மு.வேணுகா


பார்த்திபனின் 25 சிறுகதைகளையும் வாசித்து அதில் படிந்த – புரிந்த விடயங்களை எழுத முற்பட்டிருக்கிறேன். இலங்கை பற்றியனவாகவும் புலம்பெயர் தேசத்தின் வாழ்வு பற்றியனவாகவும் அமைந்த இச்சிறுகதைகளின் நோக்கும் போக்கும் வெவ்வேறாக அமைந்துள்ளமையை முதலில் சுட்டிக்காட்டவேண்டும்.

அம்மா பாவம், நாளை என்ற இரு சிறுகதைகளிலும் சிறுவனின் அங்கலாய்ப்புக் கூறப்பட்டுள்ளது. அம்மா பாவம் என்ற சிறுகதையில் வரும் சிறுவனின் ‘அம்மா ஏன் இப்படி இருக்கவேண்டும்’ என்ற சந்தேகமும் நாளை என்ற சிறுகதையில் வரும் வினோத் என்ற சிறுவனின் குடும்பம் ஜேர்மனியில் வாழும் நிலையில் ‘கறுப்பனே உனது நாட்டுக்குப் போ’ என்று வினோத்தை நோக்கி அவனது நண்பன் கூறும் வார்த்தைகளும் அழுத்தமான உணர்வினை ஏற்படுத்துகின்றன. நாளை என்ற சிறுகதையில் வரும் சிறுவனின் பெற்றோரின் செயற்பாடு, இன்று வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு நடப்பதையே நினைவூட்டுகின்றது.

உள்ள கதைகளுக்குள் பெரிய கதையாக அமைந்த கெட்டனவாழும் என்ற சிறுகதை புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் கடந்தகால பாதிப்பின் மன உளைச்சலையும் மனித நேய- இரக்கத்தன்மையினையும் எடுத்துக் கூறுகின்றது. யுத்தத்தால் மக்கள் கொல்லப்பட்டதை ஒரே ஒரு ஊரிலே என்ற சிறுகதை ஆசிரியர் கூற்றாக கதையைக் கூறுகின்றது.

பசி என்ற சிறுகதையானது மீனவக் குடும்பத்தின் வறுமையைச் சித்திரிப்பதாகவும் அதற்குக் காரணம் நாட்டுப்பிரச்சினைதான் என்பதையும் ‘பசிக்கு பசிக்க மட்டுந்தான் தெரியும்’ என்பதை உணர்த்தும் ஓர் சிறுகதையாகவும் அமைந்துள்ளது. அதேவேளை; இந்த சிறுகதையை வாசிக்கும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. வறுமைக்கு இரையாகும் சமூகத்தின் நிலை எப்போது இல்லாமல்போகும் என்ற ஆதங்கமும் ஏற்பட்டது.

பாதியில் முடிந்த கதையை வாசிக்கும்போது கனவு கண்டாலும் அது விபரீதங்களை ஏற்படுத்துமா? ஏன்ற அச்சம் ஏற்பட்டது. அண்ணனுடைய வீடு, தாலிக்கொடி போன்றவை மண்ணோடு மண்ணாகப்போய் விட்டன.

விபத்தை மறந்துவிடு என்ற சிறுகதையானது கதைக்குள் கதையாக எழுதப்பட்டு வாசிக்கும் வாசகர்களை அடுத்து என்ன வரப்போகின்றது என்று சிந்திக்க வைக்கும் தன்மையுடையதாக உள்ளது. வேதனையால் வெந்து தவிக்கும் பெண்களுக்கு அறிவுரை கூறும் சிறுகதையாகவும் இச் சிறுகதை அமைந்துள்ளது.

ராதா பெரிசான பின் என்ற சிறுகதை என்மனதில் புதுவித சிந்தனையை ஏற்படுத்தியது. தங்களை அழகுபடுத்திப்பார்க்கும் பெண்களிலிருந்து வித்தியாசமானவளாக ராதா படைக்கப்பட்டுள்ளாள். அவளுடைய வார்த்தைகளும் அடுக்கடுக்கான கேள்விகளும் எனக்கு பிடித்திருந்தது.

மனைவி இறக்குமதி, வந்தவள் வராமல் வந்தால் போன்ற சிறுகதைகள் வித்தியாசமான தலைப்புடன் எழுதப்பட்டுள்ளன. ‘ஒரு பொருளை இறக்குமதி செய்தா அதற்குரிய கட்டணத்தை கொண்டு வாற கூலியையும் பொருளைப் பெறப்போகிறவனே கட்டவேணும்’ என்ற வார்த்தைகள் தலைப்புக்கு ஏற்றமாதிரி அமைந்துள்ளன. மைதிலி என்ற பெண்ணை ஜேர்மனிக்கு எடுப்பதற்கு அண்ணா படும் கஷ்ரங்களைப் பற்றி வந்தவள் வராமல் வந்தால் – சிறுகதை விபரிக்கிறது.

இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ, தீவு மனிதன், பலமா?, மேற்கின் ஒரு பக்கம் என்ற நான்கு சிறுகதைகளும் சிந்திக்கும் திறன் வேறுபட்டதாகவும் இலகுவில் வாசித்து விளங்க முடியாததாகவும் உள்ளது.

காதல் என்ற சிறுகதையானது ஒரு ஆணின் உணர்வுகளையும் காதல் வயப்பட்ட நிலையையும் பெண்ணின் உறுதியான வார்த்தைகளையும் கூறி வாசகர்களை ஒவ்வொரு கோணத்திலும் சிந்திக்கத்தூண்டுகின்றது. இச் சிறுகதையை வாசிக்கும்போது எனக்குச் சுவாரசியமாக இருந்தது. அழகான பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு ஏற்படும் காதல் உணர்வை வெளிப்படையாக சிறுகதையாசிரியர் எழுதியது பிடித்திருக்கிறது. அதே போன்றே மூக்குள்ளவரை என்ற சிறுகதையானது இருபத்தைந்து சிறுகதைகளிலும் நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும் வாசிக்க வாசிக்க வாசிக்கத் தூண்டுவதாகவும் காணப்படுகின்றது.

ஒரு பிரஜை ஒரு நாடு என்ற சிறுகதையின் இறுதி முடிவு என்னவென்று சொல்லப்படவில்லை. தாய் மகளுடன் பதுங்கு குழிக்குள் சென்றுவிடுவாளா? இல்லை மகள் இறந்துவிடுவாளா?, இல்லை தாயை இராணுவம் பிடித்துக்கொண்டுபோட்டாங்களா? என்ற மூன்று விதமான வினாக்கள் எனக்குள் உண்டு.

பொதுவாக இருபத்தைந்து சிறுகதைகளும் வெவ்வேறுபட்ட உணர்வு நிலையைத் தோற்றுவிப்பவையாகவும் வாசிக்கத்தூண்டுபவையாகவும் உள்ளன. சில கதைகள் ஒரே தடவையில் வாசித்து விளங்கமுடியாதவையாகவும் உள்ளன.

Leave a comment