
´அம்மா`வில் ஒரு பிரஜை ஒரு நாடு கதையை எடுத்துக் கொண்டால், எனக்கு அம்பையின் சூரியன் கதை ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை. (அம்பையின், `சிறகுகள் முறியும்` சிறுகதைத் தொகுப்பில் உண்டு) அக் கதையும் பதுங்கு குழிக்குள் இருக்கும் சிறுவனையும், அம்மாவையும் பற்றிய கதைதான். (அக் கதை வியட்நாம் போர்ச்சூழலை வைத்து எழுதியது என ஞாபகம்) பார்த்திபனின் கதையுடன் ஒப்பிடுகிறபோது அது கலை நேர்த்தி மிக்க கதை. பார்த்திபனின் கதையும் அந்தளவு சிறப்பானதாக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? இக் கதை இன்னமும் சீராக அந்த உணர்வுகளுடன் செதுக்கப்பட்டிருக்கலாம். மிக முக்கியமான ஒரு கரு. ஏன் அது அரைகுறையாக முடிந்தது?
பார்த்திபனின் பல கதைகளை நான் வாசித்திருக்கிறேன். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இவர் எழுதத் தொடுகிற விசயங்கள் வித்தியாசமானவை. பார்த்திபன் பற்றி அதிகம் கூறுவது அவர் வளர்ச்சிக்கு குந்தகமாக அமையலாம். ஆனால் மொழி நடையும், எடுத்துக் கொண்ட கருக்களும் நிறையவே சிறப்பானவை. ஆயினும் அவரது படைப்புகள் என்னளவில் முழுமை பெறத் தவறி விடுகின்றன. அம்மாவில் வந்த கதையும் சரி, கிழக்கும் மேற்கும் தொகுப்பில் வந்த இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ கதையும் சரி முழுமையற்று இருக்கின்றது. காரணத்தை நான் யோசித்துப் பார்க்கிறேன். முக்கியமானது இதுதான். பார்த்திபன் உணர்வுகளால் கதையெழுதுவதை மறுத்து தன் அறிவியல் (மூளையால்) கதை எழுத முற்படுகிறார். குரு பிரசாத்தின் கடைசித்தினம், நகரம் முதலான நல்ல கதைகளின் சொந்தக்காரரான சுஜாதாவிற்கும் இத்தகைய அனர்த்தமே நிகழ்ந்தது. சுஜாதாவும் மூளையால் கதை எழுத வெளிக்கிட்ட பின்னர் அவரது கதைகள் ஒன்றும் தேறவில்லை. பார்த்திபன் பாத்திரங்களை உள்வாங்கி இயலுமானவரை அப் பாத்திரங்களுடன் வாழ்ந்து, அவ் உணர்வுகளுடன் ஒன்றிப்போய் எழுதுவது கதையை வலுப்படுத்தி முழுமை பெற வைக்கும் என்பது என் அபிப்பிராயம். இதனால் ஆற்றலுள்ள படைப்பாளியின் படைப்புகள் மேலும் செழுமைப்படும்.
பார்த்திபன் கதைகளிலும் சிருஷ்டிப்புத் தன்மை வருகிறது. ஆனால், என் கவலை என்னவென்றால் அது முழுமை பெறத் தவறி விடுகின்றது. அவர் அதற்காக இன்னும் நிறைய உழைக்க வேண்டும். அவர் மூளையால் பாத்திரங்களை உருவாக்கட்டும். ஆனால் உணர்வால் அதை வெளிப்படுத்த வேண்டும். இன்னும் இன்னுமென அந்தப் பாத்திரத்தில் தோய்ந்து வெளிக் கிளம்பட்டும். பார்த்திபன் நல்ல படைப்புகளைத் தருவார். அது என் நம்பிக்கை.
யமுனா ராயேந்திரன், பார்த்திபன் கதைகளில் ஆய்வு நடத்தியது (கிழக்கும் மேற்கும்) தொடர்பாக `நீ என்ன நினைக்கிறாய்?`என்று கேட்டிருந்தாய். நீ கருதியதைத்தான் நானும் கூறுவேன். ஒரேயடியாக முடக்கிவிடக் கூடாது என்பதுதான் என் கருத்தும். நீ சொல்வது சரிதான். நல்ல கருத்துகள் மட்டும் நல்ல கதையாகாது.
–
அம்மா, இதழ்-3, ஆவணி 97, பிரான்ஸ்
