இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ

1997 சனவரி வெள்ளிக்கிழமை மொறட்டுவ…

செனவிரத்தின வந்த போது வழக்கமான காலைநேரத் தூங்கலில் பொலீஸ் நிலையம் இருந்தது. இரண்டொரு பொலீஸ்காரர்கள் தமது இடங்களில் இருந்து ‘திவயின’, ‘லக்பிம’ படித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை மக்களின் உடம்புக்குத் தரமான சவர்க்காரத்தை சிபாரிசு செய்து கொண்டிருந்தது. தடுப்புக் காவலில் இருந்த ஒரே ஒரு கைதி இன்னும் படுத்தே இருந்தான். எழும்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை என அவனுக்கு நன்கே தெரிந்தே இருக்கும்.

தனது மேசைக்கு வந்ததும் செனவிரத்தின மேலோட்டமாக பத்திரிகைகளைப் பார்த்தார். யுத்தம் குறித்த தலைப்புச் செய்திகள். மேசையில்இருந்த கோப்புக்களைப் பார்த்தார். இன்னும் மூடப்படாத நிறையப் பழைய சம்பவங்கள். எப்போதாவது நேரமிருந்தால், மூட்டிருந்தால் மூடிக்கொள்ளலாம்.!

மேசைக்குக் கோப்பியும், பணிஸ்சும் வந்தன. கடித்தார். குடித்தார்.

தொலைபேசி அழைத்தது. எடுத்தார். மறுமுனையில் விக்கிரமசிங்க.

‘எப்போது தருவதாக உத்தேசம்?’

‘உன்னை இங்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.’

‘நீ வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று கூறச் சொல்லி மனைவி, பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.’

‘நான் இப்போது வேலையில் இருக்கிறேன்.’

‘அது உன்னுடைய பிரச்சினை எனக்கு என்னுடைய பணம்வேண்டும்.’

‘தரலாம் என்று சொல்லியிருக்கின்றேன்.’

‘மாதக்கணக்காக.’

‘எப்படியும் தந்துவிடுவேன்.’

‘அது உனது நம்பிக்கையாக இருக்கலாம் எனக்கு பொறுமை போய்விட்டது. இனியும் இப்படி தொலைபேசியில் மட்டும் கதைத்துக் கொண்டிருக்கமாட்டேன். வீட்டுக்கும், போலீஸ் நிலையத்திற்கும் ஆட்களுடன்வருவேன்.’ விக்கிரமசிங்க வைத்துவிட்டான்.

செனவிரத்தினவுக்கு மிச்சமாயிருந்த தூக்கமும் போய்விட்டது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே பார்த்தார். பத்திரிகைக்கு மேலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தலைகள் மறுபடி குனிந்தன.

பணம் வேண்டும். மிக விரைவாக. விக்கிரமசிங்க பொல்லாதவன் பொலீஸ் பதவியை மட்டும் வைத்துக் கொண்டு அவனை ஒன்றும் செய்துவிட முடியாது. அரசியற்பலம் வைத்திருக்கிறான் சொன்னமாதிரியே வந்து விடுவான்.

பணம்!

பணம்!!

இளய மகனுக்கு ‘கொண்டா’ வாங்கிக் கொடுக்க என்ன செய்தேன்?

அதுதான்.

அதேதான் இப்போதும் செய்யலாம்.

பணம்கிடைப்பதற்கான இலகுவான, உத்தியோக பூர்வமான, சட்டரீதியான, அரச அங்கீகாரம் பெற்ற வழி அது ஒன்றேதான்.

‘ராஜபக்ஸ’

வந்தான்.

‘பக்கத்தில் எங்காவது தமிழர்கள் புதிதாக வந்திருக்கிறார்களா?’

‘வெளிநாடு போவதற்கா ஒருவன்வந்து விடுதியில் தங்கியிருக்கிறான். வடக்கிலிருந்துதான் வந்திருக்கிறான். இரண்டுநாளாகிறது.’

‘ஜீப்பை எடு’

விடுதிக்கு ஜீப் விரைந்தது. கதவைத் தட்டினார்கள்.

திறந்தவன் இவர்களைக் கண்டு மிரண்டான். கையில் மனைவி பிள்ளைகளுடன் எடுத்த குடும்பப் படம்.

‘உன்னைக் கைது செய்கின்றோம்’.

அவன் எதுவும் புரியாமல் தமிழில் அழ, அவர்கள் சிங்களத்தில் ஏசியபடி, கைகளில் விலங்கு பூட்டி இழுத்துக் கொண்டுபோய் ஜீப்பில் ஏற்றினார்கள். விடுதியில் இருந்தோருக்கு இப்படி தொடர்ந்து பார்த்துப் பழகிப் போய்விட்டதால் தங்கள் அலுவல்களைக் கவனித்தார்கள்.

பொலீஸ்நிலையம் வந்ததும் தடுப்புக் காவலில் அவனைத் தள்ளிப் பூட்டினார்கள்.

வியர்த்துப் போயிருந்த அவன் பேந்தப் பேந்த முழித்தான். பயங்கரம் புரிந்தது போலும். அழுதான்.

யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. பக்கத்தறைக் கைதி வந்து புதினம் பார்த்தான்.

மதிய உணவு முடிந்த பின்னர் தனது மேசையில் இருந்தபடியே விசாரணையை ஆரம்பித்தார் செனவிரத்தின. ராஜபக்ஸ எழுதினான்.

அவனுக்கு சிங்களம் தெரிந்திருக்கவில்லை.

பின்னர் ஆங்கிலம். அதுவும் அவனுக்குத் தெரியவில்லை.

கடைசியாக ராஜபக்ஸ தனது கொச்சைத் தமிழில் மொழியைப் பெயர்த்தான்.

‘நீ தழிழ் தானே’

‘ஓம்’

‘கொழும்பில் குண்டு வைக்கத்தானே உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்?’

‘ஐயோ… நான் ஒரு பிரச்சினைக்கும் போகாதவனையா…’ அழுதான்.

‘எங்கே குண்டு வைக்கத் திட்டம்?’

‘நான் ஜேர்மனி போறதுக்காண்டி வந்திருக்கிறன். அடையாள அட்டையெல்லாம் இருக்கு.’

‘உன்னுடைய அறையில் ஆயுதங்கள் எடுத்திருக்கின்றோம்.’

அவன் பயந்து போய் சத்தமாக அழுதான்.

‘பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உன்னைக் கைது செய்திருக்கின்றோம். தகுந்த ஆதாரங்கள் கைவசம் இருக்கின்றன. தப்பமுடியாது.’

விசாரணை அத்துடன் முடிந்தது.

அவன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். கதவுக் கம்பிகளைப் பிடித்து கெஞ்சினான்.

மாலை பொலீஸ்காரர்கள் குறைந்தார்கள். போகாதிருந்தவர்களுக்கு செனவிரத்தின வேலை கொடுத்து அனுப்பினார். ராஜபக்ஸ மட்டும் மிச்சம்.

இருவரும் அவனிடம் வந்தார்கள். செனவிரத்தின ஆரம்பித்தார்.

‘நான்றாக கேள். இன்று வெள்ளிக் கிழமை. தற்செயலாக எந்த சட்டத்தரணியாவது வந்தாலும் திங்கட் கிழமைதான் உன்னை நீதி மன்றத்தில் நிறுத்த முடியும். இடையில் இரண்டு நாட்கள் இங்குதான் இருக்கப் போகிறாய். இந்த இரண்டு நாட்களிலும் எதுவும் நடக்கலாம். நீ தப்பி ஓடும் போது சுடப்படலாம். அல்லது அதோ பார் உன்னையே கோபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சக கைதி உன்னை அடித்தே கொல்லலாம். இல்லையென்றால் தலையில்லாமல் மொறட்டுவக் கடற்கரையில் கண்டெடுக்கப் படலாம். இரண்டு நாட்கள் என்பது அதிகம். எதுவும் நடக்கலாம்.’

அவன் இப்போது பெரிய சத்தமாக அழுதான். நிலத்தில் போட்டு தலையை அடித்தான். கம்பிகளுக்குள்ளால் கைகளை நீட்டி அவர்களது சப்பாத்துக்களை கும்பிட்டான்.

‘நான் இன்னும் முடிக்கவில்லை. உனக்கு ஒரு சந்தர்ப்பம் தரப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கிற உனது உறவினர்களிடம் இருந்து நான் கேடகின்ற தொகையைப் பெற்றுத் தா. பத்திரமாக வெளியில் போகலாம். இப்படிப் பல தமிழருக்கு நான் உதவி செய்து அவர்கள் இப்போது வெளிநாடுகளில் மகிழ்வாக இருக்கிநார்கள்.’

அவன் தொடர்ந்து அழுதான். கண்ணீர் வற்றக் கூடியதாக அழுதான். குரல் கமறியது. உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. எல்லாம் போய் கடைசி நம்பிக்கையாக அவனை வெளிநாடு அனுப்பத் துணிந்த மனைவி, எப்போதுமே பயத்தைக் கண்களில் வைத்திருக்கும் பிள்ளைகள், உதவியை எதிர்பார்த்திருக்கும் பெரிய சுற்றம், வட்டிக்கு வாங்கி அனுப்பிய ஜேர்மன் மைத்துனன்… எல்லாவற்றிற்குமாய் அழுதான்.

‘இப்படி நிறையப் பார்த்திருக்கின்றேன். உனக்கு அரை மணித்தியாலம் தரப்படுகின்றது. புத்திசாலித்தனமாக முடிவு எடுத்தால் அதோ மேசையில் இருக்கும் தொலைபேசியில் உனது உறவினருடன் தொடர்பு கொள்ளலாம்.’

செனவிரத்தின திரும்ப மேசைக்கு வந்து பத்திரிகை பார்த்தார். கோப்பி குடித்தார்.

தனக்கு எவ்வளவு கிடைக்குமென்று ராஜபக்ஸ கணக்குப்பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவன் அழுதபடியே சிறைச் சுவர்களைப் பார்த்தான். எங்கும் இரத்தம்.

அரை மணித்தியாலத்தின் பின் –

ஜேர்மனியில், உணவு விடுதியொன்றுக்கு கோப்பை கழுவுவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தவன் அறையில் தொலைபேசி ஒலித்தது.

கொஞ்ச நேரம் கழித்து உண்டியல்காரர் ஜேர்மனியில் இருந்து கொழும்புக்குத் தொலைபேசியில் கதைத்தார்.

கொழும்பிலிருந்து ரக்சி ஒன்று மொறட்டுவ பொலீஸ் நிலையத்துக்கு வந்தது.

செனவிரத்தின விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

 

1997 பெப்ரவரி, புதன் கிழமை, பிராங்பேர்ட்….

உக்ரெய்ன்காரன் போய்விட்டான். சிங்கம் சிகரட் புகைத்தவாறு யோசித்தான்.

விலை பறவாயில்லை. முந்நூறு, நானூறு பேரையாவது அடக்கலாம். அவ்வளவும் வெளிக்கிட்டா லாவோஸிலை இடம் வெளிக்கும். பிறகு கொழும்பிலையிருந்து மிச்சச் சனத்தை கொண்டந்து இறக்கிப் போட்டுக் கொஞ்சக் காலத்துக்குச் சமாளிக்கலாம். எப்படியும் தாராளமாய்த் தேறும்.

‘நான் சொல்லுறனெண்டு கோவியாதை. உந்தப் பிளானைக் கைவிடு’ என்றான் அதே அறையிலிருந்த மகேந்திரன். அவன் முன்னால் இருந்த மேசையில் ஏகப்பட்ட தாள்கள் சிதறிக்கிடந்தன. கணக்குகளும், உலகத்துத் தொலைபேசி எண்களும், சின்ன ஏஜென்சிகளின் பெயர்களும்…

‘ஏனப்படி சொல்லுறாய்..?’ புகை வந்தது.

‘இல்ல. இப்பதான் ஒரு கிறீக் கப்பல் வந்து நாறிப்போய் நிக்குது. எக்கச்சக்கமா சனம் செத்திருக்கு. இன்ரப்போல் தீவிரமாய் விசாரிக்குது. செத்த சனங்களுக்கு அந்திரட்டி கூட முடிஞ்சிருக்காது. நீ அடுத்த கப்பலுக்கு பேரம் பேசுறாய்.’

‘விலை சரி வந்திருக்கு. இத முடிச்சமெண்டால் ஞாயமாய் தேறும். ஒரு கப்பல் தாண்டாப் போல எல்லாக் கப்பலும் கவிழும் எண்டுறது விசர்க்கதை.’

‘உக்ரெய்ன் கப்பலைப் பற்றி உனக்கென்ன தெரியும்? உவங்கள் சிலோன் கவுண்மெந்துக்கு வித்த ‘வோர் பிளேன்’ களே தன்ரைபாட்டிலை காணாமப் போகுதாம். உள்ள கழிவுச் சாமான்கள் முழுக்க வித்துத் தள்ளுறாங்கள். அதிலை ஒண்டாய்த்தான் இந்தக் கப்பலும் இருக்கும்.’

‘இருக்கும். இல்லாமலும் இருக்கும். நீ ஏன் தனிய நெக்கட்டிவாய் மட்டும் யோசிக்கிறாய்..?’

‘இது முந்நூறு, நானூறு சனத்தோட விளையாடுற விளையாட்டு.’

‘இஞ்ச பார் மகேந்திரன். இது தொழில். பாவ புண்ணியம் பார்க்கிறதெண்டா நீ றெட்குறோசில சேர்ந்திருக்க வேணும்.’

அந்தப் பதிலுடன் மகேந்திரன் தடுமாறித்தான் போனான். என்றாலும் அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்த கடலில் மிதந்த பிரேதங்கள் ஒரு கணம் வந்து போயின. வியர்த்தது.

சிங்கம் சொல்லுறதிலயும் பிழையில்லை. இது தொழில். இதிலயெல்லாம் சகசம். எண்டாலும் எங்கட சனந்தானே… இன உணர்வு ஒரே ஒரு செக்கன் கவலைப்பட வைத்தது. பிறகு லாபம் பற்றி யோசித்தான்.

சிங்கம் மகேந்திரனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தபடி குறுக்கு மறுக்காக நடந்தான். எட்டுவருடங்களாய் தொழில் செய்கின்றான். புகைவிட்டான். முடிந்தது. அடுத்ததை பற்றவைத்துக் கொண்டான்.

‘எதுக்கும் ஒரு ரண்டு நாள் ரைம் எடுத்து யோசிப்பம். சில வேளை இன்னும் நல்ல ‘றூட்’ ஏதேன் அம்பிடலாம்’ என்று இழுத்தான் மகேந்திரன். குரலில் முன்னைய உறுதி இல்லை.

சிங்கம் ஒரு கதிரையை இழுத்துக் கொண்டுவந்து மகேந்திரன் அருகில் அமர்ந்தான்.

‘இஞ்சை பார்.. இதெல்லாம் நாள் பார்க்கிற விசயமில்லை. முந்தி மாதிரி இல்லை இப்ப. ஊருப்பட்ட ஏஜென்சியள். ‘சாட்டற் பிளைற்’றிலை அள்ளிக் கொண்டு வந்து கொலண்டிலை இறக்கிற அளவுக்கு தொழில் முன்னேறியிட்டுது. ஒவ்வொரு ‘றூட்’டும் நாற நாற எங்களுக்குத்தான் நட்டம். அதால நாங்கள் முந்தவேணும்’ சொன்னபடி மகேந்திரனுக்கு ஒரு சிகரட் கொடுத்து, பற்ற வைத்தான்.

„நீயே யோசிச்சுப் பார். எங்கடயாக்கள் கூட்டியந்ததில எத்தின சனம் யுகோ காட்டுக்கை காணாமப் போயிருக்குது? போலந்து ஆத்துக்க தாண்டிருக்குது? ஒஸ்ரியா ‘சினோ’ வுக்க புதைஞ்சிருக்குது. இதுக்கெல்லாம் நீ பதில் வச்சிருக்கிறியே? நாங்கள் சனத்தைக் கரை சேக்கிற நல்லதத்தான் செய்யிறம். ஆனா வாற சனத்தின்ர விதி நல்லா இல்லாம அதுகள் மண்டைய போடுறதுக்கு நாங்கள் என்ன செய்யிறது?’

„எப்ப கப்பல் சரிவருமாம்?’

„பொறு. முதல் லாவோசுக்கடிச்சு நிலமையை விசாரிப்பம்’ சிங்கம் தொலைபேசியைத் தொடப் போக, அதுவாக முந்திக்கொண்டு சத்தம் போட்டது.

„ஆர்..?’

„அது நான் சிவா கதைக்கிறன்’

„எந்தச் சிவா?’

„ராங்கி சிவா. இஞ்சை மொஸ்கோவிலை நிக்கிறன்’

„என்ன புதினம்?’

„ கேட்ட காசு தராததாலை புனிதாவ கோட்டல்ல விட்டுட்டு வந்த நாங்களெல்லே’

„அவளுக்கென்ன? றெட்லைட் ஏரியாவில கொண்டுபோய் விட்டுட்டாங்களே?’

„அவள் செத்துப் போனாள். ஒரு குறுக்கு றோட்டிலை கிடந்து பொலீஸ் சவத்தை கண்டெடுத்திருக்கு’

„ஏதென் டொக்குமென்ஸ் அம்பிட்டுட்டுதே?’ இப்போது சிங்கம் பதறினான். மகேந்திரனும் விசயம் புரியாமல் பதட்டமடைந்தான்.

„என்னெண்டு. அதுதான் ஐடன்ரிக் காட்டில இருந்து எல்லாத்தையும் வாங்கி வேற ஆளுக்கு வித்தாச்சே. ஆளார், எந்த நாடு எண்டு கண்டுபிடிக்கக் கூடிய எந்த டொக்குமென்சும் இல்லை. இதைவிட மினக்கெடுற அளவுக்கு ரஷ்யப் பொலீசும் இல்லை’

„அப்பாடா. அது சரி. இப்பென்னத்துக்கு எடுத்த நீ’

„இல்லை. என்ன இருந்தாலும் அவள் எங்கடை ஊர்க்காரி. கடைசி நாங்கள் ஆரெண்டு சொல்லாமல் அவளின்ரை சொந்தக்காறறுக்கெண்டாலும் அடிச்சுச் சொல்லுவமே?’

„பேப்புண்டை. மண்டைக்க ஒரு கொட்டையும் இல்லை. ஒண்டையும் நாத்தாம உன்ர அலுவலைப் பார்’ சிங்கம் கோவத்துடன் அடித்து வைத்தான்.

„என்னவாம்?’ அடி, நுனி தெரியாமல் கேட்டான் மகேந்திரன்.

„ஊர், பேர் தெரியாதவனுக்கெல்லாம் இரக்கம் பார்த்து ஒரு தொழில் போட்டுக் குடுத்தா அதுகள் இப்ப எனக்கு சமயம் படிப்பிக்குதுகள். அதுகள விடு. நீ ஒருக்கா லாவோசுக்கு அடிச்சு கதை. நான் கொழும்புக்கு கதைக்கிறன்’

இரண்டு கைத்தொலைபேசிகள் உயிர்த்தன.

அடுத்து வந்த நாட்களில் லாவோசிலிருந்து புறப்பட்ட ஆதிகால உக்ரெய்ன் கப்பலொன்றில் பிள்ளை, குட்டிகளுடன் இருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வண்ணக் கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.

கொழும்பிலிருந்து பலர் லாவோசுக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

 

———————

பார்த்திபன்

1997

Leave a comment