
1.
கதைகளில் சமூகக்கருத்தியலை அதாவது யதார்த்த வாழ்வு முறையையும், அதனுடனான போராட்டத்தினையும் உணர்வுகளின் வெளிப்பாட்டை மொழிகளில் கொண்டுவந்துள்ள விதம் சிறப்பாக இருக்கின்றது.இது உங்கள் கதைகளுக்கு வெற்றியைக் கொடுப்பதற்கு காரணமாக இருப்பதாக கருதுகின்றேன். அனேகமான கதைகளை வாசிக்கும் போது எமது உணர்வுகளும் அதனுடனே ஒன்றிவிடுகின்றது.( பனி எரியும் காலம், ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும் வந்தவள் வராமல் வந்தாள். ..).
2.
யதார்த்த கருத்தியலில் இருந்து விடுபடத்துடிப்பதாகவும், போராடத் துடிப்பதாகவும் அதை கேள்விக்குள்ளாக்கியதாகவும் உள்ளன. (ராதா பெரிசானா பின,மனைவி இறக்குமதி)
3.
சமூகக்கருத்தியலுடன், யதார்த்தத்துடன் முரண்பட்டு முற்போக்கு வாழ்நிலையை சந்தித்து, அந்த வாழ்வு முறைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் அனுபவங்களின் வெளிப்பாட்டை கதைகளில் காணவில்லை. (தீவு மனிதனில் மட்டும் காணப்படுகின்றது.) அல்லது முரண்படாமல் விலகியதான தன்மையும் வெளிப்படுகின்றது. (வந்தவள் வராமல் வந்தாள், பனி எரியும் காலம்)
4.
உண்மையிலேயே முற்போக்கு கருத்தியலுடன் (யதார்த்தத்துடன் முரண்பட்ட) வாழ்வு நிலைக்குட்பட்டு வாழ்ந்து, அதன் அனுபவங்களை வெளிப்படுத்தி உணர்வுகளில் இருந்து மொழிகளுக்கு படியும் விதமாக கதைகள் வெளிவந்திருக்குமாயின் சமூகத்தின் மீதான உங்கள் அக்கறையை இன்னும் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். இந்த யதார்த்த வாழ்வில் தனது கருத்துக்கு போராடி வாழ்கின்ற அனுபவங்களின் வெளிப்பாட்டைதான் கதைகள் கூடுதலாக பிரதிபலிக்கின்றன. அதை கேள்விக்குள்ளாக்குகின்றது. மிகுதியை சமூகத்திடம் விட்டுவிடுகின்றது. இந்த சமூகத்திற்கு மற்றப் பக்கங்களையும் அந்தப்பக்கங்களில் போராடிக் கொண்டிருப்பவர்களையும் கொடுப்பது எழுத்தாளனின் கடமையல்லவா?
5.
இலக்கியத்தரம் குறைவாக காணப்படுகின்றது. அதற்காக இந்திய இலக்கியத்தரத்தை இங்கு நான் குறிப்பிடவில்லை. அந்தந்த சமூகத்தின் வெளிப்பாட்டின் மொழிவடிவம் கதைகளில் கட்டாயமாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது அந்த பகுதி மக்களினால் கவரப்படும். ஆனால் அந்த அந்த பேச்சு மொழிநடையையே கதைகளில் கூடுதலாக இருக்குமாயின் அல்லது அதன் தொடராக உணர்வுகள் மொழியில் படிவது கதைகளின் தரத்தை குறைத்து விடுகின்றது.( கூற்று வாக்கியங்கள் அவ்வாறு வருகின்றது. அது அழகைக் கொடுக்கின்றது ) கதை கதைக்கான பல அம்சங்களையும் கொண்டு இருப்பதுதானே அழகு. கவிதை கவிதைக்கான மொழிவடிவத்தினை பெறும் போதுதான் நாம் தரமான கவிதைகள் என ரசிக்கின்றோம் அதேபோல் கதைக்கான இலக்கிய தரத்தினை பெறுவதும் கதைகளுக்கு சிறப்பே என்று நம்புகின்றேன்.
6.
கதைகளில் அந்தந்த பகுதி (யாழ்ப்பாண மக்களுக்கான மொழிப்பாசை) மக்களுக்கான மொழிப்பாசை இருப்பது அந்தந்த மக்கள் கையாழும் பழமொழி, பகிடி, நெகிழ்வான சொற்றோடர்கள் கதைகளில் காணப்படுவது சிறப்பாக இருக்கின்றது.
7.
கற்பனை வளம் குறைவாக காணப்படுகின்றது இயற்கையையோ அல்லது ஒரு நபர் சம்பந்தமாகவோ அல்லது பொருள் தொடர்பாக செயற்பாடு தொடர்பாக வர்ணனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவாக காணப்படுகின்றது (மனைவி இறக்குமதியில் காணப்படுகின்றது பிளேன் தொடர்பாக) அலங்காரமும் வேண்டும்தானே கதைக்கு. அதனூடாக மறைமுகமாக கருத்தை சொல்லக்கூடியதாக இருக்கும்.
8.
செயலுக்கும், நிகழ்வுகளுக்கும் அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ள தன்மை காணப்படுகின்றது.( ஐம்பது டொலர் பெண், வந்தவள் வராமல் வந்தால்.)
9.
சில கதைகள் கதைக்கான தன்மையில் நின்று இறங்கி சற்று பிரச்சாரமான பாணியை எய்தியுள்ளது. தூள், மனைவி இறக்குமதி (இதில் இறுதிப்பகுதி சற்று பிரச்சார வசனத்துடன் காணப்படுகின்றது கதைக்கான தன்மையை இழந்து )
*
அம்மா பாவம்
உங்கள் கதைகளில் எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று . ஓரு சிறுபிள்ளையைப்போல் எழுத்தாளரே தன்னை கற்பனை செய்து எழுதிய விதம் நன்றாக இருந்தது. அந்த சிறுபிள்ளையின் நிலையில் நின்று தனது தாய் தொடர்பாக தனது இயல்பான உணர்வில் மொழியின் மூலம் கேள்வி கேட்பது (பெரியவர்கள் சிந்தனைக்கு உட்படாது) இன்னும் சிறப்பிக்கின்றது. ஆனால் தொடர்ந்து பேச்சு மொழியிலே எழுதிக் கொண்டு போவது தான் கதை தனது இலக்கியத்தரத்தினை இழந்து நிக்கின்றது.
ஐம்பது டொலர் பெண்.
பேச்சு மொழி – சில விளக்கமில்லாததுகள், பெட்டையை , சிலதுகள். சில இடங்களில் மீண்டும் எழுதும் போது நபர்களை உயர்திணையில் குறிப்பிடுவதும் காணப்படுகின்றது. கதைக்கான தமிழ் இலக்கணத்தரத்தில் நின்று உயர்திணையில் நபர்களைக் குறிப்பிடுவது முக்கியமல்லவா?
இந்த கதையில் ஆரம்பத்தில் ஓர் ஆணுக்காண உணர்வுத்தரத்துடன் நின்று எழுதி விட்டு இறுதியில் ஓர் பெண் என்று முடித்திருக்கின்றீர்கள். அன்று உங்கள் கதை பிரபல்யமாக கதைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். இதனால் அன்றைய பெண்ணியல் வாதிகளினால் நிறைய அடிவாங்கியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
தலையங்கத்துக்கான தாக்கம் கதை கொண்டிருக்கவில்லை. என்பது குறைபாடாக இதில் இருக்கின்றது. ஏன் விற்கப்படுகின்றது, அவ்வாறு விற்கப்படுவதற்கான சமூகக் காரணங்கள், விற்கப்படும் பிள்ளைகளின் மனஉளவியல் தாக்கங்கள், இங்குள்ள சமூகமுரண்பாடுகளையும் சரிவர கதையில் கொடுக்கப்படவில்லை. மேலோட்டமாகவே கூறிவிடுவதாக படுகின்றது.
இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனம் வாழ்கையே ஒவ்வொருவருக்கும், வேறுயாருக்கோ அல்லது ஏதோ ஒன்றிற்கு விற்கும் வியாபாரமாய்த்தானே இருக்கின்றது. எதிலுமே உண்மையில்லை எல்லாமே பண்டமாகி… என்று வாசகர்களை சிந்திக்கவைப்பது நன்றாக இருக்கின்றது. ஆனால் அதன் கனத்தை இன்று வரை எத்தனைபேர் உணர்ந்து அதற்கேற்ப வாழ்கின்றார்களோ என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது?. அந்த உண்மையைத்தேடி வாழ நினைப்பவர்களுக்குத்தான் தொடர்ந்து காயங்களும் வலிகளையும் யதார்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன் ( தீவு மனிதனில் இது வெளிப்படுகின்றது.) சுருக்கமாக கூறினால் நலனும் பலவீனங்களும் நிறைந்து விட்ட உறவு முறைகள்தான் இன்று சமூகத்தில் அதிகமாக இருப்பதை நாம் காண்கின்றோம். அதனால் உண்மையை கண்டு கொள்ள முடியாது சமூகம் இருக்கின்றது. இது தொடர்பாக ஒரு கதை எழுதுங்களேன். (மனிதனுடைய நுண்ணுணர்வுகள் தொடர்பாக)
கதைகளில் பலவிதயுத்திமுறைகளை கையாளலாமே. தொடர்ந்து ஒரேவிதமான வடிவங்களிலே கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. வித்தியாசமான வடிவமைப்பு முறைகளைக் கையாளும் போது முதலில் சர்ச்சைகள் முரண்பாடுகள் எழும்பத்தான் செய்யும் அதற்காக மாற்றம் நிகழாது இருப்பது புரட்சியாகாது.
எதிலும் தவறும், குழப்பமும், முரண்பாடுகளும் இருக்க வேண்டும் அப்போதுதான் தெளிவைக் கண்டு கொள்ள முடியும். தவறுவிடாத, குழப்பங்களுக்குட்படாத தெளிவு பலவீனமானதாகவே இருக்கும் சில சமயங்களில். அப்போது சந்தர்ப்பம் வரும்போது தெளிவு கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. முயற்சித்துப்பார்ப்பது சமூக அக்கறையும்கூட, தனியே கருத்து மட்டும் மக்களைப் போனால் போதும் என்றில்லாமல், அது எவ்வூடகத்திற்கூடாக போகின்றது அதில் மாற்றங்களை நிகழ்த்திப்பார்ப்பதும் திருத்துவதும் எழுத்தாளர்களுக்கான சமூக அக்கறை என்று நம்புகின்றேன்.
எழுத்தாளர்கள் தனது கருத்தையும் தனக்கிருக்கும் சமூக அக்கறையையும் தான் விற்கக்கூடாது. ஆனால் மாற்றங்களை நிகழ்த்துவது ஒவ்வொரு எழுத்தாளனது கடமையாகின்றது. இலக்குத்தான் முக்கியமேயன்றி அது செல்லும் வழிமுறைகளை மாற்றியமைப்பதில் தவறில்லை. வழிமுறை திருத்தியமைக்கக் கூடியவையும் கூட வளர்ச்சிக்கான படிகள்தானே அவை.
–
