
`கிழக்கும் மேற்கும்` தொகுப்பில் இடம்பெற்ற பார்த்திபன் கதைகளும், புலம்பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான எனது கட்டுரைக்கு எழுத்து வடிவிலும், தொகுப்பாளர் பத்மநாபருடன் உரையாடல் வடிவிலும், எனக்கு வந்த சில தனிப்பட்ட கடிதங்களிலும் பல்வேறு எதிர்வினைகள் வந்திருக்கிறது.
புவனன் அம்மா சஞ்சிகையிலும், சுந்தரராமசாமி அவர்கள் தனிப்பட்ட ஒரு கடிதத்திலும் சுசீந்திரன், மு.நித்தியானந்தன் போன்றோர் பத்மநாபருடன் தொலைபேசி உரையாடலிலும் அரவிந்தன், ரவீந்திரன் போன்றவர்கள் என்னுடனான தொலைபேசி உரையாடலிலும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த சூழலில் புவனன் தவிரவும் பிற எவரும் எழுத்துருவில் தமது கருத்துகளை வைக்காத சூழலில், ஒரு விவாதத்தை துவங்கும் பொருட்டு அவர்களின் கருத்துகளையும் எதிர்பார்த்து இக் குறிப்புகளை இங்கு முன் வைக்கிறேன். அ. இரவியும் இது குறித்து புவனனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் என்று அவதானிக்கிறேன்.
பார்த்திபன் அங்கீகரித்துப் பேசப்பட வேண்டிய படைப்பாளி என்பதில் எல்லாருமே உடன்பாடு கொள்கிறார்கள். இரண்டு விசயங்கள் ஆழமாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். கட்டுரையின் வடிவமைப்பும், இடம்பெற்ற புகைப்படமும் விவரணங்களுடன் முதல் பார்வைக்கு அத்தகையதாகவே தோற்றம் கொண்டிருக்கிறது. ஆனால் 1. தமிழ் புலம்பெயர் இலக்கியமும் ஆழமாக முழுமையாக பார்க்கப்படவில்லை. 2. உலகப் புலம்பெயர் இலக்கியம் பற்றியோ, கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சர்வதேசிய படைப்பாளர்கள் பற்றியோ விரிவாக பேசப்படவில்லை. இது இரண்டும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுதான் விமர்சனங்களின் சாராம்சமாக அமைந்திருக்கிறது. இந்த அபிப்பிராயங்களை முழுமனதுடன் நான் ஒப்புக் கொள்கிறேன்.
விமர்சனத்தின் மிக முக்கியமான இன்னொரு விசயம், பார்த்திபன் ஒரு முதிர்ந்த படைப்பாளியாக பார்க்கப்பட்டிருப்பதற்கான வடிவமைப்பை கட்டுரை பெற்றுவிட்டது. ஸல்மான் ருஸ்டி, சிவானந்தன், சுஜாதா போன்றோரின் எழுத்துகளோடு சமமாக வைத்துப் பேசப்பட்டதன் தோற்றத்தை கட்டுரை கொண்டிருக்கிறது. பார்த்திபனின் வளர்ச்சியை இது முடக்கிவிடும். ஒரு அதீதப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனும் சாக்கில் நிராகரிப்புக்கான வாய்ப்பாக இது ஆகிவிடும்.
1. தமிழ் புலம்பெயர் இலக்கியம்
2. சர்வதேசிய புலம்ப்பெயர் இலக்கியம்
3. பார்த்திபன் பற்றிய மதிப்பீடு போன்றவை பர்றி எனது கட்டுரை எழுப்பியிருக்கும் பிரச்சினைகளை இப்போது நேராக்க விளைகிறேன்.
இந்தக் கட்டுரை முழுக்க நிலவிய சூழலில் ஒரு கோட்பாடு ரீதியிலான விவாதத்தை தூண்டவேண்டும் எனும் அடிப்படையிலேயே எழுதப்பட்டது. இக் கட்டுரை எழுதும்போது புலம்பெயர் தமிழ் இலக்கிய படைப்புகள் குறித்து எனது அறிதலில் நிறைய வரம்புகள் (limitation) இருந்தது.
இதுவன்றி சர்வதேச புலம்பெயர் இலக்கியம், நான் இயங்குகிற தமிழ் இலக்கியம் புலம்பெயர் நாடுகளில் ஒரு நிலைபெற்ற தனித்த வகையாக உருவாகிவிட்டதையும் அவதானித்தேன். புலம்பெயர் இலக்கியச் செயற்பாட்டின் இரண்டாம் கட்டத்தில் நாம் இருந்தோம். படைப்புத் தேர்வுகள் களம் என்கிற நிலைவலுப்பட்டு நமது மொழி படைப்புத் திறன் குறித்து அக்கறைப்பட வேண்டிய கட்டத்துக்குள் நாம் நுழைந்து விட்டிருந்தோம். ஆனால் இது தொடர்பாக நாம் காத்திரமாக ஏதும் செய்யாதிருந்தோம்.
படைப்பாளிகளின் தடயங்கள், சாதனைகள், பங்களிப்புகள் பதியப்படவில்லை. லண்டன் இலக்கியச் சந்திப்பு சார்ந்து நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல்களில் சுசீந்திரனிடம் நான் இதைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட புலம்பெயர் புத்தகங்கள் இலக்கியத்தை பிரதி நிதிப்படுத்தும் கருத்துகள் நிஜத்தில் காத்திரமான பல படைப்பாளிகளை விடுவித்திட்டிருந்தது. வெறுமனே விவாதக் கட்டுரைகளை எழுதிக்கொண்டுள்ளதிலோ வெற்று விவகாரங்களை எழுப்பிக் கொண்டிருப்பதோ எனக்கு உடன்பாடில்லை. ஆதலால், முதலில் ஆவணங்கள் பதியப்பட வேண்டும் என்பதிலேயே நான் அக்கறையாக இருந்தேன்.
ஒரே ஒரு கதை எழுதிய படைப்பாளி கூட, உ-ம்: `கிழக்கும் மேற்கும்` அமுதனின் சிறுகதை. அந்த ஒரே ஒரு கதையில் சாதனை புரிந்திருப்பதையும் நான் கண்ணுற்றேன். படைப்புக்கள் படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புலகம் பற்றிய கருத்துகள் பதியப்படுவதுதான், படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நான் நம்பினேன். இவ்வகையான ஒரு கட்டுரை எழுதப்பட வேண்டும் என்பது கூட பத்மநாபருடன் ஒரு உரையாடலில்தான் எனக்குத் தோன்றியது. பார்த்திபன் எனும் படைப்பாளியின் கதைகள் முழுக்கவும் எனது தேர்வு. கட்டுரை எழுதுவதற்கான அடிப்படை இவ்வாறுதான் உருவானது. இக் கட்டுரை கூட பல்வேறு விதங்களில் எழுதப்பட்டிருக்க முடியும். சர்வதேச புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒப்பீடு இல்லாமலேயே முழுக்கவும் பார்த்திபன் படைப்புகள் பற்றியே பேசியிருக்க முடியும். தமிழ் சூழலிலேயோ, ஈழத்துச் சூழலிலேயோ நான் எழுதியிருந்தால் இந்தச் சூழல்களில் இதுவரைத்திய படைப்புச் சாதனைகள், கோட்பாடுகள், போக்குகளோடு ஒப்பிட்டு இக் கட்டுரையை நான் எழுதியிருக்க முடியும்.
நாம் புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்கிறோம். ஏற்கனவே அற்புதமான சாதனைகளைப் புரிந்திருக்கிற புலம்பெயர் சர்வதேச இலக்கியப் படைப்பாளிகளுக்கு இடையில் வாழ்கிறோம். அவர்களது படைப்புலகமும் நமது படைப்புலகமும் ஒன்றுதான். தமிழ் மனிதன் இன்று சர்வதேச மனிதனாக ஆகியிருக்கிறான். தமிழ் புலம்பெயர் இலக்கியம் சர்வதேசியக் கூறுகளை தனக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகவேதான் சர்வதேச புலம்பெயர் இலக்கியத்தோடு நம் தமிழ்ப் படைப்பை ஒப்பிட முயன்றேன்.
இந்த ஒப்பீடுகள் கூட இரண்டு வகையில் நிகழ்ந்திருக்க முடியும்.
1. படைப்புகளுக்கான சமூக பொருளாதாரக் கலாச்சாரக் காரணிகள், நெருக்கடிகள் எவ்வாறு இரண்டு விதமான படைப்புகளிலும் இடம்பெறுகிறது- அதன் பின்புலம் என்ன?
2. இலக்கியத்தின் மொழி மற்றும் வடிவம் சார்ந்த பிரச்சினைகள் எவ்வாறு வளர்ச்சி நிலையில் மாறுபட்டிருக்கிறது- இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அக்கறையை தமிழ்ப் படைப்பாளி பெற்றிருக்கிறானா?
கட்டுரையில் முதல் அம்சத்தை மட்டுமே நான் வலியுறுத்தி இருக்கிறேன். இரண்டாவது பிரச்சினை தொடர்பாக நான் விரிவாக எழுதுவதென்பது ஒரு நூலுக்குரிய விரிவான பல கட்டுரைகளை எழுதுமளவு பரப்பு கொண்டது. பிற்சேர்க்கையாக நான் கொடுத்திருக்கிற படைப்பாளிகளில் 8 பேர் பற்றிய விரிவான மூன்று தொகுப்பு நூல்களும் விரைவில் வரவிருக்கிறது. இதுவன்றி அவர்களின் படைப்புகள் பற்றிய தனித்தனி கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். மொழிபெயர்ப்புக்கள் செய்து பிரசுரமாகியிருக்கிறது. அந்த விபரங்களை நான் பிற்குறிப்பில் கொடுத்திருக்கிறேன். சிவானந்தனின் நீண்ட நேர்முகமும் அவரது படைப்புகள் பற்றிய கட்டுரைகளுடன் ஒரு நூலாக வெளிவர இருக்கிறது.
பார்த்திபனோடு படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டுவரும் பல்வேறு முக்கியமான எழுத்தாளர்களை நான் காரணம் கருதியே விடுத்திருக்கிறேன். பல்வேறு மனிதர்களின் கடின உழைப்பும் விரிந்த படிப்பும், மனிதனைத் தனிமைப்படுத்தி கேவலப்படுத்தாத இலக்கிய நேர்மையுமே இதைச் சாத்தியமாக்க முடியும்.
இக்கட்டுரை எழுதும்போது எனக்கிருந்த நோக்கங்கள் இரண்டே இரண்டுதான்.
1. பார்த்திபனை முன்வைத்து அவர் போலவே அங்கீகரிக்கப்பட வேண்டிய, முக்கியமான படைப்பாளிகள் பற்றி பதியப்பட வேண்டும். மதிப்பீடுகள் எழுதப்பட வேண்டும்.
2. தமிழ் புலம்பெயர் இலக்கியத்துக்கும் பிற சர்வதேச புலம்பெயர் இலக்கியத்துக்கும் உள்ள பொதுவான பிரச்சினைகள், சிறப்பான பிரச்சினைகள் முரண்கள் பேசப்பட வேண்டும். a) அரசியல் சமூக பொருளாதார காலாச்சார அடிப்படைகள். b) கலைமொழி வடிவம் சார்ந்த வளர்ச்சி நோக்கிய பிரச்சினைகள்.
இப் பிரச்சினைகளை கட்டுரை எட்டியிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களையும் தூண்டியிருக்கிறது. அடுத்து பார்த்திபன் பற்றிய அதீத மதிப்பீடு எனும் அமைவில் இக்கட்டுரை அவரை முடக்கி விடக்கூடிய ஆபத்து.
இவ்வாறான ஒரு கருத்து உருவாவதற்கு பிரதான காரணம் ஸல்மான் ருஸ்டி, சிவானந்தன், சுஜாதா போன்றோரின் புகைப்படமும் கட்டுரை வடிவமைப்பு முறையும்தான். இதுவன்றி பார்த்திபன் தன்னை மகத்தான படைப்பாளியென்று கருதிக் கொள்கிற கர்வம் கொண்டவர் இல்லை. தனது பலம், பலவீனங்களை உணர்ந்த விமர்சன பூர்வமான மனிதர் அவர். அவரின் மொழி செம்மைப் படுத்தப்பட வேண்டும். மிகுந்த படைப்பிலக்கியப் பயிற்சி வேண்டும் என்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதையும் அவர் உணர்ந்திருக்கிறார். அவருடைய படைப்புக்களில் எனது மதிப்பீடுகளின்படி பல சிறுகதைகளை நான் விமர்சனத்துக்கே எடுத்துக் கொள்ளாது விட்டிருக்கிறேன்.
நான் எடுத்துக் கொண்ட பதினாறு கதைகள் ஒரே தரத்தானவை அல்ல. ஆனால் பொருட்படுத்தத்தக்க கதைகள். அந்தப் பதினாறு கதைகளில் அதியற்புதமான படைப்புகளும் இருக்கிறது.
1. மொழி சம்பந்தமாக நான் சொல்லியிருக்கிற விடயங்கள்.
2. விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளாது நான் விட்டுவிட்ட கதைகள்.
3. கனவை மிதித்தவன் நாவல் பிறவற்றை நான் பேசாதது போன்றவை பார்த்திபனுக்கு கொண்டிருக்கும் செய்தியை அவர் உணர்ந்துதானிருக்கிறார்.
ஆனால் ஒன்றை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். எந்த உலக புலம்பெயர்ந்த படைப்பாளியின் படைப்புலகில் இடம்பெறும் மனிதர்கள் போலவே பார்த்திபனின் மனிதர்கள் சர்வதேசிய பண்பு வாய்ந்த மனிதர்கள். படைப்புமொழி வளர்ச்சி நிலை குறித்த மாறுபாடுகள் கொள்ள இடமுண்டே தவிர பார்த்திபனின் படைப்புலகமும் ருஸ்டி, சிவானந்தன், சுஜாதாபட் ஆரியல் டோப்மென் போன்றோரின் படைப்புலகும் ஒன்றேதான்.
பார்த்திபன் காட்டும் அனுபவ உலகம் மிகவும் விரிந்தது. பார்த்திபன் அவரது படைப்பு மாந்தர் போலவே எளிமையானவர். ஒடுக்கப்பட்டவர், நிராகரிக்கப்பட்டவர்களுக்காக பேசுபவர். இந்தக் குணங்கள்தான் அவரது படைப்புக்கான ஆதார குணம். அது இருக்கும்வரை அவர் அதீத மதிப்பீடுகளுக்காக மகிழ்ந்து முடங்கிப் போக மாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
–
அம்மா, இதழ்-3, ஆவணி97, பிரான்ஸ்
