயம் என்னெண்டு எனக்குச் சொல்லியிருந்தாலும் நானே என்ரை அம்மாவுக்கு நல்ல ஐடியா கண்டுபிடிச்சு சொல்லியிருப்பன்.
பெரியாக்கள் தாங்களும் செய்யினமில்லை. மற்றவையையும் விடாயினமாம். நான் சின்னப்பெடியன் எண்டு எல்லோருக்கும் ஒரு பகிடி.
திருஞான சம்பந்தர் பாலைக்குடிச்சிட்டு மூண்டு வயசில தேவாராம் பாடினாராம் எண்டா உண்மைதான் எண்டு கொண்டாடுவினம். பிறகேன் என்னை இவை நம்பேல்ல?
‘பிராக்குப்பாக்காம இறங்கு’
அம்மம்மா என்ரை கையைப்பிடிச்சு இழுத்துக்கொண்டு இறங்கினா. ரண்டுபேரும் கலியாண வீட்டுக்கு நடந்தம்.
வெளியில வாழைக் குலையளோடை வாழையள் கட்டியிருந்தது. வாசலைக் கடக்கேக்க பன்னீர் தெளிச்சினம். சந்தனம் தந்தினம். அம்மம்மா எனக்கு பொட்டுவைச்சுவிட்டா. தோசைக்கல்லு மாதிரி பெரிய பொட்டா வைச்சிருப்பா எண்டு எனக்குத் தெரியும்.
உள்ளுக்க போனோம். ஒரே சத்தம். மேளச்சத்தம் ஒரு பக்கத்தால, ஆக்களின்ர சத்தம் ஒரு பக்கத்தால. அங்கையும் இங்கையும் ஆக்கள் ஓடித் திரிஞ்சுகொண்டு நிக்கினம்.
நானும் அம்மம்மாவும் கதிரையில இருந்தோம். நான் சுத்திவரப்பாத்தன். மினுங்கிற சட்டையளும் சீலையளும் வடிவான கொண்டையளும் பொட்டு நகையளும்……
இந்தப் பொம்பிளையள் எல்லாம் என்ன வடிவா இருக்கினம். அம்மாவும் இதையெல்லாம் போட்டா எல்லாரையும் விட வடிவா இருப்பா. அம்மா பாவம்.
வெளியிலதான் போறயில்லை. ஏன் வடிவா உடுப்புகள் போடப்படாது? எனக்கு விளங்கேல்லை.
இதில ஏதோ விசயம் இருக்கு.
எனக்குத்தான் ஆரும் ஒண்டும் சொல்லுறதில்லையே.
என்ரை சினேகிதர்மாற்ரை வீட்டைபோகேக்கை எல்லாம் அவையின்ரை அம்மாக்களைப் பாத்திருக்கிறன். அப்பிடி பாத்தபடியால்தான் என்ரை அம்மா மட்டும் வித்தியாசமா இருக்கிறதை தெரிஞ்சுகொண்டன். ஏன் என்ரை அம்மா மட்டும் வித்தியாசமாக இருக்கவேணும்?
மற்றப்பிள்ளையள் புதுச்சட்டை போட்டா, புதுச் சப்பாத்து போட்டா எனக்கும் அப்பிடிப்போடவேணும் எண்டு ஆசையாயிருக்கும். அம்மாக்கு மட்டும் மற்றவையளைப் பாத்து தானும் அப்பிடி இருக்கவேணும் எண்டு ஆசையிருக்காதா?
மற்றவையின்ரை அம்மாக்கள் எல்லாம் கலர் சட்டை, சீலை, போடேக்க என்ரை அம்மா மட்டும் ஏன் வெள்ளைச்சீலையும் பூப்போடாத சட்டையும் போடவேணும்?
மற்றவையின்ர அம்மாக்கள் எல்லாம் காப்பு, சங்கிலி எண்டு கனக்கப் போட்டுக்கொண்டு, கோயிலுக்கெண்டும் படம் பாக்க எண்டும் போகேக்க, என்ரை அம்மா மட்டும் ஏன் ஒண்டும் போடாமல் வீட்டுக்குள்ளயே சுத்திச் சுத்தி வரவேணும்?
மற்றவயின்ரை அம்மாக்கள் எல்லோரும் அப்பாக்களோட..?….?..!
ஆ… கண்டுபிடிச்சிட்டன். மற்றவைக்கு அப்பாக்கள் இருக்கினம். எனக்கு இல்லை.
இதுதான் வித்தியாசமா? இந்தப் பெரியவை எனக்கொண்டும் சொல்லத்தேவையில்லை. நானே கண்டுபிடிச்சிட்டேனே. அது சரி, அப்பா இல்லாட்டி அம்மா இப்பிடி ஏன் இருக்கவேணும்?
பிறகும் விளங்கேல்ல. ஆனா நான் கண்டபிடிச்சிடுவன்.
அப்பா!
அப்பாவை எனக்குச் சரியாத் தெரியாது. நான் இப்ப இருக்கிறதைவிட சரியான சின்னப் பிள்ளையா இருக்கேக்கதான் அப்பாவைப் பார்த்த ஞாபகம். ஆனா ஒண்டும் சரியாத் தெரியாது. மங்கலான படமாத்தான் எல்லாம் தெரியிது. இப்ப படங்களைப் பார்த்துதான் அப்பா எப்பிடியெண்டு தெரியும்.
அப்பா எங்கே? எண்டு நான் கேக்க, ஒவ்வொருமுறையும் ஒவ்வொருமாதிரி சொல்லுகினம். சாமியிட்டப் போட்டார் எண்டினம். மேல போட்டார் இனி வரமாமட்டார் எண்டினம். ஆமிக்காரன் சுட்டுப் போட்டான் எண்டினம்.
ஆமிக்காரன் ஏன் அப்பாவைச் சுட்டான்?
இப்ப அது வேண்டாம். முதல் அம்மாவைப் பற்றி பாப்போம். பிறகு இதையும் கண்டு பிடிப்பன்.
அப்பா இல்லாட்டி அம்மா ஏன் இப்படி இருக்கவேணும்? ஒரு வேளை அம்மா இல்லாட்டி அப்பாவும் இப்பிடித்தான் இருப்பாரோ? அம்மா இல்லாத அப்பாமார் இப்பிடி இருக்கிறதை நான் ஒரு இடத்திலையும் காணேலையே!
அம்மா மட்டும் ஏன் இப்பிடி இருக்கவேணும்?
தான் செத்துப்போனா அம்மா இப்பிடித்தான் இருக்கவேண்டுமெண்டு அப்பா சொல்லியிருப்பாரோ?
அப்பா திரும்பி வரமாட்டார் எண்டு அம்மாவுக்கு தெரியும். திரும்பிவராத ஆளுக்காண்டி அம்மா எப்பிடி இருந்தால் என்ன?
அப்ப அம்மாவை வேற ஆரோதான் இப்பிடி இருக்க வேணுமெண்டு சொல்லியிருக்கிறாங்கள். அவைக்குப் பயந்துதான் அம்மா இப்பிடி இருக்கிறா. ஆர் சொல்லியிருப்பினம்? ஆருக்கு அம்மா பயப்பிடுறா? அம்மம்மாவுக்கோ? தாத்தாவுக்கு? ஊகும்.. அதுவுமில்ல. அம்மம்மா அப்பிடிச்சொல்லவேமாட்டா. அம்மாவைப் பாத்து அவ அழுகிறதை நான் எத்தனையோ தரம் கண்டிருக்கிறன்.
அப்ப வேற ஆர்..?
ஆரிட்டை இதைப்பற்றிக் கேக்கலாம்?
நான் கேட்டால் ஆரும் சொல்லுவினமோ?
சின்னப் பெடியன் எண்டு அடிச்சுக் கலைச்சு விடுவினம்.
ஆனா, நான் கண்டு பிடிக்காமல் விடமாட்டன்.
என்ர அம்மாவைப் பயப்பிடுத்துறவையை, என்ர அம்மாவைக் கொடுமைப்படுத்திறவையைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டன். ஏன் இப்பிடிச் செய்யிறீங்கள்? எண்டு கேக்கத்தான் போறன்.
இப்ப இல்லாட்டியும் வளந்தாப் பிறகு….
அவங்களக் கண்டுபிடிச்சு…
அவங்களக் கண்டுபிடிச்சு….?
———————
பார்த்திபன்
1996