பி.ரயாகரன்


பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும்.

தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புழுங்கிப் போகும் அவலம். இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, தமது சொந்த நிலையை தக்கவைக்கும் ஒரு தர்க்கமாக சிந்தனைச் சிதைவாக ஏற்படுகின்றது. சுதந்திரம் ஜனநாயகத்தின் பெயரில் வாழ்வையே மிக கேவலமாக வாழவைக்கும் இந்த சமூக அமைப்பில், தமது சொந்த வாழ்வையே இதற்குள் வாழ்கின்ற மனிதர்கள் கூட இப்படி புலம்புவது கிடையாது. கையால் மலம் அள்ளும் தொழிலாளி, பாலியல் ரீதியாக அன்றாடம் சுரண்டப்படும் ஒரு பெண், அன்றாடம் வாழவழியின்றி கையேந்தி பிச்சை எடுக்கும் ஒருவன், அடுத்த நேரத்துக்கு உண்பதற்கு வழி தெரியாத மனிதர்கள், தன் குழந்தைக்கு பால் இன்றி விழிக்கும் தாய்மை என்று மனித இனத்தின் சகல அவலத்தை சந்திப்பவர்கள் யாரும், இப்படி அவநம்பிக்கையுடன் சமூகத்தை அணுகுவது கிடையாது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கணமும் போராடுகின்றான். இதில் இருந்து மாறுபட்டு, அவநம்பிக்கையுடன் சமூக தற்கொலையை ஊக்குவிக்கும் விதைகளை ஊன்றுகின்றோமே, அப்படியானல் நாம் யார்? நாம் எங்கே இருக்கின்றோம்? எமது சிந்தனை தான் என்ன? இப்படி வெளிப்படும் மனநிலை, அடிப்படையில் தனிமனித நலனை அடிப்படையாகக் கொண்ட பூர்சுவா குணாம்சத்தின் பிரதிபலிப்பு. இதில் இருந்து எமது சொந்த நிலையை தக்கவைக்க, அதை நியாயப்படுத்தி விடுகின்றோம்.

இப்படிச் சமூகத்தின் முன்னோடிகள் அழுது புலம்பும் போது, மக்கள் என்னதான் செய்வார்கள்! தாம் அழுது புலம்புவதற்கு நியாயம் கற்பிக்க, மக்களின் கையாலாகாத்தனத்தை பற்றி கருத்துரைப்பது அன்றாடம் நிகழ்கின்றது. மக்களினால் தான் தமக்கு இந்தக் கதி என்று கூறிக்கொள்வது நிகழ்கின்றது. இந்த நிலைக்கு நீங்களே காரணம் என்பதை, அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மக்களின் இன்றைய அவலமான நிலைக்கு, நாங்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது கிடையாது. இந்த சமூகத்தின் அவல நிலைக்கான குற்றத்தை, எதிர்நிலைக்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் தமது சொந்த பூர்சுவா குணாம்சம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தக்கவைக்கின்றனர்.

இவர்களை நம்பி காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுக்கு, பொறிக் கிடங்கை முன்னால் காட்டுகின்றார்கள். இப்படி செய்யும் நீங்கள் யார்? அதை நீங்கள் ஒரு முறை திரும்பி பாருங்கள்! கண்ணாடி முன் நின்று உங்களைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்ய முனைகின்றீர்கள் என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்வதில் திருப்தியில்லை என்றால், என்ன தவறு செய்கின்றீர்கள் என்று பாருங்கள். அதைவிடுத்து சமூகத்தை குற்றம் சாட்டுவது அபத்தம். ஒரு செயல்பற்றிய தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அது சமூகத்தில் என்ன விளைவை விளைவிக்கின்றது என்று பார்க்கவேண்டும். குடுகுடுப்பைக்காரன் போல் அவசரமாக உலகம் மாறிவிட வேண்டும் என்று நம்புவதும், கூறுவதும் பூர்சுவா குணவியல்பாகும். இதுவே கடந்தகால மற்றும் நிகழ்கால இயக்க அரசியலாகும்.

நீங்கள் குறிப்பிட்ட பார்த்திபனை எடுங்கள். எல்லாவிதமான நம்பிக்கையையும் இழந்த பார்த்திபன், எதைத்தான் தன் வாழ்வில் அதற்கு பதிலாக சாதித்தார். மற்றொரு நம்பிக்கையை பெற்றாரா. இல்லையே. ஏன்? என்ன நடந்தது? கடந்த இலக்கிய அரசியல் எல்லாம் எதற்காக இவைகள் என்று புளுங்கிய பார்த்திபன், அதைக் கைவிட்ட பின் எதைச் சாதித்தார்? அப்போதும் ஒன்றுமில்லை? இங்கு என்ன நடந்ததென அவர் கூட அதை தேடியது கிடையாது? இன்றைய தமிழ் மக்களின் அவலமான நிலை, இப்படித் தான் உருவானது. குற்றவாளிகள் நாங்கள்! எதிரிகள் அல்ல! மக்களின் எதிரிகள் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி மிக மோசமாக இருக்கின்றோம். இதன் மூலம் எதிரிக்கு அன்றாடம் துணை செய்கின்றோம். ஒரு பினாமியைப் போல், எம்மை அறியாமல் எதிரிக்கு கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்கின்றோம். மக்களின் எதிரி பல தளத்தில் உள்ளான். அது எமக்குள்ளும் கருத்தியல் தளத்தில் ஊடுருவுகின்றது.

இலண்டன் தமிழர் நலன்புரிச்சங்க கிழக்கும் மேற்கும் மலரிலுள்ள சிறுகதைகள் பற்றி சுருக்கமாக சில வரிகள்…..

‘கிழக்கும் மேற்கும்” கதை பொதுவில் மிகமோசமான கருத்தமைவுகளையே கொண்டிருக்கின்றன.

தமிழரின் அகதிவாழ்வு, 2ம்தர வாழ்வு, சாதி ஒடுக்குமுறை, வறுமை, மத முரண்பாடு, இன ஒடுக்குமுறை, ஆண்பெண் முரண்பாடு, எமது பூர்சுவாதனம் என எண்ணற்ற மனித விழுமியங்களுக்கு சவால்விடும் மனிதவிரோதபோக்குகளை எவ்வளவு தூரம் கிழக்கும் மேற்கும் கதைகள் பிரதிபலிக்கின்றன எனின் பெருமளவில் இல்லை என்பதே பதிலாகிறது.
உயிரோட்டமுள்ள, யதார்த்தக் கற்பனையுடன், விமர்சனத்தைக்கொண்ட, தீர்வை முன்வைக்கும் எத்தனை கதைகளை மலர் கொண்டுள்ளது என்பதைக்கேட்டுப் பார்ப்பதும் மிகமுக்கியமாகும்.

இவற்றைவிட சிறந்த படைப்புக்கள் தமிழரிடம் இருந்துவருகின்றன என்பதைப்பார்க்கும்போது இம்மலர் அனைத்துலக தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்பதை கேள்விக்குள்ளாக்குவதுடன் உண்மையானதுமல்ல.

சமூகம் பற்றி ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவன் சார்பாக நின்று படைப்பாளர்கள் அணிவகுப்பது அவசியம். பொதுவில், கதை மரபு என வகுக்கப்பட்ட பூர்சுவா கதைவடிவையும், உள்ளடக்கத்தையும் தாண்டுவது அவசியமாகும். வழக்கிலிருக்கும் கதைமரபை மீறும்போது ‘தீட்டு’ப்பட்டுவிடும் என அழுவதற்குச் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், தீட்டினைக் கடப்பதன்மூலம், ஒரு தனித்துவத்தை கதைகளின் மரபில் தொடங்கமுடியும். இது ஈழ மரபில் தனித்துவமான முன்னோக்கிய பாத்திரத்தை எமக்கு அள்ளித்தரும்.

மலரில், பார்த்திபன் என்ற படைப்பாளி பற்றிய யமுனாராஜேந்திரனின் அறிமுகம் என்பது பலத்த விமர்சனத்திற்குரியது. பார்த்திபனை முடக்கமுனையக்கூடியது.

பார்த்திபன் அறிமுகத்தில் அவரது உருவாக்கம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இலங்கையில் ஒரு எழுத்தாளர் அல்ல. புலம்பெயர்சூழலில் அராஜகப்போக்கைக் கண்டித்து அதற்கெதிராக தூண்டில் என்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்ததையும், அதற்கூடாக பார்த்திபன் உருவாகியதையும் ஏன் யமுனா மறைக்கிறார். பார்த்திபனின் கதைகளின்மீது விமர்சனத்தை வைக்காது வெறுமனே முதுகுசொறிவது ஒரு படைப்பாளியை சீர்குலைக்கவே செய்யும்.

இச்சமூகநடைமுறைமீது, கீறலிலிருந்து ஒருவிமர்சனத்தை மட்டும் செய்யும் பார்த்திபன் கதைகள் ஒரு முழுமைபெறாத குழந்தைநிலையிலே உள்ளன. இவை சமூகத்தை விமர்சிப்பதோடு, ஒரு மாற்றுவழியையும் முன்வைக்குமாயின் ஒரு முன்னோக்கிய வரலாற்றுப்பாத்திரத்தை வழங்கமுடியும்.

 

tamilcircle.net

Leave a comment