பனியில் எரியும் இரவுகள்

கடைசி மூட்டையையும் தூக்கி கீழே வீசிவிட்டு நிமிர்ந்து, நாரி உளைவெடுத்து, வியர்வையைக் கையால் வழித்து எறிந்து, லொறியில் சாய்ந்துகொண்டபோதுதான் அந்த யோசனை வந்தது. இந்த லொறி என்ரை லொறியாயிருந்தா..? முருகேசு ஒரு மூட்டையில் குந்தியிருந்து ஆட்களின் சுறுசுறுப்பை அளந்து கொண்டிருந்தான். பணம் பூசிய உடம்பு. அவனருகில் போய்..

“முருகேசு.. அடிக்கடி கொழும்பு போய் வாறாய். கட்டுபடியாகுதுதானே..?”

“பெரிசா சொல்லுறதுக்கில்லையடாப்பா. அங்கை வெளிக்கிட்டு இஞ்சை வாறவரைக்கும் கப்பம் கட்டிக்கொண்டே வரவேணும். இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தியிலயும் பரியர் போட்டுக்கொண்டு தடியங்கள் நிக்கிறாங்கள். சண்டையை வைச்சே நல்லாய் உழைக்கிறாங்கள். இவங்களுக்கும் எங்களுடையதுகளுக்கும் வெட்டி மிஞ்சிறதைப் பொறுக்கி எண்ணலாம்”

“அப்ப இனிமேல் ஓட்டம் இல்லைப் போல..”

“இதையும் விட்டிட்டு என்ன செய்யிறது? வெள்ளியிரவு திருப்பி வெளிக்கிடுறன்”

ஆக, எவ்வளவு வெட்டினாலும் முருகேசுக்கு மிஞ்சும். தொழில் பறவாயில்லைத்தான். எப்படிப் பாத்தாலும் நட்டம் வராதுபோல கிடக்கு. இது.. நான்…. அவனவன்ரை லொறியிலை சாமான் பறிச்சே முதுகு கூனிப் போச்சு. என்ன கோதாரிச் சீவியம். பிழைப்புக்கு வேறை வழிபாக்க வேணும்.

வீடு வந்து , குளியல்போட்டு, வாய்க்கு ருசியாய் சாப்பிட்டு, முன் விறாந்தையில் வந்து குந்திய போது மறுபடியும் தலைக்குள் லொறி ஓடியது. சம்பாதிக்க வேணும். பிள்ளைகுட்டிக்காரன்.

“ஏன்ரி… இஞ்சை வாவன்”

ஆட்டுக்கொட்டிலை விளக்குமாத்தால் கூட்டி, புளுக்கையளை அள்ளி ஒரு மூலையில் குவித்து, முறித்த கொப்பைக் கட்டித் தூக்கிக் கொண்டிருந்தவள் அவன் குரல் கேட்டு ஒரு முடிச்சுப் போட்டுவிட்டு வந்தாள். “என்னப்பா”

“இதிலை இரு. புதுசாய் ஒரு தொழில் தொடங்கினால் என்ன..?”

“என்ன இருந்தாப்போல. எங்கையென் காசடிச்சிட்டியளோ?”

“முருகேசு மாதிரி லொறி ஓடலாம் எண்டு….”

“முருகேசிட்டை லொறி இருக்கு. ஓடுறார். நீங்கள் என்னத்தை வைச்சு ஓடப் போறியள்? குழை கட்டிக் கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு…..” சலித்தபடி அவள் எழுந்தபோது அவன் கையைப் பிடித்திழுத்து மறுபடி இருத்தினான்.

“கொஞ்சம் இரேன். லொறி ஒண்டு வேண்டினா முருகேசு மாதிரி கொழும்பிலயிருந்து சாமான் வேண்டியந்து இஞ்சை விக்கலாம்”

“பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம். சுத்தி வர இருக்கிற கடனுகளை அடைக்க வக்கில்லை. லொறி வேண்டப் போறியளோ?? ஏதேனும் போட்டிட்டியளே..?” சந்தேகமாய் பார்த்தாள்.

“சும்மா நளினம் விடாமை யோசி. எத்தனை நாளைக்குத்தான் மற்றவனுக்குப் பறிச்சுக் குடுத்துக் கொண்டிருக்கிறது. நாலைப் பெத்து வச்சிருக்கிறம். உப்படியோ கைமாத்திலை சீவியம் போனா நாளைக்கு அதுகளுக்கெண்டொரு சீவியம் வேண்டாமே?”

“எல்லாம் சரியப்பா, லொறி வேண்டுறதெண்டா சும்மாவே. பயித்தங்காய் வேண்டிற மாதிரிக் கதைக்கிறயள்”

“எல்லாம் யோசிச்சுப் போட்டுத்தான் கதைக்கிறன். லொறியும் பாத்து வைச்சிட்டன். நல்ல லொறி. மலிவாய் தட்டலாம். கொஞ்ச வேலை செய்ய வேண்டி வரும்”

“ஆரென் சும்மா லொறி தாறன் எண்டவங்களே..?”

“ஏன் சும்மா தரவேணும். காசைக் குடுக்கிறம். வாங்கிறம்”

“அம்மாவாணை எனக்கொண்டும் விளங்கயில்லையப்பா”

“உன்ர தம்பியை மறந்து போனியே..?”

“கண்ணனோ..?”

“வேற ஆர் வெளியில இருக்கினம்..?”

அவள் சடாரென நிமிர்ந்தாள். கண்ணன், ஜேர்மனி, லொறி, காசு. “உங்களுக்கென்னப்பா விசரே. லொறி வேண்டிறளவுக்கு அவனிட்டை எங்காலை காசு? எல்லாத்தையும் இஞ்சாலைதானே அனுப்பிக்கொண்டிருக்கிறான். காசு காசெண்டா அவனெங்கை போறது..?”

“இனியெங்கை போவான்.. ஏற்கெனவே ஜேமனிக்குப் போட்டான்தானே? இதெல்லாம் அவனுக்கொரு காசே”

“சும்மா கதையாதையுங்கோ. வெளிநாடெண்டாப்போல அவனென்ன காசிலை விழுந்து புரளுறானே? தங்கச்சியின்ர கலியாண வீட்டுக்குக் காசனுப்பியே இன்னும் கனகாலமாகேலை. நல்ல ஆள் நீங்கள்..”

“ஏன்ரி.. நானென்ன வேறை கலியாணம் செய்யவே காசு கேக்கிறன். சொந்தமா ஏதாவது தொழில் செய்து எங்கடை பிள்ளையளுக்கு ஏதும் சேத்து வைப்பமெண்டால் நீ பிறத்தியாள் மாதிரி கதைச்சுக் கொண்டிருக்கிறாய்” அவனுக்குச் சாடையாக எரிச்சல் வந்திருந்ததை அவள் கவனித்தாள்.

“கோவியாதையுங்கோப்பா. இவ்வளவு காசு அவனிட்ட இருக்குமே..?”

“வீட்டுக்குள்ள அடைஞசிருக்கிற உனக்கு நாட்டுநடப்புகள் எங்கை விளங்கப்போகுது. வெளிநாட்டிலை இருக்கிறவங்களிட்டை இல்லாத காசு வேறை ஆரிட்டை இருக்கப் போகுது? உந்தச் சண்டையுக்கையும் பொம்பர் இடிக்க இடிக்க சனம் வீடு கட்டுமெண்டா எல்லாம் வெளிநாட்டுக் காசு தான்”

“எப்படியப்பா அவனிட்டைக் காசு கேக்கிறது?”

“உன்ரை தம்பிதானே? இவ்வளவு நேரமும் நீ அவனிலை பாசத்தைக் கொட்டின மாதிரி அவனுக்கும் இருக்கும் தானே? அப்பப்ப இனிமேல் காசனுப்ப வேண்டாம். தொகையாய் லொறிக்குத் தரச் சொல்லு. எங்களுக்கு வருமானம் வந்தா தான் காசு கொட்டத் தேவையில்லையெண்டு சிரிச்சுக் கொண்டு தருவான்”

“எதுக்கும் அம்மாவோட ஒருக்கா கதைக்கிறன்”

“விசர்க்கதையெல்லே கதைக்கிறாய். அந்த மனிசி ஒருக்கா விக்கிக் கண்ணைக் கசக்கிச்சுதெண்டா உனக்கு காசு கேக்கிற எண்ணம் இந்த வருசத்திலை வராது”

“சரி பின்னை கடிதம் ஒண்டு போட்டுப் பாக்கிறன்” என்றபடி எழுந்தாள்.

“கடிதம் எண்டாச் சுணங்கும். முருகேசுவின்ரை வீட்டை போய் போனிலை கதைப்பம்”

அவள் திரும்ப ஆட்டுக்கொட்டிலுக்கு வந்தபோது தம்பியின் முகம் மறைந்து ஆட்டுக் குட்டியளெல்லாம் அவள் பிள்ளைகளாய்த் தெரிந்தன.

 

இரண்டாவது அக்கா

அம்மாவுக்குக் கொஞ்சம் கூடி விளங்குதில்லை. எல்லாருக்கும் பெரிசாய் செய்து போட்டு தங்கச்சிக்கு மட்டும் சும்மா தலையில தண்ணி வாக்கிறதெண்டா அவளுக்கு எப்பிடியிருக்கும். நாங்களென்ன ஒண்டுமில்லாத ஆக்களே. வெளிநாட்டிலை தம்பியிருக்கேக்கை நாங்கள் இப்பிடிச் செய்தால் முழுக் கசவாரங்கள் எண்டு சனம் பகிடியெல்லே பண்ணப் போகுது. அதோடை தம்பி கேள்விப்பட்டானெண்டால் தானொருத்தன் இருக்கிறதெண்டதையே மறந்து போனியளோ எண்டு ஏசுவான். தங்கச்சியைப் பார்க்கையில்..

தலையிலிருந்து கால்வரை போர்த்திக்கொண்டு முடங்கிப்போய் கிடந்தாள். என்ன அதிசயம்! குஞ்சு குருமன்களோடை எட்டுக் கோடு விளையாடிக்கொண்டிருந்தவள் சட்டுப்புட்டென்று பெரிசாகியிட்டாள். உவளைப்போலதானே நானும்… வேண்டாம் வேண்டாமென சோடிச்சு..

“இன்னும் படுக்கேலையே பிள்ளை..?”

அம்மா வந்து நிலத்தில் குந்தினாள். கடைசிப் பாத்திரத்தையும் கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டு வருகிறாள். கையில் ஈரம் போகவில்லை. பிள்ளைகளின் குண்டி கழுவி, குளிப்பாட்டி, வீடு கூட்டி, சமைத்து, பேன் எடுத்து, உடுப்புத் தோய்த்து….. விரல்களுக்கு வயது போய்விட்டதைப் பார்க்கும் போது வழமையான கவலை வந்தது.

“தங்கச்சியின்ர சடங்கைப் பற்றித்தான் யோச்சுக்கொண்டிருக்கிறன்”

“இதில யோசிக்க என்ன கிடக்கு? அக்காமாற்றை குடும்பங்கள், மாமி குடும்பம், சித்தப்பற்றை வீடு, இன்னும் ரண்டு வீட்டுக்குச் சொல்லிச் சடங்கை முடிப்பம்”

இப்படிச் சொல்ல அம்மாவுக்கும் கஸ்ரம்தான் எண்டு விளங்குது. பாவம். பழுத்து விழுந்து காய்ஞ்சுபோன பிலாச்சருகு மாதிரி தோலெல்லாம் சுருங்கி மடிஞ்சு, கண் மங்கி.. பென்சன் எடுக்காமலே உழைச்சுக் கொண்டிருக்கிற மெசின். இப்பவும் பிள்ளையளுக்கு நாளைக்கென்ன சமைச்சுப் போடலாமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கும்.

“என்னண்டணையம்மா.. எனக்கு, அக்காவுக்கெல்லாம் ஊரையே கூட்டிச் செய்துபோட்டு இப்ப தங்கச்சிக்கு உப்பிடிச் செய்தா அவள் என்ன நினைப்பாள்..? அவளுக்கெல்லாம் ஞாபகத்திலையிருக்கும்”

“அதுக்கென்னடி பிள்ளை செய்யிறது? வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணிறம். இருக்கிறதை வைச்சுத்தானே என்னெண்டாலும் செய்யலாம்”

“கண்ணனை மறந்து போனியளே..?”

“என்னடி கதைக்கிறாய்?”

“கண்ணனுக்கொரு கடிதம் எழுதுங்கோ என்ன மாதிரி தங்கச்சியின்ரை சடங்கை செய்ய யோசிச்சிருக்கிறமெண்டதை. நாங்கள் ஆக்களுக்குச் சொல்லக்கிடையிலை அவன்ரை காசு இஞ்சை வந்திடும்”

“பத்து வருசமாய் அவன் காசனுப்பிக்கொண்டுதானிருக்கிறான். சாப்பாட்டுக்கு, கலியாணத்துக்கு, வருத்தம், துன்பம், எல்லாத்துக்கும் அவன்தான் தாறான்” அம்மாவுக்குக் கண் கலங்கிறதைக் கண்டும் காணாதமாதிரி..

“அவன் உங்கடை சொந்தப் பிள்ளை. பெரிசான தங்கச்சியின்ரை சொந்தத் தமையன். அவன் செய்ய விரும்பினாலும் நீங்கள் விடமாட்டியள் போல”

அம்மா கனக்க யோசிக்கிறா. அவவுக்கு மட்டும் விருப்பம் இருக்காதே. காசுக் கணக்கைப் பாத்துத்தான் சின்னனாய் செய்வம் எண்டிருப்பா. கண்ணன் காசனுப்பி அந்த மாதிரி அட்டகாசம் பண்ணப்போறா. எப்படியும் அம்மாதானே..!

 

அம்மா

அவள் சொன்னது சரிதான். ஆனா எல்லாத்துக்கும் கண்ணனென்டால்..

பிள்ளையின்ரை கடிதத்தை மடிக்குள்ளிருந்து எடுத்தாள். ரண்டாவது மோள் வாச்சுக் காட்டினது. திருப்பிப் படிக்க கண்பார்வை பத்தாட்டியும் மடியிலை முடிஞ்சு வைச்சிருக்கிறதிலை ஒரு…

…. நீங்களே ஒரு பொம்பிளையைப் பாத்து முடிச்சாத்தான் நான் ஏஜென்சியைப் பிடிச்சு இஞ்சை கூப்பிடுற அலுவலிலை இறங்கலாம். இப்ப வெளிக்கிட்டாலே எப்பிடியும் இஞ்சை வந்து சேர ஒண்டு ஒண்டரை வருசமாகும். எல்லா ரூட்டும் இப்ப கரைச்சல். அடுத்த கடிதத்திலை போட்டோவையும் மறக்காம அனுப்பி விடுங்கோ…….

எதைச் செய்ய..?

பொம்பிளை தேடுறதா..?

மோளின்ர சடங்கைப் பற்றி எழுதுறதா..?

அண்டாடச் செலவைப் பற்றியா…? அல்லாட்டி புதிசா வேண்டின கடனுகளைப் பற்றியா..?

சீதனம், கலியாணம், சடங்கு, சண்டை, பங்கர், அகதிமுகாம், பட்டினி, வருத்தம், பிணியள்.. எத்தினையைச் சந்திச்சாச்சு. இனிச் சாவொண்டுதான் மிச்சம்.

கண்ணன்

பன்ரண்டரைக்குத்தான் கடைசி ஆளும் சாப்பிட்டு முடிஞ்சு வெளியேறியது. மிக வேகமாய் கோப்பைகள், பாத்திரங்களைக் கழுவி, தரையைச் சுத்தமாக்கி, நாளைய சமையலுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து வைத்துவிட்டு றெஸ்ரொறண்டை விட்டு வெளியே வருகையில் கடைசி ட்ராம் வந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் ஏறி பின் இருக்கையில் சரிந்தபோது…. அப்பாடா!

ட்ராமில் பியர்வெறியில் பாடிக்கொண்டிருந்த ஒரு டொச்சுக்காறரைத் தவிர வேறு யாருமில்லை. இந்த நேரத்தில் ஆர் வரப்போகினம். அவனவன் வீட்டிலையிருந்து பியரடிச்சுக் கொண்டோ, ரீ.வி. பாத்துக் கொண்டோ, மனிசியோடை கொஞ்சிக் கொண்டோ கிடப்பான்.

தலையிடி. இண்டைக்குப் பேய்ச் சனம் சாப்பிட வந்திட்டது. குசினிக்குள்ள ரண்டு பேர் மட்டும். கூட ஆக்களை வேலைக்குப் போட்டா செவ்வுக்கு நட்டமாம். நல்லா முறிஞ்சாச்சு. கையைப் பாக்க யுராஸிப்பாக் டைனோசோரின்ர தோலைப் போல.. பாத்திரங்கள் கழுவுறதுக்கென கெமிக்கலை எங்கைதான் தேடிப் பிடிச்சு மலிவாய் வேண்டியாறானோ..? கையைத் திண்டிடுகுது. அக்காவின்ரை கலியாணத்துக்கெண்டு கடன்பட்ட காசைக் குடுத்து முடிச்சா இந்த சனியன் பிடிச்ச வேலையை விட்டுட்டு…..

ட்ராமிலிருந்து இறங்கி வழக்கம் போல பெட்டிக்கடைக்குப் போய் ஒரு பியர் வாங்கிக் குடிக்கையில்…. ஆகா ஆனந்தம். பசி. றெஸ்ரொறண்ட் எண்ணெய் சக அசிங்கத்தை நினைச்சா அங்கை சாப்பிட வெறுக்குது. இண்டைக்குச் சாப்பிடேலை. வீட்டை போய்ச் சமைக்கலாமா? சாமத்திலை உலை வைச்சு…. கறி வைச்சு…. விடிஞ்சிடுமே. ஆர் இருக்கினம் சாப்பாடு தர? பட்டினிதான்.

அறைக்கு வந்த போது வெறுமை. சேகரின் அறை பூட்டியிருந்தது. பத்து வருச றூம் மேற். கலியாணம் கட்டின நாளிலிருந்து அறையைப் பூட்டிக்கொண்டுதான் படுக்கிறான் மனிசியுடன். மூண்டு மாதத் தம்பதிகள். என்னென்ன செய்யக் கிடக்கோ..!

உடுப்பு மாற்றி, முகம் கழுவி, சாறத்துக்கு மாறி, கட்டிலுக்கு வந்தபோது பக்கத்து அறையில் சேகரும் மனிசியும் கிசுகிசுத்துக்கொள்வது கேட்டது.

ஜேமனிக்கு வந்த நாளிலையிருந்து ஒண்டாயிருந்த எல்லாருமே கலியாணம் முடிச்சிட்டாங்கள். சேந்து சாப்பிட்டு, குடிச்சு, முஸ்பாத்தி பண்ணின எல்லாருமே பெண்சாதிமார் வர தனி அறை எடுத்துக்கொண்டு போட்டாங்கள். சேகரும் வேறை அறை பாக்கிறதாய் சொல்லியிருக்கிறான். பிறகு… நான் தனியத்தான். நானே சமைச்சு, நானே சாப்பிட்டு, நானே படம் பாத்து, நானே சோகப்பாட்டு கேட்டு, நானே படுத்து… சாய் இன்னும் எத்தினை நாளைக்கு…. வெக்கத்தைவிட்டு அம்மாவுக்கு எழுதியாச்சு. எப்பிடியும் பதில் .. இண்டைக்கேதேன் கடிதம்..?

மேசையில் வெளிநாட்டுறை. பக்கத்திலை ஒரு சின்னத் துண்டு. மத்தியானம் அக்கா வவுனியாவிலிருந்து போன் பண்ணினவா. நாளைக்குக் காலமை இந்த நம்பரிலை நிப்பாவாம். கட்டாயம் எடுக்கட்டாம். சேகர்தான் எழுதி வைத்திருக்கிறான். என்னத்துக்கு அக்கா போன் பண்ணினா..! பிள்ளையள் ஆருக்கேன் சுகமில்லையோ..? ஆமிக்காறங்கள் பிரச்சினையோ..? நாளைக்கு அடிச்சுக் கதைச்சாப் போச்சு. ரெலிபோனுக்கும் காசு கட்டாம சிவப்புத் துண்டு வந்திட்டது.

கடிதத்தை எடுத்து விலாசம் பாத்தால்…. அம்மா! பளிச்சென்று சின்ன சந்தோசம். உடைக்காமல் தடவிப்பார்த்தால்..? உள்ளுக்கை போட்டோ இருக்கிற மாதிரித் தெரியேலை. சில வேளை நெகரிவ்தான் கிடைச்சிருக்கும்.

வேகமாய் உடைத்து….. அக்காவின்ரை எழுத்து. அம்மா சொல்லச் சொல்ல எழுதியிருக்கிறா. பொம்பிளை பாக்கச் சொல்லி எழுதினதையும் அவதான் வாசிச்சுக்காட்டியிருப்பா. வெக்கமாயிருந்தது. இந்தக் கடிதத்திலை ஏதாவது பகிடி விட்டிருப்பா.

ஒரே மூச்சில் கடிதம் முடிஞ்சிது. ”……….. இப்படிக்கு உன்ரை அம்மா’ வரை எந்த இடத்திலையும் கேட்டெழுதின விசயத்தைப் பற்றி மூச்சே விடயில்லை.

மறந்து போச்சினமோ?

வேணுமெண்டு விட்டிட்டினமோ?

சீ.. ஏனிப்படி நினைப்பான். அவை ஆர்..? என்ரை அம்மா, என்ரை சகோதரங்கள். அநேகமாய் போட்ட கடிதம் கிடைச்சிருக்காது. வெளிநாட்டுக் கடிதம் எண்டபடியால உள்ளுக்கை காசு கிடந்தாலும் கிடக்குமெண்டிட்டு ஆரென் உடைச்சிருப்பாங்கள். நாசமாய்ப் போக. இப்ப….

தங்கச்சியின்ரை சாமத்தியச் சடங்கு!

எடுத்த கடனுகள் முடியேலை. இதுக்கு..? ஆற்ற காலிலை விழுகிறது? வாங்கிற முக்காச்சம்பளத்திலை வட்டி கட்டி, வீட்டு வாடகை, கறன்ற், குப்பைக்குக் கட்டி.. ஐயோ உலக வங்கியா கடன் தரப்போகுது.

லைற்றை நிப்பாட்டிக் கட்டிலில் விழுந்தபோது மனசு பாரமாயிருந்தது. காசுக் கணக்குகள் மின்னி மறைந்தன. சாமத்து நிசப்தத்தில் பக்கத்து அறையிலிருந்து முனகல்கள் கேட்டன. சேகரும் அவன்ரை மனிசியும்.

சேகர் இப்ப என்ன செய்து கொண்டிருப்பான்..?

முனகல்களைத் தவிர்க்க ரி.வி.யை உயிர்ப்பித்தால்…. நிலமை தெரியாமல் யாரோ யாருக்கோ கொஞ்சியபடி உடுப்புகளை அவசரமாய் அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.

சேகர் இப்ப என்ன செய்துகொண்டிருப்பான்..?

கசியும் முனகல்களில் ரி.வி.யின் காட்சிகளில் உடலின் வெக்கையில் அறை திமிறிறது.

கை சாறத்துக்குள் நழுவியது.

மனசும் உடலும் இறுகி இறுகி….

திகைத்து…..

இளகத் தொடங்குகையில்….

கண்களுடன் சாரமும் ஈரமாகியது….

 

——————–

பார்த்திபன்

1994

ஓவியம்: மணிவண்ணன்

Leave a comment