
எழுத்தாளர் ஒருவருக்கு துணிவும் தைரியமும் வேண்டும் . அவ்வாறு இருப்பவரிடம்தான் தனித்தன்மையைக் காணமுடியும் . சமூகத்தை தன்வசம் கட்டிவைத்திருப்பதில் கலாச்சாரம் மிக முக்கியமானது. கலாச்சாரம் படிநிலையாக்கத்தைக் கொண்டது. இதனூடு மேலாதிக்கத்தைப் பேணுகிறது . இந்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நபர்களிடமிருந்து அதனை மறுக்கும் குரல்கள் வெளிப்படும் . அத்தகைய குரலாக பார்த்திபனின் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
இருபத்தைந்து சிறுகதைகளையும் இரு வகையாகப் பார்க்கலாம்.
1. எமது நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை . யுத்தத்தினால் ஏற்பட்ட அவலமும் வலியும்
பசி. பாதியில் முடிந்தகதை. ஒரு அம்மாவும் அரசியலும். ஒரு பிரஜை ஒரு நாடு. ஒரே ஒரு ஊரிலே எனத் தொடரும் கதைகள் கூறும் வலிகள் இன்னும் வலிக்கிறது
2. இந்த வலியிலிருந்து தப்பி வாழ நினைத்து மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றோர் அங்கு உணரும் வலிகளும் முரண்பாடுகளும் .
கெட்டன வாழும், பனியில் எரியும் இரவுகள், பலம், தூள், ஐம்பது டொலர் பெண்ணே, மூக்குள்ளவரை ……. என தொடரும் கதைகள்.
இவ்விதம் இரு வகைக்குள் அடக்கினாலும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை காட்டிநிற்கின்றது .
ஒருவர் தனது மனதுக்குள் நெருடிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ஏதோ ஒரு வடிவில் பிறருக்கு வெளிப்படுத்த முயலும்போது அது வலிமைமிக்க படைப்பாகின்றது. வெளிப்படுத்தும் பிரச்சினை வெளிப்படுத்துபவருடையதாக இருக்கவேண்டும் என்பதல்ல . வெளிப்படுத்துபவர் தான் கண்டது கேட்டது அனுபவித்தது என எதுவாகவும் இருக்கலாம்.
குறித்த இருபத்தைந்து சிறுகதைகளிலும் எமக்குத் தெரியாத பல பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது .
உதாரணமாக ஐம்பது டொலர் பெண்ணே , கெட்டனவாழும், தூள்.. என்பவற்றைக் குறிப்பிடலாம் .
ஆயினும் சில கதைகள் இதற்கு மாறாக உள்ளமையையும் குறிப்பிட விரும்புகிறேன். எந்த ஒரு படைப்பும் குறித்த பிரச்சினையை வெளிப்படுத்துவதனூடாக பார்ப்போரை அல்லது வாசிப்போரை சிந்திக்க வைக்க வேண்டும். அச் சிந்தனை அவருக்குள்ளும் வெளியிலும் ஊடாட்டத்தை ஏற்படுத்தவேண்டும் . அதன் வழிமாற்றங்கள் மாற்றங்களை நோக்கிய படிமுறைகள் இடம்பெறும் அல்லது அப்படியே போகும். இதற்கு மாறாக சில சிறு கதைகள் பிரச்சினைக்கு தீர்வு சொல்வதாக உள்ளன.
மனைவி இறக்குமதி, கல்லாலான கணவன், காதல், ராதா பெரிசான பின் ஆகிய கதைகள் இத்தகையானவாக உள்ளன. இது வாசிப்போர் எதுவும் தெரியாதவர்கள், எழுதுவோர் எல்லாம் தெரிந்தவர்கள் என எண்ணும் மனோபாவத்தின் விளைவாகத் தெரிகின்றது. அதிகாரத்தின் கருவியாக பிரதிகள் வாசகர் முன் நிறுத்தப்படுவதே இன்றைய எழுத்துலகின் வழமையாக உள்ளது. இதன்மூலம் பிரதியை எழுதியவர் அதிகாரத்துக்குரியவர் ஆக்கப்படுகின்றார் . இதனால் பிரதியின் உரையாடும் இரு திசைப்பண்பு தீய்க்கப்பட்டு எழுத்தாளரின் விருப்பை ஒலிக்கும் ஒரு திசைப்பண்பு ஏற்றப்படுகின்றது. தீர்வு சொல்லுவதன் மூலம் இக்கதைகளும் அத்தகையனவாகவே எழுதியவர் தனது கருத்தினை சொல்லமுற்படுவதாகவே உள்ளது .
அதுமட்டுமல்ல, ஒரு பிரச்சினைக்கான தீர்வு என்பது அல்லது முடிவெடுத்தல் என்பது தனியே பிரச்சினை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சந்தர்ப்பமும் சூழலுமே அதனைத் தீர்மானிக்கும் . இங்கு குறிப்பிட்ட கதைகளில் பாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் கதையில் காட்டப்படும் சூழலுக்கு பொருத்தமானதாக உள்ளது. வாசகர்கள் எல்லோரும் இதனை உணர்ந்து கொள்ளுவர் என்பதல்ல . கூறப்படும் முடிவினை அத்தகைய பிரச்சினைக்கான பொது முடிவாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில் விளக்கம் சொல்லவோ, சரி செய்யவோ எழுதியவர் இல்லாத நிலையிலேயே எழுத்து வாசிக்கப்படுகிறது. எனவே எழுத்து என்பது தவறாகப் புரிந்து கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளது.
கல்லலான கணவன் சிறுகதையில் சொல்லப்படும் முடிவில் எனக்கும் உடன்பாடு உண்டு . ஆனால் அந்த முடிவினை அத்தகைய பிரச்சினைக்கான பொது முடிவாக கொள்ள முடியாது. அந்த நிலைமையில் எடுக்கப்பட முடிவு சரியானதாக உள்ளது . ஆனால் பிரச்சினை இதுவாக இருக்கலாம். பிரச்சினைக்கான சூழல் வேறானதாக இருக்கலாம் . எடுத்துக்காட்டாக காரணம் தெரியாது இதுவரை நன்றாக இருந்த கணவர் சில நாட்களாக மாறுபட்ட நடத்தை உடையவராக மனைவியை கொடுமைப்படுத்துபவராக நடந்து கொள்கின்றார். இத்தகைய ஒரு சூழலில் குறித்த கதையில் சொல்லப்படும் முடிவு அல்லது எடுக்கப்படும் முடிவு எந்தளவுக்கு சரியாக அமையும் என்பது சொல்லமுடியாது . சொல்லப்படுவது சந்தர்ப்பம் மட்டுமே . இதனை மட்டும் கொண்டு முடிவுக்கு வரமுடியாது . நிலைமையின் தன்மை முழுமையாக தெரியும் போதே முடிவெடுத்தலை யோசிக்கமுடியும்.
அத்தோடு இக்கதையில் பாதிக்கப் பட்ட பெண் அந்த முடிவினை எடுக்கவில்லை . ஒரு ஆணே முடிவெடுக்க உதவுகின்றார். உதவுகின்றார் என்பதை விடவும் முடிவினை எடுத்தார் என்றுதான் சொல்லமுடியும் . இது பெண்கள் எப்போதும் சுயமாக முடிவெடுக்க முடியாதவர்கள் என்றும் ஆண்கள்தான் சரியான முடிவினை எடுக்கக்கூடியவர்கள் என்றும் சொல்வதாக உள்ளது.
இதே போன்று மனைவி இறக்குமதியில் பெண்களை இறக்குமதி செய்யும் ஆண்களுக்கெதிராக சுகந்தி எடுத்த முடிவிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அதற்குள் இடம்பெறும் ஏமாற்றுக்கு உடன்பட முடியவில்லை . இத்தனை தெளிவாக முடிவெடுக்கும் ஒரு பெண்ணினால் ஏன் முன்பே இதனை சம்பந்தப் பட்ட நபருக்கு தெரியப்படுத்தமுயலவில்லை . பெற்றோருக்கு விளங்கவைப்பது கடினமாக இருக்கலாம் . ஆனால் சம்பந்தப் பட்ட நபருக்கு சொல்வதற்கு முயலவே இல்லை . ஒரு நபர் நல்லவராக இருக்கலாம் அல்லது மோசமானவராக இருக்கலாம் . எமது முடிவு நியாயமானதாக இருக்கலாம் .ஆனால் ஒருவரை நம்ப வைத்து எதிர்பாராத முடிவை கொடுப்பது என்பது ஏமாற்றுவதுதானே. இதற்கும் நியாயம் இருக்கலாம் . ஆனால் சுகந்தியும் சிறியும் சந்திக்கும் போது இடம்பெறும் உரையாடல் கருத்துச் சொல்வதாக இருக்கின்றதே தவிர இயல்பான உரையாடலாக இல்லை . இருவரும் சந்திக்கும் போது இருவருக்குள்ளும் ஏற்படும் உணர்வு போராட்டம் பிரச்சினையை மையப்படுத்தியதான உரையாடல் எதுவும் இல்லாமல் வெறுமனே எழுத்தாளர் தனது கருத்தை கூறுவதாகவே உள்ளது. இங்கும் பெண்கள் இப்படித்தான் தெளிவற்ற முடிவெடுப்பவர்கள் . சுயநலமானவர்கள் ஏமாற்றுவது அவர்களுக்கு இயல்பானது என பெண்கள் பற்றி பொதுவாக சமூகம் கொடுக்கும் வியாக்கியானங்களையே வலுப்படுத்துவதாக உள்ளது.
ராதா பெரிசான பின் – நடைமுறைப் பிரச்சினை. கட்டாயம் பேசப்படவேண்டியது. ஆனால் இக்கதையில் ராதாவுக்குள் நடக்கும் மன வியாபாகங்கள் வளர்த்தெடுக்கப்பட்டு அதனூடு பிரச்சினையின் பரிமாணத்தை காட்டாமல் எழுத்தாளர் தான் சொல்ல விரும்பியதை சொல்வதற்காக அக்கா பாத்திரத்தை உருவாக்கியது போன்றுள்ளது. இதனால் கதையின் தொடக்கத்தில் இருந்த இயல்பு முடிவில் புனைவாகின்றது. முடிவை சொல்வதன் மூலம் எழுத்தாளர் தான் சொல்ல நினைத்ததை சொல்வதாக உள்ளது.
காதல் – இக் கதையிலும் இயல்பாகத் தொடரும் கதை ஸில்வியாவின் வெளிப்பாடு வருகையில் இயல்பில்லாமல் போகின்றது. ஸில்வியா என்ற பாத்திரத்தினூடாக எழுத்தாளர் தன் கருத்தையே சொல்லமுயலுகின்றார். சொல்வது தவறல்ல. சொல்வது வாசிப்போரை யோசிக்கவைக்கவேணும் தவிர இப்படி யோசிக்கவேண்டும் என சொல்வது வாசகரின் வெளியை மட்டுப்படுத்துவதாகும். இது எழுத்தின் அதிகாரம் அல்லவா?
பொதுவாக சொல்லப்படும் பிரச்சினைகள் யாவும் உண்மை . பிரச்சினைக்கு ஆசிரியர் தீர்வும் சொல்ல முற்படும் இடங்களில் பாத்திரங்கள் இயல்பாக நகர்த்தப்பட்டாமல் தான் சொல்ல விரும்பியதை சொல்வதில் மட்டும் கவனம் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எல்லாக் கதைகளையும் வாசிக்கும் போது இதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதாவது ஆசிரியருக்கு குறித்த பிரச்சினைகள் மீதுள்ள தார்மீகக் கோபமே இவ்வாறு வெளிப்படுகின்றது என. ஆனால் தனித்தனியாக வாசிக்கும் போது இவ்வாறு புரிந்து கொள்வது கடினம் .
படைப்பு என்பது ஒரு வாசகனுடைய புரிந்துகொள்ளல் மீது நிகழும் செயல்களின் ஒரு வரிசைத் தொடர் . ஒரு படைப்புக்கு பொருள் விளக்கம் சொல்வதென்பது வாசிப்பின் கதையைக் கூறுவதாகும். வாசகனுடைய “எதிர்பார்ப்புக்களின் எல்லையினாலேயே” அது வாசிக்கப்படுகிறது. வாசகருடைய அனுபவங்களின் எல்லைப்பரப்பு தொடுக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாகவே ஒரு படைப்பின் பொருள் விளங்கப்படுகிறது. வாசகருடைய எதிர்பார்ப்புக்களின் எல்லையை பல்வேறுபட்ட காரணிகள் பாதிக்கும்.
உதாரணமாக வாசகர் ஒரு பெண்ணாயிருத்தல்
வாசகர் ஒரு ஆணாயிருத்தல் …..
எனவே எழுத்தை விளங்கிக் கொள்வதில் எழுத்தாளரின் பங்கு என்பது மிகவும் மட்டுப்படுத்தப் பட்டதே . குறித்த கதைகளில் எழுத்தாளரின் ஒருதிசைப் பண்பே மேலோங்கியுள்ளது. ஆயினும் ஒட்டுமொத்த கதைகளையும் நோக்கும் போது ஒவ்வொன்றும் புரையோடிப் போயிருக்கும் புனிதங்களை உடைக்கும் எதிர்க்கதையாடலாகவே உள்ளன.
–