ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும்

தலைக்குக் குளித்து, தூசுகளைத் தற்காலிகமாக விரட்டியபின் உடை மாற்றிக்கொண்டு உதயன் வெளியே வந்தான்.

காந்தனிடம் மாறிய காசின் ஒரு பகுதியை இன்று கொடுப்பதாகத் தவணை. சம்பளத்தை வங்கியிலிருந்து வழித்தாயிற்று.

முடிவதற்குள் கூடுமானவரையில் கடன்கள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் பின்னர் பல்லிளிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

பஸ்தரிப்புக்கு வந்து காத்து நிற்கையில் வேலை செய்யும் போதிருந்த இறுக்கம் தளர்ந்து இலேசானான்.

விஞ்ஞானத்தால் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட வெயில் உக்கிரமாயிக்க, பலர் இயலுமானவரை தங்கள் உடம்பைப் பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

‘வேர்த்தால் நல்லாயிருக்கும்’ என்று நினைத்துக்கொண்டான். பலர் தாங்கிக் கொள்ள மாட்டாமலிருந்தார்கள்.

நாற்பத்தியேழாம் இலக்கம் வந்து, கதவுகளை விரிக்க, மாதச்சீட்டு வைத்திருந்ததால் சாரதியிடம் போகாமல், பின் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தான்.

பஸ் ஓடத் தொடங்கிய பின்னரும் புழுக்கமாயிருக்க, காரணத்தை ஆராய்ந்த போது, குட்டி யன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. அருகே இரண்டு அழகிய கிழவிகள் ஏதோ ஒரு நிகழ்வை தங்களுக்கே உரித்தான பாணியில் இழுத்துக்கொண்டிருந்தார்கள். எழுந்து யன்னலைத் திறக்க நினைத்தவன் அவர்களில் அழகாக வைக்கப்பட்டிருந்த தலைகளைப் பார்த்ததும் ‘ஏசுங்கள்’ என்று பேசாமலே இருந்துவிட்டான்.

கண்ணாடி யன்னலுக்கு அப்பால் அழகிய நீட்டுக் கட்டிடங்கள் பிரமாண்டமாய் ஓடி மறைந்தன.

‘எத்தினை சனங்களை வீடில்லாம தெருவுக்கு அனுப்பிப் போட்டு கட்டிடங்களை உயத்திக் கொண்டு போறாங்கள். அந்தப் பதினைஞ்சாவது மாடியில, மூலையில, குசன் கதிரையில சுத்திக் கொண்டு, பத்து ரெலிபோனில ஒண்டை எடுத்து, இன்னொரு கட்டிடம் வாங்கிறதைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறவனுக்கு எப்பிடி உவ்வளவும் முடிஞ்சிது? பிறக்கேக்கயே டொலரையும் எண்ணிக்கொண்டா பிறந்தவன்? ஒண்டில் உவன் தானே சொந்தமாய் மற்றவையைத் தட்டிச்சுத்திச் சேத்ததாய் இருக்க வேணும். அல்லாட்டி உவன்ரை பரம்பரை வாரிசுக்கு விட்டுப் போட்டு கல்லறைக்கை கிடக்க வேணும். உவன் ஒருத்தனை பதினைஞ்சாவது மாடியில வைக்கிறதுக்கே எத்தினை சனத்தை நாசமாக்கியிருப்பாங்கள்…

இறுக்கமான, கட்டை உடுப்புகளுடன் உதயனுக்கு முன்னாலிருக்கையில் வந்தமர்ந்த மாணவனும், மாணவியும் இருந்தாற்போல ஒருவர் உதட்டை மற்றவர் கவ்வி சத்தம் செய்யாமல், தீவிர தேடுதலில் இறங்கினார்கள்.

அவர்களுடைய தொலைக்காட்சிப் பெட்டிகளும், கதைப் புத்தகங்களும் இப்படிக் கனக்க விளையாட்டுக்களை சொல்லிக் கொடுத்திருந்தன.

அவர்களுக்கு எதிரேயிருந்த இரண்டு சிறுவர்கள் இவர்களின் முயற்சியைப்பார்த்து தங்களுக்குள் ஏதோ கெட்ட சமாச்சாரம் சொல்லிச் சிரித்துக்கொண்டார்கள்.

முதலில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உதயன் மறுபடி மாவன்னாக் கானாவால் பார்த்தான்.

‘இந்த முதலாளித்துவம் தங்கட நலத்துக்காக கலாச்சாரத்தை எப்பிடியெல்லாம் சீரழிச்சு வைச்சிருக்குது. இப்ப முன்னுக்கு வாய் சூப்பிக் கொண்டிருக்கிற பெடியனிட்டயும், பெட்டயிட்டயும் எவ்வளவு பொறுப்புகள் இருக்குது. எங்களை என்னத்துக்காண்டி இந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் படிப்பிக்குது? எப்பிடியான படிப்பைச் சொல்லித் தருகுது? படிச்சு முடிய எங்களை எப்பிடிப் பயன்படுத்தப் போகுது? ஆரோ கொஞ்சப் பேரை மட்டும் வசதியாய் வாழ வைக்க எங்களை
எப்பிடிப் பிழியப்போகுது? இதுகளுக்குச் சம்மதமில்லாட்டி றோட்டில நிக்கப் போறோமே எண்டதையெல்லாம் இவை யோசிக்க வேணடாமே? அதுசரி இப்பிடியெல்லாம் இளசுகள் யோசிச்சுப் போடப்படாதெண்டு தானே அரசாங்கங்கள் கலாச்சாரத்தை சீரழித்து ஆக்களை இப்பிடி வேற மயக்கத்தில வைச்சிருக்கு`

பஸ் சிவப்புக்கு நின்று, மஞ்சளுக்கு உறுமி, பச்சைக்கு மறுபடி ஓடியது. ஒழுங்கான சாலை விதிகளின்படி வாகனங்கள் மயிரிழையில் விலத்திக் கொண்டிருந்தன. கோடைகாலச் சம்பிரதாயமாக ஆங்காங்கே பாதையைக் கிளறிக் கொண்டிருந்தார்கள்.

உதயன் பஸ்ஸிலிருந்து இறங்கி, கட்டிடக் குவியல்களுக்குள் காந்தனின் அறையை நோக்கிப் போனான். வேலை செய்கின்ற படியினால் அவனால் அகதிகள் விடுதியிலிருந்து விடுவித்து தனியாக வசிக்க முடிந்தது. சுற்றிலும் டொச் அயலவர்கள். அதனால் அவனது வசிப்பிடமும் தமிழிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது.

அழைப்பு மணியை அழுத்தி, திறக்கப்பட்ட, வாசற் கதவால் படிகளேறி, காந்தனின் அறைக்குள் போனபோது அங்கு ஏற்கெனவே யோகேஸ்வரன், சண்முகநாதன், ரவீந்திரன் அமர்ந்து ரீ.வி.யில் ஸ்ருடியோ அயன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேற்கு நாடுகளின் அணு இரசாயனக் கழிவுகளை தென்னாபிரிக்காவின் ஒரு மூலையில் ஆறுதலாக இறக்கிக்கொண்டிருந்தார்கள்.

”வேலை முடிஞ்சு நேரவாறாய் போல” ரவீந்திரன் உதயனை விசாரித்தான்.

”உம்” என்றபடி அவர்களருகில் அதே செற்றியில் உதயனும் அமர்ந்து கொண்டான்.

”டேய் உதயன் வந்திட்டான். இனி தொழிலாளி, முதலாளியெண்டு அறுக்கப் போறான். முதல் உந்தப் புறோக்கிறாமை மாத்துங்கோடா” சண்முகநாதன் எச்சரித்துவிட்டு, மூத்திரம் பெய்யப் போக, ஏனையோர் புன்னகைத்துக் கொண்டார்கள்.

”நக்கலாயிருக்கென்ன?” உதயன் அம்பத்தாறு சென்ரிமீற்றருக்குள் தென்னாபிரிக்காவில் நிகழும் கொடுமையைப் பார்த்தான். வேக ஆரம்பித்தது.

சமையலறையில் நான்கு பேருக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த காந்தன் உதயனின் வரவு கேட்டதும், சுடுதண்ணியை மட்டும் மேலதிகமாகப் பாவித்து ஐந்தாக்கினான். ரவீந்திரனுக்கு மட்டும் சீனியை குறைத்துப் போட்டான்.

ஏனெனில் அவன் டொச் பெட்டையைச் சிநேகிக்கிறான்.

போட்டு முடித்துதும், ஊர்த் தேத்தண்ணிக்கடைப் பாணியில் ஐந்து கிளாசுகளையும் இரண்டு கைகளில் கொண்டு வந்து, செற்றிக்கு முன்னாலிருந்த வட்ட மேசையில் வைத்தான்.

”என்னடாப்பா, வந்திருக்க முந்தி ரீ கொண்டு வாறாய்” உதயன் தென்னாபிரிக்காவில் கவனம் வைத்தபடி சும்மா கேட்டு வைத்தான்.

”இது பெரிய வேலையே? தண்ணிதானே?” காந்தன் தொழில் நுணுக்கத்தை மறைக்கவில்லை.

”இந்தியனாமி போகுதாம்” சண்முகநாதன் ரொய்லற்றிலிருந்து வெளியே வந்தான்.

”கிழிச்சாங்கள். சும்மா பேக்காட்டுறாங்கள். அறுநூறு கப்பலிலை போக ஆயிரம் பிளைற்றில பலாலிக்கு வரும். காயம் பட்டவை, வருத்தக்காறரை எடுத்துப்போட்டு பிறெஸ்சா புது ஆக்களை அனுப்புற மெதேட்தான் உது” என்ற உதயன் தேநீரை எடுத்துக் கொண்டான்.

தென்னாபிரிக்கா முடிந்து வேறு நிகழ்ச்சி வர, காந்தன் ரீ.வியை அணைத்தான்.

பார்ப்பதைவிட கதைப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். வாரத்தில் நாலைந்து நாட்கள் இப்படி ஒன்றுகூடி பலதையும் பிறகு பத்தையும் ஆராய்வார்கள்.

ஆளாளுக்குத் தேநீரை உறிஞ்சி அன்றைய விவாதங்களுக்குத் தங்களைத் தயாராக்கினார்கள்.

”ஏன்ராப்பா இந்தியனாமி போக வேணுமெண்டு விரும்புறாய்? அவங்கள் போனா பழையயபடி சிலோனாமியெல்லே வந்திடும்?” யோகேஸ்வரன் இக் கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறான். அவனுக்கு இந்திய இராணுவம் திரும்பிப் போவதில் அவ்வளவு சம்மதமில்லை. இலங்கை இராணுவத்தின் அபாயம் இருக்கிறதென்பதால் மட்டும்.

”அந்நிய இராணுவம் எங்கட மண்ணில ஏன் இருக்க வேணும்? அப்பாவிச் சனங்களைப் படுகொலை செய்து, பொம்பிளையளைச் சித்திரவதைப்படுத்தி, படிப்பை நாசமாக்கி… இப்பிடியெல்லாம் அட்டகாசம் செய்யிற இராணுவத்தை இதே மாதிரியான வேற இராணுவம் வரப்படாதெண்டதுக்காண்டி நீ உன்ரை பாட்டில செய்யெண்டு விடுறதே?” என்றான் சண்முகநாதன்.

”யாழ்ப்பாணச் சனந்தான் இந்தியனாமியை போகச் சொல்லுது. மட்டக்களப்பு, திருகோணமலைச் சனங்கள் போக வேண்டாமாம். இதுக்கென்ன சொல்லுறாய்?” யோகேஸ்வரனும் விடவில்லை.

”இதுதான் இந்தியாவின்ரை கெட்டித்தனம். பிரித்தானியற்றை பிரிச்சாளும் தந்திரத்தை இந்தியனரசாங்கம் இப்ப புது மெதேட்டில பாவிக்குது. வடக்கில தமிழ்ச்சனத்துக்கெதிராயும், கிழக்கில சப்போட்டாயும் இருக்குது. கிழக்கில இப்போதைக்கு இந்தியனாமி சப்போட்டாயிருக்கெண்டதுக்காண்டி ஒரு பயங்கரவாத இராணுவத்தை ஆதரிக்கலாமே? மற்றது எவ்வளவு நாளைக்கு ஆமி கிழக்கில அமைதியா இருக்கப் போகுது? அங்கயும் கெதியில முகமூடியைக் கிழிக்கத்தான் போகுது” சண்முகநாதனும் தன் பக்க நியாயங்களை விடுவதாயில்லை.

”இதைவிட இலங்கை பேரினவாத அரசைக் குறி வைச்சு நடத்தத் தொடங்கின போராட்டம் எப்பிடி இப்ப சிதைஞ்சு போச்சுத் தெரியுமே? ஆளாளுக்குக் குழுவாய் பிரிஞ்சு தங்கட பலத்தைக் காட்டுறதுக்காண்டியும், பதவியளுக்காண்டியும் பொது எதிரியையும் மறந்து கொலையும், கொள்ளையுமாய் தங்கட சுயரூபத்தைக் காட்டிக்கொண்டு நிக்கினம்” என்றான் உதயன்.

”நீ தானே சொன்னனி. இவ்வளவு நாளும் நாட்டில நடந்தது ஏதோ குட்டி முதலாளியளின்ரை போராட்டமெண்டும் இனி நடத்தப் போறதுதான் தொழிலாளியளெண்டும். பிறகேன் இப்ப நடக்கிறதைப் பற்றி கவலைப்படுறாய்?” சண்முகநாதன் புரியாமல் கேட்டான்.

”உனக்கு நான் சொன்னது விளங்கேல. தேசிய விடுதலைப் போராட்டத்தை எப்பவும் குட்டி முதலாளியளும், பூர்சுவாக்களுந்தான் முன்னெடுப்பினம். ஏனெண்டால் அந்தத் தேவை அப்ப அவைக்குத்தான் அவசரமாயிருக்கும். இந்த வர்க்கத்தால நடத்தப்படுற போராட்டத்தில இப்பிடித்தான் பின்னடைவுகளும், சமரசங்களும், பேரங்களும் சகசமாய் நடக்கும். இந்த வர்க்கத்தால தொடங்கப்பட்ட போராட்ட அலையை உண்மையான மக்களுக்கான, மக்களின்ரை உண்மையான விடிவக்கான போராட்டமாய் மாத்த வேண்டினதுதான் இனிச் செய்ய வேண்டினது. அதுக்கு இப்ப இருக்கிற சந்தர்ப்பம் பாவிக்கப்படாம, நடத்தின போராட்டத்தையே கேலிக்கூத்தாக்கி, போராட்டத்தைப் பற்றின வெறுப்பை சனங்களுக்கு மத்தியில இயக்கங்களும் இராணுவங்களும் விதைச்சுக் கொண்டிருக்கிறதை எப்பிடிக் கண்டுகொள்ளாம இருக்கலாம்?” என்று உதயன் சொன்னது நிச்சயமாக யோகேஸ்வரனுக்கு விளங்கவில்லை.

”என்னடாப்பா கதைக்கிறியள்? குட்டி, கண்டு, பூர்சுவா, புண்ணாக்கெண்டு.. உதையெல்லாம் விட்டுப்போட்டு எல்லாருக்கும் விளங்கிறமாதிரிக் கதையுங்கோவன். அட்வான்ஸ்லெவல் படிச்சுப் போட்டு கைபிஸ்கஸ்அறோசா சைனன்சிஸைப் பிடுங்கித் தலையில வை எண்டு சொல்லுற மாதிரித்தான் உங்கட கதையளும். அஞ்சாறு புத்தகத்தைப் படிச்சுப்போட்டு உங்களுக்குத் தெரிஞ்ச சொல்லுகளை வைச்சு விளாசினா நாங்கள் ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறதே?”

சண்முகநாதனும் ”அதெண்டா உண்மதான்” என்று ஒத்தூதினான்.

ரவீந்திரன் இவற்றில் அதிகம் பற்றில்லாமல் ரீ.வியை உயிர்ப்பித்து, ஆர்.ரி.எல்லைப் பிடிக்க, விளம்பர நிகழ்ச்சியில் ஷம்புவையும் பெண்ணையும் காட்டினார்கள். அந்தப் பெண் நிச்சயமாக முழு உடம்பையும் காட்டுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, காந்தன் ரிமோட்கொன்றோலரை எடுத்து ரீ.வியை சாகவைத்தான்.

”ஏதோ பெரிசாக் கிழிக்கிற மாதிரி இஞ்ச கிடந்து வாய் கிழியக்கத்துகினம்” ரவீந்திரன் முணுமுணுத்தான்.

உதயன் மறுபடி ஆரம்பித்தான் ”யோகேஸ் சொல்லுறிதலயும் நியாயமில்லாமலில்லை. இப்பிடிச் சொல்லுகளை, இந்த விசயங்களைப் படிக்கிறதுக்கு எங்களுக்கு முந்தி எப்ப சந்தர்ப்பம் கிடைச்சது? ஆர் சொல்லித் தந்தது? அல்லாட்டி நாங்களாவது அக்கறை காட்டினனாங்களோ? எங்களுக்கு மறைக்கப்பட்ட விசயங்களை நாங்களாத் தேடிப் படிக்கிற மட்டும் இப்பிடியான சொல்லுகள் அந்நியமாய்த்தானிருக்கும். முதல் சொன்னதையே விளங்கப்படுத்திச் சொல்லுறதெண்டால் சனங்களின்ரை வயித்தில அடிக்காம கடையைப் பூட்டுங்கோ எண்டு சொன்னால் கடைக்காறர்
கடையளைத் திருப்பியும் திறக்கத்தான் போராடுவினமே தவிர சாமான்கள வாங்கேலாம பட்டினி கிடக்கிற சனத்துக்கு விடிவுவாறதுக்காண்டி போராட மாட்டினம். ஆனா பசியோட தெருவில இருக்கிறவைக்கு மற்றவையின்ரை கஸ்டங்களையும் புரிஞ்சுகொள்ளுற உணர்விருக்கு. அதாலதான் இந்தச் சனங்கள் போராடேக்க தங்களுக்காண்டி மட்டுமில்லாமல், தங்களைப் போல இருக்கிற எல்லாச் சனங்களுக்காண்டியும் போராடுவினம். தாங்கள் சார்ந்திருக்கிற வர்க்கத்தின்ர நிலையின்படிதான் ஒவ்வொருத்தற்றை உணர்வும் செயற்பாடும் இருக்குது. இப்ப மாணவரை எடுத்துப் பார். மாணவர்களின் மரணமெண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறித்கையொண்டு தூண்டில்லயோ, புதுமையிலேயோ என்னவோ ஒரு புத்தகத்திலை வந்திருந்தது. மாணவரில ஆமியைக் கைவைக்க வேண்டாமென்டு கோரிக்கை விட்டிருந்தினம். இதையே மக்களிலை ஆமி கைவைக்கக்கூடாதெண்டா எவ்வளவு பெரிய அர்த்தமுள்ளதாயிருக்கும். ஏன் இப்பிடி எழுதேலாமப் போச்சு? பல்கலைக் கழக ஒன்றியம் சாந்திருக்கிற நிலதான். ஒவ்வொருத்தரும் தங்கட வர்க்க குணாம்சத்துக்கேத்த மாதிரிதான் போராடுவினம். இதாலதான் இப்பிடியான வர்க்கப் பிரிவுகள் இல்லாத சமுதாயத்திற்காகப் போராடக் கூடிய உழைக்கும் மக்களை போராட்டத்துக்கு முதன்மைப்படுத்துறம்”

”சாடையா விளங்கிற மாதிரியும் இருக்குது. சிக்கலாக் கிடக்கிற மாதிரியும் தெரியுது” என்று யோகேஸ் இழுத்தான்.

”எனக்கொரு சந்தேகம்” என்றான் சண்முகநாதன்.

”என்ன?”

”தொழிலாளி, தொழிலாளியெண்டு நெடுகச் சாகிறாய். அதென்னெண்டு தொழிலாளியள் பாட்டாளியலாலதான் எல்லா மக்களுக்குமாய் போராடலாமெண்டு அடிச்சு சொல்லுறாய்?”

”அதுதான் முதலே சொன்னனே. ஒவ்வொரு வர்க்கமும் தனக்கேயுரிய குணம்சத்தைக் கொண்டிருக்குமெண்டு. உழைக்கும் வர்க்கம்தான் அடிமைப்பட்டுக்கிடக்கு. அதாலதான் கொஞ்சப் பேர் மட்டும் பணக்காரராய் எல்லாச் சுகபோகத்மையும் அனுபவிச்சுக் கொண்டிருக்க கனபேர் ஒரு நேரச் சாப்பாட்டுக்கே திண்டாடுயினம். இப்பிடி அநியாயமான முறையில சமூகப் பிரிவுகள் இருக்கிறதை மாத்தி, எல்லாரும் சமமாய் வாழுற சமூக மாற்றத்திற்காய் ஒடுக்கப்படுற பெரும்பான்மைச் சனங்களாலதான் முடியும். ஒடுக்கு முறையாளரிட்டயும், ஆளும் வர்க்கத்திட்டயும் இல்லாத மனிதம் இந்தச் சனங்களிட்ட இருக்குது”

”கொஞ்சம் பொறு. புரிந்துணர்வு இருக்கெண்டு சொல்லுறாய். சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறன். எத்தினை ஸ்ரைக்குகள் நாட்டில நடக்குது. சி.ரி.பி. ஸ்ரைக்கெண்டா அவங்கள் மட்டுந்தானே வேலைக்குப் போகாம நிக்கிறாங்கள். சீமென்ற் பக்றிக்கு ஆக்கள் வேலைக்குப் போகினம் தானே? இதில புரிந்துணர்வு எங்க போட்டுது? ஒரு பகுதி தொழிலாளற்றைக் கஸ்டத்தை மாற்ற, பகுதித் தொழிலாளரால ஏன் புரிஞ்சு கொள்ளேலாமப் போச்சு?”

”மணிக் கேள்வி” என்றான் யோகேஸ்வான்.

”நீ சொல்லுற மாதிரித்தான் உண்மையில நடந்து கொண்டிருக்கு. காரணம் சரியான முறையில ஆரும் அரசியல் மயப்படுத்தப் படேலை. தங்களைப் பற்றின சரியான மதீப்பீடுகளைக் கொண்டிருக்கேல. மனுசத்தன்மையும், புரிந்துணர்வும் இருந்தா மட்டும் போதாது. அவற்றை சரியானபடி வைச்சிருக்க சமூக விஞ்ஞானத்தில் தெளிவும் வேணும். இதுதான் இப்ப உள்ள கடமை. நீயே பார். ஒழுங்காய்ப் பள்ளிக்கூடத்துக்குப போய், தூக்கேலாத புத்தகங்களையெல்லாம் படிச்சு, விசயங்ளைத் தேடிக்கொள்ள வசதியிருந்தும் சரியானதைத் தேடிக்கொள்ளாத எங்கட நிலைமையளே எங்களுக்கு இப்பதான் விளங்குதெண்டா, ஒரு நேரச் சாப்பாட்டை மட்டுமே குறியா வைச்சு வேலைக்குப்போற ஒரு கூலித் தொழிலாளி, சமூக விஞ்ஞானத்தைப் படிக்கிறதெங்கை? இதைப் புரிஞ்சுகொண்டு அந்தச் சனங்களுக்குப் புரியிற மொழியில, அவையின்ரை பலத்தை அவைக்கே உணர்வுபடுத்தி, அதை அவை பயன்படுத்த வேண்டிய அவசியத்தைத் தெளிவுபடுத்துறதுதான் இப்ப முற்போக்காளர் எண்டு தங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறவை, சமூக, விஞ்ஞானம் படிச்சவையின்ரை கடமை”

”நாயன்மாற்றை குருபூசைக்கு கோயிலில நித்திரை கொண்டுகொண்டு பிரசங்கம் கேட்ட மாதிரி இருக்குது” என்றான் ரவீந்திரன்.

”என்னவோ நீ எல்லாத்துக்கும் மறுமொழி சொல்லிப்போடுறாய். எனக்கெண்டா உதெல்லாம் சரிவரும் போல தெரியேலை” யோகேஸ் சொன்னான்.

”மாற்றம் வரும் என்பதில் மாற்றமேயில்லை”

”தேவர் பிலிம்ஸ் படங்களில தொடங்கேக்கையும், முடியேக்கையும் யானை வந்து பிளிறுறது மாதிரி நீயும் உந்த வசனம் சொல்லுறதை நிப்பாட்டவே இல்லை” என்று சண்முகநாதன் சொல்ல, உதயன் சிரித்துக் கொண்டான்.

”இனியெண்டாலும் ரீ.வி. போடட்டே?” ரவீந்திரன் பரிதாபமாய்க் கெஞ்ச, ”போட்டுத்துலை” என்று காந்தன் அனுமதியளித்தான்.

மறுபடி ஆர்.ரி.எல். அலைவரிசை வந்து ரென்னிஸ் காட்டியது. கொஞ்ச நேரம் பந்தையும், நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்த பெண்களின் கால்களையும் கமரா ரசித்துக் கொண்டிருக்க, ரவீந்திரனும் பின்னதில் ஆர்வமாயிருந்தான்.

உதயன் கொடுக்க வந்த காசைக் காந்தனிடம் கொடுத்து, மிகுதியை தருவதற்குப் பிறிதொரு தவணையை வைத்தான்.

மேலும் கொஞ்ச நேரம் இருந்து கதைத்துவிட்டு ”விடிய வேலை” என்று விடைபெற்று வெளியேறினான்.

வீட்டுக்கு வந்ததும் களைப்பாயிருந்தது. இன்று சமைக்க வேண்டாம் போல் தோன்றியது. உடுப்பை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்தான். தூக்கம் உடனே வரும் போலில்லை.

மேசைக்கு வந்து குவியலாயிருந்த புத்தகங்களுள் நுஃமானின் திறனாய்வுக் கட்டுரைகளை எடுத்துக் கொண்டு கட்டிலுக்கு வந்து பிரித்தான். கடைசியாகப் படித்ததற்கு அடையாளமாக வைக்கப்பட்டிருந்த தம்பியின் எயர்மெயிலை வெளியே வைத்துவிட்டு ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழியைத் தொடர்ந்தான்.

மறுநாள் தொழிற்சாலைகள் பழையபடி கட்டாய சுறுசுறுப்பாயிருந்தான். ஏகப்பட்ட இரும்பு சமாச்சாரங்கள். தகுந்த பாதுகாப்பு உடைகள், கவசங்கள் எதுவுமில்லாமல் நெருப்பு வெக்கையிலும், இரும்புத் துகள் மண்டலத்திலும் பலர் உடைத்துக் கொண்டிரு-இல்லை-உழைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

யோகேஸ்வரன் சூடேறிய இரும்புகளை வெளியே அடுக்கிக் கொண்டிருக்க, உதயன் வேறொரு பக்கத்தில் வர்ணம் பூசிக்கொண்டிருந்தான். எங்கும் இரைச்சல் நிரம்பியிருந்தது.

”என்ன இன்று சந்தோசமாயிருக்கிறாய்?” உதயன் பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அற்றில்லா இல்கான் எனப்படும் இல்கானை விசாரித்தான்.

இல்கான் ஒரு குர்டிதிஸ்தானியன். உதயன் போலவே அவனும் அரசியல் தஞ்சம் கோரியிருந்தான். இதே தொழிற்சாலையில் பல வருடங்களாக முறிந்து கொண்டிருக்கிறான்.

”மனைவி கடிதம் போட்டிருக்கிறாள். மகள் கூட அப்பாவுக்குப் படங்கள் வரைந்திருக்கிறாள் ”

இல்கானின் மனைவியும் அவனுடன் மேற்கு ஜேர்மனிக்குத் தப்பித்து வரவில்லை. அப்போது அவள் குழந்தையைக் கர்ப்பத்தில் வைத்திருந்தாள். இல்கான் கையில் அகப்பட்டால் அவனின் தலையைச் சீவுவதற்கு துருக்கி அரசின் ஏவற் படை தயாராகவிருந்தது.

”இந்தக் குழந்தைக்காகவாவது நீங்கள் எங்காவது தப்பிப்போய்த்தான் ஆக வேண்டும்” என்று மனைவிதான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள். அவனது நண்பர்கள்கூட ”வெளிநாட்டில நீ இருந்தால் எங்கள் காரியங்களுக்கும் பயன்படலாம்” என்று தெரிவித்திருந்தார்கள். இவற்றையெல்லாம் பல தடவைகள் உதயனிடம் சொல்லி இல்கான் கலங்கியிருக்கிறான்.

”சுகமாக இருக்கின்றார்களாமா?” என்று உதயன் சம்பிரதாயமாகக் கேட்டதும் இல்கானிடமிருந்து சந்தோசம் போய்விட்டது.

”அவர்கள் இன்னும் அகதி முகாமில்தான் இருக்கிறார்களாம். கடுங் காய்ச்சலால் மகள் வாய்விட்டு அழுதபோதும் மருந்தெடுக்க முடியாமல் மனைவி சிரமப்பட்டாளாம்”

”நீ காசனுப்புகிறாய்தானே?” இல்கான் தனது துருக்கி நண்பனுக்கு பணத்தை அனுப்பி அவன் மூலம் தன குடும்பத்துக்குக் கிடைக்கச் செய்வதாக ஏற்கனவே சொல்லிருந்தான்.

”மருந்து வாங்கக் கூடிய சூழ்நிலை அங்கேயில்லை. சுகயீனத்தைக் குணப்படுத்த பணத்தைச் சாப்பிட முடியாதே!”

பிறகும் கேள்விகள் கேட்டு அவனை வருத்த விரும்பாது உதயன் வேலையைத் தொடர்ந்தான்.

நாடுவிட்டு நாடு வந்த பலர் இன, மொழி பேதமின்றி, சம்பந்தமேயில்லாத யாரோ முதலாளிகள் சந்தோசமாயிருப்பதற்குத் தங்கள் உடலை வருத்திக் கொண்டிருந்தார்கள்.

பிற்பகல் முதலாளிகளில் ஒருவர் பி.எம்.வேயில் வந்து மடிப்புக் கலையாமல் இறங்கினார். வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் கூப்பிட்டார். தங்கள் பொருட்களுக்கு அவசரமாகப் பலர் விண்ணப்பித்திருப்பதாகவும், அதனால் மேலதிகப் பொருட்கள் தேவையாயிருப்பதால் இரவும் வேலை செய்ய வேண்டியுள்ளது எனக் கூறினார்.

இரவு வேலை செய்பவர்களுக்குச் சம்பளத்தில் சின்னத் தொகை கூடும் என்பதையும் அவர் தெரிவிக்கத் தவறவில்லை.

காசைக் கணக்குப் போட்டுப் பார்த்த பலர் சந்தோசப்பட்டுக் கொண்டார்கள். இரவுச் சந்தோசங்கள் பறிபோவதையிட்டு சிலர் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து எல்லோரும் இரவு வேலையைக் கட்டாயமாக மாறி மாறிச் செய்ய வேண்டும் என்றபோது இல்கான் தன்னால் முடியாதென்றான். அவனைப் புறக்கணித்து ஏனைய விபரங்களை மற்றவர்களுக்குத் தெரிவித்த முதலாளி இல்கானை தனது அறைக்கு வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

”மனுசி பிள்ளையள் கஸ்ரப்படுதுதெண்டு அழுகிறான். பிறகேன் இரவு வேலை செய்ய மாட்டனெண்டு அடம் பிடிக்கிறான்? முதலாளியும் கொதியன்’ என்று யோசித்தபடி உதயன் தனது இடத்திற்கு வந்து வேலையைத் தொடங்கினான். இரவு வேலை ஆரம்பித்தால் பகலில் செய்ய வேண்டிய சில அலுவல்களைக் கவனிக்கலாம் என்பதில் திருப்தியாயிருந்தது.

ஒரு மணித்தியாலத்தின் பின் இல்கான் கையில் பல பத்திரங்களுடன் திரும்பி வந்தான்.

”முதலாளி என்ன சொன்னான்?” உதயன் அக்கறையுடன் விசாரித்தான்.

”இப்போதிலிருந்து என்னை வேலையிலிருந்து நீக்கியாயிற்று” என்றான் இல்கான்.

”உண்மையாகவா?” உதயன் திடுக்கிட்டான். பத்து வருடங்களுக்கு மேலாகத் தூசியைத் தின்றுகொண்டு தன்னை இந்தத் தொழிற்சாலையில் நோக வைத்துக் கொண்டிருந்தவனையா இப்படித் திடீரென்று வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள் என்பதில் ஆத்திரம் வந்தது.

”என்ன காரணம்?” என்று கேட்டான்.

”இரவு வேலை கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்றான். முடியாதென்றேன். நான் மட்டும் செய்யாமலிருந்தால் பின்னர் மற்றவர்களும் மறுத்து விடுவார்கள் என்று சொன்னான். அதுபற்றி எனக்குக் கவலையில்லையென்றேன். இரவு வேலைக்குச் சம்மதமில்லையாயின் வேலையை விட்டு நீக்கிவிடப்போவதாகச் சொன்னான். நீக்கிவிட்டான்” இல்கான் சலனமில்லாமல் சொல்லிக்கொண்டான்.

”உனக்குப் பைத்தியமா? வேலையை விட்டு நீக்கப் போவதாகச் சொன்ன பின்பும் ஏன் முரண்டு பிடித்தாய்? அவன் முதலாளி. எங்களது கஸ்டம் அவனுக்குப் புரிய வேண்டிய அவசியமில்லை. அவனைப் பொறுத்தவரை இருப்பில் பணம் சேர்ந்தால் போதும். நீ உனது குடும்பத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?” தன்னுடன் மனம் விட்டுப் பழகும் நண்பன் என்ற முறையில் உதயன் கண்டித்தான்.

”எனது குடும்பத்தைப் பற்றி மட்டுமல்ல. எனது மக்களைப் பற்றியும் சிந்தித்ததால் தான் வேலையை இழந்திருக்கிறேன்” என்றான் இல்கான்.

உதயன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.

”இரவுகள் எனக்கு முக்கியமானவை. அவற்றை இந்த வேலைக்காக என்னால் இழக்க முடியாது. நீ பாதைகளில் நடந்து போகும் போது பார்த்திருப்பாய் குர்டிஸ்தான் மக்கள் பற்றிய சுவரொட்டிகளை. வேறு பல பிரசுரங்களையும் உனக்கு நான் அவ்வப்போது காட்டியிருக்கிறேன். இவற்றையும், இன்னும் பலவற்றையும் எங்கள் மக்களுக்காகச் செய்வதற்கு எனக்கும், நண்பர்களுக்கும் இரவுகள் தேவைப்படுகின்றன. எனது குடும்பத்திற்காக நான் அகதியாக இங்கு வந்திருக்கலாம். ஆனால் ஏனைய மக்களையும் நேசிக்கும் மனிதனாகவே எனது இருப்பை இங்கு அமைத்துக் கொள்ள விரும்புகின்றேன் இங்கு இருக்கும் வரையும்” இல்கான் பத்திரங்களை நிதானமாக மடித்தான்.

உதயன் திகைத்துப் போயிருந்தான். இப்படியொன்றை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. படித்த ஏட்டுச் சுரைக்காய்கள் அவன் முன்னால் கறியாகிக்கொண்டிருந்தன.

”நீ ஒரு வெளிநாட்டு அகதி. இந்த நாட்டில் ஒரு அகதி வேலை தேடிக் கொள்வது சுலபமல்ல. உனக்கு இன்னொரு வேலை எளிதில் கிடைத்துவிடும் என்று நம்புகிறாயா?”

”நம்பிக்கையுடன் தேடுவேன். கிடைக்காவிட்டாலும் பாதகமில்லை. இங்கே பெரும்பான்மையான அகதிகள் வேலையில்லாமல்தான் இருக்கிறார்கள்”

”தொழிற்சங்கத்திடம் போய் இப்படி வேலையை விட்டு நீக்கியது அக்கிரமம் என்று கதைத்துப் பார்ப்போம். இங்குள்ள சக தொழிலாளர்களுடன் கூடிப் பேசி எல்லோருமாக இதற்கெதிராக ஏதாவது செய்யலாம்”. என்றான் உதயன் எதிர்பார்ப்புடன்.

”நீ வீண் நம்பிக்கை வைக்கிறாய். இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் யாரும் தொழிற்சங்கத்தில் இல்லை. இப்போது அவர்களிடம் போனால் அங்கத்தவரா? இல்லையா?? ஏன் இல்லை என்றுதான் கேட்பார்கள். தவிரவும் இப்போதெல்லாம் முதலாளிகளுடன் சிநேகமாயிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து கதைப்பதற்கும் இங்கு வேலை செய்பவர்கள் முன் வர மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள். அவர்களுக்கு நான் ஒரு முட்டாள். முட்டாளுக்காக யாரும் போராடுவதில்லை” சொல்லிவிட்டு இல்கான் உடை மாற்றப் போய்விட்டான்.

உதயன் யோகேசைத் தேடிப் பிடித்தான்.

”நாங்கள் ஏதேன் செய்யலாந்தான். ஆனா பத்து வருசமாய் வேலை செய்தவனையே முதலாளி வேலையை விட்டு நிப்பாட்டிப் போட்டானென்றால் எங்களை நிப்பாட்டுறது பெரிய காரியமில்லை. உனக்கே தெரியும் எவ்வளவு கஸ்ரப்பட்டு இந்த வேலையை எடுத்த நாங்கள் எண்டு. இதையும் விட்டிட்டு றோட்டில நிக்கச்சொல்லுறியே” என்றான் யோகேஸ்.

உதயன் பழையபடி தனது இடத்திற்கு வந்து விட்டான். தங்களது கையாலாகாத்தனத்தைப் பற்றி நினைக்க நினைக்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. ‘சீ என்ன சனங்கள். கூட வேலை செய்யிற ஒருத்தனுக்கு அநியாயம் நடக்குது. பாத்துக் கொண்டிருக்கிறாங்கள்’.

திடீரென எரிச்சல் தணிந்தது. மற்றவையளை ஏன் குறை சொல்லுவான். நான் என்ன செய்து போட்டன்? எல்லாருக்கும் விசயத்தைக் சொல்லிப் போட்டு விட்டிட்டன். விசயத்தைத் தெளிவாய் விளங்கப்படுத்தி, இந்த அநியாயம் நாளைக்கு எங்களுக்கும் நடக்கும். நாங்கள்தான் இதற்கெதிராக உறுதியாய் போராடவேணும் எண்டு ஏன் சொல்லேலாமப் போச்சு?

முதலாளியோட போய் ஏன் கதைக்கேலாமப் போச்சு?

ஏன்?

யோகேஸ் சொன்ன மாதிரி எங்களையும் வேலையை விட்டு நிப்பாட்டிப் போடுவாங்கள் எண்ட பயம்தானே?

நிப்பாட்டட்டுமன். அநியாயத்துக்கெதிராய் நிண்ட திருப்தியாவது கிடைக்கும். ஆனா……

இயக்கத்தில இருந்து பிரிஞ்சு வந்து, இப்ப இயக்கத்திட்டயும், ஆமியிட்டயும் இருந்து உயிர் தப்பத் துடிக்கிற தம்பியை வெளிநாட்டுக்குக் கூப்பிடுறதுக்கே பத்தாயிரத்துக்கு மேலை கடன் பட்டாச்சு. ஏஜென்சி பேக்காட்டுறதாலை அவனை இன்னுமா எடுத்தபாடில்லை. ஆள் வந்து சேருமட்டும் இன்னும் எவ்வளவு செலவாகுமோ?

இந்த வேலையை விட்டா பிறகு வேலை எடுத்த மாதிரித்தான். வேலையில்லாட்டி கடன் அடைக்கிறது என்னெண்டு?

காசனுப்புறது என்னண்டு?

உதயன் குழம்பிப் போனான். வேலை முடிந்து அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டபோதும் அன்றைய சம்பவம் விலகவில்லை.

காந்தன் வீட்டில சண்முகநாதன், யோகேஸ் மற்றவங்களோட தொழிலாளியளைப் பற்றி நான் கதைச்சதெல்லாம் எவ்வளவு பொய்! ஒரு இடத்தில ஸ்ரைக் நடக்கயிக்க வேறொரு இடத்தில வேலைக்குப் போறதுக்குக் காரணம் தொழிலாளியளின்ரை அரசியல் வறுமை தான் காரணமெண்டன். இப்ப எனக்கு?

என்ரை தம்பிக்கு உயாராபத்து எண்டது மட்டுந்தானே எனக்குத் தெரியுது. ஒரு சக தொழிலாளிக்கு அநியாயம் நடக்கிறது ஏன் முக்கியமாய் படேல? இல்கானும் ஒரு மனுசன்தானே? அவனுக்கேன் தன்னை நம்பியிருக்கிற மனசி, பிள்ளையள் முக்கியமாய்ப் படேல?

அப்பிடியெண்டா மற்றவையளோட கதைக்க மட்டும்தான் நான் பொய் முகம் பொருத்துறன். இல்கான் வேலையால நிப்பாட்டப்பட்டு றோட்டுக்குப் போகேக்க பாத்துக்கொண்டிருந்த முகம்தான் என்ரை உண்மையான முகம்.

பிறகேன் அப்பப்ப பொய்முகத்தோட மற்றவைக்குத் தத்துவங்களைச் சொல்லிக்கொண்டிருப்பான்? பேசாம என்ரை பாட்டில பத்தகங்களை வாச்சுக் கொண்டிருப்பம்.

ஏன் அப்படியிருக்க வேணும்? அதால என்ன நன்மை? நான்தான் கதைக்கிறதுக்குச் சம்பந்தமில்லாம இருக்கிறன். இல்கான் அப்பிடியில்லையே. அவனுந் தொழிலாளிதான். நானுந் தொழிலாளி. ஆக பிழை என்னில தானேயொழிய தத்துவங்களில இல்லை. பிழையில்லாத தத்துவங்களை மற்றவைக்கு விளங்கப்படுத்தி ஏன் நான் அவைக்கு உணர்வை ஊட்டக் கூடாது. இப்போதைக்கு நான் நானாயிருந்தாலும் மற்றவை இல்கானாகக் கூடாதே?

மற்றவைக்கு என்னைப் பற்றி வேறமுகம் காட்டுறது ஒரு வகையில ஏமாற்றுத் துரோகமெண்டாலும் இன்னொரு பக்கத்தில நன்மையுமில்லாமலில்லை.

உதயன் உடுப்பு மாற்றிக் கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தான். நாற்பத்தியேழாம் இலக்க பஸ் வர ஏறினான்.

காந்தன் வீட்டுக்குப் போக வேண்டும். அங்கே சண்முகநாதனும், யோகேஸ்வரனும், ரவீந்திரனும் இருப்பார்கள்.

கதைக்கலாம்!

 

——————–

பார்த்திபன்

1989

Leave a comment